உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 22 பாதாள அறை... அரண்மனையின் நடுவில் மிகவும் பாதுகாப்புடன் இருந்த அந்தப் பகுதிக்குச் செல்ல, நிலாமுற்றத்தினருகிலிருக்கும் படிக்கட்டுகளில் சென்று, வலப்பக்கம் திரும்ப வேண்டும். அங்கிருந்து சுரங்கம் போன்று பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த படிகளில் இறங்கினால், மேலே இருப்பது போல், கூடம் போன்ற அமைப்பு கீழேயும் இருக்கும். அதன் நடுவே பெரிய இரும்புக் கதவுகள் கொண்டு மூடப்பட்டிருந்த அந்த இடத்தைத் தாண்டினால், இருபுறமும் சிறு சிறு அறைகள் இருக்கும். அவைகளில்தான் பயங்கர குற்றம் புரிந்த குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தார்கள். பாதாளச் சிறையிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஒருவர் தப்பி வெளியேறுவது என்பது முடியாத காரியம்! திரும்பித் திரும்பி, வளைந்து வளைந்து இருக்கும் படிக்கட்டுகள் முடியும் ஒவ்வொரு இடத்திலும், வேல் வீரர்கள் இருவர் காவல் காத்து நிற்கின்றனர். அத்துடன் நில்லாது, இருபது வீரர்களுக்கு மேல் உருவிய வாளுடன், அப்பகுதியை அடிக்கடி வலம் வந்து கொண்டிருந்தனர். அத்தனைப் பாதுகாப்புடனிருக்கும் பாதாளச்சிறையில் ஒருவர் சிறை வைக்கப்பட்டால், அவரின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும். பொய்ப்பாகர் வேடத்தில் கலகம் செய்ய வந்த பாண்டியர் இருவரும் இங்கேதான் அடைக்கப்பட்டிருந்தனர். மதுரையின் தற்காலிக அரசப்பிரதிநிதியாகப் பதவி ஏற்றுள்ள இராசேந்திரன், திருவரங்கனுடன் அங்கே சென்றான். பாதாளச்சிறையின் தலைமைக் காவலன் இரும்புக் கதவைத் திறந்து அவர்களை வரவேற்றான். “அவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்று இராசேந்திரன் கேட்டான் உள்ளே நுழைந்தபடி. “கொடுமையின் எல்லைக் கோட்டுக்கே சென்று துன்புறுத்திவிட்டோம். அவர்களிடமிருந்து எதையும் வரவழைக்க முடியவில்லை” என்றான் சிறைத்தலைவன் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு. “சரி, பார்க்கலாம்.” என்று சிறை வைக்கப்பட்டிருந்த அறை முன் தலைவனுடன் சென்றான். காவல் வீரன் இரும்புக்கதவைத் திறந்துவிட, உள்ளே திருவரங்கனுடன் சென்றான் இராசேந்திரன். உத்தரத்தில் தொங்கிய இரு சங்கிலிகளைப் பின்பக்கமாக மடித்து, இருவரையும் பிணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, கால்கள் இரண்டும் முன்பக்கமாய் இழுத்துத் தரையில் கட்டப்பட்டிருந்தது. இது ஒன்றே போதும் அவர்களுக்கு! ஆனால்... அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உடலெங்கும் இரத்தக் காயங்கள். ஒருவனுக்கு முன் பல் இரண்டும் உடைந்து உதடுகள் வீங்கிப் போயிருந்தன. இன்னொருவனுக்கு வலக்கண் புருவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதிலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. செய்தியை வரவழைப்பதற்கு நிரம்பத்தான் துன்புறுத்திவிட்டார்கள். இருந்தாலும் ஒன்றுமே இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியவில்லையே! பாதாளச் சிறைக்காவல் தலைவனைக் கூப்பிட்டுக் கைகளையும் கால்களையும், அவிழ்த்து விடுவிக்கும்படி கூறினான் இராசேந்திரன். கைதியை அம்மாதிரி செய்யும் வழக்கம் இல்லையே! என்று பொருள்படும் விதத்தில் சிறைத்தலைவன் இவனைக் கவனிக்க... “பரவாயில்லை. இவ்வளவு கட்டுக் காவலையும் மீறி இவன் ஓடிவிடமாட்டான். நாமும் மனிதர்கள்தான். ஒருவனைத் துன்புறுத்துவதற்கு அளவு என்று ஒன்று இல்லையா?” என்றான் இராசேந்திரன். சங்கிலிகளை அவிழ்த்து, இருவரையும் பிணைப்பிலிருந்து விடுவித்தனர். நிற்க முடியாமல் அவர்களின் கால்கள் நடுங்கின. கைகள் அசைக்க முடியாமல் மரத்துப் போயிருந்தன. உட்காரும்படி இருவரையும் பார்த்துக் கூறினான் இராசேந்திரன். ஆனால், கீழே உட்கார முடியாமல் மிகவும் சங்கடப்பட்டனர். குடிப்பதற்கு தண்ணீர் தரும்படி காவல்தலைவனுக்குக் கட்டளையிட்டான். மட்பாண்டத்தில் குளிர்ந்த நீர் கொண்டு வரப்பட்டது. சிறைத்தலைவனிடமிருந்து அதை வாங்கி, கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவிக் கொண்டு, “அப்பாடா!” என்று இருவரும் பெருமூச்சுவிட்டனர். சற்று நேரம் சென்றதும், இராசேந்திரன் அவர்கள் அருகில் சென்றான். “உங்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று இவர்களுக்குக் கட்டளையிட்டுவிடுகிறேன். இனிமேல் உங்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களை ஏவிவிட்டவர் யார்? எதற்காக யானைகளை அவிழ்த்து மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில்விட்டுக் குழப்பம் ஏற்படுத்த முனைந்தீர்கள்? இதையெல்லாம் தெரிவித்துவிட்டால் உங்கள் இருவரையும் மன்னித்து விடுதலை செய்துவிடுகின்றேன்!” என்றான் மிகவும் கனிவாக. அன்புடன் நடந்து தங்களிடமிருந்து செய்தியை வாங்க முயற்சிக்கின்றான் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும், “மன்னித்துக் கொள்ளுங்கள்; நாங்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்” என்றனர். இராசேந்திரன் அதைக் கேட்டு முறுவலித்தான். “என்னைப் பகைவன் என்று எண்ண வேண்டாம். உங்களுக்கு உதவி புரிய வந்த நண்பன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்றான். தலை குனிந்தபடியிருந்த இருவரில் ஒருவன் நிமிர்ந்தான். அவன் கண்கள் இராசேந்திரன் மேல் ஆழமாய்ப் பதிந்தன. “நீங்கள் என்ன கூறினாலும் எங்களின் பதில் இதுதான். அது...” என்று நிறுத்தி திரும்பவும் தலைகுனிந்தவாறு, “சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றான். “என்ன திமிர்!” என்று கோபமுற்ற சிறைத்தலைவன் அடிப்பதற்காகக் கைகளை ஓங்கியபடி அவர்கள் மேல் பாய்ந்தான். இராசேந்திரன் அவனைத் தடுத்து, “ஆத்திரப்படுவதால் எந்தப் பயனும் கிடைத்துவிடாது. கொஞ்சம் அமைதியுடன் இரு!” என்று கூறி, “நீங்கள் சொன்ன இப்பதில் எனக்குத் தேவைப்படாத ஒன்று. இருந்தாலும் நான் கோபப்படாமல் கேட்க விரும்புகின்றேன். உங்கள் பெயர்தான் என்ன?” என்றான். இருவரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர். சொல்வதா? வேண்டாமா? என்பது போல சில நொடிகள் மௌனமாயிருந்துவிட்டு, “ஐயா, தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறோம். எங்களைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம்” என்று உறுதியான குரலில் கூறினார்கள். அவர்களின் கட்டுக்கோப்பான உறுதியைக் கண்டு வியந்த இராசேந்திரன், “பெயரைச் சொல்வதால் எந்தவிதத் தவறும் இல்லையென்று எனக்குப்படுகிறது. அதனால் உங்கள் இரகசியங்கள் எங்களுக்குத் தெரியவும் போவதில்லை. எனவே பெயரைச் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்!” என்று புன்முறுவலுடனே கூறினான். “மன்னிக்கவும், உங்கள் நம்பிக்கையை நாங்கள் நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கிறோம்” என்று உறுதியுடன் கூறினான் இருவரில் ஒருவன். அதைக் கேட்ட இராசேந்திரன் சினம் கொண்டான். அதை அடக்குவதன் அடையாளமாக உதட்டை மெல்லக் கடித்துக் கொண்டு... “இத்தனை உறுதியுடன் இருக்கும் உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்றான். “நன்றி!” என்று அவர்களில் ஒருவன் முறுவலுடன். “நன்றி சொன்னது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான்! இருந்தாலும் உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்வதில் எந்தவிதப் பாதகமும் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்!” என்றான் இராசேந்திரன் திரும்பவும். “ஐயா, திருப்பித் திருப்பிக் கேட்டாலும், எங்கள் பெயரைச் சொல்வதற்கில்லை. அப்படிக் கூறினால் எங்கள் தலைவருக்கு நாங்கள் துரோகம் செய்தவர்கள் ஆவோம். அதனால் தயவு செய்து எங்களை எதுவும் கேட்க வேண்டாம்!” என்றனர் திட்டமான குரலில். இனிமேல் அவர்களிடம் எப்பதிலையும் வரவழைக்க முடியாது என்று அறிந்து கொண்ட இராசேந்திரன் சிறைத் தலைவன் பக்கம் திரும்பி, அவர்களுக்கு வயிறு நிறைய உணவு தரும்படி உத்தரவிட்டு வெளியே வந்தான். பின் தொடர்ந்த சிறைத்தலைவன், “நஞ்சு கலந்த உணவுதானே?” என்று கேட்க, “ஆமாம்!” என்று தலையாட்டிவிட்டுப் பாதாளச் சிறையின் படிகளைக் கடக்கலானான் இராசேந்திரன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|