(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 13

     “எனக்குப் பிறகு சோழ இளவரசனான, ‘அதிராசேந்திரன்’ ஒருவனால் மட்டுமே இந்நாட்டை நிர்வகிக்க முடியுமா?” -சோழச் சக்கரவர்த்தியின் கேள்வியால், பொய்த் தூணிற்குள்ளிருந்த ‘இராஜசுந்தரி’ அதிர்ச்சியுற்றாள்.

     பட்டத்தரசியும், முதலமைச்சர் பிரமாதிராசரும் அதற்கு என்ன பதில் தரப் போகின்றார்கள்? என்பதற்காக செவிகளைக் கூர்மையாக்கினாள்.

     “நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேண்டும்!” என்று அரசர் பிரமாதிராசரைப் பார்க்க, அவர் தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

     “உங்களுக்குப் பிறகு அதிராசேந்திரன் ஒருவனால் மட்டுமே சோழ அரசுப் பொறுப்பை நிர்வகிப்பது அவ்வளவு உசிதமாய் இல்லை” என்றார்.

     சோழச் சக்கரவர்த்தியின் முகத்தில் புன்னகை நிலவியது. “முதலமைச்சர் சொல்வதை அரசியார் ஆமோதிக்கப் போகிறாரா? அல்லது...” என்று அவர் பக்கம் திரும்ப...

     “என் மனதிலிருப்பதும் அதுதான்” என்றாள் உலகமுழுதுடையாள் அழுத்தமாக.

     பொய்த் தூணில் ஒளிந்து கொண்டிருந்த இராஜசுந்தரிக்கு ஆத்திரம் மிகுந்தது. ‘தாயா இவள்? அரக்கி!’ என்று பற்களைக் கடித்தாள்.

     “அதிராசேந்திரன் ஒருவன் மட்டும் இந்த அரசுப் பொறுப்பை நிர்வகிப்பது உசிதமாயில்லை என்று கூறும் முதலமைச்சர், அதற்கு மாற்றாக என்ன கூற விரும்புகின்றார்?”

     “சக்கரவர்த்தி அவர்களே, இதற்குப் பதில் கூற முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்! ஏனென்றால் இது ஒரு சிக்கலான கேள்வியாகப்படுகிறது!”

     “இம்மாதிரி சிக்கலை நீக்கத்தானே மந்திரி இருக்கின்றார்! சாதாரண இக்கேள்விக்கே தடுமாறினால், இன்னும் பல சிக்கல்களை நீங்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கிறதே!” என்றார் அரசர்.

     இக்கூற்றினால் சிறிதே தடுமாற்றமுற்ற பிரமாதிராசர் இமைப்போதில் அதை மறைத்துக் கொண்டு, “கேள்விக்குரிய பதில் அரசரிடமே இருக்கிறது!” என்றார் புன்னகையுடனே.

     நோயினால் களைப்புற்ற நிலையில், சற்றுத் தெம்பிழந்திருந்த சோழச் சக்கரவர்த்தி, “என்ன இருந்தாலும் நம் முதலமைச்சர் கெட்டிக்காரர்தான்!” என்றார் மகிழ்ச்சியுடனே. அத்தோடு, “இதற்குப் பதில் என்னிடம் இருக்கிறதென்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், உடன்கூட்டத்ததிகாரிகளின் தலைவரான தங்களின் கருத்து என்ன என்பதை அறியத்தான் கேட்டேன். ஏனென்றால் என் பாட்டன் காலத்திலிருந்தே சோழ அரசு கூட்டுப் பொறுப்பில்தான் இயங்கி வருகிறது. மன்னருக்கே எல்லா அதிகாரங்களும் இருந்தாலும் அமைச்சரின் கருத்தையும் கேட்டுத்தானே இதுவரை நாங்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றோம்! அந்த முறையில்தான் உங்கள் கருத்தைக் கேட்டேன்” என்றார் அரசர்.

     முதலமைச்சர் பிரமாதிரரசர் சுற்றுமுற்றும் பார்த்தார். “கடார வெற்றியீட்டி சோணாட்டுக்குப் பெருமை தேடி வந்திருக்கும் வேங்கி இளவரசரும், தங்களின் தங்கை மகனுமான இராசேந்திரன்தான், அதிராசேந்திரருக்குப் பிறகு பொருத்தமானவராகப் படுகின்றது!” என்றார்.

     “நல்லது! அமைச்சரின் கருத்தை ஆதரிப்போம்” என்று பட்டத்தரசியின் பக்கம் திரும்பிய வீரராசேந்திரர், “இதற்கு உன் கருத்து?” என்று வினவ,

     “மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி!” என்றாள் உலகமுழுதுடையாள்.

     “பரவாயில்லையே! இம்மாதிரி விஷயங்களில் தாய்ப் பாசத்தைத் தனியாக ஒதுக்கிவிட்டு நாட்டின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் கூற்றை ஆமோதித்த பட்டத்தரசியை உண்மையிலேயே மனதாரப் பாராட்டுகிறேன்!” என்று புகழ்ந்தார் சோழச் சக்கரவர்த்தி.

     கிழவனுக்கு அந்திமக் காலம் நெருங்கிவிட்டது. அதனால் ஆடுகிறான்! இந்த அநியாயத்தை எப்படித்தான் பூமித்தாய் தாங்கிக் கொண்டிருக்கிறாளோ? என்று பொய்த்தூணிற்குள் இருந்த இராஜசுந்தரி அடுத்து அவர்கள் பேசப் போகும் விஷயத்தை அறிவதற்குத் தயாரானாள்.

     “அரசியார் நாகை சென்ற விஷயம் இன்னும் மர்மமாகவே இருக்கிறதே! ஜோதிடர் என்ன சொன்னார்? அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் இளையராணிக்குத் தெரியுமா?” என்று வினாக்களைத் தொடுத்துப் பதிலுக்காக உலகமுழுதுடையாளின் முகத்தைப் பார்த்தார் சக்கரவர்த்தி.

     “சோழ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும், அடுத்து ஆட்சி பீடம் ஏறுபவர் யார்? என்றும் அவரிடம் கேட்டேன்! அதற்கு அம்பிகைதான் பதில் தரவேண்டும் என்று என்னை மட்டும் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றார் நாகை சோதிடர். அம்பிகையின் பதில்...” என்ற பட்டத்தரசி தயக்கத்துடனே, “இப்போது நாம் முடிவு செய்ததற்கு எதிரிடையாக இருக்கிறது” என்றாள்.

     “என்ன?” என்று வியப்பினால் முதலமைச்சரின் நெற்றி சுருங்கியது.

     “ஆமாம்! அம்பிகை வேங்கி இளவரசனான இராசேந்திரனைத்தான் உங்களுக்குப் பிறகு சோழ அரசனாகத் தேர்ந்தெடுத்தாள்” என்றார் உலகமுழுதுடையாள்.

     “அப்படியா விஷயம்?” என்று மோவாயைத் தடவிய அரசர், “என் விருப்பமும் அதுவாகத்தானிருக்கிறது!” என்றார்.

     பொய்த்தூணிற்குள்ளிருந்த இராஜசுந்தரிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

     ‘கிழவனுக்கு மூளை குழம்பிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை’ என்றாள் தனக்குள்ளாக.

     ‘என் விருப்பமும் அதுதான்’ என்று அழுத்தமாய் மன்னர் கூறியதைக் கேட்ட முதலமைச்சரின் முகத்தில், எந்தவித வியப்புக் குறியும் தென்பட்டுவிடவில்லை. ஏனென்றால் இது வரை மூத்த மைந்தனுக்கே அரசுப் பொறுப்பு என்று சோழர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். அவ்விதம் பரம்பரை பரம்பரையாக வந்த பழக்கத்தை, தற்போது மாற்றி இராசேந்திரனுக்கு முடிசூட்டுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதனால் பின் விளைவுகள் பயங்கரமாயிருக்கும். குழப்பத்தை உண்டு பண்ணவே காத்திருக்கும் சிலர் இதைப் பயன்படுத்தி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி விடுவர். அத்துடன் இராஜசுந்தரியை மணந்து கொண்டு அதிராசேந்திரனுக்கு மைத்துனன் முறையிலிருக்கும் மேலைச்சாளுக்கிய அரசனான விக்கிரமாதித்தனும், தன் நட்பை முறித்துக் கொண்டு, சோழருக்கு எதிராகப் போருக்கு கிளம்பிவிடுவான்.

     அவ்விதம் அவன் போருக்குக் கிளம்புவதற்கும் இன்னொரு காரணம் இருந்தது. கீழைச்சாளுக்கியருக்கும் மேலைச்சாளுக்கியருக்கும் அப்போது பெரிய பகையே நிலவிக் கொண்டிருந்தது.

     அதனால், தந்தை வழியில் கீழைச்சாளுக்கிய நாட்டின் இளவரசனாயிருந்த இராசேந்திரனை அவன் எக்காரணங் கொண்டும் சோழ அரசனாய் எற்றுக் கொள்ளமாட்டான். அத்துடன் தன் மனைவி இராஜசுந்தரியின் அண்ணனான அதிராசேந்திரன் வருவதைத்தானே அவனும் விரும்புவான்! அதுதானே மனித இயல்பும் கூட. எனவே...

     தற்போது நிலவும் சூழ்நிலைகளை வைத்து அடுத்து அதிராசேந்திரனுக்கு முடிசூட்டுவதுதான் முறை...

     பிரமாதிராசர் மனதில் ஏற்கனவே முடிவு செய்திருந்ததையே, அப்போது அரசர் தெளிவாய் இருவரிடமும் கூறினார்.

     “அதிராசேந்திரனுக்குப் பதில், அம்பிகையின் ஆணைப்படி இராசேந்திரனுக்கே முடிசூட்டினால் என்ன?” என்றாள் பட்டத்தரசி.

     சக்கரவர்த்தி கலீரென்று சிரித்தார்.

     “என் ஆசையும் அதுதான். ஆனால், நாட்டின் நிலைமை அம்மாதிரி இல்லையே! இப்போதிருக்கும் சூழ்நிலையில், எனக்குப் பிறகு இராசேந்திரனை சோழச் சக்கரவர்த்தியாக ஆக்கினால், நாட்டில் பாதகமான சூழ்நிலைதான் நிலவும்” என்ற அவர்,

     “காஞ்சியின் அரசப் பிரதிநிதியான என் இரண்டாவது மகன் மதுராந்தகன், அதிராசேந்திரனைப் போல அவ்வளவு திறமை படைத்தவனல்ல. அதனால், நான் இருக்கும் போதே, சோழ நாட்டின் இளவரசனாக இராசேந்திரனுக்குப் பட்டம் கட்டி அவனைக் காஞ்சிக்குச் சோழ அரசின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கலாம் என்று கருதுகிறேன்! இதற்கு உங்களின் முடிவு என்ன?” என்று இருவரையும் பார்த்துக் கேட்டார் வேந்தர்.

     “நல்ல யோசனை!” என்றாள் மாதரசி.

     பிரமாதிராசர் வார்த்தைகளால் அதனைத் தெரிவிக்காது கண்களாலேயே சம்மதத்தின் அறிகுறியை வெளிப்படுத்தினார். “நீங்கள் இம்மாதிரி செய்யப் போவதை, வேறொரு மங்கள நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தலாம். அப்படிச் செய்துவிட்டால் காஞ்சிக்கு இராசேந்திரனை அரசப் பிரதிநிதியாக்குவது பற்றி யாரும் ஒரு குறையும் சொல்ல முடியாது” என்றார் முதலமைச்சர்.

     “என்னது... முதல்வர் புதிருடனே எதையோ சொல்கின்றார்!” என்று ஆர்வமுடன் அரசர் வினவ...

     “ஒன்றுமில்லை. இளவரசன்... அதிராசேந்திரனுக்கு இதுவரை புத்திரசந்தானம் உண்டாகவில்லை. அவருக்குப் பிறகு அவரின் தம்பி மதுராந்தகனுக்கும் பேரரசை நிர்வகிக்கும் அளவுக்குப் போதிய திறமை இல்லை. அதனால் தங்கள் தமையன் மகளான மதுராந்தகியை வேங்கி இளவரசர் இராசேந்திரனுக்கு மனம் செய்துவிட்டால்...! ஏற்கனவே வழிவழியாக வரும் கீழைச்சாளுக்கிய சோழர் மண உறவு, இதன் மூலம் உறுதிப்பட்டுவிடும். அத்துடன், இராசேந்திரன் சோழ வம்சத்துக்கு மாப்பிள்ளையாகவும் ஆகிவிடுவார். குடும்பத்தைக் காக்கத் தகுதியான ஆள் இல்லையென்றால், அக்குடும்பத்தின் மருமகப்பிள்ளையே பொறுப்பை ஏற்றுக் கொள்வது போல... இந்த மங்கல நிகழ்ச்சிக்குப் பிறகு, இராசேந்திரன் சோழ இளவரசனாய் காஞ்சிப் பிரதிநிதியாகலாம். அப்படியாவதை யாரும் குறை சொல்லவும் முடியாது. சோழ நாட்டுக் குறுநில மன்னர்களும், அதிகாரிகளும், நிச்சயம் இதை அங்கீகரிக்கவும் செய்வார்கள்!” என்றார் பிரமாதிராசர்.

     தூணுக்குள்ளிருந்த இராஜசுந்தரிக்கு, அதை இரண்டாகப் பிளந்து முதலமைச்சரின் நெஞ்சில் குறுங்கத்தியைச் செலுத்திக் கிழித்துவிடலாமா என்று துடித்தாள்!

     நினைப்பதெல்லாம் செய்ய முடியுமா? அதனால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, முதல் மந்திரி சொன்னதற்கு இரு கிழங்களும் என்ன செய்யப் போகின்றது என்பதற்காக, நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு நின்றாள்.

     “நல்ல யோசனைதான். என்ன இருந்தாலும், முதன் மந்திரி முதன் மந்திரிதான். இதற்குப் பட்டத்தரசியின் கருத்து எதுவோ?” என்று அவரின் பக்கம் திரும்பிய மன்னர், “அம்மாதிரி நான் கேட்பதற்கும் காரணம் இருக்கிறது. தற்போது காஞ்சிப் பிரதிநிதியாக இருக்கும் மதுராந்தகன் உன் வயிற்றில் பிறந்தவனே. பெண்ணிற்குத் தாய்ப்பாசம் என்பது அவளின் கூடப் பிறந்த ஒன்று அல்லவா?” என்றார்.

     “நான் முதலிலேயே கூறிவிட்டேன். பாசம் என்பது அரச விவகாரங்களுக்கு அப்பாற்பட்டதென்று. எனக்கு முன் வாழ்ந்த சோழ அரசகுடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும், முதலில் நாட்டின் நலனுக்குத்தான் இடம் கொடுத்தனர். பிறகுதான் பாசத்தைப் பற்றி எண்ணினர். அவர்கள் வழியில் வந்த நானும், அதை மீறுவேனா?” என்றார் அழுத்தமாக.

     “நல்லது! இங்கே இப்போது நாம் மூவரும் எடுத்த முடிவானது மிக முக்கியமானது. இதை எக்காரணம் கொண்டும், யாரும் எங்கேயும், எந்தச் சூழ்நிலையிலும், தகுந்த சந்தர்ப்பம் வரும்வரை வெளியிடக் கூடாது. அம்மாதிரி நான் கூறுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. சோழ அரசுக்கு எதிராகவே செயற்படும் சில தீய சக்திகள் இராசேந்திரனுக்கும், மதுராந்தகிக்கும் மணம் நடப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதனால் தக்க நேரம் வரும் வரை நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். நான் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டேன் என்றே எனக்குப் படுகிறது. அதற்குள் நீங்கள் மதுராந்தகி, இராசேந்திரன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிடுங்கள். பிறகு சோழ இளவரசனாக இராசேந்திரனுக்குச் சுலபமாய் முடிசூட்டிவிடலாம். அப்புறம் எந்தத் தொல்லையும் இருக்காது” என்றார் வேந்தர்.

     இந்த வார்த்தைகளைக் கேட்ட மேலைச்சாளுக்கிய இளவரசிக்கு அங்கே இருக்கப் பிடிக்காததால், ‘சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு அழிவு காலம் வந்துவிட்டது’ என்று பொருமியபடி பொய்த்தூணிலிருந்து வெளியில் வந்தாள்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49