(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 7

     நாகையிலிருந்து தஞ்சைக்குச் சென்று பிறகுதான் கங்கைகொண்ட சோழபுரம் போக முடியும்.

     அதனால் அவ்வழியாகப் பட்டத்தரசியார் தேர் போய்க் கொண்டிருந்தது.

     முன்னரும் பின்னரும் வேற்பிடித்த வீரர்கள் புரவியுடன் வர, தேரையொட்டித் திருவரங்கன், அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்துப் புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

     விடியற்கால நேரமாதலால், மரங்களிலிருந்து பறவைகள் ‘கீச் கீச்‘ என்று சப்தித்துக் கொண்டிருந்தன. வயல்வெளியை நோக்கிக் கலப்பையுடன் மாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருந்த உழவர்களை வேகமாய்ப் புரவியைவிட்டபடி வந்து கொண்டிருந்த வீரர்கள் வழிவிடும்படி எச்சரிக்க, பட்டத்தரசி வருவதை உணர்ந்த அவர்கள், கலப்பைகளைத் தோளிலிருந்து இறக்கிவிட்டு அரசியாரின் வரவுக்காகப் புன்முறுவலுடன் நின்றனர்.

     புரவியின் குளம்பொலியும், அலங்காரத் தேரின் ஓசையும் ஒன்றாகி ஒலிக்க, அதனால் மிரட்சியடைந்த மாடுகள் இப்படியும் அப்படியும் ஓட முற்பட்டன.

     பட்டத்தரசி வரும் போது ஏதாவது கோளாறு செய்துவிடப் போகிறதென்று, உழவர்கள் மாட்டின் மூக்குக் கயிற்றை தன் கைகளில் நன்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு, சிறிது ஒதுங்கி அவர் வரவுக்காகக் காத்து நின்றனர். அரசியின் இரதம் அவர்களை நெருங்கியது. இரதத்தின் முன்னாலிருந்த வீரன், “ஆகவமல்லனை...” என்று ஆரம்பித்துச் சட்டென்று நிறுத்தி, “மகாராசாதி ராச சோழச் சக்கரவர்த்தியின் திருத்தேவியார்” என்று குரல் கொடுத்தான்.

     கூடியிருந்த மக்கள் “வாழ்க! வாழ்க!” என்று முழக்கமிட்டனர்.

     அவர்களை நோக்கிப் புன்முறுவலுடன் கை கூப்பினார் அரசி. இரதம் அவ்விடத்தைக் கடந்ததும் மெல்லச் சிரிக்கலானார்.

     ஜோதிடர் வீட்டில் அம்பிகையிடம் என்ன கேட்டிருப்பார்? அதற்கு அம்பிகை என்ன பதில் கூறியிருப்பாள்? என்று சிந்தித்தபடியிருந்த இளையராணி பட்டத்தரசியின் சிரிப்பினால் சிந்தனை கலையப் பெற்று அவர் பக்கம் திரும்பினாள்.

     “இந்நேரம் என் பக்கத்தில் நீ இல்லாமல் என் மகளான இராஜசுந்தரி இருந்திருந்தால் ‘ஆகவமல்லனை’ என்று முழக்கமிட்ட வீரன் மேல் சண்டைக்குப் போயிருப்பாள்!” என்றாள் பட்டத்தரசி.

     ‘அதற்குக் காரணம் என்ன?’ என்பது போல இளையராணி அரசியைப் பார்க்க, “மேலைச்சாளுக்கிய அரசனான ஆகவமல்லனை என் கணவர் ஐந்து முறை போரிட்டு வெற்றி கண்டார். சோழ நாட்டிற்கும் மேலைச்சாளுக்கிய அரசுக்கும் தலைமுறை தலைமுறையாகப் பெரிய பகையே இருந்து வந்தது. அதன் காரணமாக இரு நாடுகளும் போரிலே கவனம் செலுத்தி, ஆட்சி புரிய முடிந்ததே தவிர மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்ய முடியவில்லை. இதை நன்குணர்ந்த என் கணவர், பகையை நீக்குவதற்குப் போரிடுவது மட்டும் வழியில்லை என்றறிந்து ஆகவமல்லனின் மகனான விக்கிரமாதித்தனுக்கு இராஜசுந்தரியை மணம் செய்து கொடுத்தார். மண உறவு ஏற்பட்ட இரு நாடுகளும் அன்றைய தினத்திலிருந்து தங்கள் பகையை மறந்துவிட்டன. அதிலிருந்து ‘ஆகவமல்லனை ஐயம் மடிவென் கண்ட இராசசேகரன்’ என்ற சிறப்புப் பெயரைப் பொது இடங்களில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாமன்னர் உத்தரவிட்டுவிட்டார். பழக்கத் தோஷத்தால் வீரன் வாயில் ‘ஆகவமல்லனை’ என்ற தொடர் வந்துவிட்டது. உடனே தவறை உணர்ந்த அவ்வீரன், வேறு பெயரைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டான். அதை நினைக்கும் போதுதான் எனக்குச் சிரிப்பு வந்தது!” என்று தலையை வெளியே நீட்டித் திருவரங்கனை அருகில் அழைத்தார்.

     உடனே தேர் நிறுத்தப்பட்டது.

     நீண்ட நேரம் இரதத்திலேயே உட்கார்ந்துவிட்டதால் எங்கேயாவது இளைப்பாறிச் செல்லலாம் என்று பட்டத்தரசிரியார் அவனிடம் கூற, வழியில் சோலையோ, கோயிலோ தென்பட்டால், தேரை நிறுத்துவதாகக் கூறினான் திருவரங்கன்.

     “அப்படியே செய்துவிடு!” என்று அரசி ஆமோதிக்க, தேர் தஞ்சையை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

     தஞ்சையிலிருந்து சுமார் பத்துக் கல் தொலைவில், பசுமையாய் நிறைய மாமரங்கள் வளர்ந்து, பெருந் தோப்புப் போல் அந்த இடம் தென்பட்டது. அதற்கு நடுவே பெரிய தாமரைக் குளம் ஒன்றும் இருந்தது. அதையொட்டி விண்ணைத்தொடும் உயரத்தில் அரசமரமும், அதன் கீழ் பெரிய மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்ததால், தேரை நிறுத்தும்படி இரத சாரதிக்கு உத்தரவிட்டான் திருவரங்கன்.

     அனைவரும் இறங்கினர்.

     அரசியும் இளையராணியும் குளத்தில் முகம், கைகால் கழுவிக் கொண்டு, அரசமரத்தின் கீழிருந்த மேடையில் இளைப்பாறுவதற்காக உட்கார்ந்தனர்.

     நான்கு வீரர்கள் வேல்களைக் கையில் பிடித்தவாறு காவலுக்காக நிற்க, மற்ற வீரர்கள் நீர் வேட்கையைத் தனித்துக் கொள்ளக் குளத்தில் இறங்கினர்.

     குளத்தின் மேல் படியில் நின்ற வண்ணம் திருவரங்கன் சுற்று முற்றும் கவனித்தான். மனித நடமாட்டமில்லாத இந்த இடத்தில் இப்படி ஒரு தாமரைக் குளம். எவ்விதச் சிதிலமும் அடையாமல் இருக்கிறது. அரசமரமும், அதன் கீழ் மேடையும் ஜனங்கள் வந்து புழங்குவதற்கு ஏற்றவாறு தூய்மையாக வைக்கப்பட்டிருந்தன. மாமரங்கள் வேறு வரிசையாய் ஒழுங்காக இருக்கின்றன. அப்படியென்றால் இங்கே யாராவது வசிக்கின்றார்களா? என்று தன் கண்களைச் சுற்றிலும் சுழலவிட, “அய்யோ!” என்று ஒரு குரல் கேட்டது.

     என்னவென்று சப்தம் வந்த பக்கம் அவன் திரும்புவதற்குள் சுருக்குக் கயிறு ஒன்று அவன் தலைக்கு நேராய் விழுந்து தோளோடு சேர்த்து அப்படியே திருவரங்கனை இறுக்கிக் கொண்டது.

     கைகளால் சுருக்கை அவிழ்க்கலாமென்று அவன் முயல்வதற்குள், முதுகில் கூர்மையான கத்தி அழுந்த, “அசையாதே” என்று கடுமையான குரல் பின்னாலிருந்து ஒலிக்கவும் செய்தது.

     இதற்குள்...

     காவலுக்கு நின்ற வீரர்களும் இவனைப் போன்றே கயிற்றால் பிணிக்கப்பட்டுவிட்டனர்.

     அதற்குப் பதிலாக-

     பட்டத்து அரசியையும், இளையராணியையும் சுற்றி இரு முரடர்கள் உருவிய வாளுடன் நின்று கொண்டனர்.

     ஆலமரத்தின் கிளைகளிலிருந்து இன்னும் நான்கைந்து பேர் ‘தொப் தொப்’பென்று கீழே குதிக்க, அவர்கள் கையில் வெட்டரிவாளும், வேலும் தென்பட்டன.

     நொடிப் பொழுதிற்குள் கச்சிதமாக அம்முரடர்களால் பட்டத்தரசியும் தானும் கைதியாக்கப்பட்டதை உணர்ந்த திருவரங்கனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல், ஒருகணம் திகைத்துவிட்டான்.

     குளத்தில் இறங்கிய வீரர்கள் ஆபத்தான நிலைமையை உணர்ந்து ஆயுதங்களுடன் ஓடி வர, “நெருங்காதே! நெருங்கினால் இருவரையும் பிணமாகத்தான் காண முடியும்!” என்று பட்டத்தரசியையும், இளையராணியையும் சுட்டிச் சொன்னான் முரடர்களில் ஒருவன்.

     தடித்த உடலுடன், முறுக்கிய மீசை காதளவுவரை வளர்ந்து பார்ப்பதற்கு அரக்கன் போல் இருந்தான் அவன்.

     ஓடி வந்த வீரர்கள் செயலற்று அப்படியே நின்று கொண்டு, திருவரங்கனைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

     திருவரங்கன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். முரடர்களைப் பார்த்தால் வழிப்பறி செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர் போல் இருந்தது.

     எண்ணிப் பத்துப் பேர்களுக்கு மேல் இல்லை. அரசியிடம் இருவர். வேல் வீரர்கள் பக்கத்தில் நான்கு பேர். தன் முதுகின் பின்னே கத்தியுடன் ஒருவன். இன்னும் மூன்று பேர் எல்லோரையும் கண்காணித்தபடி நின்று கொண்டிருந்தனர். இவர்களில் பருமனான தேகம் படைத்தவன்தான் தலைவனாய் இருக்க வேண்டும்!

     ஏறக்குறைய ஐம்பது வீரர்களுடன் இருக்கும் தன்னை, ஒரு நொடியில் மடக்கிவிட்டார்களே! இம்மாதிரி அதிரடித் தாக்குதலில் இவர்கள் கைதேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாம் இங்கு வருவதற்கு முன் இவர்கள் எங்கிருந்தனர்? ஓ... அரசமரக் கிளைகளில் கையில் சுருக்குக் கயிற்றுடன் கிளையோடு கிளையாக மறைந்திருக்க வேண்டும். இளைப்பாற வரும் வழிப்பிரயாணிகளைக் கொள்ளையடிப்பதற்கென்றே இவர்கள் இருக்கின்றார்கள் போலும்!

     சரி, இவர்கள் நோக்கம் என்ன? வெறும் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு விட்டுவிடுவார்களா? அல்லது சோழ அரசுக்குப் பகைவர்களால் ஏவிவிடப்பட்டு, உயிரைப் போக்க வந்த காலன்களாயிருப்பார்களா? ‘யார் இவர்கள்? பேசிப் பார்த்துவிடுவோம்’ என்று பருமனாயிருந்த அவனைப் பார்த்து, “நாங்கள் யாரென்று தெரியுமல்லவா?” என்று கோபத்துடனேயே கேட்டான் திருவரங்கன்.

     உடனே அவன் இடி முழக்கம் போல் உரக்கச் சிரித்து, “தெரியும் அப்பனே யார் என்று! நீங்கள் எல்லாரும் கையாலாகாத சோழப் படையைச் சேர்ந்தவர்கள். அதோ... அரசமரத்து மேடையில் இருக்கும் பெண்மணிகளில் ஒருவர் இந் நாட்டின் பட்டத்தரசி. போதுமா என் விளக்கம்?” என்றான்.

     திருவரங்கன் முரடர் தலைவன் சொன்ன பதிலைக் கேட்டுத் திகைத்துவிட்டான். அப்படியென்றால் இவர்கள் வழிப்பறிக் கள்ளர்கள் அல்ல. சோழ அரசவம்சத்தை நிர்மூலமாக்க, சபதம் எடுத்துக் கொண்ட பகை நாட்டுக்காரர்களாக இருக்கலாம். நிச்சயம் அனைவர் உயிரும் இவர்களின் வெட்டரிவாளுக்குப் பலியாகத்தான் போகின்றது. அதற்குள் நாம் ஏதாவது செய்தால்தான் உண்டு என்று ஒருமுறை சுற்றுச் சூழலை நோட்டம்விட்டான்.

     ஒன்றும் செய்ய முடியாதபடி மார்பைச் சுற்றிக் கயிற்றுச் சுருக்கும், முதுகின் பின் கூர்மையான கத்தியும் இருக்கிறது! என்ன செய்வது? என் உயிர் போவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் பட்டத்தரசியின் விலை மதிக்க முடியாத உயிர் என் திறமையின்மையால் பகையரசர்களின் ஒற்றர்களால் பறிக்கப்பட்டுவிட்டது என்றல்லவா சரித்திரம் கூறும். கறைபடிந்த அந்த வரலாற்றுடன் என் பெயருமல்லவா களங்கப்பட்டு நிற்கும்? ஒரு சுத்த வீரனான எனக்கு இப்படியொரு வரலாறு தேவைதானா? அதனால் எதையாவது செய்து அரசியின் உயிருக்குப் பாதகம் வராமல், அவர்களைத் தப்பிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் முரடர் தலைவனைப் பார்த்து,

     “உங்களுக்குப் பொருள் வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமென்றாலும் தருகின்றோம். எங்களை விட்டுவிடு!” என்றான்.

     அதற்கு முரடர் தலைவன் இடியோசை போல அப்பகுதியே அதிரும்படி நகைத்து, “சபாஷ். சுத்த வீரனின் பேச்சு இப்படித்தான் இருக்கும். அதுவும் சோழ வீரனான உனக்குச் சொல்லவே வேண்டாம்!” என்று அவனருகில் வந்து திருவரங்கனை ஏற இறங்கப் பார்த்தான்.

     “பொருள் யாருக்கு வேண்டும் அப்பனே! பொருள்! நூறாண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர் மாபெரும் பேரரசாக இந்தத் தஞ்சைத் தரணியை முத்தரையர் என்ற பெயரில் ஆண்டு வந்தனர். எங்களை அங்கிருந்து ஓட்டிவிட்டு இந்தச் சோழ நரிகள் அங்கே குடி புகுந்து கொண்டன. அதை மீட்கவே அவர்கள் வழிவந்த நாங்கள் உங்களை மடக்கியிருக்கிறோம்” என்றான்.

     “முத்தரையர் வழி வந்தவர்கள்தான் எங்கள் சோழ அரசில் மிகப் பெரிய பொறுப்பு வகித்து, அரசுக்கு விசுவாசமாயிக்கிறார்களே! அப்படியிருக்க நீங்கள்...” என்ற திருவரங்கனை மேற்கொண்டு பேசவிடாமல் முரடர் தலைவன் கோபத்துடன் இடைமறித்தான்.

     “அவர்களெல்லாம் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகள். நாங்கள்தான் உண்மையான முத்தரையர் வழி வந்தவர்கள். இப்போது நாடிழந்து கள்ளர்களாய் வழிப்பறி செய்து வருகின்றோம்; எங்கள் குலத்துக்கு ஏற்பட்ட மாசை அகற்றவே உங்களை இப்போது சிறை பிடித்து இருக்கின்றோம். பட்டத்தரசியார் எங்கள் பாதுகாப்பில்தான் இருப்பார். உங்களில் யாராவது ஒருவன் கங்கைகொண்ட சோழபுரம் சென்று, தஞ்சைத் தரணியை எங்களுக்குத் தந்துவிட்டதாக செப்பேடுகளில் அரசனிடம் சாசனம் வாங்கி வர வேண்டும். அது வந்தால்தான் பட்டத்தரசிக்கு விடுதலை” என்றான்.

     அதைக் கேட்டுத் திருவரங்கன் திகைத்துப் போனான். இது நடக்கக் கூடிய காரியமா? என்ன வம்பாய்ப் போய்விட்டது! என்று குழம்பிய அவனுக்கு யோசனை ஒன்று தோன்றியது.

     ஆகா! இது மட்டும் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் அனைவருக்கும் விடுதலைதான்! இந்தப் பொல்லாத கள்ளர்களும் அழிந்து போவார்கள்! என்று உற்சாகத்துடனே தலைவனைப் பார்த்து, “அப்படி என்றால் உன் கூற்றுப்படியே தஞ்சை போய் அரசரிடம் செப்பேட்டுச் சாசனம் பெற்று வருகின்றேன்! நான் போவதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்” என்றான்.

     முரடர் தலைவன் திருவரங்கன் அருகில் நெருங்கி வந்தான்.

     “ஜாக்கிரதை. நீ வேறு மாதிரி நடந்து கொண்டால் அரசியின் உயிர் உடலில் இருக்காது! எங்கள் உயிரைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும்!” என்றான் அழுத்தமாக.

     சம்மதத்திற்கு அடையாளமாகத் திருவரங்கன் தலையசைத்தான். முரடர் தலைவன் திருவரங்கன் இடையில் தொங்கிய வாளைக் கழற்றி, மற்றொருவனிடம் கொடுத்து, மார்பைப் பிணைத்திருந்த கயிற்றுச் சுருக்கைத் தளர்த்தி விடுவித்தான். ஆனால், முதுகில் பதித்தபடி குத்துவாளுடனிருந்த ஆள் இன்னும் அதைத் திருவரங்கன் முதுகிலிருந்து எடுக்கவில்லை.

     “இது என்ன? முதுகில் இன்னும் கத்தி! எடுக்கச் சொல்லிக் கட்டளையிடுவதுதானே” என்று முரடர் தலைவனைப் பார்த்துக் கூறினான் திருவரங்கன்.

     “நீ புரவி ஏறும் வரை இந்தக் கத்தி உன் முதுகை அழுத்திக் கொண்டுதான் இருக்கும். நீ ஏதோ பெரிய வீரன் என்பதற்காக, உனக்குப் பயந்து அம்மாதிரி செய்துவிட்டதாக நினைத்துவிடாதே. எங்கள் தற்காப்புக்குத்தான் அப்படி ஒரு ஏற்பாடு!” என்றான் முரடர் தலைவன்.

     குதிரையை நோக்கி மெல்ல நடந்தான் திருவரங்கன். தான் இருக்கும் இடத்திலிருந்து குதிரை நின்று கொண்டிருந்த இடம் ஏறக்குறைய இருபது முழ தூரத்தில் இருந்தது. அதற்குள் ஏதாவது செய்தால்தான் உண்டு. இல்லையென்றால்... சுற்றுமுற்றும் கவனித்த திருவரங்கனுக்குச் சட்டென்று ஒரு யோசனை உதித்தது.

     ‘கடவுளே! என் முயற்சி பலிக்க வேண்டும். அதன் மூலம் அரசியின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று மனதிற்குள் இறைவனை வேண்டியபடி புரவியின் அருகில் சென்று,

     “அரசியாரிடம் ஒரு ஓலை வாங்க வேண்டும்” என்றான் தலைவனைப் பார்த்து.

     “யாருக்கு?”

     “அரசருக்குத்தான். என் வாய் வார்த்தையை நம்பி எப்படி அரசர் செப்பேட்டுச் சாசனம் தருவார்? அதனால்...” என்ற அவனை மேலே பேசவொட்டாது, “எனக்குப் புரிகிறது. சீக்கிரம் ஓலை வாங்கிக் கொண்டு போ!” என்று அதட்டும் குரலில் கூறினான் முரடர் தலைவன்.

     மிகுந்த எச்சரிக்கையுடன் இருபுறமும் பார்த்தவாறு திருவரங்கன் அரசியிடம் சென்றான்.

     வாட்டத்தோடு மிகச் சோர்வுடன் காணப்பட்ட பட்டத்தரசி, சிறிது கோபத்துடனே திருவரங்கனைப் பார்த்தாள்.

     அதன் அர்த்தம்?

     உன்னுடைய திறமையின்மையால்தான் இவ்விதம் அகப்பட்டுக் கொண்டேன் என்று பொருளா?

     கவலைப்படாதீர் அரசியாரே! இத்திருவரங்கன் பெருமையை என்னும் சிறிது நேரத்தில் உணரத்தான் போகிறீர்கள் என்னும் பொருள்பட அரசியை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினான்.

     “இதோ இருக்கும் இவருக்குத் தஞ்சையை உரிமை செய்து தரும்படி மன்னருக்கு அரசியார் ஓலை தர வேண்டும்” என்று முரடர் தலைவனைச் சுட்டிச் சொன்னான்.

     பட்டத்தரசியின் விழிகள் கலங்கின.

     “ம்! சீக்கிரம்!” என்று அவரை அதட்டினான் முரடர் தலைவன்.

     கலங்கிய விழிகள் அவன் பக்கம் திரும்பின!

     தஞ்சைத் தரணியின் மீது அப்படியென்ன இவனுக்கு ஆசை? தலைகுனிந்து கொண்டாள் பட்டத்தரசி.

     “அரசியார் யோசிக்கிறது போல் தெரிகிறதப்பா. சீக்கிரம் ஓலை கொடுக்கச் சொல். இது என்ன அத்தாணி மண்டபம் என்று நினைத்துவிட்டாரா? அரசமரத்தடி. எந்நேரமும் எங்களுக்கு ஆபத்திருக்கிறது என்று நினைத்து அதன்படி செயல்படும் நிலையில் இருக்கிறோம் நாங்கள்!” என்றான் முரடர் தலைவன்.

     பட்டத்தரசியின் கலங்கிய விழிகளிலிருந்து, நீர்த் துளிகள் திரண்டு, கன்னத்தில் உருண்டு, தரையில் இரண்டு, மூன்று சொட்டுக்கள் ‘பொட், பொட்’டென்று விழுந்தன.

     அவ்வளவுதான் திருவரங்கனுக்கு ஆக்ரோஷம் பிறந்தது! தோள்கள் துடிக்க, முன் கைகள் முறுக்கேற, வலப்பக்கம் நின்ற தலைவன் பக்கம் திரும்பினான். அவன் வாளைக் கையில் வைத்தபடி அரசியைக் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான்.

     இனிமேல் தாமதிக்க முடியாதென அரசமரத்தின் பக்கமாய்த் தன் விழிகளைத் திருப்பி, “ஐயோ! பெரும் கருநாகம்!” என்று தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டிக் கூவினான் திருவரங்கன். அரசியினருகில் விறைப்பாய் நின்ற முரடர்கள் இருவரும் ‘எங்கே..?’ என்று சுற்றுமுற்றும் பதட்டத்தோடு கவனித்தனர்.

     முதுகின் பின்னால் கத்தியை அழுத்திக் கொண்டிருந்தவனும் அந்தக் களேபரத்தில் அதைத் தளர்த்தினான். இதுதான் சமயமென்று சரேலென்று குனிந்து அவன் காலை வாரிவிட்டு, அதே வேகத்துடன் முரடர் தலைவன் மீது மின்னலெனப் பாய்ந்து கையிலிருந்த வாளைப் பறித்து, அவனையும் தாக்கி வீழ்த்தினான். அத்துடன் நிற்காது புலி போல் அரசியின் அருகிலிருந்த ஒருவன் மீது பாய்ந்து தன் கையிலிருந்த வாளால் அவன் தலையைத் துணித்தான்.

     அதிலிருந்து சிதறித் தெறித்த குருதி பட்டத்தரசியின் நெற்றியின் மீது ‘பொட்’டென்று விழுந்தது.

     கண நேரத்தில் இவ்வளவும் நிகழ்ந்துவிட்டதை உணர்ந்த இன்னொருவன் தன் வாளால் இளையராணியை வெட்டுவதற்கு ஆத்திரத்துடன் ஓங்க, இமைப்பொழுதில் தன் வாளினால் தடுத்து, அதே வேகத்திலேயே அவனை இளையராணியிடமிருந்து சிறிது விலகி விழும்விதத்தில் கால்களால் உதைத்தான்.

     ‘கேவலம்! இந்த அற்பப் பயல் இப்படிச் செய்துவிட்டானே!’ என்று கீழே விழுந்த முரடர் தலைவன் ஆத்திரத்துடன் எழுந்து திருவரங்கனை நோக்கி ஓடி வந்தான். காலை வாரிவிடப்பட்டுக் கத்தியுடன் தரையிலிருந்த மற்றொரு முரடனும் சமாளித்து எழுந்து, கத்தியைத் திருவரங்கனைப் பார்த்து வீசினான்.

     நிலைமை ஆபத்தாவதையுணர்ந்த திருவரங்கன் குளத்தின் மேற்கரையில் இதுவரை என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்த வீரர்களை நோக்கி, “சீக்கிரம் வாருங்கள்... இதுதான் சமயம்!” என்று உரக்கக் கத்த, அதற்குள் மார்பை நோக்கி வந்த குறுங்கத்தி, சடக்கென்று அவன் அரசியையும், இளையராணியையும் பாதுகாக்கத் திரும்பியதால், குறி தவறி இடப்புற புஜத்தில் பாய்ந்தது.

     உச்சியில் யாரோ அடித்துவிட்டாற் போன்று வலி! அதைப் பொருட்படுத்தினால் நிலைமை தலைகீழாகிவிடும் என்று உணர்ந்து, காயப்பட்ட இடத்திலிருந்து ‘குபு குபு’ என்று வந்த இரத்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இன்னும் ஆவேசம் மிகுந்து, அரசியின் அருகே சென்று நின்றான்.

     சோழ வீரர்களும் சுறுசுறுப்புப் பெற்றுத் தங்கள் ஆயுதங்களுடன் முரடர்களை நோக்கி ஓடி வந்தனர். வீரர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்ததால், முரடர் கூட்டத்திலிருந்து சிலர் தப்பித்தால் போதும் என்று ஓட்டமெடுக்க, வீரர்களில் ஒருவன் வீசிய வேல் ஒன்று, முதுகில் பாய்ந்து ஒருவனை வீழ்த்தியது. அதைக் கண்டு மற்றவர்கள் ‘தப்பித்தால் போதும்’ என்று தலைதெறிக்க ஓடி மறைந்தனர்.

     நிலைமையை அப்படியே மாற்றிவிட்ட திருவரங்கனைக் கொன்றே தீருவதென்ற ஆத்திரத்துடன், முரடர் தலைவன் வாளோடு அவன் மீது பாய்ந்தான். அவன் பாய்ச்சலைத் தன் வாளினால் தடுத்து நிறுத்தி, அதே வேகத்தில் வலப்புறத் தோளில் ஒரு காயத்தையும் உண்டுபண்ணினான் திருவரங்கன்.

     இருவரும் ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். சில நொடிகள் வரை முரடர் தலைவனின் தாக்குதலையெல்லாம் வீணடித்த திருவரங்கன், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவன் மார்பில் வாளைப் பாய்ச்சினான்.

     ‘ஹோ!’வென்ற பெருங்குரலுடன் கரிய மதயானை ஒன்று துடிந்து வீழ்ந்தது போல, முரடர் தலைவன் துள்ளிக் கீழே விழுந்தான். அவனைச் சுற்றி ஒரே இரத்தப் பிரவாகம். கண்கள் மேலே செருக, கைகள் விறைப்பாக, கால்கள் அசைந்து, அசைந்து இப்படியும் அப்படியுமாய்ப் புரண்டான். மண்ணையும், குருதியையும் ஒன்றாகப் பற்றிய அவன் கை, மெல்ல மெல்ல உயர்ந்து, கடைசியில் ‘தொப்’ என்று கீழே விழுந்தது. அதற்குள் சோழ வீரர்கள் மற்ற முரடர்களை வளைத்துவிட்டனர்.

     இனிமேல் பட்டத்தரசிக்கும், இளையராணிக்கும் ஆபத்தில்லை என்று உணர்ந்து, திருவரங்கன் நெற்றியில் அரும்பிய வியர்வையை வழித்துவிட்டுப் புன்னகையுடன் அரசியாரை நோக்கி வந்தான்.

     “நல்ல நேரத்தில் துணிந்து செயல்பட்டு, எங்களைக் காப்பாற்றினாய் திருவரங்கா! உன்னைப் போன்ற மாவீரர்களால்தான் இச்சோழர் படைக்குப் பெருமை கிடைத்திருக்கிறது. வீரத்தை மெச்சினேன்!” என்று அவனைப் புகழ்ந்தார் பட்டத்தரசி.

     தலைகுனிந்து அதை ஏற்றுக் கொண்ட திருவரங்கனுக்கு அப்போதுதான் தோளில் ‘விண், விண்’ என்று வலிப்பது தெரிந்தது. கை வைத்து “அம்மா!” என்று முனகினான். பட்டத்தரசியார் பதட்டத்துடன் எழுந்து, காயம்பட்ட இடத்தைக் கவனித்தார். குறுங்கத்தி ஆழமாகவே தோளில் பாய்ந்திருந்தது. அதிலிருந்து வழிந்த குருதியால் ஆடை முழுவதும் நனைந்து, சற்று நேரமாகிவிட்டதால் இலேசாய்க் காய்ந்தும் போயிருந்தது.

     “தஞ்சைக்கு இன்னும் பத்துக்கல் தொலைவு இருக்கின்றது. விரைந்து சென்றால் அங்குள்ள வைத்தியரிடம் கட்டு போட்டுக் கொள்ளலாம்! சீக்கிரம் புறப்படுங்கள்” என்று அனைவருக்கும் கட்டளையிட்டு, புறப்பட்டார் பட்டத்தரசி.

     சற்று முன்பு அமளிப்பட்ட அவ்விடம் இப்போது ஒன்றுமே நடக்காதது போல மிகவும் நிசப்தத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49