(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 5 பிற்காலச் சோழர் வரலாற்றில், ஒரு பொன்னேட்டைத் துவக்கி வைத்த மாவீரனும், அரசர்க்கரசனான இராஜராஜனின் புத்திரனான முதலாம் ராஜேந்திரன் தன் கங்கை வெற்றியைக் குறிக்கும் முகத்தான் உருவாக்கப்பட்ட பெருநகரமே கங்காபுரி என்றழைக்கப் பெறும் கங்கைகொண்ட சோழபுரம். திட்டமிட்டுப் பெரிய கட்டிட வல்லுநரைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்தப் பெரிய நகரமாகட்டும், அதற்குள்ளேயிருந்த உயர்ந்த மாடமாளிகைகளாகட்டும், அதற்கு நடுவே தஞ்சைச் தரணியிலிருக்கும் இராசராசேச்சுரம் போன்று கற்றளியால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழேச்சுர திருக்கோயிலாகட்டும், மேற்குப்புறம் தெற்கு வடக்காகப் பதினாறு கல் நீளத்தில் கடலெனக் காட்சியளிக்கும் சோழ கங்கம் ஏரியாகட்டும்... எல்லாமே அந்தச் சோழ மாமன்னர்களின் பெருமையைப் பறைசாற்றுவதைப் போல, அந்த முன்னிரவு நேரத்தின் நிலவொளியில் கம்பீரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கோட்டை அகழிக்கு ஏரியில் இருந்து நீர்ப்போகும் பெரிய கால்வாய் ஒன்று, பிரமாண்டமாக அமைக்கப்பட்டு, தற்போது நீரின் அளவு அகழியில் போதுமானதாய் இருந்ததால், அக்கால்வாயைப் பெரிய இரும்பு மதகு கொண்டல்லவா அடைத்திருக்கிறார்கள்! ‘இராசேந்திரசோழன் மதில்’ என்னும் பெயருடன் அமைக்கப்பட்டிருந்த கங்காபுரியின் கோட்டை மதிற்சுவர் சுமார் ஆறு முழத்திலிருந்து எட்டு முழ அளவுக்கு அகலமாயிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட களிமண்ணால் உருவான பெரும் செங்கற்களைக் கொண்டு, கனமாய் இரு சுவர்களை வைத்து, அச்சுவர்களுக்கு இடையில் உள்ள வெற்றிடத்தை ஆற்று மணலால் நிரப்பி, மதிற்சுவரை எட்டு முழ அகலத்துக்கு உருவாக்கியிருக்கின்றனர் என்று அறியும் போது சோழ நாட்டுக் கட்டிட வல்லுநர்களின் கைத்திறமையைப் போற்றாமல் இருக்க முடியாது! அதன் மீது... ஒரு கையில் தீப்பந்தமும், மறு கையில் வேலும் இடையில் வாளுமாய்ச் சோழ வீரர்கள் கடமை உணர்வுடன் காவல் காத்து நின்றனர். கோட்டையின் உள்ளே பல்வேறு மக்களின் குடியிருப்புகளும், பலவித அங்காடிகளும், போர் வீரர்களின் பாசறைகளும் மற்றும் நன்செய் புன்செய் நிலங்களுமாக இருந்தன. அதற்கு அப்பால்- இன்னொரு உள் மதிற்சுவர் ஒன்று இருக்கிறது! அதன் உள்ளேதான் அரசர், மற்றும் அவரின் குடும்பத்தினர், பெருஞ் செல்வந்தர்கள், அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் அதிகாரிகளின் மாளிகைகள் இருந்தன. கீழைக்கோட்டை வாயில் வழியாக ‘இராசராசன் பெருவழி’ என்ற பெயருடன் ஒரு பெரிய வழி இக்கோட்டையிலிருந்து வெளியேயும் செல்ல... அந்த வழியில்தான், மன்னன் மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரும் மாளிகைகள் இருந்தன. அதோ! மூன்றடுக்குகளுடன் கம்பீரமாய் இருக்கும் மாளிகைதான் மாமன்னரின் அரண்மனை! அரசரின் தந்தையின் பட்டப் பெயர்களில் ஒன்றான ‘சோழ கேரளன்’ என்ற பெயரே அதற்கு இடப்பட்டு இப்போது ‘சோழ கேரளன் திருமாளிகை’ என்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த மாளிகையின் சாளர முகப்பில், ஒயிலாய் மெல்லிய பூங்கொடி ஒருத்தி, நின்றபடி தன் அகன்ற கரு விழிகளால் எதையோ பார்த்துக் கொண்டிருக்கின்றாள்! அது எது என்று பார்த்தால், இதே போன்று எதிர்ப்புறத்தில் அமைந்த சாளர முகப்புத்தான்! ஆனால், அந்த இடம் வெற்றிடமாய் அல்லவா இருக்கின்றது. இருந்தாலும் குமரியின் பார்வை அதைவிட்டு நகரவில்லையே! அம்பிலும் கூரிய அவளின் கண்களின் கவர்ச்சிக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது போலிருக்கிறது! அத்தகு சிறப்புப் பெற்ற பார்வைக்கு இலக்கான அந்த வெற்றிடம் உண்மையிலேயே கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்! கார்மேகம் போன்ற குமரியின் கூந்தல், அவளின் பின் பகுதி முழுமையும் மறைத்து நிற்க, புருவங்களின் கீழ் அமைந்த நாசியின் எடுப்பான அமைப்பு, பார்க்கும் ஆடவர்களின் மனதைச் சுண்ட, திருத்தமாய் அமைந்த செவ்விதழ்களின் சிவப்புக்கு எதை உதாரணம் சொல்வது என்று பார்ப்போர் மயங்க, மாங்கனி என அளவாய்ப் பருத்து வழு வழு என்றிருக்கும் கண்ணாடிக் கன்னங்களின் மினுமினுப்பைப் பளிச்சிடும் மின்னலுக்கு ஒப்பிட்டால்தான் என்னவென்று கவிஞன் சிந்தனை வயப்பட... இவ்விதச் சிறப்புகளுடன், அந்தச் சாளரத்தின் இருளைப் போக்க வந்த சூரியன் போல் ஜொலிக்கும் அவள் யார்? தற்போதைய சக்கரவர்த்தி வீரராசேந்திரருக்கு முன்பு இந்நாட்டையாண்ட இரண்டாம் இராசேந்திரன் அருமைத் திருமகள் அவள். பெயர் மதுராந்தகி. சாளரத்தை ஒட்டியிருந்த கதவின் பின்னிருந்து, “அரசகுமாரி, அரசகுமாரி!” என்று கூப்பிடும் குரல் அப்பொழுது கேட்டது. மதுராந்தகி கதவைத் திறந்தாள்... இவள் வயதையத்த இளமங்கை ஒருத்தி, காண்போர் கருத்தையழிக்கும் கவர்ச்சியைத் தன் மேனியெங்கும் கொண்டு, இளமை தளதளக்க நின்று கொண்டிருந்தாள். “ஏன் இந்நேரத்தில் வந்தாய்? உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று அவளை வினவினாள் மதுராந்தகி. சோழ நாட்டுத் தளபதியின் மகளான மலர்விழி ‘களுக்’கென்று சிரித்தாள். “நீங்கள் மட்டும் என்னவாம்! துயின்றதின் அடையாளம் உங்கள் முகத்தில் மட்டும் இருக்கிறதா?” என்று திருப்பிக் கேட்டாள். “கள்ளி. என்னையா திருப்பிக் கேட்கிறாய்?” என்று மதுராந்தகி அவளின் கன்னத்தைக் கிள்ள முயல, அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சற்று நகர்ந்து, “நீங்கள் கிள்ள வேண்டிய கன்னம் இதுவல்ல” என்றாள் கேலியுடன். “குறும்புத்தனம் கொண்ட பொல்லாத பெண்ணே! உன்னை என்ன செய்கின்றேன் பார்!” என்று அவள் மலர்விழியைத் துரத்த, நட்ட நிசியில் இருவரும் சிறிது நேரம் கண்ணாமூச்சி விளையாடி, கடைசியில் மதுராந்தகியிடம் சிக்கிய மலர்விழி... “இந்தக் கைகளில் சிக்குண்டு அவர் என்ன பாடுபடுவாரோ” என்றாள். “வரவர உன் குறும்புக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இனிமேல் நான் உன்னிடம் பேசப் போவதில்லை!” என்று பொய்க்கோபத்துடன் பஞ்சணையில் வீழ்ந்தாள் மதுராந்தகி. அடுத்தகணமே... “மதுராந்தகி அவர்களே, கொஞ்சம் என்னைப் பார்க்க முடியுமா? இப்படிக் கேள்வி கேட்பது... சோழ நாட்டுத் தளபதியின் மகளான மலர்விழிதான் வேறு யாருமல்ல...” என்றாள் மெல்லிய சிரிப்புடன். “உன்னிடம் நான் பேசவே போவதில்லை” என்று அழுத்தமாய்க் கூறிய மதுராந்தகி, பஞ்சணையிலிருந்த மயில் தோகையை எடுத்து, அவள் மீது வீசிவிட்டு, சாளர முகப்பில் போய் நின்று கொண்டாள். “எப்படி இருந்தாள் இளவரசி? எப்படி ஆகிவிட்டாள்! பார்க்கவே பரிதாபமாக இருக்கின்றது!” என்று சொல்லிக் கொண்டே பஞ்சணையில் சாய்ந்து கண்களை மூடினாள் மலர்விழி. எதிர்புறத்திலிருந்த சாளர முகப்பு இன்னும் வெற்றிடமாகவே இருந்தது. மதுராந்தகி தன் பார்வையை அங்கே செலுத்தி, ‘இன்னுமா அவருக்கு அரசாங்க அலுவல்கள்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் சலிப்புடன். அவள் எதிர்பார்க்கும் அரசகுமாரன்தான் யார்? கடார வெற்றியீட்டிச் சோழ நாடு திரும்பி வந்திருக்கும் இராசேந்திரன்தான் அவன்! எதிர்புற சாளர அறை அவனுக்குரியதென்பது இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். பார்க்கிறவர்கள் ஏன் இப்படி மெலிந்துவிட்டாய்? என்றல்லவா கேட்கின்றார்கள். இதோ தோளிலிருக்கும் இப்பொன்னணி அடிக்கடி கழன்று முன் கைகளில் வந்துவிடுகின்றது! இதைப் பார்த்தாவது அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளக் கூடாதா? சே! இந்த ஆண்கள் மனதே இப்படித்தான். ஆரம்ப சூரத்தனம் என்று சொல்வது போல்... முதலில் விழுந்து விழுந்து காதல் செய்வது? பிறகு...? பழகிப் போன பொருள் என்று அலட்சியம் செய்வது! அந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு பெண் கொஞ்சம் இளமையோடு பார்ப்பதற்குச் சற்று அழகாகவும் அவர்களின் காமக் கண்களுக்குத் தென்பட்டால் முன்பு காதலித்தவளை அடியோடு கைவிடுவது... எத்தனை நேரம் நான் இந்த முகப்பில் கால் கடுக்க நிற்பது? நின்றது போதும், உள்ளே போ! என்றல்லவா என் கால்கள் சொல்கின்றன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அல்லவா இன்னும் நான் நின்று கொண்டிருக்கின்றேன். கல்லுக்குள் நீர் கசியும் என்பார்கள்! ஆனால், கொஞ்சம் கூட கனியாத இவர் மனதை எதற்கு ஒப்பிடுவது? ஒருவேளை நான் இங்கே வந்து நிற்பது அவருக்குத் தெரியாதா? இதென்ன கதை... இதைவிட வேறு வேடிக்கை இருக்க முடியுமா? இந்தச் சாளரமும் அதையொட்டிய இவ்வறையும் எனக்குச் சொந்தம் என்று அவருக்கு நன்றாகத் தெரியுமே! எத்தனையோ முறை நான் இந்தச் சாளர முகப்புக்கு வருவதற்கு முன்னே அவர் வந்து எனக்காக எதிர்ப்புறத்தில் காத்து நிற்பாரே! இப்போது...? நான் அவரை மாலையில் வரவேற்கவில்லை என்ற கோபத்தில் இருக்கின்றாரா? நாளைக்கு மலர்விழியைத்தான் அவரிடம் அனுப்பிப் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இன்னும் கொஞ்சம் இருந்து பார்த்து விடுவோமே என்ற நப்பாசையோடு எதிர்புறத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள் மதுராந்தகி. அதே சமயம்... சோழ நாட்டுத் தளபதியான தன்மபாலனுடனும், தன்னுடன் கடாரம் வந்த உபதளபதியான சிறிய தன்மபாலனுடனும் மற்றும் முக்கிய தலைவர்களுடனும் உரையாடிவிட்டு உள்ளே வந்த சாளுக்கிய அரசகுமாரனான இராசேந்திரன் கதவைத் தாளிட்டான். இதுவரை அவன் உள் மனதில் அடைபட்டுக் கொண்டிருந்த மதுராந்தகியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது தலை தூக்கியது. சில்லென்று குளிர் காற்று வீசியது... கண்கள் எதிர்ப்புறத்தை நோக்கின. நன்றாய் அகன்று சிவந்த அவளின் விழிகள் மலர இதழ்களில் முத்துப்போல் பற்கள் தெரிய அவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தாள். ஆனால்... வலித்துக் கொண்டிருந்த அவளின் கால்கள் நீண்ட நேரமாய் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்ததை அச்சமயம் நினைவூட்டின. முறுவலித்த இதழ்கள் “நிரம்ப உதாசீனம்தான்” என்று முணுமுணுக்க அதன் விளைவாய் இப்போது அங்கே முனிவு குடிகொண்டது. சற்றும் யோசிக்காது மதுராந்தகி சரேலென உள்ளே திரும்பிவிட்டாள். அவனுக்கு மட்டும் கோபம் வராதா? அவனும் திரும்பி உள்ளே போய்விட்டான்! அன்று இரவு முழுவதும்... உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த இருவர் செவிகளிலும், கங்காபுரிக் கோட்டையை வலம் வந்து கொண்டிருந்த காவல் வீரர்களின் காலடி ஓசை நாராசம் போன்று விழுந்து கொண்டிருக்கத்தான் செய்தது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|