உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 6 அதே நள்ளிரவு நேரம்... சோதிடர் மழவராய அடிகள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த காளிங்கராயன் எழுந்து உட்கார்ந்தான். தோள்களை உயர்த்தி, கைகளை வளைத்து, பெரிய கொட்டாவிவிட்டுச் சோம்பலை முறித்துக் கொண்டான். உடல் சிலிர்க்க வீசிய நள்ளிரவின் குளிர்க்காற்று, அவன் பரந்த தேகத்தைத் தாக்க, மேல் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு, தலையில் பெரிய தலைப்பாகையுடன் கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தான். ‘இந்நேரம் கிழவன் உறக்கத்திலிருப்பானா? அல்லது ‘அம்பிகையே!’ என்று மனம் உருகித் தோத்திரம் செய்து கொண்டிருப்பானா?’ திடீரெனக் கதவைத் திறந்து என்னைத் தேடினால்...? நான் என்ன பதிலைச் சொல்வது கிழவனுக்கு? ‘தூக்கம் வராததால் சற்று நேரம் காலாற நடந்து சென்றேன்!’ என்று சொல்லிவிடலாம் என மனதிற்குச் சமாதானம் கூறிக் கொண்டு, வேகமாய்க் கடலை நோக்கிச் செல்லும் பாதைப் பக்கம் நடக்கலானான் காளிங்கராயன். அந்த அமைதியான நடுநிசியில், பௌர்ணமியின் பூரண ஒளியில், கடலின் ஆர்ப்பரிக்கும் ஓசை அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தது. அவனுக்காகவே எதிர்பார்த்து இருப்பது போல, பாதைப் பக்கம் ஓரமாய் இருந்த மற்றொரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த அம்மையப்பனான சிவபக்தன் எழுந்து காளிங்கராயனைப் பின் தொடர ஆரம்பித்தான். கடல் வந்தது... அலைக் கரங்கள் உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்த வேகத்திலேயே கடலுக்குள் அமிழ்ந்தும் மறைந்தும் போயின. நாகைத் துறைமுகத்தின் கலங்கரை விளக்கின் ஒளி, இருகாத தூரம்வரை நன்கு பரவியிருந்தது. நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்த வெளி நாட்டுக் கப்பல்களும் அந்த ஒளியில் நன்கு தெரிந்தன. சற்றே அமைதி பெற்றிருக்கும் நாகைத் துறைமுகம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சுறுசுறுப்பு பெற்றுவிடும். கடலைக் காக்கும் காவல் வீரர்களும், கடற்கரையை வலம்வர ஆரம்பித்துவிடுவர் என்ற நினைவு காளிங்கராயனுக்கு வந்ததும், ‘காரியத்தை அதற்குள் கவனித்துவிட வேண்டும்’ என்று. மேற்குப் பக்கமாய் கடலை ஒட்டி விரைந்து நடக்கத் துவங்கினான். அலைகள் வழக்கத்திற்கு விரோதமாய்க் கிளம்பி, கரை முழுவதையும் ஆக்கிரமிக்கும் போதெல்லாம் அவன் முழங்கால்களும் அலை நீரால் நனைந்தது. சில சமயம் முழங்காலுக்கு மேலிருந்த துணியும் ஈரமாகியது. இதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை. வேகமாக நடக்க வேண்டும் என்ற முனைப்போடு, நடந்து கொண்டிருந்தான். இதுவரை காளிங்கராயனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அம்மையப்பன், அவன் மேற்குப் பக்கம் கடலையட்டி வேகமாய்ப் போவதையுணர்ந்து, அவன் பின்னே தானும் நடந்தால், யாராவது வருகிறார்களா என்று அவன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தால், எவ்வித மறைப்பின்றி, ஒரே மணல்வெளியாய் இருக்கும் அப்பகுதியில் தன்னுடைய வடிவம், அவன் கண்களுக்குப் புலப்பட்டுவிடும் என்று, மணற்பரப்பைத் தாண்டி, மேற்கு நோக்கிச் செல்லும் கடற்கரை வழியாக, மரங்களுக்கிடையில் மறைந்து மறைந்து அவனைப் பின் தொடரலானான். நாகைத் துறைமுகத்திலிருந்து இருகாத தூரம் வரை நடந்த காளிங்கராயன் சட்டென்று நின்றான். அவன் நின்ற இடத்தின் நேர் எதிரே தடாகமும், தடாகத்திற்கு அப்பால் தென்னைமரத் தோப்பும் தென்பட்டது. தோப்பின் நடுவிலிருந்த மணற்பரப்பில் சிறு சிறு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் மீனவர் சேரி ஒன்றும் இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளின் நடுவில் கனமான போர்வையைத் தன் உடல் முழுவதும் போர்த்தியபடி இவனை எதிர்பார்த்து தூமகேது உட்கார்ந்திருந்தான். தடாகத்தின் ஆழமில்லாத பகுதியில் கால்வைத்து, அதைக் கடந்த காளிங்கராயன், தோப்பிற்குள் நுழைந்தான். படகின் முன் பக்கத்து மூலையில் உட்கார்ந்தவாறு காலைத் தொங்கவிட்டபடியிருந்த அவன், தன்னை நோக்கி வரும் காளிங்கராயனைப் பார்த்துப் போர்வையைச் சரி செய்தபடி தரையில் கால்களைப் பதித்து இறங்கி, “யார் காளிங்கராயன்தானே?” என்றான் உரக்க. மிக வேகமாய் வந்து சேர்ந்ததில் ஏற்பட்ட படபடப்பு அடங்க, ஒரு இமைப்போது மௌனமான காளிங்கராயன் “தூமகேதுவா?” என்றான் திருப்பி. “நான்தான்... ஏன் இவ்வளவு நேரம்?” என்றான் எரிச்சலுடன். “ஒரு வழியாகக் கிழவனைப் படுக்க வைத்துவிட்டு வருவதற்குள் நேரமாகிவிட்டதப்பா! பாண்டிய நாட்டிலிருந்து எப்போது வந்தாய்?” “இன்று காலையில்தான் வந்தேன்! திங்கள்தோறும் பௌர்ணமியில்தான் நாம் இங்கே சந்திப்பதென்று ஏற்பாடாயிற்றே!” என்ற தூமகேது, “என்ன இது வழக்கத்திற்கு மாறாக இன்று கடல் அளவுக்கு மீறி அட்டகாசம் செய்கிறது” என்றான். “நான் கூட அதைப் பற்றிய சிந்தனையோடுதான் வந்தேன். என்னவென்றே தெரியவில்லை!” என்று நடுக்கடலில் பனைமர அளவுக்கு உயரவே கிளம்பி எழுந்த அலைகளைப் பார்த்தவாறு சொன்னான் காளிங்கராயன். “இப்போதுதான் எனக்கும் புரிகிறது காளிங்கராயா. இந்தக் கடல் அன்னையின் ஆசைக்குகந்த மகனான நம் பாண்டிய மன்னன் கொடூரச் சோழ அரசர்களின் கீழ், துரதிர்ஷ்ட வசத்தால் அடிமையாய் இருப்பதைப் பார்த்து மனம் வெதும்பி இவ்விதம் ஆர்ப்பரிக்கிறாளப்பா!” என்று கடலை நோக்கித் திரும்பி தன் இரு கைகளையும் உயர்த்தினான். “ஏ, கடல் தாயே! இன்னும் நன்றாகக் கொந்தளி! இச்சோழர் பட்டினத்தை அப்படியே உந்தன் அலைக்கரங்களால் மூடி, பூண்டோடு அழித்துவிடு. ஒரு பசும்புல் கூட இங்கே தலைகாட்டக் கூடாது!” என்று உரக்க ‘ஹோ-ஹோ’வென தென்னந் தோப்பே அதிரும்படிப் பேய்ச்சிரிப்புச் சிரிக்கலானான். அச்சிரிப்புக்கு ஏற்றாற் போல நடுக்கடலில் பனைமர அளவு உயரத்துடன் எழும்பிக் கரையை நோக்கி ஆக்ரோஷத்துடன் வந்த அலைகளும், நாகைத் துறைமுகத்தின் அருகிலிருந்த சோழக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களை அப்படியே மூழ்கடிப்பது போல மோதின. கப்பலின் மேல்தளம் வரை வந்து விழுந்த கடல் நீரால் கவிழ்ந்துவிடுவது போல அவை இப்படியும் அப்படியும் பயங்கரமாக ஆடத் துவங்கின. மேல்தளத்தின் மூலையில் வானைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த தலைவன், அலையின் கடுமையை உணர்ந்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி, இன்னொரு பக்கம் பாய்மரத் துணியை விரிக்கும்படி உத்திரவிட்டான். இப்போது கப்பல்கள் அலைகளின் தாக்குதலைச் சமாளித்து நிலையாய் நின்றுவிட்டது. சமுத்திரத்தையொட்டிச் சென்ற பெருவழியில் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மையப்பன், காளிங்கராயன் தென்னந்தோப்பிற்குள் நுழைவதைக் கவனித்து, அவனும் நுழைந்தான். ஒவ்வொரு மரமாய்க் கடந்து, காளிங்கராயனுக்கு நாற்பது முழ தூரம் இருக்கும் போது, மேற்கொண்டு முன்னே செல்வதை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் பின்னால், தன்னை நன்கு மறைத்துக் கொண்டான். அந்தச் சமயம் பார்த்துத்தான் தூமகேது, தன் கைகளை உயரத் தூக்கிக் கடலைப் பார்த்தபடி ‘ஹோ-ஹோ’வென உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தான். அம்மையப்பனுக்குப் பயத்தினால் உரோமங்கள் சிலிர்த்து நின்றன. ‘அரக்கனாக இருப்பானா? ஏன் இப்படிச் சிரிக்கிறான்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்ட சிவபக்த சிரோமணி ‘அவர்கள் பேசப் போகும் விஷயமும் அந்த மாதிரி தீவிரப்பட்டதாகத்தான் இருக்கும்’ என்று காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். ஆனால் ‘ஹோ’ என ஆர்ப்பரிக்கும் அந்தக் கடல் எழுப்பும் சப்தத்தில், பேசுவது ஒன்றும் கேட்காமல் போகவே, இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்றால் நன்றாகக் கேட்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். இருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் நிறைய படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் அடியில் சென்று படுத்துக் கொண்டால், எந்தவிதத் தடங்கலுமின்றி பேச்சைக் கேட்டுவிடலாம் என்று அவனுக்குப்பட்டது. ஆனால்... படகுக்கு அடியில் எப்படிப் போய்ப் படுப்பது? சிறிது நேரம் யோசித்த அம்மையப்பன் மூளைக்கு யுக்தி ஒன்று தோன்றியது. மறைந்திருந்த மரத்திலிருந்து வலப்புறமாக வரிசையாய் இருக்கும் தென்னை மரங்களிடையே, ஒளிந்து ஒளிந்து சென்றால், படகுக்கு அருகில் சென்றுவிடலாம் என்று மரமோடு மரமாக மறைந்து மறைத்து சென்றான். அதிலிருந்து படகுகள் இருந்த இடம் எட்டு முழ தூரம்தான் இருந்தது. ஆனால் அந்த இடைவெளியில் எந்தவித மரமோ, மறைந்து செல்வதற்கு ஏதுவான தடுப்போ இல்லாமல் ஒரே வெட்ட வெளியாய் இருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தான். எப்படியும் போய்த்தான் தீர வேண்டும் என்ற உறுதியுடன், ‘சிவ சிவ’ என்று நிலவைப் பார்த்தான். அது பால் போல் பளிச்சென்றிருந்தது. கொஞ்சம் பொறுமையுடன் ஏதாவது மேகம் வந்து மூடட்டும் என்று காத்திருந்தான். அம்மையப்பனுக்குச் செவி சாய்த்தது போல பௌர்ணமி சந்திரனைப் பெரிய மேகம் வந்து மறைக்க, இதுதான் சந்தர்ப்பம் என்று மணல் தரையில் படுத்து உருண்டபடியே படகுக்கு அடியில் போய், நீளமாய் அதே நிலையில் படுத்துக் கொண்டான். “கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து தென்னன் ஏதாவது செய்தி கொண்டு வந்தானா?” என்று காளிங்கராயனைக் கேட்டான் தூமகேது. “சாளுக்கிய அரசகுமாரன் கடாரத்தில் வெற்றியீட்டி கங்கைகொண்ட சோழபுரம் திரும்பிவிட்டான். சோழ அரசர் இன்றோ நாளையோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்” என்ற காளிங்கராயனை தூமகேது இடைமறித்து, “என்ன சொன்னாய்!” என்றான் பரபரப்புடன். “அரசருக்கு அந்திமக் காலம் நெருங்கிவிட்டது!” என்றான் காளிங்கராயன் அழுத்தமாக. தூமகேது இடிஇடியென்று கடல் ஓசையே அமுங்கிவிடுவது போல, பெரிதாய்ச் சிரித்தான். படகுக்கு அடியில் படுத்திருந்த அம்மையப்பனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவன் மனிதன்தானா? அல்லது முற்பிறவியில் பேய்க்கணமாக இருந்திருப்பானோ? என்று எண்ணியவாறு படகோடு படகாக ஒட்டிப் படுத்துக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். “அரசருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டது என்று நீ சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் நிரம்பவும் மகிழ்ந்து போனேன் காளிங்கராயா! இரு.. இன்னும் கொஞ்சம் சிரித்துவிட்டு வருகின்றேன்” என்று மறுபடியும் உரக்க நகைக்கலானான். அது அடங்க இருபது நொடிப் பொழுது ஆனது. “அப்புறம்?” என்றான். “கிழவன் மழவராய அடிகளிடம் பட்டத்தரசி அரசாங்க விஷயமாக வந்து ஆலோசனை கேட்டார்.” “என்ன ஆலோசனை?” “மன்னிக்க வேண்டும் தூமகேது; நான் தென்னனிடம் கங்கைகொண்ட சோழபுரச் செய்தியைத் தெரிந்து கொண்டு வர நாகைத் துறைமுகம் வரை போக வேண்டியதாகிவிட்டது. திரும்புவதற்குள் அரசியார் வந்துவிட்டார்கள். அதனால் வீரர்கள் என்ன உள்ளே விடாமல் தடுத்துவிட்டனர்!” என்றான். “நல்ல நேரத்தை நழுவவிட்டாயப்பா நீ...! என்ன காரியம் செய்தாய்?” என்று தொடையைத் தட்டி அவன் வருத்தப்பட, “அப்படியே நான் உள்ளே போய் இருந்தால் என்ன வெளியே அனுப்பிவிட்டுத்தான் அவர்கள் ஆலோசித்திருப்பார்கள்!” என்றான் காளிங்கராயன். “எப்படி அவ்வளவு உறுதியுடன் சொல்கின்றாய்?” “வீரர்கள் என்னை உள்ளேவிடாதது பற்றிக் கிழவனிடம் நான் முறையிட்டதற்கு... ‘அவர்கள் செய்தது சரி’ என்று என்னிடமே கிழவன் சொன்னான்” என்றான் காளிங்கராயன் எரிச்சலோடு. “ஜோதிடக் கிழக் கோட்டானா? சோழ அரசுக்கு விசுவாசமானவனாயிற்றே! அப்படித்தான் இருப்பான். இப்போதெல்லாம் உன் பேரில் அவன் ஐயம் கொள்ளாத வண்ணம் நீ நடந்து கொள்கிறாயல்லவா?” என்று வினவினான் தூமகேது. “சரிதான்... ஒவ்வொரு நொடியும் என் பேரில் எந்தவிதச் சந்தேகமும் கொள்ளாதபடி நான் நடந்து கொள்வதற்கு படும்பாடு இருக்கே, கடவுளுக்குத்தான் தெரியும்” என்றான் காளிங்கராயன். தூமகேது படகிற்குள் கையைவிட்டு, இரு முடிப்புக்களை எடுத்துக் காளிங்கராயனிடம் கொடுத்தான். “ஒன்று நீ ஒற்று அறிந்ததற்குப் பாண்டிய மன்னர் மனமுவந்து அளித்த பொற்கிழி; இன்னொன்றைத் தென்னனுக்குக் கொடுத்துவிடு! நீங்கள் சோழ நாட்டில் வசிப்பவர்களாயிருந்தாலும், பாண்டிய மன்னன் மேல் இவ்வளவு விசுவாசம் வைப்பதற்கு, எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது!” என்றான் தூமகேது. பொற்கிழிகளைப் பெற்றுக் கொண்ட காளிங்கராயன், “இந்நேரம் கிழவன் விழித்திருந்தாலும் விழித்திருப்பான். நான் புறப்படுகின்றேன்!” என்றான் அவசரத்தோடு. “சரி... வேறு ஏதேனும் செய்தி..!” என்றதும், காளிங்கராயன் தலையைச் சொறிந்தவாறு, “அரசருக்குப் பின் யார் ஆட்சி பீடத்தில் ஏறுவது? என்பது பற்றிச் சோழ அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய அவர்கள் குழப்பத்துடன் இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. இந்நிலையைப் பாண்டிய மன்னர் பயன்படுத்திக் கொண்டால், இழந்த அரசை மீண்டும் மதுரையில் நிலை நாட்டலாம்!” என்றான். தூமகேதுவுக்கு நெற்றி சுருங்கியது. “சோழ நாட்டில் இப்போது இருக்கும் அரசரான வீரராசேந்திரருக்குப் பின் தற்போதைய இளவரசனான அதிராசேந்திரன்தானே ஆட்சி பீடம் ஏற வேண்டும்! இதில் என்ன போட்டி?” என்றான் புரியாமல். “கடாரம் சென்று வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனான இராசேந்திரனை அரசனாக்க சிலர் முயல்வதாகக் கேள்வி!” “ஓ... அவனா? சிந்திக்க வேண்டிய விஷயம்தான். இப்போதே நான் போய் மன்னரைப் பார்க்கின்றேன்!” என்று புறப்படத் தயாரானான் தூமகேது. அவனிடம் விடை பெற்ற காளிங்கராயன், பொன் முடிப்புகளோடு, நாகைத் துறைமுகத்தை நோக்கி நடக்கலானான். இன்று இரவு வேலன் வீட்டில் தங்கிவிட்டு அதிகாலையில் அவன் துணையோடு கடல் வழியாய்க் கொற்கையை அடைய வேண்டும். அங்கிருந்து அரசர் தங்கியிருக்கும் தீவுக்குப் போக வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டபடி மீனவச் சேரியை நோக்கி நடக்கலானான் தூமகேது. இதுவரை படகின் அடியில் படுத்திருந்த அம்மையப்பன், “அப்பாடா!” என்று எழுந்து, இடுப்பை இப்படியும் அப்படியும் நன்கு வளைத்துவிட்டு, ‘பெரிய தொல்லைதான்!’ என கைகளை உதறிக் கொண்டு தென்னந்தோப்பைவிட்டு வெளியே வந்தான். ஆனால், அவன் கால்கள் சடக்கென்று தென்னை மரத்தின் பின் தாவிவிட்டதே! ஆம்! இப்போது அவன் கண்கள் சிறிது தொலைவில் தோப்பைத் தள்ளி அமைந்திருந்த பாழ்மண்டபத்தைப் பார்க்கின்றன. அப்படி என்ன அந்த இடத்தில்? மண்டபத்தையட்டி தனிமரமாய் உயர நிற்கும் ஒரு தென்னை மரத்தின் கீழ் உட்கார்ந்து என்ன பண்ணுகின்றான் காளிங்கராயன்? மறைந்திருந்து கவனித்த அம்மையப்பன், காளிங்கராயன் அங்கிருந்து சென்றதும், விடுவிடென்று நடந்து போய் குனிந்து பார்த்தான். மணலைத் தோண்டி மூடிய அடையாளம் தெரிந்தது. கிடுகிடு வென்று தோண்டிய அம்மையப்பன் கைகளுக்கு இரு பொற்கிழிகள் கிடைத்தன. ‘சிவாய நம!’ இன்று நல்ல முகத்தில்தான் விழித்தேன்! என்று புன்னகைத்தான். விஷயங்கள் நிறைய கிடைத்துவிட்டன. சீக்கிரம் போய்ப் பெரியவரைப் பார்க்க வேண்டும். அந்த நச்சுக்கன்னி கங்கைகொண்ட சோழபுரம் செல்வதற்குள் நாம் போய்விட வேண்டும். அவள் பல்லக்கில் போவதைப் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்தேன். ஜாதிப் புரவியில் குறுக்கு வழியில் சென்றால் அவளுக்கு முன் போய்ச் சேர்ந்துவிடலாம். அதற்கு ஆயத்தம் பண்ண வேண்டும் என்று வேகத்துடன் நடக்கலானான் அம்மையப்பன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|