(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 34

     “வாருங்கள்! என்மீது கோபமா?” என்று புன்னகையுடன் வரவேற்றாள் கடார இளவரசி.

     “இல்லை!”

     “அப்படியென்றால் ஏன் இன்று முழுவதும் தங்களைக் காணவில்லை?”

     “பொறுப்பு அதிகமாகிவிட்டது!”

     “பொறுப்பா? அதைத்தான் விடுவித்துக் கொண்டதாக என்னிடம் கூறினீர்களே?”

     இச்சமயத்தில் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சற்றுத் திணறி, மௌனமாக அவளைப் பார்த்து முறுவலித்தான்.

     “சரி... சரி... நான் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுவிட்டேன். நீங்களும் என்னுடன் வருவதாக ஏற்கனவே தெரிவித்தீர்கள். அதனால் சீக்கிரம் புறப்பட வேண்டும் என தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்!” என்றாள்.

     ‘வரவில்லை என்று எப்படிச் சொல்வது? எல்லாம் ரகசியமாய் வைக்கப்பட வேண்டும் என்பது இராசேந்திரனின் கட்டளை’ என்று தர்மசங்கடத்தில் ஆழ்ந்த திருவரங்கன், “தற்சமயம் நான் வருவதற்கில்லை!” என்றான்.

     “என்னது?” வியப்பில் மூழ்கிய இரத்தினாதேவி, பக்கத்தில் வந்து ஏற இறங்க அவனைப் பார்த்தாள்.

     “ஆமாம் இளவரசி. நிலைமை அம்மாதிரி இருக்கின்றது. தற்சமயம் மதுரையிலேயே தங்கிவிடலாம் என்று நினைக்கின்றேன்!”

     நேற்றுவரை என்னுடன் வருவதாகச் சொன்னவன் இப்போது வரவில்லையென்று சொல்கின்றானே? அப்படியென்றால் இதற்குள் இராசேந்திரன் இவன் மனதை மாற்றிவிட்டானா? இவ்விதம் ஒரு நிலையில்லாத இவனை வைத்துக் கொண்டு நாம் ஒரு காரியமும் செய்ய முடியாதே! எதற்காக இவன் தற்சமயம் என்னுடன் வர மறுக்கின்றான்? அதை அறிவதற்காக வேண்டி, “போய்விட்டு வந்துவிடலாம். சக்கரவர்த்திக்கு மருந்து ஆகிவிட்டிருக்கும். அதனால் அதைக் கொடுத்துவிட்டு மறுபடியும் நான் இங்கேதான் வர வேண்டியிருக்கிறது. ஏனென்றால் மதுரை எனக்கு நிரம்பவும் பிடித்துவிட்டது!” என்று சிரித்தவாறு கூறினாள்.

     “அதற்கு இல்லை. நீ மட்டும் போய் வந்துவிடு. நாள் இங்கேயே இருந்துவிடுகின்றேன்!” என்றான் திருவரங்கன்.

     “காரணம்...?”

     சொல்வதற்கில்லை என்று சொல்ல முடியுமா? அதனால் அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தவாறு திணறிக் கொண்டிருந்தான்.

     “நீங்கள் சிந்தனை வயப்படுவதைப் பார்த்தால் உள்ளுக்குள் ஏதோ விஷயம் இருப்பதாகப்படுகிறது” என்று அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிய இரத்தினாதேவி, தன் கைகள் இரண்டையும் இணைத்து அவன் பின் கழுத்தில் வைத்துத் தன் பக்கமாய் அவனை இழுத்தாள்.

     பதிலுக்குத் திருவரங்கனும் அவளின் வழுவழுத்த முதுகில் தன் நீண்ட கைகளை வைத்தணைத்து, பரந்த தன் மார்பின் மேல் அவளை நன்கு பதியவைத்து அழுத்தமுடன் தழுவினான்.

     இதற்காகவே அவள் காத்திருந்தது போல அவன் உடலோடு தன்னை நன்கு இணைத்துக் கொண்டு, அவன் கன்னத்தில் பூவினும் மென்மையான தன் இதழ்களைப் அற்புதமாய்ப் பதியவிட்டாள்.

     அந்த மென்மையான பதிப்பில் தன் மனதை முற்றும் இழந்த திருவரங்கன், அந்த இதழ்களில் தன் உதடுகளை இணைப்பதற்கு முயன்றான்.

     ஆனால் அவள் அதைவிட ஒருபடி அதிகமாய்ச் சென்று, அவன் மூக்கின் நுனியைத் தன் முத்துப் போன்ற பற்களினால் அழுத்தமில்லாது அவனுக்கு வெறியூட்டும் விதத்தில் மெல்ல கடித்தாள்.

     தன் நாசியில் அவளின் கூரிய வெண்பற்கள் உராய்ந்ததினால், இன்பத்தின் எல்லையை நோக்கிச் சென்ற திருவரங்கன் அவளின் பின் பகுதியைச் சுற்றியிருந்த தன் பிடியை இறுக்க...

     இதுதான் சமயம் என்று எண்ணிய இரத்தினாதேவி “எதற்காக என்னுடன் வர மறுக்கின்றீர்கள்?” என்றாள் கொஞ்சும் குரலில்.

     “நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே” என்று அவன் தடுமாற்றத்துடன் கூற...

     “இல்லை. நீங்கள் எதையோ மறைத்துப் பேசுவதை உங்கள் முகம் எனக்குக் காட்டிக் கொடுக்கிறது. போங்கள்! இதற்குள்ளேயே இரு மனத்துடன் பழகும் நீங்கள் எப்படிக் கடைசிவரை என்னைக் கண் கலங்காமல் வைத்துக் கொள்வீர்கள்” என்று அவனிடமிருந்து விலகினாள்.

     அத்தோடு பெண்களுக்கே உரிய வழக்கமான ஆயுதமான விழிகளில் நீர்சுரக்க வைக்கும் முறையை அச்சமயம் நன்கு பயன்படுத்தினாள்.

     “என்ன இரத்தினா. நான் என்ன மறைத்துவிட்டேன் என்று அழுகின்றாய்? நீ நினைக்கிற மாதிரி இல்லை!” என்று அவளருகில் வந்து பின் பகுதியைத் தொட முயன்றான்.

     அவன் கைகளைக் கோபத்துடன் விலக்கிய கடார இளவரசி, “என் வாழ்வில் உங்கள் ஒருவரைத்தான் நம்பியிருந்தேன். நீங்களும் கைவிட்டுவிட்டதால் நான் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்” என்றாள்.

     அத்துடன் அவள் விழிகளிலிருந்த வழிந்த நீர், மென்மையான அக்கன்னங்களில் வழிந்து ஓடத் தொடங்கியது.

     ‘நான் எங்கே போய் முட்டிக் கொள்ள முடியும்? ஈசுவரா! இது என்ன விபரீதம்?’ என்று சங்கடப்பட்டான் திருவரங்கன். கோட்டைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் தான் வரமுடியாத நிலையில் இருக்கின்றேன் என்று இவளிடம் எப்படிக் கூற முடியும்? அரசாங்க இரகசியம் காப்பாற்ற படவேண்டும் என்ற பொறுப்பிலிருந்து வழுவிவிட்ட குற்றத்திற்கு ஆட்பட வேண்டி வருமே? அதற்கு என்ன செய்யலாம்? என்று குழம்பியபடி, “தயவு செய்து உன்னை வேண்டிக் கொள்ளுகின்றேன்! என்னை இதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் இருப்பது நல்லது” என்றான்.

     அப்படியென்றால்? இவனிடம் நிச்சயமாய் ஏதோ இரகசியம் இருக்கிறது என்று புலப்பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட இரத்தினாதேவி, “என்னை நீங்கள் உண்மையாகக் காதலிக்கவில்லை என்று தெரிகிறது” என்றாள் கோபத்துடன்.

     “நான் இருக்கும் தர்மசங்கடமான நிலையை நீ புரிந்து கொண்டால் நிச்சயம் நீ இப்படித் திருப்பித் திருப்பி என்னைக் கேட்கமாட்டாய்” என்றான் இரக்கமுடன்.

     “காதலன்... காதலி... கணவன்... துணைவி என்று வந்துவிட்டால் எந்த ஒரு விஷயமும் அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாகத் தெரிய வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்!” என்று கூறிய அவள் தன்னால் பிரித்துவிட்ட திருவரங்கன் கரத்தை அவளே வலிய எடுத்துத் தன் மென்தோளின் மேல் சாய்த்துக் கொண்டு, “என் கண்ணல்ல! நமக்குள் எதற்கு இரகசியம்!” என்று அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள். அத்தோடு நிற்காமல் அவனை முன் பக்கமாய் இழுத்துத் தன் மேல் சரித்துக் கொண்டாள்.

     இதற்கு மேல் அவனால் என்ன செய்ய முடியும்? இதுவரை அவளிடம் சொல்லக் கூடாது என்ற உறுதியுடனிருந்த அவனின் பிடிப்பு இதனால் தளர்ந்துவிட்டது. “என் மீது ஆணையாய்க் கேட்கின்றேன்! நான் சொல்லப் போகும் விஷயத்தை யாரிடமும் நீ சொல்லக் கூடாது என்று எனக்குச் சத்திய வாக்குத் தர வேண்டும். அத்தோடு அதை வைத்துக் கொண்டு சோழ அரசுக்கு எதிராக நீ எந்தக் காரியத்திலும் பிரவேசிக்கமாட்டேன் என்று உறுதிமொழியும் தர வேண்டும்!” என்றான்.

     அதற்கு அவள் சம்மதிக்க. எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான். அத்துடன் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொண்டான்.

     தூமகேதுவைச் சந்திக்கத் தென்னன் இரகசியமாய் மதுரையிலிருந்து சென்றுவிட்டதால் அவன் வரும் வரை உடம்பு சரியில்லை என்று பொய்சாக்குக் கூறி, கங்கைகொண்ட சோழபுரம் போகாமல் தள்ளிக் கொண்டு வந்த இரத்தினாதேவி, மாறுவேடத்தில் இரகசியமாய் இராசேந்திரன் புறபட்டுவிட்டதைத் திருவரங்கன் மூலம் அறிந்து கொண்டு தானும் கங்காபுரி செல்ல உத்தேசித்து சாமந்தனுடன் ஆலோசனை செய்தாள்.

     அவனும் புறப்படுவதே நல்லது என்றான்.

     “மூலிகை தேடச் சென்றிருக்கும் தென்னன் வந்தால் கங்கைகொண்ட சோழபுரம் அனுப்பி வையுங்கள்” என்று திருவரங்கனிடம் கூறிவிட்டு, சாமந்தனுடன் புறப்பட ஆயத்தமானாள். ஆனால் கூடவே சோழச் சக்கரவர்த்தியின் தூதுவனும் வருவதைப் பார்த்து சாமந்தனும் அவளும் வெளிப்படையாக எதுவும் பேச முடியாது என்பதை உணர்ந்த இரத்தினாதேவி அவனை மதுரையிலேயே விட்டுவிடத் திட்டமிட்டாள்.

     ஆனால் அவனோ “உங்களுடன் கூடவே நானும் வருவேன். சக்கரவர்த்தி அவ்விதம்தான் என்னிடம் கூறியிருக்கின்றார்” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டான்.

     அதைக் கேட்ட திருவரங்கனும், “சக்கரவர்த்தியின் கட்டளையை நான் மீற முடியாது!” என்று கைவிரித்துவிட்டான்.

     வேறு வழியின்றி அவனையும் கூட அழைத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் இருவரும் அவனுக்குப் புரியாத கடார மொழியில் பேசிக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

     அடுத்த ஒரு நாழிகை கழித்து-

     மூன்று புரவிகளும் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வேகமாய் ஓடத் துவங்கின.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49