(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 27

     சாளுக்கிய சக்கரவர்த்தி ஆயிரம் வீரர்களுடன் காஞ்சியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வருவதைத் தெரிவிப்பதற்காக முன்னால் ஒரு குதிரைவீரன் புறப்பட்டுவிட்டான்.

     ஆனால், அதற்கு முன்பே இவர்கள் காஞ்சி வந்த செய்தியும் மூவரும் அறையில் விவாதித்த விஷயங்களும் அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வரும் விபரமும் முதலமைச்சருக்குத் தெரிந்துவிட்டது.

     இது பற்றி அவர் அரசருடன் பேசினார். ‘இப்போது எதற்கு விக்கிரமாதித்தன் இங்கே வர வேண்டும்! அதுவும் ஆயிரம் வீரர்களுடன்’ என்று மன வருத்தமுற்ற சோழச் சக்கரவர்த்தி, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

     அந்தச் சமயம் பார்த்துத்தான் பட்டத்தரசி உலகமுழுதுடையாள் ஒரு இரகசியத்தை வெளியிட்டார்.

     “அதிராசேந்திரனுக்குப் பிறகு யாருக்கு இளவரசுப் பட்டம் கட்டலாம் என்பது பற்றி முதன்மந்திரியும் நீங்களும், நானும் பேசிய விவரங்கள் இராஜசுந்தரிக்குத் தெரிந்துவிட்டது” என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடர்ந்த அவர், “என்னுடைய பொக்கிஷ அறையிலிருந்து நம் எதிரிலிருக்கும் இந்தப் பொய்த்தூணிற்குள், இரகசிய வழி இருப்பது அவளுக்குத் தெரிந்தே இருக்கிறது! அதைப் பயன்படுத்திப் பொக்கிஷ அறையின் திறவுகோலை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு, பொய்த்தூணிற் குள்ளிருந்தவாறு நாம் பேசிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டுவிட்டாள். அதை வைத்து அதிராசேந்திரனுக்குத் தவறான செய்திகளைத் தந்து, தன் கணவனை சாளுக்கிய நாட்டிலிருந்து வரவழைத்திருக்கின்றாள்!” என்றாள் உலகமுழுதுடையாள்.

     மாமன்னர் அதைக் கேட்டுத் திகைக்க, “நமக்கு எதிராக ஒரு கூட்டமே இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போது நீங்கள் கண்ணை மூடுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிராசேந்திரன் அரசரானதும் கடாரத்தில் வெற்றியீட்டி வந்திருக்கும் இராசேந்திரனை இங்கிருந்து விரட்ட திட்டம் போட்டுவிட்டார்கள். மதுராந்தகி இராசேந்திரன் திருமணம் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்” என்றார் சோணாட்டுத் தளபதி.

     அரசருக்கு ஆத்திரம் வந்தது. “இதையெல்லாம் ஏன் என்னிடம் முன்பே தெரிவிக்கவில்லை!” என்றார் சினத்துடன்.

     “நீங்கள் உடல் நலமற்று அடிக்கடி மயக்கத்தில் ஆழ்ந்துவிடுவதால் இதையெல்லாம் கூறி உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று இருந்துவிட்டேன்” என்றார் முதன்மந்திரி.

     “நாளைக்கே நாகை சோதிடரை இங்கே வரவழையுங்கள். நல்ல நாளில் மதுராந்தகி, இராசேந்திரன் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்கின்றேன். அந்தத் திருமணம் நடந்ததும் அதிராசேந்திரனுக்குப் பிறகு இளவரசுப் பட்டம் இராசேந்திரனுக்கே என்று நானே உறுதி செய்துவிடுகின்றேன்! எவன் வந்து தடுப்பது என்று பார்த்துவிடலாம்!” என்று உரத்த குரலில் கூறிய வீரராசேந்திரர், தளபதியின் பக்கம் திரும்பி, “நமக்கு எதிராக ஒரு கூட்டமே என்று சொன்னீர்களே. அது யார், யார் என்று தெரியுமா?” என்றார்.

     “கொடும்பாளூர்க் குறுநில மன்னர் சயங்கொண்ட சோழ இருக்குவேள், இளவரசர் அதிராசேந்திரர், அவர் மனைவி இளையராணி, தங்கள் மகள்!” என்றார் சோழத் தளபதி.

     “ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அது போல் அந்தக் காலத்திலிருந்தே கொடும்பாளூரானுக்குக் கலகபுத்தி. கங்கைகொண்ட சோழபுர அரண்மனைக்கு அவன் அடிக்கடி வரும்போதே எனக்குச் சந்தேகம்தான். இருந்தாலும் என்ன செய்துவிட முடியும் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். ம்... யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை. என் உதிரத்தில் உதித்த மக்களே எனக்கு எதிராகச் செயல்படும் போது, யாரை நான் நோக முடியும்?” என்று மனதில் வருத்தம் மிக, முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

     அரசரின் கண்கள் கலங்கின, இருமல் அதிகமாகியது. உடலைக் குலுக்கித் குலுக்கி இருமத் தொடங்கினார். பட்டத்தரசி அவரின் நெஞ்சை நீவிவிட்டு “மருத்துவரை அழைக்கட்டுமா?” என்று பணிவுடன் கேட்டார்.

     மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க “அரண்மனை மருத்துவன் ஒன்றும் பிரயோசனமில்லை. அந்தப் பெண் மதுரையிலிருந்து எப்போது வருவாள்?” என்று வினவினார் சக்கரவர்த்தி.

     கடார இளவரசியைப் பற்றிச் சக்கரவர்த்தியிடம் சொல்ல இதுதான் நல்ல நேரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென பேரரசர் ‘அந்தப் பெண் எப்போது வருவாள்?’ என்று கேட்கிறாரே; அவளைப் பற்றிச் சொல்வதா? வேண்டாமா என பிரமாதிராசர் யோசித்துக் கொண்டிருக்கும் போது சோழச் சக்கரவர்த்தியே “பிரமாதிராசனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னாலே பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்றார் வீரராசேந்திரர்.

     முதன்மந்திரி சிந்தனை கலைந்து, “அப்படியில்லை மாமன்னரே! அவளும்...” என்று இழுக்க...

     “பிரமாதிராசர் தடுமாறுகின்றார். முதலில் அவளை மதுரையிலிருந்து இங்கே வரவழைக்க ஏற்பாடு செய்யும்!” என்றார் திட்டமான குரலில்.

     இதற்கு மேல் அவளைப் பற்றி ஏதாவது கூறினால் நமக்குத்தான் மூக்குடைப்பு ஏற்படும் என்று புரிந்து கொண்டு, ‘நன்றாகவே அரசரைக் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாள்... கெட்டிக்காரப் பெண்’ என்று மனதிற்குள் பாராட்டியபடி, “அப்படியே செய்கின்றேன் அரசே!” என்றார்.

     “என்னமோ தெரியவில்லை, அந்தப் பெண் போனதிலிருந்து எனக்கு ஆரோக்கியமே போய்விட்டது போலிருக்கிறது!” என்ற மாமன்னர், “மேலைச்சாளுக்கியன் வந்தால் இங்கே குழப்பம் அல்லவா ஏற்படும்!” என்று சிந்தனைவயப்பட்டார்.

     “நால்வகைப் படைகளுடன், எண்ணிறந்த வீரர்களுடன் போருக்குப் போவது போல கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி அவர் வருகின்றார்!” என்றார் சோழத்தளபதி.

     “இங்கே வரவேண்டாம் என்று என் சார்பில் அவருக்கு ஒரு செய்தியை அறிவித்தால் என்ன?” என்று முதல்மந்திரியைக் கேட்டார் சோழச் சக்கரவர்த்தி.

     “குந்தள மன்னரை இங்கே வரச்சொன்னது நம் இளவரசர் அதிராசேந்திரர். இப்போது நாம் வர வேண்டாம் என்று தடுக்கப் போய் அதனால் விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டால்...?”

     “என்ன அப்படிப் பெரியதாய் விரும்பத்தகாத விளைவு ஏற்பட்டுவிடும்? என் உத்தரவு என்று இரு வீரர்களை அனுப்பி தெரிவித்துவிடுங்கள். அவர்கள் வந்த வழியே திரும்பிப் போகட்டும்!” என்றார் அரசர் கோபத்துடனே.

     “சக்கரவர்த்தி! தயவு செய்து நான் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்நிலையில் உங்களுக்கும், இளவரசருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது என்று வெளி உலகுக்குத் தெரிந்தால், இதைக் வைத்து நம் குறுநில மன்னர்கள் நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கலாம். அதனால் அருள் கூர்ந்து இந்த ஒரு விஷயத்தில் என் கருத்தைக் கேளுங்கள்” என்றார் பிரமாதிராசர் பணிவுடனே.

     “சரி. அப்படியென்றால் உங்கள் பேச்சுப் பிரகாரமே, குந்தள மன்னரை கோட்டைக்குள் படைகளுடன் அனுமதிக்கின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே நுழைந்ததும் அவன் பங்காளியான இராசேந்திரனைச் சோழ இளவரசன் துணையோடு நாட்டைவிட்டு வெளியேற்றமாட்டான் என்பது என்ன நிச்சயம்? அத்துடன் மதுராந்தகனைக் காஞ்சியிலிருந்து அழைத்துக் கொண்டு வருகிறான் என்று கூறுகின்றீர்கள். என்ன நோக்கத்தோடு விக்கிரமாதித்தன் மதுராந்தகனோடு வருகின்றான்? அதிராசேந்திரனுக்குப் பிறகு சோழேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்றுதான் வருகின்றான். இதையெல்லாம் எப்படி என்னால் அனுமதிக்க முடியும்? அதனால்தான் கூறுகின்றேன். வந்தபின் காப்பதைவிட, வருமுன்னரே காத்துவிட்டால் நல்லதாகப் போய்விடுகிறது!”

     “பேரரசே! நீங்கள் சொன்னதெல்லாம் நடக்கத்தான் போகிறது! இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால் திடீரென இங்கே வர வேண்டாம் என்று மேலைச்சாளுக்கிய மன்னரை நாம் தடுத்து, அதை அவமானமகாக் கருதி அவர் பெரும்படையைத் திரட்டி நம் மீது போர்தொடுத்தால் என்ன செய்வது? தற்போது இருக்கும் நிலையில் இதை நம்மால் சமாளிக்க முடியுமா? போரைப் பற்றிச் சொல்லவில்லை! நமக்கு எதிராக இளவரசர் அதிராசேந்திரர் அவருடன் சேர்ந்து கொண்டால்... அதற்காகத்தான் சொல்கின்றேன்!” என்ற பிரமாதிராசரை மேற்கொண்டு பேசவிடாமல் சோழச் சக்கரவர்த்தி இடைமறித்து...

     “அதற்காக மாற்று யோசனை ஏதாவது வைத்திருக்கின்றீர்களா?” என்றார்.

     “கோட்டைக்குள் அவர்களை அனுமதித்து, சொல்வதற்கெல்லாம் தலையாட்டியபடி மதுரையிலிருக்கும் இராசேந்திரனை திடீரென இங்கே வரவழைத்து அவருக்கும் மதுராந்தகிக்கும் திருமணத்தை நடத்திவிட வேண்டும்!” என்றார்.

     “அந்தச் சமயத்தில் நிகழ்ச்சியை நடைபெறவிடாமல் அவர்கள் குழப்பத்தையுண்டு பண்ணினால்?”

     “நாம் அதற்குள் நம் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருமண நிகழ்ச்சி நடைபெறும் போது அவர்கள் குழப்பத்திற்குத் தயாரானால் உடனே நாம் இளவரசரையும் விக்கிரமாதித்தனையும் வீட்டிற்குள்ளேயே மடக்கி வைக்கப்பட வேண்டும்” என்றார்.

     “அதற்குப் பிறகு மட்டும் விக்கிரமாதித்தன் படைகளோடு போருக்கு வரமாட்டான் என்று எப்படி நம்புகிறீர்கள்?”

     “இராசேந்திரனுக்குத் திருமணம் நடந்துவிட்டால் நமக்குப் பலம் கூடிவிடும் என்று நம்புகிறேன்! அத்துடன் ஆவேசத்துடன் வரும் அவர்களைத் தடுப்பதைவிட வந்தபின் அவர்கள் மெத்தனமாயிருக்கும் போது நாம் நம் கைவரிசையைக் காட்டுவது நமக்குச் சாதகமாய் அமையலாம் என்பது என் கருத்து” என்றார் முதன்மந்திரி.

     சக்கரவர்த்தி சற்று நாம் சிந்தனையில் ஆழ்ந்து, “எனக்கு உடல் நலமில்லாது போனதால்தான் இவ்வளவு குழப்பமும். எனக்கு மட்டும் பழைய ஆரோக்கியம் இருந்தால், கதையே வேறு மாதிரி ஆகிவிடும்” என்று மெல்லக் கூறினார். பிறகு,

     “நீங்கள் கூறியபடியே ஆகட்டும்!” என்று சம்மதித்து, “இப்போதிருந்தே சோழப் படைகளைக் கோட்டைக்குள் தயார் நிலையில் வையுங்கள்” என்றார்.

     “முக்கியமாய் நம் நம்பிக்கைக்குரிய சிலர்... அதாவது சேதிநாட்டு மன்னன் முத்தன் காமன், துணைத்தளபதி சிறிய தன்மபாலர்... மற்றும் குறிப்பிடத்தக்க விதத்தில் இருப்பவர்கள்...” என்று கூறிக் கொண்டே வந்த சக்கரவர்த்தி, “எங்கே வீரசோழ இளங்கோ வேளான்? அவன் கொஞ்சம் துணிச்சல் பேர்வழியாயிற்றே. அவனையும் கோட்டை பாதுகாப்புக்கு உபயோகப்படுத்தித் கொள்ளலாமே!” என்றார்.

     “வீரசோழ வேளான்தான் குந்தள நாட்டிற்குச் சென்று விக்கிரமாதித்தனை இங்கே அழைத்துக் கொண்டு வருகின்றான்!” என்றார் சோழத் தளபதி.

     “என்னது?” - திகைப்பினால் வினவிய அரசர், சோணாட்டுத் தளபதியை ஏறிட்டுப் பார்த்து, “என்னைக் கேட்காமல் எப்படி அவனை இவ்வளவு நீண்ட பயணத்துக்கு அனுமதித்தீர்?” என்றார்.

     “அவன் குந்தள நாட்டிற்குப் போவது எனக்குத் தெரியாது. அவனை அனுப்பிவிட்டுப் பிறகுதான் சோழ இளவரசர் என்னிடம் தெரிவித்தார்.”

     “துரோகிகள்! தலைக்குத் தலை பெருந்தனம் அதிகமாகிவிட்டது! இந்நாட்டிற்கு சக்கரவர்த்தி ஒருவரா? அல்லது இருவரா? இனிமேல் என்னைக் கேட்காமல் எந்தக் காரியமும் நடைபெறக் கூடாது. முதலில் அந்தத் துரோகியைக் கைது செய்யுங்கள்” என்றார் உரக்க.

     அரசரின் உத்தரவு ஓலையில் எழுதப்பட்டு திருமந்திர ஓலை நாயகத்தால் கையப்பமும் இடப்பட்டது.

     அதே சமயம்...

     கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி ஆறாம் விக்கிரமாதித்தனுடனும், அரசரின் இரண்டாவது மகனும், காஞ்சிப் பிரதிநிதியுமான மதுராந்தகனுடனும், எதிர்கால சோழ நாட்டின் தளபதி நான்தான் என்ற ஆனந்தக் கற்பனையில் மூழ்கியபடி புரவியைச் செலுத்தியவாறு வந்து கொண்டிருந்தான் வீரசோழ இளங்கோ வேளான்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49