![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 38 யவன வீரனைப் போன்று உடையணிந்த இராசேந்திரனும், காரனை விழுப்பரையனும் உறையூரையடைந்த போது அவர்களுக்குத் திடுக்கிடும் செய்தி ஒன்று காத்திருந்தது. எதிர்பார்த்த செய்தி என்றாலும் இவ்வளவு சீக்கிரம் அது நடந்துவிட்டதா என்று நினைக்கும் போது, இருவருக்கும் ஒருகணம் என்ன செய்வதென்று புரியாமல் போய்விட்டது. உறையூர்க் கோட்டத் தலைவனிடம் உண்மைதானா என்று அறிவதற்காக காரனை விழுப்பரையனை அனுப்பி வைத்தான் இராசேந்திரன். கோட்டத் தலைவனும் அந்தச் செய்தி உண்மைதானா என்று அறிவதற்காக, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஆளை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தான். அன்றைய இரவு அங்கேயே தங்குவது என அவர்கள் பிரயாண திட்டத்தில் இருந்தது. தற்போது அந்தத் திடுக்கிடும் செய்திக்காக, திட்டத்தை மாற்றிக் கொண்டு இருவரும் இரவென்று பாராமல் புரவியில் பயணமாயினர். இராசேந்திரனுக்கு மனநிலை சரியில்லாமலிருந்தது. காரனை விழுப்பரையனை அருகில் அழைத்து, “சோழச் சக்கரவர்த்தி மறைந்துவிட்டதாக உறையூரில் கேள்விப்பட்ட செய்தி, உண்மையாக இல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றான். “இனி எனக்கு அங்கே என்ன இருக்கிறது? அவரின் இறுதிக் கடன்கள் முடிக்கப்பட்டிருந்தால், உடனே வேங்கி போய்விடலாம் என்றெண்ணுகின்றேன். பழைய மதிப்பு இனிமேல் எனக்கு அங்கே இருக்காது!” என்று மனமொடிந்து சொன்னான். “என்ன இளவரசே அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மறைந்த சோழச் சக்கரவர்த்தி தங்களுக்குத்தான் இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்று விரும்பினார். பட்டத்தரசியும் அதை ஆதரித்தார். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் சோழ நாட்டைவிட்டுப் போக வேண்டும்?” “ஆரம்பத்திலிருந்தே அதிராசேந்திரனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் நிறையவே உண்டு; இனி சோழ நாட்டின் அடுத்த சக்கரவர்த்தி என்ற நிலையில், எனக்கு அங்கே முக்கியத்துவம் இருக்காது என்று படுகிறது. நான் ஒதுக்கப்பட்டவனாக இருப்பேன். அதனால் என் தாய் நாடான வேங்கி நாட்டிற்குப் போய்விடுவதே நல்லது” என்று கூறிய இராசேந்திரனை விழுப்பரையன் இடைமறித்தான். “முதன்மந்திரி உங்கள் பக்கத்தில் இருக்கின்றார். தளபதி தன்மபாலரும், அவரின் சகோதரரும் உங்களை ஆதரிக்கின்றனர். அதனால் வீணாக மனத்தைப் போட்டுக் குழம்பிக் கொள்ள வேண்டாம். நீங்கள் நினைப்பது போல அதிராசேந்திரர் அவ்வளவு துணிவாக தன்னிச்சையாக செயல்படுபவர் அல்ல; முதலமைச்சரின் சொற்கேட்டுத்தான் நடப்பார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றான் உறுதியாக. “எனக்கென்னமோ அம்மாதிரி தெரியவில்லை. போகப் போகப் பார்க்கலாம்!” என்று புரவியை வேகமாகச் செலுத்துவதற்காக வாரினால் ஓங்கி அடித்தான். ***** ‘செய்தி காட்டுத் தீ போன்று பரவிவிட்டது!’ என்ற முதுமொழி உண்டு. அது எவ்வளவு உண்மை என்பது சோழச் சக்கரவர்த்தி வீரராசேந்திரர் விண்ணுலகு எய்தியதிலிருந்து தெரிகிறது. நான்கு புறமும் ஆட்களை அனுப்பிச் செய்திகளைத் தெரிவிப்பதற்குள், அவர்களுக்கு முன்பே அச்செய்தி தெரிந்துவிட்டிருக்கிறது. ‘சக்கரவர்த்தி இறந்துவிட்டார்’ என்ற செய்தி முதல் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் பரவ எவ்வளவு நேரமாகும்? அதே மாதிரி அடுத்த ஊர், அடுத்த ஊர் என்று காட்டுத் தீயென அது சோழ நாடெங்கும் பரவிவிட்டிருந்தது. அதையறிந்த மக்களும் சிலர் துக்கித்தும், இன்னும் சிலர் அழுதும், வேறு சிலர் சோழ நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலையுடன் செய்வதறியாது திகைத்தும் இருந்தனர். சக்கரவர்த்தி அனுப்பிய ஆளுடன் சாமந்தன் துணையோடு கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இரத்தினாதேவிக்கும் இச்செய்தி எட்டிவிட்டது. ‘ஒழிந்தான் பகைவன்’ என்று உள்ளுணர்வு அவளுக்கு மகிழ்ச்சிக் கீதம் இசைக்க, “இன்னும் ஒருவன் இருக்கின்றான்! அவனும் ஒழிய வேண்டும்” என்று கோபத்துடன் கூறிக் கொண்டாள். அவளை அழைத்துவர அனுப்பப்பட்ட விசேஷ தூதன் இச்செய்தியைக் கேட்டு ஒருகணம் வெளிப்படையாகவே அழுதுவிட்டான். சோழநாட்டின் எதிர்காலம் பற்றி அவனுக்கும் ஐயமாகவே இருந்தது. இரவு நெருங்கியதால் அருகிலிருந்த சத்திரத்தில் மூவரும் தங்கினர். தூதன் இரவிலும் பயணம் செய்யலாம் என்ற கருத்தை இரத்தினாதேவி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி அவனும் அவர்களுடன் தங்கும்படியாகிவிட்டது. தூதன் வெளியே படுத்துக் கொள்ள, சாமந்தன் தரையிலும், இரத்தினாதேவி பஞ்சணையிலும் படுத்துக் கொண்டனர். “இனிமேல் முதலமைச்சரின் கை ஓங்கிவிடும். நம்மைக் கங்கைகொண்ட சோழபுரத்திலேயே சிறை வைத்துவிடலாம். அதனால் அங்கே போகாமல், இப்படியே கடாரதிற்குத் திரும்பிவிட்டால் என்ன?” என்று வினவினான் சாமந்தன். இரத்தினாதேவிக்கு அந்தக் கூற்று சரியென்று படவில்லை. “தற்போதைய அரசர் யாரென்று நினைக்கிறீர்கள்? அதிராசேந்திரன்! நமக்கு மிக நெருக்கமானவர். அவரை மீறி முதலமைச்சர் ஒன்றும் நம்மைக் கைது செய்ய முடியாது!” என்றாள். “எனக்கு என்னமோ நீ சொன்னதை ஏற்கும் நிலையில் நான் இல்லை. இப்போதுதான் ஆட்சிபீடம் ஏறியிருப்பதால் முதல் அமைச்சரை மீறி நடக்க முடியாது என்றே எனக்குப்படுகிறது!” அதைக் கேட்டு இரத்தினாதேவி புன்முறுவலித்தாள். “அப்படி முதலமைச்சர் சொற்படி ஆடும் பாவையாக இருந்தால், நாம் ஏன் அதை மாற்ற முயலக் கூடாது?” “முயல்வதற்கு நம்மை வெளியேவிட்டால்தானே! உள்ளே சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டால்?” “அவ்வளவு மோசமாக நம்மை நடத்தும் அளவுக்கு என்ன குற்றம் புரிந்துவிட்டோம்? அவனால்...” என்று மேற்கொண்டு பேச முயன்ற அவளை சாமந்தன் இடைமறித்து, “இராஜத்துரோகம் என்று ஒரு வார்த்தை போதாதா? அதுவும் நாம் வெளிநாட்டினர் என்பதால் நம்மீது பழி சுமத்துவதற்கு வசதியாகப் போய்விட்டது” என்றான். இரத்தினாதேவி மௌனமானாள். பிறகு அதைக் கலைக்கும் விதத்தில், “இறுதிக் கடன்கள் முடியும்வரை இம்மாதிரி விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடத்த அவர்கள் மனம் துணியாது. இப்போது கங்கைகொண்ட சோழபுரம் செல்வோம். நிலைமை சரியில்லையென்றால் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கடாரம் போய்விடலாம்!” என்றாள். சாமந்தன் இதற்குச் ‘சரி’ என்று ஒப்புக் கொண்டான். மிகுந்த நேரம் கடந்துவிட்டதாலும், அத்துடன் வெகு தூரம் பயணம் செய்த களைப்பின் மிகுதியாலும் இருவரும் துயில் கொண்டனர். ***** படகோட்டிக்குக் கூடுதலாகப் பொற்காசுகளைக் கொடுத்து அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, புரவி ஏறிய அம்மையப்பன், மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தான். ‘அந்தப் பாண்டிய ஓநாய்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது பெரிய கதை’ என்று அதைப் பற்றிச் சிந்திக்கலானான் அவன். ஒரு இரவும், மறுநாள் பகலும் மரத்தின் மேலேயே ஒளிந்திருந்தது தனக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. எல்லா இடங்களிலும் தேடி அலுத்துவிட்ட அவர்கள் திரும்பவும் அசோக மரத்தின் கீழ் கூடிவிட்டனர். அதற்குள் ஒவ்வொரு கிளையாகத் தாவித் தாவி அத்தீவின் மறுமுனைக்கு வந்துவிட்டேன்! அங்கிருந்து பெரிய தீவிற்குப் போய்விட்டால் தொல்லையிருக்காது என்பதை உணர்ந்து இருட்டட்டும் என்று காத்திருந்தேன்! அந்த எதிர்பார்த்த இருட்டும் வரவே, சப்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, எச்சரிக்கையுடன் கடலைக் கடந்து பெரிய தீவிற்குள் நுழையும் போதுதான் எனக்குப் பெருமூச்சே வந்தது! அதைக் கடந்து கடலில் இறங்கும் நேரம் பார்த்துக் கட்டுமரத்துடன் படகோட்டியும் அங்கே வந்துவிட்டான். ‘இது ஒரு பெரிய காரியம்தான்!’ என்று தான் தீவுக்குள் போய் வந்ததைப் பற்றிப் பெருமிதத்துடன் நினைத்தவாறு மதுரைக்குள் அவன் நுழைந்த போது சக்கரவர்த்தி மறைந்துவிட்ட செய்தி செவிகளில் விழுந்தது. ஒருகணம் திடுக்கிட்டு என்ன செய்வதென்றறியாது புரியாமல் நின்றான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|