(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 23

     பால் நிலவு இரவைப் பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஓரளவு வெற்றியும் கண்டது போல், சோழகங்கம் ஏரியில் நல்ல வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.

     ஏரியின் கரையோரம் எந்தவித அசைவுமின்றி வான் முட்டும் அளவிற்கு, உயரத்துடனிருந்த மரங்களின் உச்சிகள் நிலவொளியில் பளிச்சிட்டாலும், அதன் அடிப்பாகத்தில் விழுந்த நிழலால் உண்டான இருட்டும், அதைத் தொடர்ந்து அங்கே நிலவிய அமைதியும் பார்ப்பவர்களுக்கு அச்சத்தைத்தான் ஊட்டிக் கொண்டிருந்தது.

     அந்த அச்சத்தினூடே இலேசாய் வீசிய தென்றல் காற்று மனதிற்கு இதத்தைக் கொடுத்தாலும், அங்கே நிலவிய அச்சமான சூழலை, அவை அதிகரிப்பது போலவே இருந்தது.

     ஆங்காங்கே சிதறிக் காணப்பட்ட இரைக்காக புதர்களிலிருந்து கீரிகள், அப்படியும் இப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தன.

     மரங்களிலிருந்து பட்சிகள் சப்திக்கும் போதெல்லாம் அதற்கு எதிரிடையாக தூரத்திலிருந்து நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

     இத்தனைத் தனிமைச் சூழலில் காணப்பட்ட அந்த ஏரியை ஒட்டியிருந்த மண்டபத்தில், கடார இளவரசி இரத்தினாதேவியும், சாமந்தனும் நீர்ப்பரப்பைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.

     “நேரமாகிவிட்டது இளவரசி! இனிமேல் நாம் இங்கிருப்பது முறையல்ல! அரண்மனைக்குத் திரும்பிவிடலாம்!” என்றான் சாமந்தன்.

     “கடாரத்தைவிட்டு வந்து இரு திங்கள் ஆகிவிட்டன. இன்னும் பகை முடிக்காமல் இருக்கின்றோம். அதற்குள் அவன் மதுரை போய்விட்டான்” என்றாள் சற்று எரிச்சலுடனே.

     சாமந்தன் அதைக் கேட்டுப் பற்களைக் கடித்தான்.

     “மதுரைக்கே சென்று அவனை மேல் உலகம் அனுப்பினால் என்ன?” அவளைத் திருப்பிக் கேட்டான். அந்தக் கேள்வியில் கடார இளவரசிக்குச் சிந்தனை எழுந்தது.

     “நீ சொல்வதும் சரிதான். நாளையே சக்கரவர்த்தியிடம் மதுரைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, பகைவன் இராசேந்திரனை தீர்த்துக் கட்ட வேண்டும்” என்றாள்.

     “சபாஷ்! உங்கள் முடிவுக்கு என் வாழ்த்துக்கள்!” என்று ஒரு குரல் அவர்கள் பின்னாலிருந்து குறுக்கிட்டது.

     இருவரும் திடுக்கிட்டு எழுந்து கொண்டனர். சாமந்தன் வாளை உருவிக் கொண்டான். இரத்தினாதேவி குறுவாளைக் கையிலெடுத்தாள்.

     “இரண்டையும் உறையில் போடுங்கள். நான் உங்கள் சிநேகிதி!” என்று மண்டபத்தூணின் பின்னாலிருந்து, சாளுக்கிய நாட்டு அரசியான இராஜசுந்தரி வெளி வந்தாள்.

     அவளை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்கவில்லையாதலால், இருவரும் திகைத்து சிலையென நின்றனர் சில நொடிகள் வரை.

     பின்பு...

     இரத்தினாதேவி சமாளித்து இதழ்களில் புன்முறுவலைப் படரவிட்டு, “உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லையே” என்றாள்.

     “ஆமாம். நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்தான். அதே போல் நானும் இந்த இடத்தில் உங்களை இப்போது எதிர்பார்க்கவில்லை!”

     நம்மால் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இராஜசுந்தரிக்குத் தெரிந்துவிட்டது. ஒன்று இவளை நாம் தீர்த்துக் கட்ட வேண்டும். இல்லையென்றால் நம் இருவரையும் சதி செய்ததாகக் குற்றம்சாட்டி தூக்கிலிட்டுவிடுவார்கள். ஆனால்... என்று குழப்பத்துடனிருந்த சாமந்தனை நோக்கி, “நண்பரே!” என்றாள் இராஜசுந்தரி.

     இவ்விதம் அவள் கூப்பிடுவதைக் கேட்ட இரத்தினாதேவி தன் விழிகளில் வியப்பைப் படரவிட்டு, அவளைப் பார்த்தாள்.

     “நீங்கள் பேசின அனைத்துச் செய்திகளும் என்னால் கேட்கப்பட்டுவிட்டது என்பதை நான் மறுக்கவில்லை. அப்படிக் கேட்டுவிட்டதால் உங்களுக்கு எந்தவித ஆபத்தும் இந்த இராஜசுந்தரியால் ஏற்பட்டுவிடாது!” என்றாள் உறுதியாக.

     அவள் குரலில் தொனித்த அழுத்தத்தைக் கேட்ட இருவருக்கும், சிறு நம்பிக்கை மனதில் தோன்றியது. இருந்தாலும் எந்த அளவிற்கு இவளை நம்பலாம் என்ற கேள்விக் குறியுடனே அவளைப் பார்த்தனர்.

     “நீங்கள் என்ன பேசப் போகின்றீர்கள் என்பதை அறிவதற்காக உங்களை நான் இங்கே பின் தொடரவில்லை. உங்களைப் போலவே, மதுரைக்குப் போய்விட்ட அந்த இராசேந்திரனை எப்படி ஒழிக்கலாம் என்பதை ஆலோசிக்கவே, இங்கே நான் மட்டுமல்லாது, இன்னும் இரண்டு பேர்களும் வந்திருக்கின்றோம்!” என்றாள்.

     “இரண்டு பேரா?” என்று புரியாமல் வினவினான் சாமந்தன்.

     “ஆம்; இரண்டுபேர்கள்தான். அதோ பாருங்கள்!” என்று தூரத்திலிருந்த பாதிரி மரத்தைச் சுட்டிக்காட்டினாள்.

     அவள் காட்டிய இடத்தில் பல்லக்கு ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு புரவி நின்று கொண்டிருந்தது. பெண் ஒருத்தியும் வயதான ஒரு பெரியவரும் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

     “யார் அவர்கள்?” என்று நிலவொளியில் உற்றுக் கவனித்தாள் இரத்தினாதேவி.

     இதுவரை பாதிரிமர நிழலால் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் முகம் தற்போது வெட்டவெளியில் வந்துவிட்டதால், அவர்கள் யாரென்று கடார இளவரசிக்குப் புரிந்தது. அதன் அடையாளமாக முறுவலித்தாள். இளையராணி, அதற்குப் பின்னால் அந்தப் பெரியவர் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். (பெரியவர் என்று அவள் குறிப்பிட்டது சயங்கொண்ட சோழ இருக்குவேளை).

     “இப்போது திருப்திதானே உங்களுக்கு! இராசேந்திரனை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாறுபாடும் இல்லை. உங்கள் இருவரோடு நாங்கள் சேர்ந்துவிட்டதால், இராசேந்திரன் மேல் உலகம் செல்வது உறுதியாகிவிட்டது” என்றாள் மகிழ்ச்சியோடு.

     கடார நாட்டை அவன் அழித்துவிட்டதால் நமக்கு அவன் எதிரியாகிவிட்டான். ஆனால் இவர்களுக்கு அவன் ஏன் பகைவனானான்? என்று மனதிலெழுந்த ஐயத்தை வினாவடிவாக்கிக் கேட்டாள் கடார இளவரசி.

     “சொல்கின்றேன்! அதெல்லாம் பெரிய கதை. மொத்தத்தில் அவன் எங்கள் நாட்டைச் சேர்ந்தவனல்ல. ஆனால் சோழ அரசுப் பொறுப்பைக் கைப்பற்ற எங்களுக்கு எதிராக சதி செய்கிறான். அதனால் எங்களுக்குப் பகைவனாகிவிட்டான்” என்றாள்.

     “அப்படியா விஷயம்?” என்று புரிந்து கொண்ட கடார இளவரசி, மகிழ்ச்சியுடனே சாமந்தன் பக்கம் திரும்பி “இன்னும் வாளை ஏன் உறையில் போடாமலிருக்கிறாய்? இவர் நம் நண்பர்தான்” என்றாள்.

     சாமந்தன் அரைமனதுடனே வாளை உறையிலிட்டான். அதற்குள் இருவரும் மண்டபத்தை நெருங்கிவிட்டனர்.

     முன்னால் வந்த இராஜசுந்தரியுடன், கடார இளவரசியும், சாமந்தனும் இருப்பதைக் கவனித்து “இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்?” என்று திகைப்புற்று, இளையராணி அவர்களை நோக்கினாள்.

     தட்டுத்தடுமாறி வந்த சயங்கொண்ட சோழ இருக்குவேளுக்குக் கைகொடுத்து மண்டபத்தில் உட்கார வைத்தாள் இராஜசுந்தரி.

     செங்குத்தாயிருந்த சோழகங்கத்தின் ஏரிக்கரையை ஏறி வந்ததினால் ஏற்பட்ட படபடப்பு அடங்க, மூச்சை நிதானப்படுத்துவதற்கு முதியவரான சயங்கொண்ட சோழ இருக்குவேள் சில நொடிப் பொழுதை எடுத்துக் கொண்டார்.

     பிறகு அவர்கள் பக்கம் திரும்பி, “இவர்கள்...?” என்று இழுத்தபடி கேட்டார்.

     “நமக்கு முன்பே இங்கே வந்திருக்கிறார்கள். எதற்கு என்று தெரியுமா? எல்லாம் நம் பகைவன் இராசேந்திரனை ஒழிப்பதற்காகத்தான்” என்றாள் குதூகலத்துடன்.

     “அப்படியென்றால் நாம் எல்லோரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான்!” என்று மகிழ்ச்சியின் மிகுதியால் உரக்கச் சிரித்த இருக்குவேள், “நான் சொல்வது சரிதானே?” என்று இராஜசுந்தரியை வினவினார்.

     “செயங்கொண்டார் சொன்னால் தப்பே இருக்க முடியாது” என்று குறுக்கிட்டாள் இளையராணி.

     அத்துடன், “இவர்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டுத்தானே நாம் ஆலோசனையைத் தொடர வேண்டும்!” என்று கேட்டாள்.

     “இல்லை. அவர்களும் இருப்பார்கள். சயங்கொண்டார்தான் ஒரே சாதி என்று சொல்லிவிட்டாரே. மதுரையிலிருக்கும் பகைவனைக் கொல்ல நாம் ஆளைத் தேடிக் கொண்டிருந்தோம் அல்லவா? கடார இளவரசி இரத்தினாதேவியை கடவுளே அதை நிறைவேற்ற அனுப்பியிருக்கின்றார்” என்றாள் இராஜசுந்தரி.

     “என்னது...?” - புரியாமல் இளையராணி இரத்தினாதேவியைப் பார்க்க...

     அவள் குறுவாளைக் கையிலெடுத்தாள். சரக்கென்று இலேசாய் மணிக்கட்டில் கீறி, அதிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கையில் எடுத்து, “இந்த இரத்தத்தின் மீது ஆணை! என் பகைவன் இராசேந்திரனைக் கொல்லவே நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்!” என்றாள் உணர்ச்சியுடன். உடனே சாமந்தன் இடைமறித்து, “என்ன இளவரசி! வெறும் வாயினால் சொன்னால் போதாதா? அதற்காக உன் உடம்பில் காயத்தையா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?” என்றான்.

     இரத்தினாதேவிக்கு இராசேந்திரன் மீது எத்தனை வெறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். “அவனைக் கொல்ல இவளைத் தவிர வேறு தகுதியான ஆள் கிடையாது” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் இராஜசுந்தரி.

     சயங்கொண்ட சோழ இருக்குவேள் “சீக்கிரம் பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட வேண்டும். நான் அரண்மனையைவிட்டு வரும் போதே ‘எங்கே போகிறீர்கள்?’ என்று சோழ நாட்டுத் தளபதி தன்மபாலன் கேட்டான். போகும் போது அப்படிக் கேட்பது நாகரீகம் அற்ற செயல் என்று தளபதியுடன் சண்டை போட்டுவிட்டு வந்தேன். அதனால்...” என்ற அவரைப் பேசவிடாமல் இராஜசுந்தரி குறுக்கிட்டு.

     “தளபதி! பூனை போல் மௌனமாய் இருக்கிறார். ஆனால் அவர் செய்யும் காரியங்கள் விஷமத்தனம் கொண்டவையாக இருக்கின்றன” என்றாள்.

     “இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக் கொள்ளுங்கள். என் கணவர் அரசரானதும் முதலில் சிறையில் தள்ளுவது அந்த ஆளைத்தான்” என்றாள் இளையராணி.

     “சரி விஷயத்துக்கு வாருங்கள்! இராசேந்திரனைத் தீர்த்துக்கட்ட மதுரைக்கு கடார இளவரசி இரத்தினாதேவியைத்தானே அனுப்பப் போகின்றீர்கள்” என்றார் இருக்குவேள்.

     “ஆமாம்! இங்கேயிருக்கும் அனைவருக்கும் அதில் எந்தவித மாற்று எண்ணமும் இல்லை” என்று அழுத்திச் சொன்னாள் இராஜசுந்தரி.

     இரத்தினாதேவிக்கு முகம் மலர்ந்தது. அதைக் கவனித்த இருக்குவேள், “இது ஒரு சரியான சந்தர்ப்பமாக எனக்குப் படுகிறது. கலகம் செய்யும் பாண்டியர்களை அடக்க மதுரைக்குப் போயிருக்கிறான் இராசேந்திரன். இந்தச் சமயத்தில் அவனை நாம் தீர்த்துக்கட்டிவிட்டால், பழி பாண்டியர் தலையில் விழுந்துவிடும்; அரசு கட்டிலுக்குப் போட்டியாக முளைத்த அவனும் ஒழிந்து போவான்” என்றார்.

     இராஜசுந்தரி மகிழ்ச்சியுடனே, “அப்படித்தான் செய்ய வேண்டும்” என்று பலமாக ஆமோதித்தாள்.

     “இந்நேரத்தில் சோழச் சக்கரவர்த்தி கடார இளவரசியை வெளியே அனுப்பச் சம்மதிக்கமாட்டாரே, அவருக்குத்தான் இளவரசி பேரில் தனி பாசம் இருக்கின்றதே!” என்று ஐயத்தைக் கிளப்பினாள் இளையராணி.

     “ஆமாம்! அதற்கு என்ன செய்வது?” என்று இராஜசுந்தரி சிந்தனையில் மூழ்க, “நான் சக்கரவர்த்தியைச் சரிகட்டிக் கொள்கிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறினாள் கடார இளவரசி.

     இறுதியில் மதுரைக்கு இளவரசியையும், சாமந்தனையும் புவியில் அனுப்புவது என்று முடிவு செய்தனர். துணைக்குத் தென்னனை அனுப்பும்படி கேட்டுக் கொண்டாள் கடார இளவரசி.

     “மதுரையில் கோட்டைத் தலைவனாக இருந்த மூவேந்தன் என் கணவனின் நம்பிக்கைக்கு உரியவன். அவனுக்கு ஒரு கடிதம் தருகிறேன். தேவையான உதவிகளை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்” என்றாள் இளையராணி.

     “கடார இளவரசி அரசு விருந்தாளி. தேவையான வசதியைச் செய்யவும்! என்று சக்கரவர்த்தியிடமிருந்து கடிதம் பெற்றுக் கொண்டால் மிக்க நல்லதாயிருக்கும்!” என்று அச்சமயம் யோசனை சொன்னார் இருக்குவேள்.

     “அம்மாதிரி ஒரு கடிதத்தைத் தான் எப்படியும் சக்கரவர்த்தியிடமிருந்து வாங்கிக் கொள்வேன். அத்துடன் சூழலை அனுசரித்துத் தக்க நேரம் பார்த்து இராசேந்திரனைத் தீர்த்துக் கட்டிவிடுவேன். பழி கலகம் செய்யும் பாண்டியர் தலையில் விழுந்துவிடும்! அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்!” என்று உறுதியுடன் கூறினாள் இரத்தினாதேவி.

     அனைவரும் அவளுக்கு வெற்றி வாழ்த்து கூற, புறப்படுவதற்காக மண்டபத்திலிருந்து எழுந்தனர்.

     இருக்குவேள் எங்கே போகின்றார் இந்த இரவு நேரத்தில்? என்று ஐயப்பட்டு, அவரைப் பின் தொடர ஆயத்தமான சோழநாட்டுத் தளபதியைச் சக்கரவர்த்தி திடீரென அழைத்துவிடவே, என்னவென்று கேட்டுவிட்டு வருவதற்குள் இருக்குவேள் புரவியில் கிளம்பிவிட்டதாகத் தகவல் தெரிந்தது.

     எங்கே போயிருப்பார்? என்று யோசித்த சோணாட்டுத் தளபதி, வடவாற்று மண்டபத்தில் இருக்கலாம் என்று புரவியை அங்கே செலுத்தினார். ஒரு ஈ, காக்கைக் கூட அங்கே இல்லாததால் ஏமாற்றமடைந்து, குழப்பத்துடனே சிந்திக்க, கடைசியில் சோழகங்கம் ஏரியில் ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கே போய்ப் பார்க்கலாம் என்று அரை மனதுடனே குதிரையை வேகமாகச் செலுத்தினார் தளபதி.

     அவர் நினைத்தது போலவே மண்டபத்திலிருந்து இருக்குவேளும், மூன்று பெண்களும், இன்னொரு நபரும் இருப்பதைக் கவனித்துப் புரவியுடன் இருட்டான இடத்தில் மறைவாக நின்று கொண்டார்.

     ஒரு புரவியில் இருக்குவேள் ஏறிக் கொள்ள, மற்றொன்றில் சாமந்தன் அமர்ந்து கொண்டான். கடார இளவரசி இரத்தினாதேவியையும், சாமந்தனையும் சேர்த்துக் கொண்டு அப்படி என்ன இந்த மண்டபத்தில் ஆலோசித்திருப்பார்கள்? என்ற கேள்வி அச்சமயம் அவர் மனதில் எழுந்தது.

     புரவியை மாற்று வழியில் திருப்பி, கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையை அதிசீக்கிரமாய் அடைந்தார்.

     முழு நிலவின் வெளிச்சத்தில் முன்னே சயங்கொண்ட சோழர் மகிழ்ச்சியுடன் செல்ல, பின்னால் மூன்று பெண்களும், சிரித்தபடி மென்னடை நடக்க, அதற்குப் பின்னால் சாமந்தன் முகத்தில் என்ன அப்படி ஒரு பெருமிதம்?

     கோட்டைக்குள் நுழைந்த ஒவ்வொருவரையும், மறைவாய் நின்று கண்காணித்த தளபதி, ‘ஏதோ சதி நடக்கப் போகிறது! அதற்காகத்தான் மண்டபக்கரையில் ஆலோசித்திருக்கிறார்கள்’ என்று ஊகித்து பிரமாதிராசரைப் பார்ப்பதற்காக, அவரின் மாளிகை நோக்கிப் போனார் சோழத்தளபதி.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49