(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 33

     நாட்கள் நான்கு கடந்துவிட்டன. முதன்மந்திரி பிரமாதிராசரால் அனுப்பப்பட்ட காரனை விழுப்பரையன் மதுரையை அடைந்துவிட்டான். ‘கோட்டைப் பொறுப்பைத் திருவரங்கனிடம் ஒப்படைத்துவிட்டு உடனே மாறுவேடத்தில் தன்னுடன் புறப்பட்டு வரவேண்டும்’ என்ற அமைச்சரின் கட்டளையை இராசேந்திரனுக்குத் தெரிவித்தான். அத்துடன் எல்லா விஷயங்களையும் இரகசியமாக வைக்க வேண்டும் என்பதையும் கூறினான்.

     அதைக் கேட்ட இராசேந்திரனுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை.

     இரத்தினாதேவியை அழைத்துவர சக்கரவர்த்தி அனுப்பிய தூதன் இன்னும் மதுரையிலிருந்து அவளுடன் புறப்படவில்லை. அதற்குள் இன்னொருவர்? அப்படியென்றா நிலைமை அங்கு மோசமாக இருக்கிறது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

     உடம்பு சரியில்லை என்று நாட்களைத் தள்ளிக் கொண்டு வந்த அவள், அனேகமாக இன்று சக்கரவர்த்தியின் தூதுவனோடு கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுவிடலாம். அதற்குள் கோட்டைப் பொறுப்பைத் திருவரங்கனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

     ஆனால் அவன்?

     வரவர ஏதோ பிதற்றுகின்றானே! மாயக்கள்ளி அவனைக் வலைக்குள் போட்டுக் கொண்டாளா? அவளைப் பற்றிப் பேச்செடுத்தாலே அவன் என்னமாய்ச் சீறுகின்றான். இருக்கட்டும்.. இருக்கட்டும். ஆளைப் பக்குவமாகத்தான் சமாளிக்க வேண்டும்! என்று இராசேந்திரன் திருவரங்கனைக் கூப்பிட்டு வர ஒரு ஆளை அனுப்பினான்.

     எதற்கு என்னை அழைக்கின்றார்? என்று ஆழ்ந்து யோசனை செய்த திருவரங்கன், கூப்பிட்டதற்குப் போய் என்னவென்று கேட்டு வைப்போம் என இராசேந்திரன் மாளிகை நோக்கி வந்தான்.

     அவன் அறையில் முதன்மந்திரி அனுப்பிய காரனை விழுப்பரையன் இருந்தான்.

     இருக்கையில் உட்கார்ந்திருந்த இராசேந்திரனின் முன்னால் சென்ற திருவரங்கன், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு, “கூப்பிட்டீர்களாமே?” என்றான்.

     “இவர் முதன்மந்திரி அனுப்பிய தூதர்” என்று காரனை விழுப்பரையனைச் சுட்டிச் சொன்ன இராசேந்திரன், “பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டு என்னை உடனே கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு வரும்படி சொல்லியிருக்கின்றார்” என்றான்.

     அவன் தயங்கிய வண்ணம் கீழே தலைகுனிந்தபடி, “நானும் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுவிடலாம் என்று நினைக்கின்றேன்!” என்றான் மெல்லிய குரலில்.

     “அப்படியென்றால் இங்கே யார் இருப்பது?” - கோபத்துடன் அவனிடமிருந்து கேள்வி வெளிப்பட்டது.

     திருவரங்கன் அதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான்.

     “நமக்கும் உனக்கும் கருத்து வேறுபாடு தனிப்பட்ட முறையில் இருக்கலாம். நாட்டுப் பணியில் அது குறுக்கிடக் கூடாது” என்று அழுத்தமுடன் இராசேந்திரன் கூறியதும்,

     “இல்லை என்று நான் மறுக்கவில்லை; ஆனால் கொஞ்ச நாளாகவே எனக்கு மனநிலை சரியாக இல்லை! அதனால் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுவிடலாம் என்று நினைக்கின்றேன்” என்றான்.

     இராசேந்திரனுக்குக் கோபம் வந்தது.

     “நாம் இருவரும் சென்றுவிட்டால், கோட்டைப் பொறுப்பை ஏற்பது யார்? எப்போது சோழரிடமிருந்து பறித்துக் கொள்ளலாம் என்று துடித்துக் கொண்டிருக்கும் பாண்டியர் கைகளில் கொடுத்துவிடலாமா?” என்றான்.

     “வந்து...” என்று பேச முற்பட்ட திருவரங்கனை, “எனக்குத் தெரியாது. நான் இப்போதே புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்! மதுரையின் பொறுப்பை நீதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். சக்கரவர்த்தியின் சார்பில் முதன்மந்திரி அனுப்பிய கட்டளை இது!” என்று அரச முத்திரை பதித்த முடங்கலைக் காண்பித்தான்.

     அதைப் பார்த்துத் திருவரங்கன் மலைத்து நிற்க...

     இருக்கையிலிருந்து எழுந்துகொண்ட இராசேந்திரன், “இப்போதே கோட்டைத் தலைவர்களுக்கும் மற்ற முக்கிய அதிகாரிகளுக்கும் நீ பொறுப்பு ஏற்பதைத் தெரிவித்துவிடுகின்றேன்! ஏற்கனவே கோட்டைத் தலைவனை அழைத்து வர ஆளை அனுப்பிவிட்டேன். ஒரு விஷயம்...” என்று அவனருகில் வந்து, “இவை யாவும் இரகசியமாய் நடக்க வேண்டும் என்பது முதல்மந்திரியின் உத்திரவு” என்றான்.

     “என்னது?”

     “ஆமாம்! நீ, கோட்டைத்தலைவன், மற்ற முக்கிய அதிகாரிகள் இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நான் மதுரையில் இருப்பதாகவே தெரிய வேண்டும்!”

     “எதற்கு இப்படி ஒரு ஏற்பாடு?”

     “எனக்குத் தெரியவில்லை. அங்கே போனால் தெரியும்.”

     ‘அப்படி என்ன கங்கைகொண்ட சோழபுரத்தில் அவசரம்?’ என்று திருவரங்கள் யோசிக்கும் சமயத்தில், உள்ளே நுழைந்த கோட்டைத்தலைவனும், சோழ அரசின் முக்கிய அதிகாரிகள் இருவரும் இராசேந்திரனை வணங்கி நின்றனர்.

     அவர்களிடம் முதன்மந்திரியின் உத்தரவை விளக்கி, அது இரகசியமாய் இருக்க வேண்டிய அவசியத்தையும் கூறினான்.

     அடுத்த சில நொடிகளில் திருவரங்கன் கோட்டையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

     யவன வீரனைப் போன்று உடையணிந்து, தோற்றத்தில் மாறுதலும் செய்து கொண்ட இராசேந்திரன், காரனை விழுப்பரையனுடன் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிப் புறப்பட்டான்.

     அப்படிப் போகும் போது...

     இளவரசி இரத்தினாதேவியை சீக்கிரம் அனுப்பிவைக்குமாறு திருவரங்கனிடம் தெரிவித்துவிட்டு, தான் போகிற விஷயம் முக்கியமாய் அவளுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினான்.

     “அப்படியே செய்கின்றேன்” என்று தலையாட்டிவிட்டு அவள் மாளிகை நோக்கி சென்றான் திருவரங்கன்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49