உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 4 ஜோதிடர் வீட்டைக் காளிங்கராயன் அடையும் போது ஏறக்குறைய பகற்பொழுது கழிந்துவிட்டிருந்தது. அன்ன முகப்புடை இரதமும், ஐம்பது புரவிகளும் ஒரு ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புரவி வீரர்கள் வேற்களைப் பிடித்தபடி வாயிலில் வரிசையாக நின்று கொண்டு இருந்தனர். உள்ளே புகும் வழியில் கம்பீரமாய் கைகளைப் பின்னால் கட்டியபடி, திருவரங்கன் நின்று கொண்டிருந்தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் அட்டகாசமாய் இருப்பதை உணர்ந்த காளிங்கராயன், எப்படி உள்ளே போவதென்று ஒருகணம் தயங்கினான். பிறகு, எனக்கு எவன் தடை சொல்வதென்று விடுவிடென போக முயற்சித்தான். வேல் வீரர்கள் குறுக்கே வேற்கம்பை நீட்டி, அவனைப் போகவொட்டாமல் நிறுத்தினர். “யார் அப்பனே என்னைத் தடுப்பது? வழியைவிடும்!” என்றான் சிறிது உரக்கவே. “இப்போது நீர் உள்ளே போக முடியாது. அரசியார் வந்த பிறகு போகலாம். அதுவரை பொறுமையாய், ஓரமாய் நில்லும்” என்றான் வேல் வீரன். “நான் யாம் தெரியுமா?” என்றான் காளிங்கராயன் அதட்டலாக. “நீர் இந்திரலோகத்திலிருந்து வந்த இந்திரன் என்றே வைத்துக் கொள்ளும். அதற்காக, இப்போது உனக்கு வழியை விட்டுவிட முடியாது” என்றான் வேல் வீரன், உறுதியாக. “என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்?” என்று கண்கள் சிவக்கக் காளிங்கராயன் கேட்க, “சங்கம் வைத்து வளர்த்த இயற்றமிழில்தானப்பா சொன்னேன்” என்றான் வேல்வீரன் கிண்டலாக. சிரிப்பு தாளமாட்டாமல் மற்றொரு வீரன் ‘பகபக’வென்று சிரித்துவிட்டான். காளிங்கராயனுக்கு கோபம் அதிகமாகியது. “என்னை உள்ளேவிடப் போகின்றீர்களா இல்லையா?” என்று உரக்கக் கத்தினான். இதுவரை மௌனமாக இருவருக்கும் நடந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டு வந்த திருவரங்கன் அருகே வந்தான். “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றான். “நான் ஜோதிடரின் சீடன். என் பெயர் காளிங்கராயன். என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் இவர்கள்” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கத்தினான். “சோழநாட்டுப் பட்டத்து அரசியார் உள்ளே இருக்கிறார்கள்! உங்களை உள்ளேவிட வேண்டுமா? வேண்டாமா? என்று ஜோதிடரிடம் கேட்கக்கூட, நான் இப்போது உள்ளே போக முடியாது. அதனால் நீங்கள் பொறுமையுடன் அப்படி உட்காருங்கள். அரசியார் வந்ததும் அனுப்பி வைக்கின்றேன்” என்றான் திருவரங்கன் அமைதியாக. ‘மடத்தனம் பண்ணிவிட்டேன்! இவர்கள் வருவதற்கு முன் நான் இங்கே வந்திருக்க வேண்டும்’ என்று நொந்து கொண்ட காளிங்கராயன், வீட்டிற்கு வெளியிலிருந்த வேப்ப மரத்தின் கீழ் சென்று வருத்தமுடன் உட்கார்ந்தான். அதே சமயம்- மழவராய அடிகள் ஒருபுறமும்... எதிரே அரச குடும்பத்தினர்க்கென்று தனியாய் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஆசனத்தில் பட்டத்தரசியும் இளையராணியும் அமர்ந்திருந்தனர். சில சுவடிகளைப் புரட்டிவிட்டு யோசனையில் ஆழ்ந்திருந்த ஜோதிடர் மெல்ல கண்களைத் திறந்தார். நீண்ட வெண்ணிறத்தாடி; மூன்றாம் பிறை வடிவில் நெற்றியில் சந்தனப் பொட்டு; ஏறக்குறைய அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அடிகள், இருபது வயது இளைஞனுக்குரிய மிடுக்குடன் காணப்பட்டார். கண்களைத் திறந்து மெல்லக் கனைத்துவிட்டு, “பட்டத்தரசியாரின் கேள்வி சிக்கலாகத்தான் இருக்கிறது!” என்று இருவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தார் மழவராய அடிகள். “இப்போது நாட்டின் நிலைமையும் சிக்கலாகத்தான் இருக்கிறது!” என்றார் பட்டத்தரசி. “அப்படியே சில உண்மைகளைச் சொல்லக் கூடாதென்பது சோதிட சாத்திரத்தின் நியதி தாயே... அதற்கு நான் என்ன செய்வது? அரசரின் ஜாதகத்தை ஆராயும்படிச் சொன்னீர்கள். அதன்படி ஆராய்ந்ததில் நேரம் சரியில்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும். அத்துடன் அவர் உடல்நலத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” என்று நிறுத்தி, “இதற்கு மேல் அரசரின் ஜாதகத்தைப் பற்றிக் கேட்காதிருப்பது நல்லது” என்றார். “சோழ நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” என்று கவலையுடன் வினவினார் பட்டத்தரசி! “தாயே! இதற்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை! அதனால் எல்லாம் வல்ல அம்பிகையிடமே கேட்டுப் பார்ப்போம்! வாருங்கள்” என்று எழுந்தார். “உங்கள் அம்பிகையிடம் கேட்க வேண்டும் என்றுதானே நானும் இவ்வளவு தொலைவு வந்திருக்கின்றேன்” என்று பட்டத்தரசியாகும் எழுந்து கொண்டார். அவருடன் இளையராணியும் எழ, மழவராய அடிகள் புன்முறுவலுடன், “நீங்கள் இங்கேயே இருங்கள்; பட்டத்தரசியார் மட்டும் அம்பிகையிடம் வரட்டும்” என்றார். “அதனால் என்ன? நான் இங்கேயே இருக்கின்றேன்” என்று உட்கார்ந்து கொண்டார் இளையராணி. “இப்படி கூறியதற்காக என் மீது கோபம் கொள்ளக் கூடாது!” என்று அடிகள் புன்முறுவலுடன் இளையராணியைப் பார்க்க, “ஏன் கோபம் கொள்ள வேண்டும்? நான் இருந்தால் என்ன? அரசியார் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்!” என்று குறுநகையுடன் சொன்னாள் இளையராணி. மனதில் மட்டும் மெல்லிய கிலேசம் இருக்கத்தான் செய்தது. பூசை அறைக்குள் போவதற்கு முன் அடிகளும் அரசியாரும் கை கால் சுத்தி செய்து கொண்டனர். மழவராயர் குரலில் தோத்திரப் பாடலைப் பாடியபடி, கதவைத் திறந்தார். நடுநாயகமாய்... ஒன்றறை முழ அளவுக்குப் பஞ்ச லோகத்தில் உருவமைக்கப்பெற்ற அம்பிகை, ஸ்வர்ண ரூபியாய்க் காட்சியளித்தபடி அமரும் நிலையில், கருணைக் கடலெனத் திகழ்ந்தாள். கதவைத் சாத்தி உட்பக்கம் தாழிட்டுக் கொண்டார். உலக நாயகியான அம்பிகையை இருவரும் கைகூப்பி வணங்கினர். சக்தி வடிவாய்த் திகழும் அம்பிகைக்குரிய மந்திரங்களை உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லலானார், மழவராய அடிகள். கால் நாழிகை கடந்தது. அம்பிகையின் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த பொன் தட்டிலுள்ள மாங்கனியை எடுத்து, அவள் கைகளில் அழுத்தி வைத்துவிட்டுப் பட்டத்தரசியின் பக்கம் திரும்பினார். “நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒரே கேள்வியாக இருக்க வேண்டும்! அந்தக் கேள்விக்கு விடை தரும்படி நான் அம்பிகையிடம் மனமுருகி நிற்பேன்! இன்னும் கால் நாழிகை நேரத்தில் அம்பிகையின் கையிலுள்ள மாங்கனி, சக்தி சொரூபியின் கருணையால் கீழே உருண்டு விழுந்தால், உங்கள் கேள்விக்கு நல்ல விடை கிடைத்துவிட்டது என்று பொருள் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பதில் கிடைக்கவில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கண்களை மூடிக் கொண்டார். பட்டத்தரசியார் பக்தி சிரத்தையுடன் இருகரங்களையும் கூப்பி, “அம்பிகையே! இந்த உலகத்தை இரட்சிக்க வந்த தாயே! உன் மகளாகிய நான் கேட்கும் கேள்வி இதுதான் அம்மா. இந்தச் சோழ நாட்டிற்கு அடுத்துப் பட்டத்துக்கு வரும் அரசகுமாரன் என் மகனான அதிராசேந்திரனா? அல்லது என் கணவரின் தமக்கை மகனான இராசேந்திரனா? இருவரில் யார் என்று கூறம்மா?” என்று அவளது பதிலுக்காக நின்றார். அடிகள் கண்களைத் திறந்து “அதிராசேந்திரராய் இருந்தால் கையிலிருக்கும் மாங்கனி பொன் தட்டில் விழ வேண்டும். இல்லையென்றால் கையிலே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரம் சென்றது... அம்பிகையின் கையிலிருந்த மாங்கனியையே பார்த்தபடி மனமுருகி நின்றார் பட்டத்தரசி. பக்தி பரவசப்பட்ட மழவராய அடிகள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. கருணைக் கடலான அம்பிகை அக்கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்? ***** பூசை அறையின் கதவு மெல்லத் திறக்கப்பட்டது. முதலில் மழவராய அடிகளும், அடுத்துப் பட்டத்தரசியும் வெளியே வந்தனர். கதவைச் சாத்திவிட்டு அரசியார் பக்கம் திரும்பிய அடிகள், “தாயே, சோழ நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பதில் இது! அதனால்..” என்று புன்முறுவலுடன் பார்த்தார். “இந்தப் பதிலைச் சோழச் சக்கரவர்த்தியின் காதில் தவிர, வேறு யாருக்கும் நான் சொல்லமாட்டேன்; கவலைப்படாதீர்கள்!” “இளவரசர் ஜாதகத்தையும், வேங்கி இளவல் இராசேந்திரன் ஜாதகத்தையும் ஆராய்ந்து ஏழு தினங்களுக்குள் குறிப்பெடுத்து வைக்கிறேன். நம்பிக்கைக்குப் பாத்திரமான நபரிடம் ஓலை கொடுத்து அனுப்புங்கள். அவரிடம் குறிப்பைக் கொடுத்தனுப்புகின்றேன்!” “ஆகட்டும்!” என்று கூறிய பட்டத்தரசியார் இளையராணியிடம் “போகலாமா?” என்றார். இதுவரை பூசை அறையில் என்ன நடந்தது என்பதை அறியும் ஆவலோடு, நிலை கொள்ளாமல் உட்கார்ந்திருந்த அவள் குழப்பத்துடனே எழுந்து கொண்டாள். பட்டத்தரசியார் ஐந்நூறு பொற்காசுகள் அடங்கிய முடிப்பை அடிகளிடம் தருமாறு திருவரங்கனுக்கு உத்தரவிட்டுத் தேரில் ஏறிக் கொண்டார். ‘அம்பிகையின் பதில் என்னவாக இருக்கும்...?’ அந்தக் கேள்வியோடு, தேரில் கால் வைத்தாள் இளையராணி. பொற்காசுகள் அடங்கிய முடிப்பை அடிகளிடம் தந்த திருவரங்கன், “தங்களின் சீடன் காளிங்கராயன் வெளியே காத்திருக்கின்றார். உள்ளே விடவில்லை என்று என் மீது கோபம்!” என்றான். “அவன் கிடக்கின்றான் மடையன்; உள்ளே வரச் சொல்லுங்க!” என்று பொன் முடிப்பை வைக்க உள் அறைக்குள் நுழைந்தார். இதுவரை மிகுந்த சலிப்புடன் வேப்பமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த காளிங்கராயன், பொறுமையின்றி வேகமாக எழுந்தான். வெளியே வந்து கொண்டிருந்த திருவரங்கன் அருகில் வந்து, “இப்போதாவது நான் உள்ளே போகலாம் இல்லையா?” என்றான் கோபம் இழைந்த குரலில். “போகலாம்!” என்று அவனுக்கு அனுமதி தந்துவிட்டுப் புரவியில் ஏறினான் திருவரங்கன். அன்ன முகப்புடைய அலங்கார ரதம் நாகை அரண்மனை நோக்கிப் பறந்தது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|