![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 14 மன உளைச்சலால் குரோதமும், ஆத்திரமும் மிகுந்து அதனால் சோழச் சக்கரவர்த்தியின் மேல் பெரும் துவேஷம் கொண்ட அவரின் மகளான இராஜசுந்தரி, மிகுந்த வேகத்தோடு இளையராணியின் மாளிகைக்குள் நுழைந்தாள். அங்கே... சோழ இளவரசரும், அவரின் துணைவியார் இளையராணியும், இவளின் வரவை, எதிர்பார்த்திருந்ததால், “வா இராஜசுந்தரி!” என்று வரவேற்றனர். மிக்க சினத்துடன் நுழைந்த மேலைச்சாளுக்கிய அரசி, “அண்ணா, பெரிய சதி நடக்கிறது!” என்றாள் உரக்க. யாராவது அதைக் கேட்டு, எதையாவது நினைத்துக் கொள்ளப் போகின்றனர் என்று பயந்து, “கொஞ்சம் மெதுவாய்...” என்று புன்னகையுடனே கூறினாள் இளையராணி. ஆனால், இராஜசுந்தரி காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. முன்னைவிட சற்று உரக்கவே பேசத் தொடங்கினாள். “இப்போதே போய் அந்தக் கிழத்தின் நெஞ்சில் இந்தக் குறுவாளைப் பாய்ச்சிவிட்டு வருகின்றேன்!” என்று தற்காப்புக்காக அரச மகளிர் இடையில் மறைத்து வைத்திருக்கும் சிறிய வாளைக் கைகளில் எடுத்துக் கொண்டாள். அப்படி எடுத்தவள் அங்கிருந்து திரும்பி வெளியே போகவும் முயன்றாள். நிலைமை மோசமாகப் போய்விட்டதையுணர்ந்த அதிராசேந்திரன் விரைந்தோடி, வாயிலின் குறுக்கே நின்று அவளை வழிமறித்து, “சகோதரி!” என்றான் அன்புடன். “என்ன அண்ணா?” என்ற இராஜசுந்தரியின் விழிகள் ‘மல மல’வென்று நீரைச் சொறிந்தன. அதிராசேந்திரன் கதவைத் தாழிட்டு இராஜசுந்தரியின் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து, அவளை இருக்கையில் இருத்த முயன்றான். “என்னை விட்டுவிடுங்கள் அண்ணா. மகனுக்குத் துரோகம் இழைக்கும் பெற்றோர்களைக் கொல்வதில் தவறில்லை. சகோதரனுக்காக ஒரு சகோதரி தகப்பனைக் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டாள் என்று வரலாற்றில் எழுதப்படட்டும்!” என்றாள் ஆவேசத்துடன். இராஜசுந்தரி சொல்வதைக் கேட்ட அதிராசேந்திரன், ஆவேசப்படும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது! அது எதுவாயிருக்கும்? என்று மனதில் கேள்வியை எழுப்பி, “சகோதரி, நீ ஆத்திரம் கொள்ளும் அளவுக்கு அங்கே என்னம்மா பேசிக் கொண்டார்கள்?” என்றான் அமைதியாகவே. “பெரிய மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள். உனக்குப் பிறகு வேங்கியானுக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போகிறார்களாம். என் தம்பி மதுராந்தகனுக்குப் பதிலாக, அவனைக் காஞ்சிக்கு அரசப் பிரதிநிதியாக ஆக்கப் போகிறார்களாம். அதை உறுதிப்படுத்தும் முறையில் மதுராந்தகிக்கும், இராசேந்திரனுக்கும் மணம் முடிக்கப் போகிறார்களாம். எப்படி இருக்கிறது வேடிக்கை?” என்றாள் ஆவேசத்துடன். அதிராசேந்திரன் திடுக்கிட்டான்! “அக்கிரமம் அதிகமாகிவிட்டது! ஏதாவது ஒன்று, நடந்தால்தான் இதற்கு வழி பிறக்கும்” என்று பொங்கும் சினத்துடன் மீண்டும் வெளியே போக முயன்ற இராஜசுந்தரியைத் திரும்பவும் தடுத்து, அதே வேகத்தில் அவள் கையிலிருந்த குறுவாளையும் வாங்கிக் கொண்டான். அவளின் அழகிய அதரம் கோபத்தினால் சிவந்தது. “என்னிடமிருந்து ஏன் கத்தியை வாங்கிக் கொண்டாய்! நான் செய்யப் போவது புனித காரியம்! அதனால் இச்சோழ சாம்ராஜ்யமே நன்மை அடையப் போகிறது” என்றாள். இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்திரத்தோடு இருக்கும் இராஜசுந்தரியை முதலில் சாந்தப்படுத்த வேண்டும் என்று, “சகோதரி! சோழ அரசுப் பொறுப்பு மூத்த மகன் என்ற முறையில் எனக்குத்தான் வரும். பரம்பரை பரம்பரையாக வந்த இப்பழக்கத்தை நம் தந்தையால் அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. அப்படி ஏதாவது செய்தால் நாட்டில் குழப்பம்தான் வரும். அதனால் எந்தவிதக் கவலையுமின்றி நிம்மதியாக அந்த இருக்கையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள் அம்மா” என்றான். “என் கணவர் மேலைச்சாளுக்கிய மன்னர் இருக்கும் வரை உங்களுக்கு அரசு கட்டில் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! ஆனால்... உங்களுக்குப் பிறகு? அந்தக் கேள்வியைக் கொஞ்சம் மனதிலிருத்தி யோசித்துப் பாருங்கள். தம்பி மதுராந்தகன் கதி என்னாவது? பரம்பரையாக சோழ வம்ச அரசர்களே ஆண்டு வந்த இந்த அரசு கட்டிலை, எங்கிருந்தோ வந்திருக்கும் இராசேந்திரன் அல்லவா கைப்பற்றிக் கொள்வான் போலிருக்கிறது” “அப்படி நடக்காது, நடக்கவும் முடியாது. அம்மாதிரி நடக்கவும் விடமாட்டேன்” என்று அந்த அறையே அதிரும்படிக் கத்தினான் அதிராசேந்திரன். இளையராணி திடுக்கிட்டுப் போனாள்; இராஜசுந்தரியும் வாயடைத்து நின்றாள். பரவாயில்லையே! இளவரசருக்கு இப்போதுதான் ரோஷமே வந்திருக்கிறது போலிருக்கிறதே. இது தொடர்ந்திருக்குமேயானால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்று எண்ணிய இளையராணி, தன் கணவன் மேலும் என்ன சொல்லப் போகின்றான் என்பதை அறிவதற்காக அவனைப் பார்த்தாள். அதற்குப் பதில்- வாயடைத்து நின்ற இராஜசுந்தரியே பேசலானாள். “அண்ணா! என் கணவரை எப்படியாவது இங்கே வரவழைக்க வேண்டும். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கொடும்பாளூர்க் குறுநில மன்னனுடன் நாம் கலந்தாலோசிக்க வேண்டும். காலம் கடத்தாமல் இன்றைய இரவே அதைப் பற்றிப் பேச வேண்டும்” என்றாள் பரபரப்போடு. “இராஜசுந்தரி சொல்வது போலவே இன்றைய இரவு இதுபற்றிப் பேசலாம். அதற்காக, கொடும்பாளூர்க் குறுநில மன்னரை சந்தித்துவிட்டு வருகின்றேன். அதுவரை எனக்காக உணர்ச்சிப் பெருக்கால் எதையாவது செய்து தொலைக்காமல் இங்கே நீ இருக்க வேண்டும்” என்றான் சோழ இளவரசன் அழுத்தமாக. அப்பொழுது- கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. “யார்?” என்று அதிராசேந்திரன் வினவ, “நான்தான் வீரசோழ இளங்கோவேளான்” என்றான். இளவரசன் கதவைத் திறந்தான். நல்ல உயரத்துடனும், முகத்தில் மெல்லிய மீசையும், கயறு போல் மெலிந்த தேகத்துடனும் நின்று கொண்டிருந்த ஒருவன் அதிராசேந்திரனை வணங்கி, “மன்னர் பேச்சு மூச்சின்றி இருக்கின்றார். முதன் மந்திரி தங்களைத் தாமதிக்காது உடனே வரச் சொன்னார்!” என்றான். “அரசருக்கு ஒன்றும்...” என்று பதறிய சோழ இளவரசனின் கண்கள் கலங்கின. “வருத்தப்பட இது நேரமில்லை சக்கரவர்த்தி” என்ற சோழ வேளான், ‘சக்கரவர்த்தி’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அதிராசேந்திரனைத் துரிதப்படுத்தினான். மேலாடையைச் சரி செய்து, அவனுடன் புறப்பட ஆயத்தமான சோழ இளவரசன், இளையராணியையும், இராஜசுந்தரியையும் பின்னால் வரும்படிக் கூறிவிட்டு, மன்னரின் அறை நோக்கி நடக்கலானான். அவ்விதம் நடக்கும் போது... “சக்கரவர்த்தி!” என்று திரும்பவும் அழைத்தான் வீரசோழ வேளான். இன்னும் நான் இளவரசனாகத்தானே இருக்கின்றேன். சோழப்படையின் ஆயிரம் புரவி வீரர்களுக்குத் தலைவனாயிருக்கும் இவன், நம் நம்பிக்கைக்கு உரியவன்தானா? திடீர் என்று சக்கரவர்த்தி என்று என்னை ஏன் அழைக்கின்றான்? என்று அவனை ஏறிட்டுப் பார்க்க, “என்ன பார்க்கின்றீர்கள் சக்கரவர்த்தி! நான் உங்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் உகந்தவன். வேண்டுமானால் கொடும்பாளூராரிடம் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்; நீங்கள் இடும் ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றக் காவல் நாயாகக் காத்திருக்கின்றேன்!” என்றான். மன்னர் அறை வந்துவிட்டது! வேந்தரின் இருக்கையைச் சுற்றிப் பட்டத்தரசியும், முதன் மந்திரியும், அரச மருத்துவரும் இருந்தனர். சோழ இளவரசனைக் கண்டதும், “சக்கரவர்த்தி மோசம் செய்துவிட்டார் மகனே!” என்று கண் கலங்கி அழுத உலகமுழுதுடையாள், துயர மிகுதியால் அவனைக் கட்டிக் கொண்டாள். “தந்தையே!” என்று அவனும் கதற, அரசரின் மூடிக் கொண்டிருந்த வாயை, மருத்துவர் கடினப்பட்டுத் திறந்து தேனில் குழைத்த மருந்தை நாவில் தடவினார். “இப்போது!” என்று வருத்தம் மிகுந்த குரலில் பிரமாதிராசர் கேட்க, “நாடித் துடிப்பு நம்பிக்கையூட்டும்படி இல்லை!” என்றார் மருத்துவர். பட்டத்தரசியைச் சந்திக்க, கடார தேசத்திலிருந்து ஒரு பெண்ணும், ஆண்மகன் ஒருவனும் வந்திருப்பதாகத் தெரிவித்தான் காவல் வீரன். “இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி அவர்களைச் சந்திப்பது? நீங்களே என்ன என்று கேட்டுவிடுங்கள்” என்று முதன்மந்திரியிடம் கூறினாள் பட்டத்தரசி. ‘இப்போது ஏன் அவர்கள் இங்கே வர வேண்டும்? மாளிகைக் காவற்தலைவனுக்கு யாரையும் உள்ளேவிட வேண்டாமென ஏற்கனவே நான் உத்தரவு செய்துவிட்டேனே! எப்படி அவனை மீறி இவர்கள் உள்ளே வந்தார்கள்...’ என்று சிந்தனையில் ஆழ்ந்த பிரமாதிசாசர், கடார இளவரசியை அழைத்து வரும்படி வீரனுக்குக் கட்டளையிட்டார். மயக்கும் யவ்வனங்களுடன் எதற்கும் அசையாத பிரமாதிராசர் மனதையே அசைக்கும் விதத்தில், வசீகரத் தோற்றத்துடனிருந்த இரத்தினாதேவி, முதன் மந்திரிக்கு வணக்கம் தெரிவித்தாள். ஏற்கனவே அவளைப் பற்றிய செய்தி அவருக்குத் தெரிந்திருந்ததால், எச்சரிக்கையுடனேயே “என்ன விஷயம்? நீங்கள் யார்?” என்று வினவினார். “நான் கடார நாட்டைச் சேர்ந்தவள். பெயர் இரத்தினாதேவி. எங்கள் அரசரின் நல்லெண்ணத் தூதுவராக சோழ மன்னரைச் சந்திக்க வந்திருக்கின்றேன். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும், விரைந்து வந்திருக்கின்றேன். எங்களிடம் அவர் உயிரைக் காப்பாற்றும் அதிசய குளிகை ஒன்று இருக்கிறது. அனுமதித்தால் சக்கரவர்த்தியின் உயிரை என்னால் காப்பாற்ற முடியும்” என்று உறுதியுடன் கூறினாள் அவள். முதன் மந்திரியின் உள் மனம் விழிப்புப் பெற்றது. ஏற்கனவே என் காதுகளுக்கு இவளைப் பற்றி அம்மாதிரி செய்தி ஒன்றும் எட்டவில்லையே? என ஏற இறங்க அவளைப் பார்க்கலானார். “நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணத்தையும் அரசர் உயிரைக் காப்பாற்றலாம் என்று எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழிக்க வந்த யமனாகவே நான் கருதுகிறேன். அதனால், தாமதிக்காது அரசருக்குச் சிகிச்சை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்” என்றாள். முதலமைச்சர் சற்று நேரம் சிந்தித்துவிட்டு, “அம்மணி, உங்களை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். ஏனென்றால் மன்னர் உயிருக்கு அரச மருத்துவர் ஒரு நாழிகை கெடு கொடுத்துள்ளார். அதற்குள் நீங்கள் ஏதாவது செய்து அதனால் ஏதாவது நடந்துவிட்டால், சோழ அரசகுடும்பத்தினருக்கும் மக்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது!” என்றார். இரத்தினாதேவி இப்பதிலைக் கேட்டு பெரும் படபடப்புக்கு உள்ளானாள். நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை வழித்துவிட்டு, “என்னிடம் இருக்கும் குளிகையின் மதிப்பை நீங்கள் உணராததாலே இப்படிக் கூறுகிறீர்கள். அது விலை மதிக்க முடியாத பொக்கிஷம். என்னை நீங்கள் அனுமதிக்காவிட்டால் மன்னர் உயிர் பிரிய நீங்கள்தான் காரணம் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். அதனால் சற்றும் யோசிக்காது அனுமதியுங்கள்” என்றாள் பணிவுடனே. முதன் மந்திரி அவளை ஏறிட்டு நோக்கினார். இந்தச் சிறிய வயதில் இவ்வளவு துணிவாய்ப் பேசுகின்றாள். வரவேற்க வேண்டிய அம்சம்தான். சக்கரவர்த்தியின் உயிரை காப்பாற்றும் அபூர்வக் குளிகை இவளிடம் எப்படி வந்தது? என்ற சிந்தனையுடனே அவளைப் பார்க்க... “நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறிய வயதிலிருந்து மருத்துவம் கற்க ஆசைப்பட்டு, எங்கள் அரச வைத்தியரிடம் பயின்றேன்! அவர் பல நாள் ஆராய்ச்சி செய்து, மிகவும் கஷ்டப்பட்டு இதைக் கண்டு பிடித்திருக்கின்றார். நான் அவரின் நம்பிக்கைக் குரியவளாயிருந்ததால் எனக்கு அந்தக் குளிகையில் ஒன்றைக் கொடுத்து மிக நெருக்கமானவர்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சோழ அரசரைத் தவிர எனக்கு நெருக்கமானவர் யார்? என் அபூர்வக் குளிகையால் அவர் பிழைத்துக் கொண்டால், எங்கள் நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் உறவு பலப்படாதா? அந்த நப்பாசையில்தான், நான் மன்னருக்கு மருத்துவம் செய்ய விரும்புகின்றேன்!” என்றாள் இரத்தினாதேவி. முதன் மந்திரி இவளை அனுமதிக்கலாமா கூடாதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இளவரசன் அதிராசேந்திரன் அங்கே வந்தான். அவனிடம் விஷயத்தைப் பிரமாதிராசர் சொல்ல, “எல்லாம் கடந்து போய்விட்டது. இனிமேல் நீங்கள் மருத்துவம் செய்வது வீண்” என்று கடார இளவரசியிடம் கூறினான் சோழ இளவரசன். “இல்லை. இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அபூர்வக் குளிகையின் ஆற்றல் அளவிட முடியாதது! அதனால்தான் உங்களை நான் வற்புறுத்துகின்றேன்!” என்றாள். அதிராசேந்திரன் முதலமைச்சரைப் பார்க்க, அதற்குள் துணைத்தளபதி தன்மபாலர் வந்தார். அனைவரும் பட்டத்தரசியிடம் இது பற்றிக் கூற, “கடைசி நேரம்! அவர்கள்தான் முயற்சிக்கட்டுமே” என்று உலகமுழுதுடையாள் சிகிச்சைக்குச் சம்மதித்தாள். முதலமைச்சர் வேறு வழியின்றி அவளை மருத்துவம் செய்ய அனுமதித்தார். ‘ஒரு விஷயத்தை நாம் நடக்கவிடக் கூடாது என்று முடிவு கட்டினாலும், நம்மை மீறி அது நடக்கத்தான் செய்கிறது!’ என மனதில் எண்ணிய பிரமாதிராசர், சிகிச்சை முடிந்ததுமே இவளைக் கடார நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் சோழ நாட்டிற்கு நல்லது என்று மனதிற்குள் கூறிக் கொண்டார். மயங்கிய நிலையில் இருந்த அரசரின் நாடித் துடிப்பை ஆராய்ந்த இரத்தினாதேவி, சாமந்தனிடம் குளிகையைத் தேனில் குழைக்கும்படிக் கட்டளையிட்டாள். சந்தனக் கல்லில் சிறிய தந்தப் பேழைக்குள்ளிருந்த குளிகையை எடுத்து உரசினாள். பச்சையும், கறுப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் மருந்துக் கலவை ஒன்று குளிகையிலிருந்து வெளிப்பட்டது. நாடியைப் பிடித்தபடி, கொப்புளில் கலவையைத் தடவிய கடார இளவரசி, உள்ளங்கை, உள்ளங்கால், நெற்றி இவற்றில் மருந்தைத் தடவி, உடம்பில் சூட்டை உண்டாக்கினாள். நூறு நொடிகளுக்கு ஒருமுறை, நாவில் இன்னொரு குளிகையைத் தேனில் குழைத்துத் தடவிக் கொண்டிருந்தாள். அரை நாழிகை கடந்தது. நாடித் துடிப்பு இன்னும் பலவீனமாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. மருந்தின் அளவை இரட்டிப்பாக்கினாள். அது தவிர கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறக் கலவையைக் கொப்புளில் தடவிக் கொண்டேயிருந்தாள். அரச மருத்துவர் சொன்ன கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. ‘எனக்குத் தெரியாத மருத்துவத்தையா இவள் செய்துவிடப் போகின்றாள்; பார்த்துவிடலாம்’ என்று கேலியுடன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரை அருகில் அழைத்து நாடியைப் பார்க்கும்படிச் சொன்னாள் கடார இளவரசி. நாடியில் கை வைத்த வைத்தியர் அதிர்ந்து போனார். வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் இறங்கு முகத்திலிருந்த நிலை மாறி, பலம் பெற்று, புதிய வலிவுடன் ஒரே சீராய் இயங்கும் நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது! திகைத்து நின்றுவிட்டார் மருத்துவர். அரசர் பிழைத்துவிட்டார் என்ற நற்செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|