(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 29 இரவு... பல்லி மூன்று முறை ‘இச்... இச்’ என்றது. “நான் சொன்ன யோசனையைப் பல்லிகூட ஆமோதித்துவிட்டதால் நமக்கு வெற்றிதான்” என்று அந்த அறையே அதிரும்படிக் கூறினான் குந்தள நாட்டு மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தன். ‘கீழை சோபனா’ என்ற பெயருடைய கடைசி அடுக்கில் ஆறாம் விக்கிரமாதித்தருக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில், இளவரசன் அதிராசேந்திரன் காஞ்சிப் பிரதிநிதி மதுராந்தகன், இராஜசுந்தரி, இளையராணி ஆகியோரும் உடன் இருந்தனர். அதனால் அன்றைய ஆலோசனையில் அவர் இல்லை. “பிரமாதிராசர் அசந்துவிட்டார் இனிமேல் நம்மைக் கண்டால் அவருக்குப் பயம்தான்” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தாள் இராஜசுந்தரி. “ஆமாம்! நோயுற்ற நிலையில் இன்றோ நாளையோ என்று இருக்கும் சோழச் சக்கரவர்த்தியைக் கையில் போட்டுக் கொண்டு அவர் பண்ணின அட்டகாசத்துக்கு இனி மேல் ஒரு முடிவு வந்துவிட்டது” என்ற ஆறாம் விக்கிரமாதித்தன் “ஒரு யோசனை... மதுரைக்குக் கலகத்தை அடக்கச் சென்றிருக்கும் இராசேந்திரனை அங்கேயே தீர்த்துக் கட்டிவிட்டு, பழியைப் பாண்டியர் தலையில் போட்டுவிட்டால் என்ன?” என்று உற்சாகத்துடனே அனைவரையும் பார்த்துக் கேட்டான். “நீங்கள் இப்போது சொல்லும் இந்த யோசனையை நாங்கள் எப்போதோ அமுலாக்க மதுரைக்கு ஆள்கூட அனுப்பிவிட்டோம். அநேகமாய் இந்நேரம் இராசேந்திரன் கொல்லப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றாள் இராஜசுந்தரி. “சபாஷ்! என் மனைவிக்கு நன்றாகவே மூளை வேலை செய்கிறது. கொல்வதற்கு அனுப்பிய ஆள் யார்?” என்றான். “ஒரு பெண். கடார தேசத்திலிருந்து வந்தவள்!” என்ற இராஜசுந்தரி அவளைப் பற்றிய முழு விபரத்தையும் குந்தள நாட்டு மன்னனுக்குத் தெரிவித்தாள். “பழி வாங்கத் துடிக்கும் ஒரு பெண்ணிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விட்டதால் இந்நேரம் அவள் காரியத்தை முடித்திருப்பாள் என்றே நம்பலாம். அது சரி... நம்முடன் வந்த வீரசோழ வேளான் எங்கே?” “அவனைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன். சரியான பதில் இல்லை. ஒருவேளை சொந்த ஊருக்குப் போயிருக்கலாம். எனக்குக் கூட தெரியாது என்று முதன்மந்திரி ஒரு மாதிரியாகப் பதில் சொன்னார்!” என்றான் இளவரசன் அதிராசேந்திரன். “என்னப்பா இது வேடிக்கை. சோழப் படையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அந்நபர் சொல்லாமல் கொள்ளாமல் போவது என்றால்... அதுவும் முதலமைச்சருக்குத் தெரியாது என்று சொல்கிறார். இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரிகிறது” என்ற விக்கிரமாதித்தன், “ஒருவேளை அவனைச் சிறையில் போட்டிருப்பார்களோ?” என்றான். “இல்லை... இந்த முதல்மந்திரி பிரமாதிராசர் இருக்காரே... அவர் சூழ்ச்சிகளில் கைதேர்ந்த நபராகத் தெரிகிறது. அதனால் எதற்கும் நீ சிறைக் கூடத்தையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லதாகப்படுகிறது” என்றான். “அப்படியே செய்கின்றேன்” என்று சம்மதித்த அதிராசேந்திரன், “சோழச் சக்கரவர்த்தியின் உடல்நிலை நாளுக்கு ஒன்றாக இருப்பதால், திடீரென மதுரையிலிருக்கும் வேங்கியானை வரவழைத்து சோழ அரசு அதிகாரிகளையும் குறுநில மன்னர்களையும் வைத்துக் கொண்டு இவனுக்குத்தான் இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் என்று சொன்னால்? நாம் எப்படி அதைச் சமாளிப்பது?” என்றான் அதிராசேந்திரன். “வேங்கியான் மதுரையிலேயே எமலோகம் போய்விடுவான் என்று சொன்னீர்களே!” என இராஜசுந்தரியைப் பார்த்தவாறு குந்தள மன்னன் கேட்க, “எனக்கு அதில் பூரண நம்பிக்கையிருக்கிறது! ஒருவேளை அவன் ஆயுள் கெட்டியாயிருந்து தப்பித்துக் கொண்டால்?” என்று திருப்பிக் கேட்டாள் இராஜசுந்தரி. “ஓ! இப்படி ஒன்றா?” என்று தலையைச் சொறிந்த ஆறாம் விக்கிரமாதித்தன் “அங்கே அவன் தப்பித்துக் கொண்டு இங்கே வந்துவிட்டாலும் என் படைத்தலைவனை விட்டுக் கொன்றுவிட்டால் போகிறது” என்றான். பிறகு, “பட்டத்தரசி உலகமுழுதுடையாளை நம் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் பக்கம் வந்துவிட்டால் மதுராந்தகனுக்கு நிச்சயம் இளவரசுப் பட்டம் கட்டினாற் போலத்தான்” என்றான் உறுதியான குரலில். “அதுதான் முடியாது; நமக்கு முதல் எதிரியே அந்த அம்மையார்தான்” என்று குறுக்கிட்டாள் இராஜசுந்தரி. “என்ன?” - வியப்புடன் குந்தள மன்னன் அவளைப் பார்க்க... “ஆமாம்! எனக்குப் பிறகு இராசேந்திரனுக்குத்தான் இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் என்பதில் அவர்கள்தான் தீவிரமாக இருக்கின்றனர்” என்று குறுக்கிட்டுச் சொன்னான் அதிராசேந்திரன். “நல்ல வேடிக்கைதான்! ஒரு அன்னை தான் பெற்ற மகனுக்கு இளவரசுப் பட்டம் வேண்டாம் என்று சொல்வதை சோழ அரசில் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இதற்குப் பிறகு நாம் முயற்சிப்பது வீண்தான் என்று தோன்றுகிறது” என்று கூறியவாறு சிந்தனையில் ஆழ்ந்தான் குந்தள மன்னன். “அன்னையா அவள்? ஈவு இரக்கம் இல்லாத அரக்கி. அதற்காக நீங்கள் என்னைக் கைவிட்டுவிட்டால், நான் எங்கே போவேன்? என் உயிரையே மாய்த்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை” என்று இதுவரை மௌனமாயிருந்த மதுராந்தகன் ஆத்திரத்துடன் குறுக்கிட்டான். “மதுராந்தகா! இந்தக் குந்தள மன்னன் இருக்கும் வரை நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் இரண்டு முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றவே இப்போது மேலைச்சாளுக்கிய நாட்டிலிருந்து இங்கே வந்திருக்கின்றேன். ஒன்று இளவரசன் அதிராசேந்திரன் இந்நாட்டின் மன்னனாக்கப்பட வேண்டும். இரண்டு காஞ்சிப் பிரதிநிதியான நீ சோழ நாட்டின் இளவரசனாக்கப்பட வேண்டும். இரண்டையும் நிறைவேற்றாமல் நான் இந்த கங்கைகொண்ட சோழபுரத்தைவிட்டு நகரப் போவதில்லை! அதனால் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்! நான் இருக்கின்றேன்!” என்று அவன் அருகில் சென்ற விக்கிரமாதித்தன், “துணிவுடன் இரு! ஏன் ஒரு மாதிரி உம்மென்று இருக்கின்றாய். வருங்கால சோழ நாட்டின் இளவரசன் என்றால் எப்படி கம்பீரமாய் இருக்க வேண்டும் தெரியுமா?” என்று தன் மார்பை நிமிர்த்திக் காண்பித்து, அவனைத் தட்டிக் கொடுத்தான். அப்போது- தாம்பூலம் தரித்து அதை மென்று கொண்டிருந்த இராஜசுந்தரி துப்புவதற்காக காலதரின் அருகில் சென்றாள். அடுத்தகணம்- ‘வீல்’ என்று அவள் அலற... “என்ன, என்ன?” என்று அனைவரும் ஓடி வந்தனர். “வெள்ளை... முக்காடு... ஒன்று...” என்று குளறியபடியே வாய் வராமல் சைகையால் காலதரை ஒட்டியிருந்த மாமரத்தின் கிளையைக் காண்பித்தாள். உடனே பரபரப்போடு, “மாளிகையின் உச்சிப் பகுதிக்குப் போக வழியிருக்கிறதா?” என்று கேட்டான். “இருக்கிறது!” என்று அதிராசேந்திரன் கூறியதும், “எனக்கு வழிகாட்டு!” என்று வாளை உருவிக் கொண்டான். இளவரசன் அதிராசேந்திரனும் வாளை உருவியபடி “என்ன விஷயம்?” என்று வினவ, “பேசுவதற்கு இது நேரமல்ல” என்று படபடப்புடன் கூறிய குந்தள மன்னன், தன் கையிலிருந்த வெள்ளைத் துணியை, “பத்திரம்!” என்று இராஜசுந்தரியிடம் கொடுத்துவிட்டு இளவரசன் அதிராசேந்திரனுடன் மாளிகையின் உச்சிக்கு ஓடினான். இதுவரை இருக்கையிலிருந்த மதுராந்தகனையும், “நீயும் போய் என்னவென்று பார்!” என்று இராஜசுந்தரி விரட்ட அவனும் அவர்களைப் பின் தொடர்ந்தான். கிளையிலிருந்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த வெள்ளை முக்காடிட்ட உருவம், சட்டென்று இராஜசுந்தரி தாம்பூலத்தை உமிழ வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் அவள் ‘வீல்’ என்று அலறவும், மிகவும் சங்கடமான நிலைமை வந்துவிட்டதையுணர்ந்த உருவம் சட்டென்று கிளையிலிருந்து காலதருக்கு மேலிருந்த அலங்கார முகப்பில் காலை வைத்துத் தாவி மாளிகையின் உச்சியை அடைந்தது. அப்படித் தாவும் போதுதான் தலையில் முக்காடு போட்டிருந்த வெள்ளைத் துணி சரிந்து, காற்றில் பறந்தபடி கிளையில் சிக்கிக் கொண்டது. இந்தச் சமயத்தில்தான் விக்கிரமாதித்தன் அதைப் பார்த்துவிட்டுத் துணியைப் பற்றிக் கொண்டான். உச்சிக்குச் சென்ற உருவம் அங்கிருந்தபடி துணியை இழுக்க விக்கிரமாதித்தனும் விடாமல் பலங்கொண்ட மட்டும் இழுத்ததால் துணி கிழிந்து மூன்று முழ நீளத்திற்கு அவன் கையில் சிக்கிக் கொண்டது! போனால் போகட்டும் என்று மேலே முக்காடு இல்லாமல், உச்சிப் பகுதியிலிருந்து மாளிகைக்குச் செல்லும் மரப்படிகளை நோக்கி ஓடியது. ஆகா! இந்த உருவத்தின் உயரம்தான் என்ன? இப்போது முக்காடு இல்லாமல் அதன் பின் பகுதி மட்டும் நமக்கு தெரிய... நிச்சயம் அது ஒரு பெண் அல்ல என்று புலப்படுகிறது. நடையில்தான் எத்தனை வேகம்! ஆனால் அதே மரப்படிகளில் யாரோ தன்னை நோக்கி ஓடிவருகின்றார்களே. அது யார்? ஒருவேளை தன்னைப் பார்த்துவிட்ட விக்கிரமாதித்தனாக இருக்கலாம். அதனால் மரப்படி வழியாக மாளிகைக்குள் செல்வது ஆபத்து என்பதை உணர்ந்த உருவம் மீண்டும் வந்த வழியே திரும்பி, வருவது வரட்டும் என அதே மரக்கிளையில் இறங்க. அதற்குள் உருவிய வாட்களுடன் உச்சியை அடைந்துவிட்ட, விக்கிரமாதித்தனும் இளவரசன் அதிராசேந்திரனும் மறுபடியும் அது மரக்கிளையில் இறங்குவதைப் பார்த்து பின்னால் வந்த மதுராந்தகனைக் காலதருக்குப் போகும்படி விரட்ட... அவனும், “தமக்கையே!” என்ற குரல் எழுப்பியபடி “பலகணிப் பக்கம் மீண்டும் உருவம் இறங்குகிறது” என்று கூவியபடி திரும்பி ஓட... அறையின் முன் பக்கம் நின்று கொண்டிருந்த இருபெண்களும் வேகமாய் காலதரின் பக்கம் செல்ல... அதற்குள் அது அப்பகுதியைக் கடந்து கொண்டிருந்தது. அப்படிக் கடக்கும் போது தன்னை நோக்கி ஓடிவந்த இரு பெண்களும், தன்னை யாரென்று கவனித்துவிடாமல் இருப்பதற்காக கிழிந்து போய் மீதியிருந்த வெள்ளைத் துணியையும் அவர்கள் முகத்தை மறைக்கும்படி விட்டெறிந்தது. உருவம் அவர்களைத் தாண்டுவதற்கும். அந்த துணி திரைபோல் அவர்கள் முகத்தை மூடுவதற்கும் சரியாக இருந்தது. “சீ! என்ன இது?” என்று முகத்திலிருந்த துணியை விலக்கி இரு பெண்களும் பலகணி வழியாக கீழே எட்டிப் பார்ப்பதற்குள் அது கீழ் அடுக்கிலிருந்த இன்னொரு காலதரின் வழியாக மாளிகைக்குள் புகுந்து மறைந்துவிட்டது. அதே சமயம் உச்சிப் பகுதிக்கு ஓடிவந்த இருவரும், உருவம் இறங்கிய மரக்கிளையின் பக்கம் வந்து கீழே எட்டிப் பார்த்தனர். ‘அப்பா! எத்தனை நீளமான விரல்கள். அது அணிந்திருந்த மோதிரம்... அந்த மோதிரத்திலிருந்த வைரக்கல்லின் ஒளி... அக்கல் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்! அப்படியென்றால் உருவம்...?’ சிந்தனை வயப்பட்ட விக்கிரமாதித்தனை பின்னாலிருந்த இளவரசன் அதிராசேந்திரன் தோளைத்தொட்டு “தப்பிவிட்டதா?” என்றான். “ஆமாம்!” என்று தலையாட்டிய குந்தள மன்னன் மெல்ல திரும்பினான். “நான்கு பக்கமும் வீரர்களைவிட்டுத் தேடினால் என்ன?” என்று சோழ இளவரசன் பரபரப்புடன் வினவ... “அதனால் பயன் இல்லை. இந்நேரம் அவ்வுருவம் தன் வேடத்தைக் கலைத்துக் கொண்டிருக்கும்” என்றான். “என்னது?” - வியப்புடன் அதிராசேந்திரனிடமிருந்து கேள்வி தோன்றியது. “ஆமாம். வெள்ளை முக்காடு போட்ட உருவத்திற்குள், இன்னொரு பெரிய மனிதர் இருக்கின்றார். அது யார்? இதைக் கண்டு பிடித்துவிட்டால் நம் எதிராளியின பலத்தில் பாதி குறைந்துவிடும்” என்றான் குந்தள வேந்தன். “என்னது, ஒரே புதிராக இருக்கிறது?” என்று அதிராசேந்திரன் கேட்க... “ஆமாம்! நம்முடைய இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு வெள்ளை உருவத்தைத்தான் நம் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். அந்த உருவம் யாராக இருக்கலாம்?” என்று சிந்தனையுடன் சோழ இளவரசன் பக்கம் திரும்பிய மேலைச்சாளுக்கியன், “சோழ நாட்டின் தலைமை ஒற்றன்... இல்லையென்றால் முதன்மந்திரி. அதுவும் இல்லையென்றால் சோழத்தளபதி. அதுவும் இல்லையென்றால் பட்டத்தரசி. எதுவுமே இல்லையென்றால் நமக்குப் போட்டியாக இருக்கும் வேங்கியான். இவர்களில் யாராவது ஒருத்தர்தான் அந்த வெள்ளை முக்காடு போட்ட உருவமாக இருக்க வேண்டும்” என்று அழுத்திக் கூறினான். “எப்படித் தீர்க்கமாகச் சொல்கின்றீர்கள்?” “அந்த உருவம் அணிந்திருந்த மோதிரத்தை வைத்துச் சொல்கின்றேன். மோதிரத்திலிருந்த கல்லை சாதாரண நபர்களால் நிச்சயம் வாங்க முடியாது. நான் மாளிகையின் உச்சியில் நிற்கின்றேன். அந்த உருவம் இருக்கும் இடம் என்னிடமிருந்து சுமார் முன்னூறு முழ தூரத்துக்கு மேல் இருக்கும். இரவில் நிலவொளியில் என்னமாய் என் கண்களைக் கூச வைப்பது போல், அந்தக் கல் பளிச்சிடுகிறது. அதிராசேந்திரா! இனிமேல்தான் நீ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னைக் கூட இனிமேல் நீ நம்பக் கூடாது. சுவர்களுக்கும் காதுகள் உண்டு என்ற வார்த்தைக்கு இப்போதுதான் உண்மையான பொருளை அறிந்து கொண்டேன்!” என்று கூறியபடி மரப்படியிலிருந்து இறங்கி இருவரும் அவர்களிருந்த அறையை அடைந்தனர். “என்ன ஆயிற்று?” என்று மதுராந்தகன் பரபரப்போடு வினவினான். “தப்பித்துவிட்டது!” என்றான் விக்கிரமாதித்தன். “வெள்ளைத் துணியின் மற்றொரு பகுதியைக் கையில் வைத்திருந்த இராஜசுந்தரி “இதை எங்கள் முகத்தில் வீசிவிட்டு, நாங்கள் யாரென்று அதைக் கண்டு பிடிக்காமல் செய்துவிட்டது” என்றாள் வருத்தத்தோடு. “கெட்டிக்கார உருவம்தான்!” என்ற குந்தள மன்னன், “இல்லை நம் எதிரிகள் மிகவும் கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுகின்றனர்” என்று அவளிடமிருந்த மீதித் துணியை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தான். “நிச்சயம். இல்லையென்றால் நான்தான் வெள்ளை முக்காடு உருவம். என்னைப் பிடித்துக் கொள் என்றா முன்னால் வந்து நிற்கும்” என்று கூறியபடி, ஏற்கனவே இராஜசுந்தரியிடம் தந்த மூன்று முழத்துணியையும் கேட்டு வாங்கிக் கொண்டான். இரண்டையும் ஒன்றாக வைத்து கிழிந்த பகுதியைப் பொருத்திப் பார்த்தான். நன்றாகப் பொருந்தவே, இரு துணிகளும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்து, “இந்தத் துணியை யார் அணிந்து நீ பார்த்திருக்கின்றாய்?” என்று அதிராசேந்திரனைக் கேட்டான் குந்தள வேந்தன். நீண்ட நேரம் அவன் உற்று உற்றுப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு இளவரசன் அதிராசேந்திரனும் துணையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “தங்கை சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை” என்றான். “ஆ...! இப்போதுதான் எனக்கும் ஒரு வழி கிடைத்திருக்கிறது. இன்னும் பத்து தினங்களில் இந்த வெள்ளை முக்காட்டை யாரென்று கண்டுபிடிக்கவில்லையென்றால் என் பெயர் விக்கிரமாதித்தனில்லை” என்று சூளுரைத்தான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|