(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 21

     நிலமகளின் மார்பில் கிடந்து ஒளி வீசும் பதக்கம் என பாண்டிய நாட்டைக் கருதினால் அதனைச் சுற்றியுள்ள நகரங்கள் அனைத்தும் பதக்கத்தைச் சுற்றிப் பதிக்கப் பெற்ற மணிகள் எனக் கொண்டு, மதுரைத் திருநகர் அம்மணிகளின் நடுவிலுள்ள விலையுயர்ந்த மாணிக்கம் என்றே அழைக்க வேண்டும்.

     அத்தகு சிறப்பு வாய்ந்த மதுரை நகர் நோக்கி ஆயிரம் புரவி வீரர்கள், இராசேந்திரன் தலைமையில், திருவரங்கனுடன் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தனர்.

     நெற்பயிர்கள் வளத்துடன் கரும்புகள் போல் உயரமாய் வளர்ந்து காற்றில் அசைந்து, சோழ வீரர்களை உற்சாகத்தோடு வரவேற்றன.

     ‘வாருங்கள் சீக்கிரமாய்! நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், கலகக்காரர்களால் மதுரை அழிபட்டுவிடும்!’ என்று தடாகமென்ற மங்கை நல்லாள் தாமரை இலையாகிய மரகதத் தட்டில், வெண்முத்தென்ற நீரைக் கொண்டு ஆரத்தி எடுக்க...

     ‘புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
     வையை என்ற பொய்யா குலக்கொடி.’

     என்று சிலம்பு தந்த இளங்கோ அடிகளால் புகழப்பட்ட வைகை ஆறு இவர்களைக் கண்ட குதூகலத்தில், குரவம், மகிழ், கோங்கு, வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மாஞ்சாடி, மருது, செருந்தி, சண்பகம், பாதிரி ஆகிய மலர்களால் ஆன ஆடையே உடுத்திக் கொண்டு சுழித்து ஓடத் துவங்கினாள்.

     அதைப் பார்த்தவாறு புரவியைச் செலுத்திக் கொண்டு வந்த இராசேந்திரன், கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான்.

     உச்சி வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. அருகில் வந்த திருவரங்கனிடம் “படைகள் வைகை ஆற்றில் தாக சாந்தி செய்து கொள்ளட்டும்!” என்று கட்டளையிட்டான்.

     வீரர்கள் தம் தம் குதிரைகளை நிறுத்தி கை, கால், முகங்களைக் கழுவிக் கொண்டு, ஆற்றையட்டி அமைந்த வேங்கை மரத்தின் நிழலில் இளைப்பாறுவதற்காக உட்கார்ந்தனர்.

     சற்றுத்தள்ளி, சண்பகமரத்தின் கீழ் அமர்ந்த இராசேந்திரன், திருவரங்கனுடன் வையை ஆற்றில் இறங்கினான்.

     இரு கரங்களாலும் நீரை அள்ளி முகம், கால்களைக் கழுவி, தெளிந்த நீர் பருக வேண்டி, இன்னும் கொஞ்சம் ஆழத்தில் இராசேந்திரன் இறங்க, சிறிய பேழையொன்று ஆற்று வெள்ளத்தில் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.

     “என்ன பேழை அது?” என்று ஆர்வமுடன் திருவரங்கனைப் பார்க்க, அவன் ஆடை நனைந்தாலும் பரவாயில்லை என்று நீரில் குதித்துப் பெட்டியைக் கைப்பற்றி இராசேந்திரனிடம் கொடுத்தான்.

     வாங்கிய அவன், கரைக்கு வந்து பெட்டியைத் திறந்தான். உள்ளே சிறிய ஓலை நறுக்கு இருந்தது.

     எடுத்துப் படித்தான்...

     ‘எச்சரிக்கை! நீர் மதுரை மாநகர் நோக்கிப் போவது விண்ணுலகம் செல்வது போல்தான்! அதனால் இப்படியே திரும்பி சோழநாடு செல்வதுதான் உனக்கு நன்மை பயக்கும்’ - இப்படிக்கு வீரசபதம் செய்த பாண்டியர்கள்! என்று எழுதியிருந்தது.

     ஆடை முழுவதும் நனைந்து நீர் சொட்டச் சொட்ட கரையேறிய திருவரங்கன் “பேழையில் என்ன இருந்தது?” என்று வினவினான்.

     இராசேந்திரன் ஓலை நறுக்கை அவனிடம் தந்தான்.

     “பேடிகள்! எங்களையா எச்சரிக்கிறீர்கள்!” என்று கர்ஜித்த திருவரங்கன், சுற்று முற்றும் பார்த்தான்.

     அதற்குள் இராசேந்திரன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வீரர்களை அழைத்து, மூலைக்கு ஒரு பக்கமாக ஏவி, யாராவது இருக்கின்றார்களா? என்று பார்க்கும்படிக் கட்டளையிட்டான்.

     கால் நாழிகைக்கு மேல் தேடியும், ஆள் இருக்கும் தடயம் எதுவும் தென்படவில்லை.

     “நீ சொன்னது போலவே அவர்கள் பேடிகள்தான்! நேருக்கு நேர் சந்திக்காத அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று கூறிவிட்டுப் புரவி ஏறினான் இராசேந்திரன்.

     ஆயிரம் குதிரைகளின் குளம்பொலிகளும் ஒன்றாய்ச் சேர்ந்து அப்பகுதியெங்கும் நிரம்பி, ஊழிக்காலம் வந்துவிட்டது போல் கேட்பவர்கள் பிரமிக்க, மதுராநகர் நோக்கி அனைவரும் பயணமாயினர்.

     சிறிது நேரம் கழிந்தது...

     வையை ஆற்று நீரின் அடியிலிருந்து ஒரு உருவம் எழுந்தது. மேனி முழுவதும் எண்ணெய் பூசப்பட்டிருக்க, கரிய நிறத்துடன் கட்டுடலோடிருந்த அது கரை ஏறியது. அந்த உருவம் வேறு யாருமல்ல.. தூமகேதுதான் அவன்!

     ஓலை நறுக்கைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டு, வீரர்கள் கண்ணில் படாதிருக்க நீருக்குள் மூச்சடக்கி இதுவரை ஒளிந்து கொண்டிருந்தான் அவன்.

     வெகு தூரம் சென்றுவிட்ட புரவி வீரர்கள் பக்கம் பார்வையைச் செலுத்திய தூமகேது, இவர்களில் பாதிப்பேரையாவது அழித்தால்தான் நம்மால் தாக்குப் பிடித்து நிற்க முடியும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வேகமாய் காட்டிற்குள் ஓடலானான்.

     வெகுதூரம் ஓடியதும், சிறிய குன்றும் அதையொட்டி ஆங்காங்கே சிறுசிறு மலைகளும் இருந்த பகுதி வந்தது.

     மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றான். அது அடங்கி மூச்சு சமநிலைக்கு வருவதற்குள் “கடலரசன்!” என்று குரல் கேட்டது.

     அடுத்தகணமே பல்வேறு திசைகளிலிருந்து இருபது, முப்பது பேர் கும்பலாக ஓடி வந்தனர். அவர்கள் அனைவரும் கரிய நிறத்துடன், முறுக்கிய மீசையுமாய் இருந்தனர்.

     அவர்களை ஒரு தரம் நோட்டம்விட்ட தூமகேது ஆத்திரத்துடன், “சோழ நாய்கள் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களை நிர்மூலமாக்க நாம் மாறுவேடத்தில் இரகசிய வழியின் மூலம் கோட்டைக்குள் நுழைய வேண்டும்” என்று கூறி, “கோநேரின்மை கொண்ட சடையவர்ம சீவல்லபர்!” என்று வலக்கரத்தை உயர்த்த கூடியிருந்தவர்கள், “வாழ்க! வாழ்க!” என்று முழங்கினர்.

     ஒவ்வொருவர் கையிலும் கொடிய நஞ்சு தடவப் பெற்ற குத்துவாள் ஒன்று இருந்தது. அனைவரும் குறுக்கு வழியில் தூமகேதுவுடன் மதுரை நோக்கிப் பயணமாயினர்.

*****

     மதுரை நகரைச் சுற்றி நீண்டு வளைந்து இருந்த பெரிய மதில் வலிவுடன் மிகவும் உயரமாயும் இருந்தது. அம்மதிலுக்குள் ஏழு திருச்சுற்றுகள் இருக்கின்றன. அதன் உள்ளே மன்னர் வசிக்கும் அரண்மனையும், குடிமக்கள் வாழும் தெருக்களும், கோவில்களுமாயிருந்தன.

     நகரின் நடுநாயகமாய் சொக்கநாதர் ஆலயம் அமைந்திருந்தது.

     பெரிய கடல் ஒன்று மதுராநகரின் புறத்தே வந்துவிட்டது போல, மதிலைச் சூழ்ந்து அகழி இருந்தது.

     அதில்...

     வாளை மீன்கள் எழுந்து துள்ள, ஆமைகள் தம் உறுப்புக்களை விரித்துக் கொண்டு திரிய, கொடிய கூற்றுவன் போல முதலைகள் நீருக்குள் அமிழ்ந்து கிடந்தன.

     அகழிப் பாலத்தின் மூலம் சோழப் புரவி வீரர்கள் அதைக் கடந்து கோட்டைக்குள் புகுந்தனர்.

     கடைசியாய் வந்த இராசேந்திரனையும், திருவரங்கனையும் தற்காலிகக் கோட்டைத் தலைவனான மூவேந்தன் வரவேற்றான்.

     “முதலில் கோட்டையின் பாதுகாப்பைப் பார்வையிட வேண்டும்!” என்று அவனிடம் தெரிவித்தான் இராசேந்திரன்.

     மூவேந்தன் இருவரையும் கோட்டையின் உச்சிக்கு அழைத்துச் சென்றான். சுற்றிலும் பார்வையைச் செலுத்திய இராசேந்திரன், திருவரங்கனுடன் கோட்டையை ஒரு சுற்று சுற்றினான். அவ்விதம் அவன் சுற்றி வருவதற்கு ஒரு நாழிகைப் பொழுது தேவைப்பட்டது.

     இருபது முழத்திற்கு ஒருவர் வீதம் யவன வீரர்கள் காவலுக்கு இருந்தனர். இவர்களை நீக்கிவிட்டுச் சோழ வீரர்களை அதற்குப் பதிலாக நிறுத்த வேண்டும் என்று மனதில் முடிவு செய்து, மதிலின் உட்புறமாக பொறிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல பொறிகள் பழுதுற்ற நிலையில் இருந்தன.

     முக்கியமாய் கற்களை வீசும் கவண்பொறி உடைந்து இருந்தது. வேல், வாள், சூலம் இவற்றைப் பகைவர் மேல் குறிதவறாமல் வீசும் பொறிகள் நன்றாக இயங்கின. ஆனால் பகைவீரர்களை அப்படியே விழுங்கும் பாம்புப் பொறிகள் பழுதுற்று இருந்தன. பகை வீரர்களின் கைகளையும், தலைகளையும் அறுக்கும் அரிசங்கிலிவிட்டு இழுக்கும் பொறி அடியோடு சிதைந்து போயிருந்தது. வறுத்த மணலையும், நெருப்பையும், கற்களையும் மழை போல் சரமாரியாய் வீசும் பொறிகள் மிகவும் துருப்பிடித்து போய் இயக்குவதற்கே கடினமாயிருந்தன.

     இவற்றையெல்லாம் கவனித்த இராசேந்திரன் மூவேந்தன் பக்கம் திரும்பி, “கோட்டையின் பொறுப்பு உன்னிடம்தானே இருக்கின்றது?” என்று வினவினான்.

     “ஆமாம்!” என்றான் நிதானமாக.

     “கோட்டைக்குள்ளிருக்கும் பொறிகள் அனைத்துமே சரியாக இல்லையே. இதையெல்லாம் கவனிக்காமல் நீர் என்ன செய்து கொண்டிருந்தீர்!” என்று கேட்டான் இராசேந்திரன்.

     “நான் என் கடமையைச் சரிவரவே செய்தேன்” என்று கூறினான் மூவேந்தன்.

     அங்கே ஏதும் அவனிடம் பேசக்கூடாது என்று அரண்மனைக்குள் திருவரங்கனுடன் சென்றான். மூவேந்தனை அமரச் சொல்லி, சோழச் சக்கரவர்த்தியின் கடிதத்தை அவனிடம் தந்தான்.

     அதில்-

     இதைக் கண்ட மறுகணமே எல்லாப் பொறுப்புகளையும் இராசேந்திரனிடம் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

     முகச்சோர்வுடன் இடையிலிருந்த வாளைக் கழற்றி இராசேந்திரனிடம் கொடுத்தான் மூவேந்தன்.

     மதில் மேல் காவல் காக்கும் வீரர்கள் எத்தனை? நகரை வலம் வருபவர்கள் எத்தனை? அரண்மனைக்குள் எத்தனை வீரர்கள் இருக்கின்றார்கள்? என்று ஒரு பட்டியலைத் தயாரிக்கும்படித் திருவரங்கனிடம் உத்தரவிட்டுவிட்டு, சிறிது களைப்பாறி நகரை வலம் வர தன்னுடன் வரும்படி மூவேந்தனிடம் கூறினான்.

     மனம் அவனுடன் போக விருப்பமில்லாமற் போனாலும், அரச உத்தரவு என்பதால் வேண்டா வெறுப்பாய்த் தலையசைத்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

     பகல் கழிந்து மாலை நெருங்கிக் கொண்டிருந்தது.

     ஜாதிக் குதிரைகள் இரண்டு அரண்மனையிலிருந்து வெளிப்பட்டுச் சொக்கநாதர் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

     ஒன்றில் கம்பீரமாய் வீற்றிருந்த இராசேந்திரன், சுற்றுச் சூழலைக் கவனித்தவாறு சென்று கொண்டிருந்தான். இன்னொன்றில் தொய்வான முகத்துடன் மூவேந்தன் இருந்தான். அவ்விருவருக்கும் பாதுகாப்பாக முன்னும் பின்னும் பத்துப் பத்து வீரர்கள் புரவியில் அமர்ந்திருந்தனர்.

     பொற்றாமரைக் குளம் பக்கம் திரும்பிய இராசேந்திரன் அசுவத்தின் முன், ஒரு நடுத்தர வயதினன் வேகமுடன் ஓடி வந்து, “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று கூவியபடி கீழே விழுந்தான்.

     வேங்கி இளவரசன் கடிவாளத்தை இழுக்க, ஜாதிப் புரவி கட்டுக்கு அடங்காமல் கால்களை உயரத் தூக்கி, கனைத்துக் கொண்டு நின்றது.

     “அக்கிரமம் நடக்கிறது. சீக்கிரம் போங்கள்!” என திரும்பவும் உரக்கக் கூவினான் அவன்.

     திடீரென இவ்விதம் சப்தமுடன் சொன்னதைக் கவனித்த இராசேந்திரன் புரவியிலிருந்து குதித்தான்.

     “என்ன அக்கிரமம் நடந்துவிட்டது?” என்று அவன் அருகில் சென்று கேட்டான்.

     அச்சமயம்...

     நான்குபுறமும் மக்கள் ‘ஐயோ!’ என்று அலறிக் கொண்டு சிதறி ஓடலாயினர். யானைகள் இரண்டு வேகமாய் இவர்களை நோக்கி வர, யானைப் பாகர் இருவர், “மதம் பிடித்துவிட்டது! விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவியபடி பின்னால் அதைத் துரத்திக் கொண்டு வந்தனர்.

     இராசேந்திரன் புரவி வீரர்களை விலகி நிற்கும்படி எச்சரித்துவிட்டு, மதம் பிடித்த யானையை அடக்குவதற்குத் தயாரானான்.

     ஆனால்... அவன் உள் மனம் வேறு விதமாய் அல்லவா கூறுகிறது! கைகளை மடக்கி அதன் மத்தகத்தைப் பிடித்து அடக்கத் தயாராக வேண்டிய இராசேந்திரன், உள் மனக் கூற்றுப்படி, ஓடிவரும் யானைகளின் முன் நிதானமாய்ப் போய் நின்று, அதற்குரிய பாஷையில் எதையோ கூறினான். யானையிரண்டும் சாதுவாய் அவன் முன் மண்டியிட்டன.

     பின்னால் வந்த பாகர்கள் அங்குசத்தால் கோபத்துடன் குத்த, அவர்களை விலகி நிற்கும்படி எச்சரித்தான் இராசேந்திரன்.

     நான்கு பக்கமும் சிதறிய மக்கள், அபாயம் வரும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லையென்று உணர்ந்து, நடப்பதை அறிவதற்காக கூட்டமாகக் குழுமினர்.

     கீழே விழுந்த நடுத்தர வயதினன் எழுந்து நின்றான். யானைப் பாகர்கள் இருவரையும் சுட்டி, “பிடியுங்கள் அந்தத் தேசத்துரோகிகளை!” என்று உரக்கக் கத்தினான்.

     யானைகள் சாதுவாய் இராசேந்திரன் முன் மண்டியிட்டதையும், நடுத்தர வயதினன் ‘பிடியுங்கள்!’ என்று கூவியதையும் கண்ட இரு பாகர்களும், கூட்டத்தோடு கூட்டமாக நழுவ முயன்றனர்.

     அந்தச் சமயத்தில்தான் யானைப் பாகன் ஓடிவந்தான். “எங்கே அந்தப் பொய்யர்கள்!” என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, யானையின் அருகில் சென்று, மெல்ல அன்புடன் தடவிக் கொடுக்கலானான்.

     இராசேந்திரன் யானைப் பாகன் வேடத்திலிருந்த பாண்டியர்களைக் கைது செய்யும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

     நழுவப் பார்த்த அவ்விருவரும் காவல் வீரர்களால் வளைக்கப்பட்டனர்.

     அதே சமயம்...

     குறுங்கத்தி ஒன்று நடுத்தர வயதினன் மார்பில் பாய்ந்தது.

     “ஹா!” என்று கீழே வீழ்ந்தான்.

     அவனை அரண்மனை வைத்தியரிடம் அழைத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்துவிட்டுப் புரவியை அரண்மனைக்குத் திருப்பினான்.

     அது நடந்த ஒன்றரை நாழிகைப் பொழுதிற்கெல்லாம் படைத்தலைவர்களின் கூட்டத்தை இராசேந்திரன் அவசரமாய்க் கூட்டினான்.

     கோட்டைக் காவற்தலைவன், நகரக் காவற்தலைவன், நாற்படைத் தளபதிகள், மூவேந்தன், திருவரங்கன் ஆகியோர் அதில் இருந்தனர்.

     “நீங்கள் எதற்காக இங்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். நான் வந்த சில நாழிகை நேரத்திற்குள் கட்டடியிலிருந்த யானையை சோழப் பகைவர்கள் அவிழ்த்துவிட்டு, மக்கள் நடமாடும் இடத்தில் அவற்றை துரத்திக் குழப்பம் விளைவித்திருக்கின்றனர். அத்துடன் நில்லாது அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டு வந்த நம் ஒற்றர் படையைச் சேர்ந்த ஒருவரை நச்சுக்கத்தியை எறிந்து கொன்றுவிட்டனர். இதிலிருந்து அவர்களின் போக்கை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சோழ அரசின் பொறுப்பிலிருக்கும் மதுரையையும், மதுரை வாழ் மக்களையும் நிம்மதியுடன் வாழவிடாமல் செய்து, அதன் மூலம் சோழ ஆட்சிக்கு அவப்பெயர் விளைவிக்க வேண்டுமென்பது அவர்கள் திட்டம். அதை முறியடித்து இங்கே அமைதி ஏற்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற உங்களின் ஒத்துழைப்பைக் கோரவே, சோழ அரசரின் ஆனையை நிறைவேற்ற வந்திருக்கும் நான் இக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன்.

     “நடந்த குழப்பங்களை நான் யோசிக்கும் போது, சில முடிவுகளுக்கு வரவேண்டியிருக்கிறது. ஒன்று... மதுரைக்குள் குழப்பம் விளைவிப்பவர்கள் கோட்டைக்குள் நன்கு ஊடுருவி இருக்கிறார்கள். இதை நிச்சயம் மறுக்க முடியாது. இரண்டு... அந்த ஊடுருவல்காரர்களுக்குக் கோட்டைக்குள்ளேயே சிலர் பாதுகாப்புத் தருகின்றனர். இது நம்பிக்கையான இடத்திலிருந்து நமக்குக் கிடைத்த செய்தி! அதனால், குழப்பம் விளைவிக்கும் கலகக்காரர்களை அடக்க நான் சில முடிவுகளை எடுத்திருக்கிறேன். அந்த முடிவை நீங்கள் ஆராய்ந்து, அவற்றிலிருக்கும் குறைகளைச் சுட்ட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

     கலகத்தை அடக்குவதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு எந்தவித மாறுபாடும் இருக்காது என்று நம்புகிறேன். அதற்காக இன்னும் ஒரு நாழிகை நேரத்திற்குள், நகரெங்கும் ஊரடங்குச் சட்டம் போட விரும்புகிறேன்! அவசியமான உணவுப் பண்டங்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாங்கிக் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் இல்லத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்; மீறுபவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுவார்கள். அத்துடன் நிற்காது தேர்ந்தெடுத்த வீரர்களுடன் மூவேந்தன் ஒரு பக்கமும், திருவரங்கன் மற்றொரு பக்கமும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று சோதனையிட வேண்டும். இது சற்றுக் கசப்பான விஷயம்தான். என்ன செய்வது? புரையோடிவிட்ட நோயை இந்தவித மருந்தின் மூலம்தான் குணப்படுத்த வேண்டியிருக்கிறது. ஐயத்துக்குரியவர்கள் யாராயிருந்தாலும் அவர்களின் கண்கள் பிடுங்கப்படும். அவசியமானால் மரணதண்டனை கூட தரப்பட வேண்டும். அவ்விதம் தண்டனை தரப்பட்டவர்களின் உடல்கள் மக்கள் நடமாடும் இடத்தில், பார்வைக்கு வைக்கப்படும்! மேற்கூறிய யோசனைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதினால் உடனே தெரிவிக்கலாம்” என் தன் பேச்சை நிறுத்தி அனைவரையும் பார்க்கலானான் இராசேந்திரன்.

     எந்த மாற்றமும் தேவை இல்லை என்று அனைவரும் கூறினர்.

     எடுத்த முடிவை மக்களுக்குப் பறையறிவித்து உணவுப் பொருள் வாங்க மட்டும் அவகாசம் தந்து ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கும்படி அனைவருக்கும் கட்டளையிட்டான் இராசேந்திரன்.

     அடுத்துக் கோட்டையைக் காவல் செய்யும் யவன வீரர்களுக்குப் பதில், சோழ நாட்டிலிருந்து வந்திருக்கும் புரவி வீரர்களை நிறுத்த வேண்டும் என்ற அவனின் யோசனையை மூவேந்தன் எதிர்த்தான்.

     “வழிவழியாக அவர்கள் காவல் புரிகின்றார்கள். கோட்டையின் இரகசிய வழிகள், பொறிகளை இயக்கும் முறைகள் இவைகளில் யவனர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். தற்சமயம் இவர்களை மாற்றி, சோழ வீரர்களை அங்கே நிறுத்தினால், திடீரென பகைவர்கள் தாக்குதல் தொடுத்தால் அதைச் சமாளிக்க முடியாமல் போய்விடும்!” என்றான்.

     “யவனர்கள் காவலுக்குச் சிறந்தவர்கள் என்ற கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் சோழ வீரர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடும் மூவேந்தன் கூற்றை ஏற்கும் நிலையில் நான் இல்லை. கங்காபுரிக் கோட்டையையும், தஞ்சைக் கோட்டையையும் தற்சமயம் சிறப்பாகக் காவல் புரிபவர்கள் சோழ வீரர்கள்தான். வேண்டுமென்றால் மதுரைக் கோட்டை அவர்களுக்குப் பழக்கமில்லாத ஒன்று என்று கூறட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன்! அதைவிடுத்து, வேறு மாதிரி கூறுவதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. இருந்தாலும் மூவேந்தன் வார்த்தைகளை மனதில் வைத்து மதுரைக் கோட்டையைக் காக்கும் யவன வீரர்களில் சரிபாதிக்கு நம் சோழ வீரர்களை நிறுத்தலாம் என்று என் கருத்தில் மாற்றம் செய்கின்றேன். இதற்கு மூவேந்தன் கருத்து என்ன?” என்று அவன் பக்கம் திரும்பினான் இராசேந்திரன்.

     அவன் சம்மதிக்க, எடுக்கப்பட்ட முடிவுகளை உடனே அமுலாக்கும்படிக் கூறினான்.

     அடுத்த சில நொடிகளில், மதுராநகர் விதிகளில் பறை முழக்கம் கேட்டது.

     திடீரென ஊரடங்கு அமுலாக்கியதைப் பற்றி வியப்பும், திகைப்பும் பெற்ற மக்கள், தெருக்களில் புரவிவீரர்கள் நடமாட்டம் அதிகரிப்பதையுணர்ந்து, அங்காடிகளில் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வதற்காகப் போட்டி போட்டனர்.

     ஒரு நாழிகை கடந்தது. விதிகள் யாவும் வெறிச்சோடின. புரவி வீரர்கள் நடமாட்டம் மட்டும் தெருக்களில் அதிகரித்தபடியிருந்தது.

     மூவேந்தன் தலைமையில் ஐம்பது வீரர்கள் கிழக்கு மாடவிதியைச் சோதனையிடுவதற்காக அரண்மனையிலிருந்து வெளிவந்தனர்.

     அந்தத் தெருவின் முக்கிய நபர் வீட்டிற்குச் சென்ற மூவேந்தன், சோதனையிடுவதற்கு அவரைக்கூட அழைத்துக் கொண்டான்.

     முதல் வீட்டின் கதவு தட்டப்பட்டது. உள்ளே இரு பெண்மணிகள் மட்டும் இருந்தார்கள். “என்ன வேண்டும்?” என்று பெருங்கதவின் நடுவிலிருந்த பார்க்கும் வழியின் மூலம் அவர்கள் கேட்க...

     “அரச உத்தரவுப்படி உங்கள் இல்லத்தைச் சோதனையிட வேண்டும்!” என்றான் வீரர்களில் ஒருவன்.

     “வீட்டில் யாரும் ஆண்மக்கள் இல்லை. வணிகத்திற்காக சாவகம் சென்றுவிட்டனர்” என்றாள் மங்கையரில் ஒருத்தி.

     அத்தெருவின் நபர் முன்னே வந்து, “வேந்தரின் கட்டளை! தாழை நீக்கி வழிவிட்டு விடுங்கள். ஒப்புக்கு உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடட்டும்!” என்றார்.

     கதவு திறக்கப்பட்டது.

     ஐந்து வீரர்கள் உள்ளே புகுந்தனர். கூடம், பெருங் கூடம், தாழ்வாரம், பொக்கிஷ அறை, சமைக்கும் இடம், பூசை அறை முதலியவற்றைப் பார்வையிட்டுப் பின்னாலிருந்த தோட்டத்திற்குள் நுழைந்தனர்.

     இந்தச் சமயத்தில் வைகை ஆற்றின் கரைக்குச் சற்றுத் தள்ளியிருந்த சிறிய காட்டுப் பகுதியின் நடுவிலுள்ள பாழடைந்த சிவன் கோவிலை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

     அந்த கோவில், பாண்டியர் ஆட்சி செய்யும் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருந்தது. பாண்டிய மன்னன் ஒருவனுக்கு மதுரைச் சொக்கநாதர் அங்கு தரிசனம் தந்ததாக ஒரு ஐதீகம். சோழருக்கும், பாண்டியருக்கும் நடந்த போரில், கோவிலைச் சுற்றியுள்ள நகரம் அழிக்கப்பட்டுவிட, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சோழப் பிரதிநிதிகள், சிவன் கோவிலைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

     நாளடைவில் ஆலயத்தைச் சுற்றி மரம், செடி கொடிகள் மண்டி, பெரிய காடு போல் ஆகிவிட்டது. அதனால் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட, தற்போது யாரும் அப்பகுதிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.

     பாண்டிய வேந்தர்கள் காலத்தில் கோவிலுக்கும் கோட்டைக்கும் செல்ல சுரங்கவழி ஒன்று இருந்தது.

     அவ்வழியாகப் பாண்டிய அரசர்கள் சிவனை வழிபட்டு வந்தனர். பின்னால் வந்த சோழ அரசுப்பிரதிநிதிகளுக்கும், அவர்களின் அதிகாரிகளுக்கும் இந்த வழி தெரியாதாகையால் உபயோகப்படுத்தப்படாமல் அது மூடியே கிடந்தது.

     பாண்டிய ஒற்றர் தலைவனான தூமகேது, கோட்டைக்கு இரகசியமாய்ச் செல்ல அதைப் பயன்படுத்திக் கொண்டான். சுரங்க வழி நேராய் அரண்மனை நந்தவனத்தின் நடுவிலிருந்த விநாயகர் ஆலயத்தில் போய் முடிவடைந்தது.

     அங்கே செல்லும் தூமகேது நந்தவனத்தைக் காக்கும் ஊழியனுக்குக் கையூட்டுக் கொடுத்து, வடக்கு மாடவீதியிலுள்ள வீடுகளின் பின்புறத் தோட்டப் பகுதியை அடைந்துவிடுவான். அந்தத் தெருவிலுள்ளவர்கள் அனைவரும் பெரும் வணிகர்கள். அவர்கள் வழிவழியாக மதுரையில் வசிப்பவர்கள். அத்தோடு பாண்டியர்களுக்கு விசுவாசமாய் இருப்பவர்களும்கூட. அதைப் பயன்படுத்தி அவனும், அவனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே மறைந்து கொண்டு நகரில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.

     தூமகேதுவும், அவனுடன் வந்த இருபது ஆட்களும் மதுரை நகரிலேயே பெரும் செல்வந்தனான வைசிய குலத்தைச் சேர்ந்த தனபாலன் இல்லத்தில் தற்சமயம் ஒளிந்து கொண்டு இருந்தனர்.

     கிழக்கு மாடவீதியில் சோழ வீரர்கள் சோதனையிடும் செய்தி அவன் காதிற்கு எட்டியது. அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தான்.

     வீட்டிற்குள் இருந்தால் எப்படியும் சோழநாய்கள் மோப்பம் பிடித்துவிடுவர் என்பதால், இல்லத்தையட்டியிருந்த கிணற்றுக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அனைவரும் அதில் இறங்கிக் கொண்டனர்.

     ஒவ்வொருவரும் மூச்சடக்குவதில் சிறந்தவர்களாயிருந்ததால், சோழ வீரர்கள் கிணற்றைப் பார்வையிட வரும் போது, நீருக்குள் அமிழ்ந்து கொள்ள வேண்டும் என்பது அவனது திட்டம்.

     கிழக்கு மாடவீதி முடிந்து, வடக்கு மாடவீதிக்குள் நுழைந்த மூவேந்தன் தனபாலன் இல்லம் முன்வந்து நின்றான்.

     இல்லச் சொந்தக்காரருக்கு, இதயம் ‘தட் தட்’ என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. ஏனென்றால், இராஜத்துரோகம் என்று குற்றம் சாட்டி மரணதண்டனை தந்துவிடலாம் அல்லவா? அதனால், சோழ வீரர்களிடம் சிக்காமலிருந்தால் சொக்கநாதருக்கு நூற்றி எட்டு குடங்களில் பாலாபிஷேகம் செய்வதாக அப்போது வேண்டிக் கொண்டான். பிறகு...

     தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது! இனிமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்ற உறுதியுடன் மூவேந்தனை, புன்முறுவலுடன் “வாருங்கள்” என்று அழைத்தான். மனம் மட்டும் ‘பட பட’வென்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது.

     வேலைக்காரனைக் கூப்பிட்டு அனைவருக்கும் இருக்கை போடும்படிக் கட்டளையிட்டான்.

     “வேண்டாம்! எங்களுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. காரியத்தை முடித்துக் கொண்டு போய்விடுகிறோம்!” என்றான் மூவேந்தன்.

     “இல்லை... இல்லை... உங்களைக் கௌரவிப்பது என் கடமை!” என்ற தனபாலன், அனைவருக்கும் பழரசத்தை வரவழைத்துத் தந்தான்.

     “கொஞ்சம் என்னுடன் கூட வந்து மற்ற வீடுகளைச் சோதனையிட உதவி புரிய வேண்டும்” என்று தனபாலனிடம் மூவேந்தன் கேட்க...

     “அதற்கென்ன ஆகட்டும்!” என்று தலையை ஆட்டினான். உள்ளிருக்கும் எல்லா அறைகளையும் சோதனையிட்டு, “யாரும் ஒளியவில்லை!” என்று வீரர்கள் அறிவித்தனர். தோட்டத்தைச் சோதனையிட இரு வீரர்கள் கூரிய வேலுடன் போவதற்குப் புறப்பட்டனர்.

     “எல்லாம் பார்த்தாகிவிட்டதே! இன்னும் என்ன தாமதம்? இவரெல்லாம் அரசுக்கு விசுவாசமானவர்தான்! வாங்கப்பா போகலாம்!” என்ற மூவேந்தனிடம், “தோட்டம் பாக்கியிருக்கிறது!” என்றான் வேல்வீரர்களில் ஒருவன்.

     இருக்கையிலிருந்து எழுந்த மூவேந்தன், “அங்கே பூதம் கீதம் எதுவும் இல்லை. சீக்கிரம் பார்த்துவிட்டு வாருங்கள்!” என்று புன்சிரிப்புடன் தனபாலனைப் பார்த்தவாறு கூறினான்.

     வேல்வீரர்கள் இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.

     காலடிச் சப்தத்தைக் கேட்டு, தூமகேதுவும், மற்றவர்களும் நீருக்குள் அமிழ்ந்து மூச்சையடக்கிக் கொண்டனர்.

     மரங்கள் இருந்த பகுதிப் பக்கம் சென்று, சோதனையிடலாம் என்று நினைத்து இருந்த வேல்வீரன் செவிகளில், அத்தனை பேரும் மொத்தமாகக் கிணற்றுக்குள் அமிழ்ந்ததால் ஏற்பட்ட சலசலப்புச் சத்தம் விழுந்தது.

     திடுக்கிட்ட அவ்வீரன்...

     “கேணிக்குள் சப்தம் கேட்கிறது!” என்றான் பரபரப்போடு.

     வேறுபக்கம் பார்வையைச் செலுத்தி, ஆராய்ந்தபடியிருந்த மற்றொரு வீரன், “அப்படியா?” என்று ஓடிவர...

     இருவரும் கிணற்றுப் பக்கம் சென்றனர். வெற்று கிணறுதான் அப்போது தெரிந்தது.

     சப்தம் கேட்ட வீரன், “வியப்பாக இருக்கிறதே! சலசலவென்று ஓசை என் காதில் விழுந்ததே!” என்று வேகமாய்ப் படிகளில் இறங்கி நீர்மட்டம் சென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

     மேலே நின்று கொண்டிருந்த வீரன், “ஏதாவது பூச்சி பொட்டு ஓடியிருக்கும் வா. திரும்பிப் போகலாம்!” என்றான் அவசரத்துடன்.

     “இல்லை. ஆட்கள் மறைந்து கொள்வது போன்ற சப்தம் கேட்டது” என்று அடித்துக் கூறிய வீரன், படிகளின் அடிப்பாகத்தைச் சுற்றி ஏதாவது போறைபோல் வழியிருக்கிறதா என்று கூர்ந்து கவனிக்கலானான்.

     மேலேயிருந்த வீரன் சலிப்படைந்தான்.

     “என்னப்பா அப்படிப் பார்க்கிறாய்? நீ பார்க்கிற வேகத்தைப் பார்த்தால் கிணற்றுக்குள் மூழ்கிக்கூட ஆட்களைத் தேடுவாய் போலிருக்கிறதே!” என்றான் கேலியாக.

     அதற்குத் தயாரானாற் போல, அவன் வேலின் கூர்ப் பகுதியை நீரில்விட்டு இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தான்.

     ஏறக்குறைய நீர்மட்டத்திற்கும், கிணற்றின் தரைப் பகுதிக்கும் பத்து ஆள் ஆழத்திற்கு மேல் இடைவெளியிருந்ததால், வேலின் கூறிய முனை நீரில் ‘பொளக்’ என்று சப்தத்தை மட்டுமே எழுப்பியது.

     மூவேந்தன் சீக்கிரம் வரும்படி கோபத்துடன் இவர்களை அழைக்க, “கூப்பிடுகிறார் தலைவர்! நீ பார்த்தது போதும், மேலே ஏறி வா!” என்று மேலிருந்தவன் சலிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

     தனி ஒருவனாய் இன்னும் அங்கேயே நின்று கொண்டு நீர்மட்டத்தையும், மற்றப் பகுதிகளையும் நோட்டம்விட்டு திருப்தியில்லாமல், படிகளில் ஏறி மேலே வெளியே வந்தான் வேல்வீரன்.

     “என்னப்பா அங்கே பண்ணிக் கொண்டிருந்தாய்?” என்று மூவேந்தன் எரிச்சலுடன் அவனை அதட்ட பக்கத்திலிருந்த வீரன், “கிணற்றுக்குள் பாண்டியப் பகைவர்களைத் தேடுகிறான்” என்றான் கேலியாக.

     “எமகாதகனப்பா நீ! ஆட்களைத் தரையில் தேடாமல் நீரில் தேட ஆரம்பித்துவிட்டாய். உண்மையிலேயே உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று மூவேந்தன் சிரித்துக் கொண்டே கூற, அதைக் கேட்ட மற்றவர்களும் ‘கொல்’ என்று சிரித்துவிட்டனர்.

     கிணற்றுக்குள் அவன் இறங்கினதைப் பார்த்த தனபாலன், ‘கண்டுபிடித்துவிடப் போகிறான்! நம் உயிர் அவ்வளவுதான்’ என்று மனம் படபடக்க, கை கால்கள் நடுங்கியபடியிருந்தவன், ‘கொல்’ என்ற சிரிப்புச் சத்தம் எழுந்ததும், உயிர் வந்தது போல, அவனும் பெருமூச்சுவிட்டு, அவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரிக்கலானான்.

     “நல்ல வேடிக்கைதான்!” என்று மூவேந்தன் தனபாலனிடம் விடைபெற்றுக் கொண்டு, “சீக்கிரம் புறப்படுங்கள்!” என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டு வீதியில் இறங்கினான்.

     அவர்களுடன் தெரு வரை போய்விட்டுத் திரும்பிய தனபாலன் கிணற்றருகில் சென்று “ஆபத்து நீங்கிவிட்டது!” என்று கூறினான்.

     நீரிலிருந்து வெளியே வந்து படிகளில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் வெளி வந்தனர்.

     “இனிமேல் நீங்கள் இங்கேயிருப்பது எனக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும். அதனால் கெடுபிடி குறையும் வரை, வேறு எங்கேயாவது போய் மறைந்து கொள்ளுங்கள்” என்றான் தனபாலன்.

     “இருட்டிவிட்டதும் போய்விடுகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று அதற்குப் பதில் கூறிய தூமகேது,

     “இதுவரை இடம் கொடுத்து உதவி செய்த உங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம்” என்றான் உணர்ச்சிவயப்பட்டு.

     இருட்டு...

     செல்வந்தர் தனபாலிடம் சொல்லிக் கொண்டு, வீட்டின் பின்பகுதியிலிருந்த சந்தில் வந்து நின்றான் தூமகேது.

     அச்சமயம் தூரத்தில் புரவிகள் செல்லும் சப்தம் கேட்டது.

     “காவல் செய்கிறவர்கள் நகரை வலம் வருகின்றனர். எச்சரிக்கையுடனிருங்கள்!” என்று தன் தோழர்களிடம் கூறிய தூமகேது மறைந்தபடி அரண்மனை நந்தவனத்தின் பின் பகுதிக்குப் போய்ச் சேர்ந்தான். ஏற்கனவே நந்தவனத்தைக் காப்போனுக்கு அவன் வருகையைத் தெரிவித்திருந்ததால், தாழ் போடாமல் வெறும் கதவு மட்டும் மூடி அடைத்திருந்தான்.

     கதவின் மேல் கைவைத்து அழுத்தினான். திறந்து கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனுடன் எல்லோரும் நந்தவனத்திற்குள் நுழைந்தனர்.

     மகிழமரத்தடியில் தீவட்டி ஒன்று இவர்களை நோக்கி வர, யாரோ எதுவோ என பூச்செடிகளின் பின் ஒளிந்து கொண்டனர்.

     வரவர, தீப்பந்த வெளிச்சத்தில் அதைப் பிடித்துக் கொண்டு வந்தவன் நந்தவனத்தைக் காப்பவன் என்று அறிந்த தூமகேது வெளியே வந்து அவனருகில் சென்றான்.

     “இனிமேல் நீங்கள் இந்த வழியில் வர வேண்டாம். ஏனென்றால் நாளையிலிருந்து வேறு ஆளைக் காவலுக்குப் போடப் போகின்றார்கள்” என்றான் நந்தவனம் காப்போன்.

     தூமகேதுவுக்குத் தூக்கிவாரிப் போடத்தான் செய்தது. இருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, பத்து பொற்காசுகளைக் கொடுத்து, அவனிடமிருந்த தீவட்டியை வாங்கிக் கொண்டான்.

     நந்தவனத்தின் நடுநாயகமாயிருந்த விநாயகர் கோவிலுக்குள் தோழர்களுடன் நுழைந்தான். சற்று நேரத்தில் விநாயகர் பீடத்துடன் நகர்ந்தார். ஆள் நுழையுமளவிற்குத் தரையில் வழி தோன்றியது. இரவு நேரமாக இருந்ததால் அவ்வழி தெளிவாகத் தெரியவில்லை. தட்டுத் தடுமாறி தூமகேது தீப்பந்தத்துடன் முதலில் இறங்கினான். பின்னல் அவனுடன் வந்தவர்கள் இறங்க, தீப்பந்தத்தைக் காண்பித்தபடி தூமகேது வழிகாட்டிக் கொண்டே முன்னால் செல்லலானான்.

     பள்ளம் மேடுமாக அது சீரில்லாமல் இருந்தது. ஒரு இடத்தில் ஈரமாய் ஆங்காங்கே நீர் கசிந்து கொண்டிருந்தது.

     “பார்த்து வாருங்கள்! வழுக்கப் போகிறது; இந்த இடத்துக்கு நேர்மேலே அகழி இருக்கிறது!” என்றான் தூமகேது.

     ‘வழுவழு’ என்றிருந்த அப்பகுதியில் ஜாக்கிரதையுடன் கால் வைத்து அவன் செல்லும் போது, பின்னால் வந்தவர்களில் ஒருவன், “என்ன பெரிய வழுக்கல்?” என்று அனாவசியமாய்க் கால் வைக்க, ‘தொபீர்!’ என்று கீழே விழுந்து, “ஐயோ!” என இடுப்பைப் பார்த்துக் கொண்டான்.

     முன்னால் சென்று கொண்டிருந்த தூமகேது, “என்ன சப்தம் அங்கே?” என்று நின்று சற்று அச்சத்துடன் வினவ...

     விழுந்துவிட்ட அவனை மற்றவர்கள் கைகொடுத்துத் தூக்கிவிட்டார்கள்.

     “அதனால்தான் எச்சரித்தேன். இனிமேலாவது பார்த்து வாருங்கள்!” என்று தீப்பந்தத்தை உயர்த்தி, தூமகேது முன்னால் நடக்கலானான்.

     பாழடைந்திருந்த சிவன் கோவில் லிங்கம் அந்த இருட்டில் ‘கிரீச்‘ என்ற சப்தத்துடன் விலகியது.

     சற்று நேரத்திற்கெல்லாம் கோவிலுக்கு முன்னாலிருந்த அரசமரத்தின் முன் அனைவரும் குழுமினர்.

     தீப்பந்தத்தை ஒருவன் உயரத் தூக்கிப்பிடிக்க, அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டுத் “தோழர்களே!” என்று தன் பேச்சைத் துவக்கினான் தூமகேது.

     “இருபத்தோரு பேராக நாம் கோட்டைக்குள் நுழைந்தோம். இப்பொழுது இருவர் குறைந்து பத்தொன்பது பேராக ஆகிவிட்டோம். பாகன் வேடத்திலிருந்த நம் இரு தோழர்களும், சோழ ஓநாய்களின் கையில் சிக்கிக் கொண்டு, இந்நேரம் அவர்களின் உயிர் பறி போயிருக்கலாம். பகைவன் திடீரென ஊரடங்கை அமுலாக்குவான் என்று நாம் நினைக்கவேயில்லை. இப்படி முன்கூட்டியே செய்வான் என்று தெரிந்திருந்தால், வேறு முறையில் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம். யானைகள் முழுமையும் நகரெங்கும் அவிழ்த்துவிடப்பட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நாம் செய்திருந்த முடிவு தோல்வியடைந்துவிட்டது.

     “நம் நடமாட்டங்கள் அனைத்துமே பகை ஒற்றர்களுக்குத் தெரிந்துவிட்டதால்தான், அப்படி ஒரு தோல்வியைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஒரு ஆறுதல்... பகை ஒற்றன் ஒருவன் உயிரை நம் நச்சுக்கத்தி குடித்துவிட்டது. ஆனால் அதற்குப் பதிலாக நம்மவர்களில் இருவர்... அவர்களிடம் சிக்கிக் கொண்டுவிட்டனர்.

     “அதற்குப் பதிலடி கொடுப்பது போல், சோழ ஓநாய்களின் தலைகள் தரையில் உருள வேண்டும்! அதற்கு என்னருமைத் தோழர்களே, நீங்கள் தயாராக வேண்டும். இனிமேல் நாம் நினைப்பது போல் கோட்டைக்குள் செல்ல முடியாது. காரணம்... நமக்கு உதவி செய்து வந்த நந்தவனம் காப்போனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். அதனால் மாறுவேடத்தில்தான் இனி கோட்டைக்குள் பிரவேசிக்க முடியும். செய்... அல்லது செத்து மடி! என்பது நம் அரசனின் தாரக மந்திரம்! அடிமை விலங்குடன், கண்ணீரும் கம்பலையுமாயிருக்கும் பாண்டிய அன்னையை மீட்கும் வரை நம் போராட்டம் நிற்கப் போவதில்லை!” என்று பேச்சை நிறுத்திய தூமகேது, “பாண்டிய சக்கரவர்த்தி சடையவர்ம சீவல்லபர்!” என்று உரக்கக் கூறினான். சுற்றியிருந்தவர்கள் “வாழ்க! வாழ்க!” என்று முழங்கினர்.

     அந்த இரவில் வேகமாய் ஒலித்த வாழ்த்து முழக்கம் அப்பகுதியெங்கும் பரவியது. கோட்டையிலிருந்து வீசிய காற்றால், மதுரா நகரெங்கும் அது எதிரொலிக்க முடியாமல் அந்தப் பகுதியிலேயே மெள்ள அடங்கிவிட்டது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247