(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 11 வேந்தர் வீரராசேந்திரரின் கூடத்துக்குப் பக்கத்திலேயே பட்டத்தரசியின் பொக்கிஷ அறை இருக்கிறது. அதில் பல விலை உயர்ந்த நவரத்தின மாலைகளும், பொன்னணிகளும் மற்றும் விலை மதிக்க முடியாத வைரக்கற்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் அதைச் சோழரின் சின்னக் கருவூல அறை என்றே அழைக்கலாம்! அறையின் வடமேற்கு மூலையில் புலி உருவம் கொண்ட சிற்பம் ஒன்று பாயும் நிலையில் உள்ளது என்பதுதான் சாதாரணமாய்ப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் சூட்சுமம் தெரிந்தவர்களுக்கு? அச்சிற்பத்தின் காதுக்குள் விரலை நுழைத்துப் பக்குவமாய்த் திருகினால், புலி நகர்ந்து ஆள் நுழையக் கூடிய வழி ஒன்று இருக்கிறதென்பது புலனாகும். அதில் நுழைந்தால் நேரே அரசர் இருக்கும் கூடத்தில் உள்ள பொய்த்தூணில் போய் நிற்கலாம்! சோழச் சக்கரவர்த்தியின் திருமகளும், மேலைச்சாளுக்கிய அரசியுமான இராஜசுந்தரி, இரகசியமாய் ஏற்கனவே இவ்வழியை அறிந்திருந்ததால், தற்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசரும், முதலமைச்சரும், பட்டத்தரசியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறிவதற்காக, பூட்டியிருக்கும் பொக்கிஷ அறையின் சாவியைப் பெற வேண்டி அரசியாரின் அந்தரங்க அறையை நோக்கிச் சென்றாள். பட்டத்தரசியின் அந்தரங்கத் தோழி அமுதவல்லி மட்டும் அங்கே இருந்தாள். “வாருங்கள் சாளுக்கிய அரசி!” என்று இராஜசுந்தரியை அன்புடன் வரவேற்று இருக்கை ஒன்றும் இட்டாள். அரசியை அங்கே காணாத இராஜசுந்தரி, ‘ஒருவேளை அரசரிடம் சென்றுவிட்டார்களோ, அவ்விதம் போயிருந்தால், போட்ட திட்டம் என்னாவது?’ என்ற கலக்கத்துடன், “அரசியார் எங்கே?” என்றாள். “நந்தவனப் பக்கம் சென்றிருக்கிறார்கள். வந்துவிடுவார்கள்” என்றாள் அமுதவல்லி. சாளுக்கிய அரசிக்குப் பெருமூச்சு வந்தது. ‘நல்ல வேளை’ என்று இருக்கையில் உட்கார்ந்தாள். “தங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்றாள் புன்முறுவலுடன். “என்னையா? என்ன விஷயம்?” என்று பட்டத்தரசி வினவ... “பொக்கிஷ அறையின் சித்திரங்களைப் பார்க்க விரும்புகிறேன். திருமணத்திற்கு முன்பு பார்த்த நினைவு. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டதால் மறுபடியும் அவைகளைக் காண ஆவலாயிருக்கிறது” என்றாள். பட்டத்தரசி மௌனமானாள். சில நொடிகள் அவ்வாறு சென்றதும் “அரச விவகாரத்திற்காகத் தனிமையில் பேச என்னை அரசர் கூப்பிட்டிருக்கின்றார். அதனால் நாளை வாயேன்! நீயும், நானுமாய்ச் சித்திரங்களைப் பார்த்துவிடலாம்” என்றாள் அரசி. இராஜசுந்தரிக்கு முகம் வாடியது. தான் கூறியது அவள் மனதிற்குச் சங்கடத்தை உண்டு பண்ணி விட்டதையுணர்ந்த சோழ அரசி, “வேறென்றும் தவறாக எண்ணிவிடாதே. பொக்கிஷ அறையைத் திறந்தே ஆறு திங்கள் ஆகிவிட்டன. இப்போது நீ அதைத் திறந்தால் கூட உள்ளே போக முடியாத அளவு தூசும் தும்பும்தான் இருக்கும். மிகவும் சங்கடப்பட்டுப் போவாய் என்றுதான் அவ்விதம் கூறினேன். மற்றப்படி வேறு எண்ணத்தில் கூறவில்லை. அதிலிருக்கும் பொக்கிஷங்கள் அனைத்துக்கும் நீதானே வாரிசு” என்று பட்டத்தரசி புன்முறுவலுடன் அவளை நோக்கிச் சொன்னாள். இந்த வார்த்தைகளால் இராஜசுந்தரி திருப்தியடையவில்லை என்பதை முகவாட்டத்துடனிருந்த அவளின் நிலையை வைத்துப் புரிந்து கொண்ட அரசி, அமுதவல்லியிடம் பொக்கிஷ அறையின் திறவுகோலைக் கொண்டு வரும்படிப் பணித்தாள். “மிகச் சிரமப்பட்டு கொடுக்க வேண்டாம் அரசி! இன்னொரு நாளைக்கு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று இருக்கையிலிருந்து இராஜசுந்தரி எழுந்து கொண்டாள். அப்படி எழும்போது, விழிகளில் வேண்டுமென்று நீரை வரவழைத்து, அவ்விதம் வந்த நீரில் இரண்டு, மூன்று சொட்டைப் பளிங்குத்தரையில் விழும்படிச் செய்தாள். ‘இதென்ன வம்பு! நான் நல்லது சொல்லப் போய் இவள் அதைத் தவறாக எடுத்துக் கொண்டாளே!’ என்று சங்கடப்பட்ட அரசி, ‘இராஜசுந்தரி திருமணத்திற்குப் பிறகு நிரம்பத்தான் மாறிவிட்டாள்’ என்று எண்ணியப்படி “என்ன சிறு பிள்ளைத்தனமாய்? நான்தான் திறவுகோலைக் கொண்டு வரச் சொல்லிவிட்டேனே! எதற்குக் கண்களில் நீர்?” என்று அதைத் துடைத்தாள். அமுதவல்லி திறவுகோலுடன் வந்தாள். அதை இராஜசுந்தரியின் கையில் தந்து, “விரும்பும் அளவுக்குத் திறவுகோலை நீயே வைத்திரு!” என்று அவளின் மென்குழலைக் கோதலானாள் அரசி. திறவுகோலைப் பெற்றுக் கொண்ட இராஜசுந்தரி, வேலை இவ்வளவு சுலபமாய் முடிந்துவிட்டதை நினைத்து மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அதே சமயம்- அரசர் அழைப்பதாக சோழ வீரன் ஒருவன் வந்திருப்பதை அமுதவல்லி தெரிவிக்க, “பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று கிளம்பினாள் சோழ அரசி. ஆனால்... இராஜசுந்தரி பொக்கிஷ அறையில் என்ன செய்யப் போகின்றாள் என்பதை அறிவதற்காக பட்டத்தரசி, இரகசியமாய் அமுதவல்லிக்குப் பணித்திருப்பதைச் சாளுக்கிய இளவரசி அறிந்து கொள்ளாததில் வியப்பொன்றும் இருக்க முடியாது அல்லவா? அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|