(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 48 இரகசிய வழி மூலம் இருட்டு அறையையடைந்த அம்மையப்பன், அங்கே யாரும் இல்லாததைக் கண்டு, பெரியவர் எங்கே போயிருப்பார்? என்று சுற்றுமுற்றும் பார்த்தான். சப்தமின்றி இருந்தது அவ்வறை. ஒன்றும் புரியாமல் அவன் திகைத்து நிற்கும் போது, சுரங்க வழியிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு இவனை நோக்கி ஓடி வந்தது. அது யார் என புரிந்து கொள்வதற்குள் அவனையும் இழுத்துக் கொண்டு, இரகசிய வழி மூலம் ஓடத் தலைப்பட்டது. “வீரர்கள் தளபதியைத் துரத்துகின்றனர் - அதிலிருந்து தப்பிக்க ஓடிவருகின்றார் என்று புரிந்து கொண்ட அம்மையப்பன் தளபதியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடலானான். இருவரும் மண்டபத்திலிருந்து வெளிப்பட்டு, அரசமர மேடைக்கு வந்து சேர்ந்தனர். “இனி எந்தப் பக்கம் ஓடுவது?” என்று கேட்டான் அம்மையப்பன். பெரிய தன்மபாலர் சுற்று முற்றும் பார்த்து ஆற்றின் கரையோரமாயிருந்த அடர்ந்த புதரின் பக்கம் தற்சமயத்திற்கு ஒளிந்து கொள்ளலாம் என அங்கே சென்று மறைந்து கொண்டனர். பின்னால் துரத்திக் கொண்டு வந்த வீரர்களும், கருங்கல் மண்டபத்திலிருந்து வெளிப்பட்டு நான்கு பக்கமும் பார்வையைச் சுழலவிட்டனர். சோழத்தளபதி வீரசோழ இளங்கோ வேளானால் கைது செய்யப்பட்டு, இருட்டு அறையிலிருந்து சுரங்க வழி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பெரிய தன்மபாலர் எப்படித் தப்பினார்? அதை நினைக்கும் போது அவருக்கே பிரமிப்பாக இருக்கிறது. குறுகலான அச்சிறிய வழியில் காற்றும் இல்லாமல் வெளிச்சமுமின்றி தட்டுத் தடுமாறி அனைவரும் செல்லும் போது, பெரிய தன்மபாலர் வேண்டுமென்றே மயங்கி விழ வீரசோழ இளங்கோ வேளான் பத்து வீரர்களை அவரைச் சுற்றி நிறுத்திவிட்டு, “மயக்கம் தெளிவித்து அழைத்து வாருங்கள்” என்று போய்விட்டான். நீர் கொண்டு வர ஒரு வீரன் சென்றுவிட, இன்னும் ஒன்பது பேர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “விலங்கைத் தளர்த்துப்பா. பாவம் முன்னாள் தளபதிக்கு அதிர்ச்சியின் விளைவால் மயக்கம் ஏற்பட்டிருக்கும்!” என்றான் ஒரு வீரன். அவன் கூறியது போல விலங்கு தளர்த்தப்பட்டது. நான்கு வீரர்கள் சற்றுத் தள்ளி கூட்டமாய் நிற்க, இருவர் “பெரிய தொல்லையாய்ப் போய்விட்டது” என சலிப்புற்று தரையில் அமர்ந்து கொண்டனர். பாக்கி மூவர் பெரிய தன்மபாலரைச் சுற்றி நின்று கொண்டனர். இதுதான் சந்தர்ப்பம் என தளர்த்தப்பட்ட விலங்கால் ஒருவன் முகத்தில் ஓங்கி அடிக்க, ‘பளக்’கென்று விலங்கு முறிந்தது. அவன் “ஐயோ!” என்று அலறவும் ஒரு நொடியையும் வீணாக்க விரும்பாமல் அருகிலிருந்த வீரன் கையிலிருந்த வாளை அதிரடித் தாக்குதல் மூலம் கைப்பற்றி அவ்வாளினைக் கொண்டு, இரு வீரர்களைக் காயப்படுத்திவிட்டு, இருட்டு அறையை நோக்கி ஓடினார். ***** “இங்கேதான் எங்கேயாவது புதர். செடி, கொடி என மறைந்திருக்கலாம். நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தால் தெரிந்து போகிறது!” என்றான் அவர்களில் ஒருவன். அவன் சொன்னதை ஆமோதித்து தன்மபாலரைத் தேடும் பணியில் அனைவரும் இறங்க, புதர் மறைவில் ஒளிந்திருந்த இருவருக்கும் ‘தட்... தட்’ என்று இதயம் அடித்துக் கொண்டது. “இவர்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறதே!” என்று கூறியபடி அம்மையப்பன் பக்கம் திரும்பினார் தன்மபாலர். அதற்குள் கங்காபுரிக் கோட்டைக்குள்ளிருந்து பெரும் கூச்சல் கேட்டது. பெரிய தன்மபலரைத் தேடிக் கொண்டிருந்த வீரர்கள், “அது என்ன கூச்சல்?” என்று திரும்பினர். “ஒருவேளை. முன்னாளைய தளபதி அவரின் ஆதரவு வீரர்களுடன் கோட்டையைக் கைப்பற்ற முயற்சி செய்திருக்கலாம்” - வீரன் ஒருவன் சொன்னதை உண்மையென்று நம்பிய மற்ற வீரர்கள், “ஆமாம். ஆமாம்! வாருங்கள் கோட்டையைக் காப்பாற்றுவோம்!” என தேடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் கங்காபுரிக் கோட்டையை நோக்கி ஓடினர். ஏறக்குறைய ஐம்பது பேர்களுக்கு மேல் ஓடுவதைக் கண்ட பெரிய தன்மபாலர் அம்மையப்பனிடம், “அது என்ன திடீரென்று கோட்டையில் கூச்சல்?” என்றார். சற்று முன்பு அங்கே நடந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒன்றுவிடாமல் கூறினான் அம்மையப்பன். அதைக் கேட்ட பெரிய தன்மபாலர் மதுராந்தகன் கொலை செய்யப்பட்டதற்காக வருந்தினார்; அதன் விளைவுதான் தற்சமயம் கோட்டைக்குள் கூச்சல் கிளம்பியிருக்கிறது! இன்னும் சிறிது நாழிகைக்குள் அது கலவரமாய் கூட உருவெடுக்கலாம். ‘என்ன செய்வது?’ என்று உதட்டைக் கடித்தபடியிருக்க இரத்தினாதேவியின் கைகளைக் கயிற்றால் பிணைத்து அவளை இழுத்துக் கொண்டு ஐந்து வீரர்கள் அப்பொழுது வந்து சேர்ந்தனர். “இவளையும் பிடித்துவிட்டார்கள் போலிருக்கிறதே!”- மெல்லிய குரலில் அம்மையப்பனிடம் கூறினார் தன்மபாலர். “பாவம். இவளின் நிலை இப்படியா ஆக வேண்டும்?” - வருத்தப்பட்டான் சிவபக்தன். வீரர்களுடன் வந்து கொண்டிருந்த இரத்தினாதேவி “எனக்குத் தாகமாயிருக்கிறது!” என்றாள். கைக்கட்டை அவிழ்த்து வீரன் ஒருவன் உருவிய வாளுடன் காவலுக்கு வர, நீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி நடந்தாள். அவள் கண்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த சாமந்தனின் உடலைப் பார்த்தன. துயரம் அதிகமாக, விழிகளில் நீர் பெருக முகத்தை மூடிக்கொண்டு விம்மத் தொடங்கினாள். எனக்காக துணை வந்தவன் இன்று என் நிமித்தமாய் உயிரைவிட்டுவிட்டான். நெஞ்சம் அடைக்க சொல்லமாட்டாத வேதனையின் காரணமாய் ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள். “தண்ணீர் குடிக்கப் போகிறாயா? இல்லை...” என்று வீரன் அதட்ட அழுவதை நிறுத்தித் திரும்பினாள். அவன் கையிலிருந்த வாள் பளபளவென்று பிரகாசித்தது. இமைப்போதில் அவ்வாளைப் பற்றிய இரத்தினாதேவி தன் வயிற்றுக்குள் அதைச் செலுத்திக் கொண்டாள். “அம்மா!” -வீரிட்ட அவள் குரல் அப்பகுதியையே அதிர வைக்க அந்தக் குரலை அடக்குவது போல், கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையிலிருந்து பேரிரைச்சல் கிளம்பியது. என்ன என்பது போல் ஐந்து வீரர்களும் திரும்பினர். கோட்டையின் உச்சியில் வீரர்கள் ஒருவரோடொருவர் சண்டையிடும் சப்தமும், தீப்பந்தங்களுடன் ஆங்காங்கே ‘வெட்டுங்கள்! குத்துங்கள்!’ என்ற கூச்சலும் அதைத் தொடர்ந்து பெண்கள் ஓலமிடும் ஓசையும் கேட்டது. “முந்தையத் தளபதி கோட்டையைக் கைப்பற்றியிருப்பாரோ?” -ஒருவன் ஐயத்தைக் கிளப்பினான். “இருக்கலாம். இருக்கலாம். வாருங்கள் கோட்டையைக் காக்க முயல்வோம்!” ஐந்து வீரர்களும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரத்தினாதேவியைப் பற்றிக் கவலைப்படாது, கங்காபுரியை நோக்கி, “வெட்டுங்கள்; கொல்லுங்கள்!” என்று முழக்கமிட்டபடி வேகமாய் ஓடினர். புதரிலிருந்து வெளிப்பட்ட தன்மபாலர் சிரித்துக் கொண்டே, “வீரர்களிடையே இவ்வளவு பயம் என்னைப் பற்றி இருப்பது சந்தோஷம்” என்றார் மெல்லிய குரலில். பிறகு குற்றுயிராயிருக்கும் இரத்தினாதேவியை நோக்கிச் சென்றார். அவருடன் அம்மையப்பனும் சென்றான். “என்ன அது கூச்சலும் குழப்பமும். ஒருவேளை கலகம் தோன்றிவிட்டதோ?”- அம்மையப்பன் பதட்டத்துடன் வினவினான். “அப்படித்தானிருக்கும். இல்லையென்றால் இவ்வளவு பெருங்கூச்சல் தோன்ற வழியில்லை!” என்ற அவர் அம்மையப்பனிடம், “வா, கோட்டைக்குள் செல்வோம். முதன்மந்திரியையும், பட்டத்தரசியையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்!” என்றார். இருவரும் மிக வேகமாய் இரகசிய வழி மூலம் இருட்டு அறையை அடைந்தனர். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|