உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 45 தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் உடைகளை மாற்றிக் கொண்டு தலைமுடியை நன்கு வாரிக் கொண்டு நெற்றியில் சந்தனப் பொட்டு மிளிர ஒரு தரம் அலங்காரம் நன்றாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டான். பிறகு இரத்தினாதேவி தங்கியிருக்கும் அறை நோக்கி கம்பீரமாக நடக்கத் தொடங்கினான் திருவரங்கன். அவளது அறை முன் சாமந்தன் நின்று கொண்டிருந்தான். ‘நல்ல வரவேற்புதான்’ என்று முறுக்கிய மீசையைத் தடவி விட்டபடி அவனைப் பார்த்து முறுவல் செய்தான். புதிய மனிதனைப் பார்ப்பது போல சாமந்தனின் பார்வையிருக்க, அதற்காகச் சங்கடப்பட்டு அவன் அண்மையில் சென்ற திருவரங்கன், “என்னைத் தெரியவில்லையா?” என்றான் மிடுக்காகவே. ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு நினைவு வந்தவன் போல, “ஓ! நீயா?” என்றான் மிகச் சாதாரணமாக. திருவரங்கனுக்குக் கொல்லன் உலைக் களத்திலிருக்கும் பெரிய சம்மட்டியால் தன்னைத் தாக்கியது போல் இருந்தது. ‘இதற்குள்ளா மறந்துவிட்டான்’ என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சில மனிதர்களின் குணங்கள் இப்படித்தானிருக்கும் என தனக்குச் சமாதானம் கூறிக் கொண்டு, ‘இவன் நமக்கு முக்கியமல்ல! நமக்கு முக்கியம் கடார இளவரசிதான்!’ என்று அறைக்குள் நுழைய முயற்சித்தான். “எங்கே போகின்றீர்?” - கைகளைக் குறுக்கே நீட்டினான் சாமந்தன். அந்தக் கைகளை வேகமாகவே விலக்கி, “கடார இளவரசியைப் பார்க்க வேண்டும்!” என்றான் கோபத்துடனே. சாமந்தனுக்கு நகைப்பு மேலிட்டது. “கடார இளவரசி ஒன்றும் அங்காடியில் விற்கும் சரக்கல்ல!” அதைக் கேட்டுத் திருவரங்கனுக்கும் ஆத்திரம் மிகுந்தது. “நான் ஒன்றும் அங்காடிச் சரக்கை வாங்கும் சாதாரண மனிதன் அல்ல!” “ஓ!” என அப்பதிலால் நெற்றியைச் சுருக்கி, இகழ்ச்சியுடன் அவனைப் பார்த்த சாமந்தன், “உள்ளே போக அனுமதியில்லை!” என்றான் உறுதியான குரலில். “உன்னைப் போன்ற ஒரு முழுக்குருடனை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கின்றேன். என்னைத் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கும் நீயெல்லாம் மனிதத்தன்மை கொண்ட மனிதன் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று நீட்டிய அவன் கரத்தை வேகத்துடன் தள்ளினான். அதே வேகத்துடன் சாமந்தனின் கைகள் அவன் தோள்களைப் பற்றின. அதை மீண்டும் உதறிவிட்டு உள்ளே போக திருவரங்கன் முயற்சிக்க, இடையிலிருந்த வாளை உருவிக் கொண்டான் சாமந்தன். இரத்தினாதேவியின் அறைக்குத்தான் செல்லப் போகிறோமே! எதற்கு வாள் என்று தன் அறையிலே வைத்துவிட்டு வந்திருந்த திருவரங்கன், வாளை உருவிக் கொண்டதைக் கண்டு அதற்காகப் பயப்படாமல், “என்னைப் பயமுறுத்துகிறாயா சாமந்தா?” என வினவினான். “உன்னை ஏன் பயமுறுத்த வேண்டும்? நீ அறைக்குள் போகக் கூடாது என்று சொன்னேன்! ஆனால் கேட்பதாக இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் வாளை உருவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.” “இந்நேரம் இரத்தினாதேவி இதைக் கண்ணுற்றால் உனக்குத்தான் தண்டனை கிடைக்கும். அவளின் அன்புக்குரிய என்னை இவ்விதம் அவமானப்படுத்துவது நல்லதல்ல.” இகழ்ச்சியான சிரிப்பு ஒன்று சாமந்தனிடமிருந்து வெளிப்பட்டது. “என்ன சொன்னாய்?” அந்தக் கேள்வியால் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட திருவரங்கன், “நான் கடார இளவரசியின் அன்புக்குரியவன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! என் கையில் வாள் ஒன்று இருந்திருந்தால் சந்தேகப்பட்ட உன்னை இந்நேரம் மேல் உலகம் அனுப்பியிருப்பேன்!” என்றான் உரத்த குரலில். அதற்கு மறுமொழி தருவது போல் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. இருவரும் திரும்பினர். நெஞ்சையள்ளும் கொஞ்சும் விழி கொண்ட இரத்தினாதேவி அங்கே வான் மண்டலத்திலிருந்து இறங்கிய தேவதையென நின்று கொண்டு இருந்தாள். அவளைக் கண்டு திருவரங்கன் புன்முறுவலித்தான். “இரத்தினாதேவி!” என்று அன்புடன் அழைத்தான். அவ்விதம் கூப்பிட்டதை விரும்பவில்லையென்பது போல, அவளின் அழகிய வதனம் சட்டென்று மாறியது. “ஏன் வீணாய்க் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றீர்?” திருவரங்கனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. “என்ன சொல்லுகின்றாய் இரத்தினா?” - அவளை நோக்கி இரண்டடி வைத்தான். “அப்படியே நில்!” - அவளிடமிருந்து கோபக்குரல் வெளிப்பட்டது. திருவரங்கனுக்கு உலகமே தலைகீழாகி ஒரு நொடியில் ஒன்றுமே புரியாமல் போய்விட்டது. “நில் என்று சொல்வது நீதானா?” “ஆமாம்!” என்றாள் அழுத்தமுடன். வானம் இடிந்து அவன் மீது வீழ்ந்தது போலிருந்தது. பொய்யான அவளை மெய்யென்று எண்ணி அவளுக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராயிருந்த அந்த இளைஞனுக்கு இந்த உலகமே அக்கணத்திலிருந்து வெறுத்துப் போய்விட்டது. இனி அவனுக்கு என்ன இருக்கிறது? இருந்தாலும் இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று விரும்பி, “நீ இறந்த பிறகு உனக்காக ஒரு கல்லறை எழுப்பி அதில் திருவரங்கன் காதலி இங்கே உறங்குகின்றாள்! என எழுதச் சொன்னாயே. நினைவிருக்கிறதா இரத்தினாதேவி?” என்றான். அதைக் கேட்டுப் பெரியதாக உணர்ச்சி வயப்பட்டு விட்டதாகத் தெரியவில்லை. மாறாக, “வைகையில் அடிக்கடி வெள்ளம் வரும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அம்மாதிரி இந்த வார்த்தைகளும் என் காதலும் அவ்வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்துக் கொள்ளேன்!” என்றாள். “போதும் நிறுத்து. அந்த வைகை வெள்ளம் இந்த அறைக்குள் ஒரு நாள் வராமல் போய்விடாது. இது நிச்சயம்” என்று உரக்கக் கூறிய அவன் தலை குனிந்தபடி வெளியேறத் துவங்கினான். அவ்விதம் போகும் போது... “அன்பிற்குரியவளைப் பிரிந்து செல்லும் இன்பக் காதலனே!” என்ற குரல் கேட்டது. தலைகுனிந்தபடி சென்று கொண்டிருந்த திருவரங்கன் நின்று நிமிர்ந்தான். “என்ன சொன்னாய் சாமந்தா?” “மீண்டும் அதைக் கேட்க உனக்குப் பெரும் ஆசை போலும்!” என்று இகழ்ச்சியுடன் கூற... அடுத்த நொடியே சாமந்தன் கையிலிருந்த வாள் தரையில் விழுந்தது; மறுபக்கம் அவனும் துள்ளி விழுந்தான். அத்தகைய ஒரு பலம் வாய்ந்த அடியை எதிர்பார்க்காததால் அவன் தட்டுத் தடுமாறி எழுந்தான். அதற்குள் இன்னொரு அடி பிடரியில் விழுந்தது. சுருண்டு தலைகுப்புற ‘பொதுக்’கென்று விழுந்தான். அருகே சென்று அவனை அலட்சியமாய் எட்டி உதைத்துத் தரையில் உருட்டியபடி “இன்பக் காதலனின் அடி எப்படியிருக்கிறது அப்பனே?” என்றான் திருவரங்கன். “நில்... அவனை அடிக்காதே!” என்று அலறியபடி இரத்தினாதேவி கையில் குறுவாளுடன் ஓடி வந்தாள். “நெருங்காதே வஞ்சகி!” என்று கூறிய திருவரங்கன் தரையிலிருந்த வாளை எடுத்துக் கொண்டான். “வைகையாற்று வெள்ளம் நம் காதலை அடித்து கொண்டு போய்விட்டது என்று சொன்னாயே, இப்போது அந்த வெள்ளம் உன்னையே அடித்துக் கொண்டு போக திரும்பியிருக்கிறது பார்!” பற்களைக் கடித்த வண்ணம் அவளை நோக்கி நெருங்கினான். வாளுடன் தன்னை நோக்கி வரும் திருவரங்கனைப் பார்த்த இரத்தினாதேவி, “அங்கேயே நில். என்ன நெருங்காதே” என்றாள் பதறி. “இது வைகைப் புது வெள்ளம். உன்னை அடித்துக் கொண்டு போகும் வரை நீ இதைக் கட்டுப்படுத்த முடியாது” என்று சீற்றம் மிகுந்த குரலில் கூறிய அவன், மேலும் இரண்டடி எடுத்து வைத்தான். தரையில் சுருண்டு விழுந்த சாமந்தன், சமாளித்து எழுந்து, “ஆபத்து! ஆபத்து!” என்று உரக்கக் கூவலானான். விருந்தினர் மாளிகையைக் காவல் செய்து கொண்டிருந்த வீரர்கள் செவியில் அக்குரல் விழுந்தது. இரத்தினாதேவி தங்கியிருக்கும் அறை நோக்கி ஓடி வந்தனர். எதையும் செய்யத் தயாராகும் நிலையில் கையில் வாளுடன் கண்களில் கொலை வெறி மிளிர கோபத்துடன் இரத்தினாதேவியைப் பார்த்தவாறு திருவரங்கன் நிற்பதையும், அவள் கையிலும் குறுவாள் ஒன்று இருப்பதும், ஆனால் அந்த அழகிய கண்கள் அச்சத்தை உமிழ்ந்தபடி, காப்பாற்றுங்கள் என்ற நோக்கில் இவர்களைப் பார்ப்பதையும் அறிந்து, திருவரங்கனை நெருங்கினர். “இன்று இவளை முடிக்கப் போகின்றேன். அதாவது பொய்யான இவளின் அழகை முடிக்கப் போகின்றேன். என்னைத் தடுக்காதீர்!” என்று கூறி உரக்கச் சிரிக்கலானான். வீரர்களில் ஒருவன் சோழத்தளபதியிடம் தெரிவிக்க அங்கிருந்து ஓடினான். செய்தியறிந்து வீரசோழன் அவனைப் பழிவாங்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணியபடி வீரர்களுடன் விருந்தினர் மாளிகை நோக்கி ஓடிவந்தான். அதற்குள் செய்தி காட்டுத் தீயென அரண்மனை முழுவதும் பரவியது. இரத்தினாதேவி பற்றிப் பெண்களுக்கே உரிய பொறாமைக் குணத்தில் அரண்மனைப் பெண்டிர் அவளின் அழகு பற்றியும், மேனியின் நிறம் பற்றியும், அவளைச் சுற்றி அரசகுல இளைஞர்கள் சுற்றிவருவது பற்றியும், குறிப்பாக மதுராந்தகன் அவள் நினைவாகவே இருப்பது பற்றியும், மெல்லிய பேச்சாய் இதுநாள்வரை அவர்களிடையே புகைந்து கொண்டு வந்த விஷயம், இன்று வெளிப்படையாகப் பேசும் முக்கிய விஷயமாய்ப் போய்விட்டது. சோழ நாட்டின் முன்னாளைய தளபதியின் மகள் மலர்விழி இதைக் கேட்டுத் துடித்தாள். அம்மாதிரி அவள் உணர்ச்சி வயப்படுவதற்கும் காரணமிருந்தது. ஏற்கனவே திருவரங்கனிடம் அவள் மனதைப் பறிகொடுத்திருந்தாள். அத்தகையவரா இரத்தினாதேவியிடம் காதல் கொண்டிருந்தார் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அரண்மனையின் முதல் அடுக்கில் பதட்டத்துடன் நின்றபடி, விருந்தினர் மாளிகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரத்தினாதேவியின் அறையையடைந்த சோழத்தளபதி, திருவரங்கனை அங்கிருந்து போகும்படி எச்சரித்தார். ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது இன்னும் ஓரடி எடுத்து வைத்து அவளின் அருகே சென்றுவிட்டான். தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தில் முடியும் என்பதையுணர்ந்த வேளான், சற்றும் யோசிக்காது வாளுடன் அவளின் பக்கம் சென்றான். சட்டென்று இரத்தினாதேவியை அவ்விடத்திலிருந்து விலக்கித் தள்ளி, திருவரங்கன் வாள்முனை முன் தன் நெஞ்சை நிமிர்த்தி, இரு கைகளையும் இடுப்பில் ஊன்றியவாறு நின்று கொண்டான். உணர்ச்சி வேகத்தில் இவ்வளவும் இமைக்கும் பொழுதிற்குள் நடக்கும் என்று எதிர்பார்க்காத அவன் “நீங்கள் தேவையில்லாது என்னுடைய விஷயத்தில் குறுக்கிட்டுவிட்டீர்கள்” என்றான் ஆத்திரமாக. “சோழத்தளபதிக்கு எது தேவையில்லை என்பது தெரியும்” என்று கூறி, பின்னால் வாளுடன் இருந்த வீரர்களைப் பார்த்துச் சாடை காட்டினான். அதைப் பார்த்து திருவரங்கன், தளபதி என்ன சாடை காட்டுகின்றார் என்று பின்னால் திரும்ப, இந்தச் சூழலைப் பயன்படுத்த விரும்பி, வீரசோழ வேளான் அவன் கையிலிருந்த வாளைத் தன் வாளினால் தாக்கி, அது தரையில் விழும்படிச் செய்தார். “இது பேடித்தனம்!” என்று கத்தினான். அதற்குள் வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஒருவன் கைகளில் விலங்கிட முயல, திருவரங்கன் விட்ட குத்தினால் “அப்பா!” எனத் தரையில் வீழ்ந்தான். சோழத்தளபதி ஆத்திரமுற்றுத் தன் கால்களில் முழு பலத்தையும் ஒன்று திரட்டி அவன் அடிவயிற்றுக்குக் கீழே உதைத்தான். இந்த அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்துவிட்ட திருவரங்கன் மண்டியிட்ட நிலையில் தரையில் சாய்ந்தான். உடனே வாளை அவன் முதுகில் அழுத்தியபடி “சீக்கிரம்!” என்று வீரர்களை அவசரப்படுத்தினான். வெகு விரைவில் திருவரங்கன் கையில் விலங்கிடப்பட்டது. அடியின் பலத்தினால் சற்றே முனகியபடி எழுந்த திருவரங்கன் மிகக் கோபத்துடன் தளபதியை எரித்துவிடுவது போல் முறைத்தான். “ஒரு பெண்ணிடம் வீரத்தைக் காண்பிக்க முயல்பவனுக்கு இது போதும்!” என்று அவன் முதுகில் கை வைத்து வீரசோழ இளங்கோ வேளான், “போ” என வேகமுடன் தள்ள, கை விலங்குடன் தளபதியை அடிக்கப் பாய்ந்தான் அவன். இந்த அமளியில் சற்றே குழப்பம் நிலவியது. இறுதியில் வீரர்கள் திருவரங்கனை விலங்குடன் இழுத்துச் சென்றனர். முதலடுக்கிலிருந்தபடி இதைக் கண்ட மலர்விழி, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து, இறுதியில் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள். பக்கத்திலிருந்த மதுராந்தகி சேடியிடம் நீர் கொண்டு வரச்சொல்லி அவள் வதனத்தில் தெளித்தாள். சிறிது நேரம் கழிந்து விழிப்புற்று, “அவரைச் சிறையிலிடாதீர்கள்! அவரைச் சிறையிலிடாதீர்கள்!” என்று உரத்தக் குரலில் கூறத் தொடங்கினாள். உடனே மதுராந்தகி “பதட்டம் வேண்டாம்!” என்று கூறியபடி அவளைத் தன் அறைக்கு அழைத்துச் செல்லலானாள். கூடியிருந்த பெண்டிர், “இதென்ன விசித்திரம்?” என்ற கேள்விக் குறியுடனே ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|