(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 15 முழு நிலவின் ஒளி அக்கங்காபுரியைப் பகலாக்க சோழ கேரளன் மாளிகை அந்தச் சந்திரனொளியில் வெண்ணிறமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இளவரசன் அதிராசேந்திரன் அறை முன்பு சரவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அவ்வொளியில் மங்கையர் இருவர் நின்ற வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அடிக்கடி வீசும் காற்றினால் திரைச்சீலை சற்றே விலக, அச்சமயம் மட்டும் சந்திரன் ஒளி, விலகிய இடத்தின் மூலம் உள்ளே ஊடுருவி, அங்கே வெளிச்சத்தைப் பரப்பியது. அவ்விதம் வெளிச்சம்படும் போதெல்லாம், தெற்குப் பக்கத்தின் வலப்பக்கமாகத் தாழ்வாரம் ஒன்று வளைந்து செல்வது தென்பட்டது. அதையே பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த இரு மங்கையர்களும். அவர்கள்...? வேறு யாருமல்ல. சோழ இளவரசனின் தேவியான இளையராணியும், அவன் தங்கையான இராஜசுந்தரியுமே! தற்போது அவ்விடத்தில் இருவர் நடந்துவரும் சப்தம் கேட்கவே, இராஜசுந்தரியின் முகத்தில் சந்தோஷக்குறி நிலவியது. “வந்துவிட்டார்!” என்றாள் இளையராணியின் பக்கம் திரும்பி. அவள் சொன்னது போல வயதாகிவிட்டிருந்தாலும் மிடுக்கான நடையோடு கொடும்பாளூர்க் குறுநில மன்னன் கம்பீரமாய் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். பக்கத்தில் வீரசோழ வேளானும் இருந்தான். “வாருங்கள் கொடும்பாளூர் மன்னரே! எங்கே வராதிருப்பீர்களோ என்று பார்த்தேன்” என்று புன்முறுவலோடு அவரை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றாள் இளையராணி. வீரசோழ வேளானை, “நீங்கள் மட்டும் ஏன் வெளியே தங்கிவிட்டீர்கள்? உள்ளே வாருங்கள்” என்று இராஜசுந்தரி அவனையும் அழைத்துக் கொண்டதும் கதவு தாழிடப்பட்டது. தற்போது சரவிளக்கின் ஒளி மட்டும் மங்கலாக அங்கே விழுந்து கொண்டிருந்தது. அச்சமயம்... “வர வர அரண்மனைக்குள் மர்ம உருவங்கள் நடமாட ஆரம்பித்துவிட்டன. அதனால், இரவில் கூட நான் அரண்மனையை வலம் வரும்படி ஆகிவிட்டது!” என்று ஒரு குரல் கணீரென்று ஒலிக்கவும், உருவம் சட்டென்று சாளரத்தை ஒட்டியிருந்த தூணிற்குப் பின்னால் போய் மறைந்து கொண்டது. ‘சரக், சரக்’ என்று காலணி சப்திக்க, குறுகலான திருப்பத்திலிருந்து வெளிப்பட்ட சோழ நாட்டுத் துணைத் தளபதியான சிறிய தன்மபாலன், தன் பின்னால் வாள் வீரன் ஒருவன் கையில் தீப்பந்தத்துடன் வர, நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரின் கண்கள் சரவிளக்கை நோக்கின. “என்ன இது! நடுச்சாமமாகியும் இன்னும் இளவரசர் அறைக்கு முன்னிருக்கும் சரவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது!” என்று அங்கே நின்றார் துணைத்தளபதி. உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. ‘யார் பேசுகின்றார்கள்?’ என்று நெற்றி சுருங்க, வாள் வீரனைப் பார்த்தார். அச்சமயம்... பலமாய் வீசிய காற்றினால் தூணின் பின் மறைந்திருந்த உருவத்தின் மேலிருந்த வெள்ளைத் துணி வெளியே பறக்க, அதை மறைப்பதற்காக உருவம் துணியைத் தன் கையினால் இழுத்து மறைத்துக் கொண்டது. அப்பொழுது... வாள் வீரனைப் பார்ப்பதற்காகத் திரும்பிய துணைத்தளபதியின் கண்களுக்கு இது பட்டுவிட்டது. “யார் அங்கே தூணின் பின்?” என்றார் அதட்டலாக. பதிலில்லை... ‘சரக்’ என்று இடையிலிருந்த வாளை உருவிக் கொண்டார். வாள் வீரன் தீப்பந்த ஒளியைத் தூணின் பக்கம் திருப்பி, வெளிச்சம் நன்கு தெரியும்படி உயர்த்திப் பிடித்துக் கொண்டான். அடிமேல் அடி வைத்துத் தூணை நோக்கி வாளுடன் வந்த துணைத்தளபதியை நோக்கி, கனமான வஸ்திரம் ஒன்று பறந்து வந்து, அவரின் முகத்தை மூடியது. “அட சீ! என்ன இது?” என்று அதை விலக்குவதற்குள் தூணில் ஒளிந்து கொண்டிருந்த உருவம் சட்டென வெளிப்பட்டு, ‘தட்-தட்’ என்று அந்தப் பகுதியே அதிரும்படி ஓடத் தொடங்கியது. “பிடி பிடி” என்று வாள் வீரனும், துணைத்தளபதியும் பின் தொடர்ந்து ஓட, குறுகிய திருப்பத்திற்குள் நுழைந்து உருவம் மாயமாய் மறைந்துவிட்டது. பின் தொடர்ந்த துணைத்தளபதியும், வாள் வீரனும், “அடடா! வியப்பாய் இருக்கிறதே!” என்று ஆச்சரியப்பட்டு நின்றனர். திடீரென நடந்த அமளியால் ஆலோசனையிலிருந்த சோழ இளவரசனும், கொடும்பாளூரானும் ‘என்ன சப்தம் அது?’ என்று வெளியே வந்தனர். நடந்ததைச் சொன்னார் சிறிய தன்மபாலர். ‘முக்காடிட்ட உருவம் யாராக இருக்கும்? எதற்காக நம் அறைமுன் வந்து நின்றது?’ என்று குழம்பிய அதிராசேந்திரன், அவர்களுடன் உருவத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டான். பயனில்லாமற் போகவே இளவரசர் அதிராசேந்திரனிடம் “எச்சரிக்கையுடன் இருங்கள்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் துணைத்தளபதி. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|