(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 3 தண்ணீர்ப் பந்தலுக்குக் கூப்பிடு தூரத்திலிருந்த மண்டபத்தையடைந்த காளிங்கராயனும், தென்னனும் சுற்றுமுற்றும் பார்த்தனர். மக்களின் கூட்டம் அரசியாரை வரவேற்பதிலும், அது சம்பந்தமாக இங்கும் அங்கும் நடந்து செல்வதிலுமாக இருந்தார்களே தவிர, மண்டபத்தின் பக்கம் யாருடைய கவனமும் திரும்பவில்லை. “நிம்மதியுடன் பேச, இதுவே ஏற்ற இடம்!” என்று காளிங்கராயன் மண்டபத்தரையின் புழுதியைத் தட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டான். தென்னன், காளிங்கராயனுக்குப் பக்கத்தில் அமர்ந்தான். இருவர் முதுகும் கற்றூணில் மறைந்திருக்கும் அம்மையப்பன் பக்கம் இருந்தன. காளிங்கராயன் தொண்டையைக் கனைத்துப் பேச ஆரம்பித்தான். “உன்னைத் தேடியபடி நான் ஜோதிடர் வீட்டிலிருந்து வரும் போதே ஒரு திருட்டுச் ‘சிவ பக்தன்’ என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். நமக்குப் புளியோதரை கொடுத்த முதியவரிடம், நான் பேசிக் கொண்டிருக்கும் போது கூட, அந்தப் போலிச் சிவப்பழம் என் பக்கத்திலே வந்து, என்ன விஷயம் என்று கேட்டான். அதனால் அவன் மேலே எனக்கு ஐயமாக இருக்கிறது” என்று தன் பேச்சை நிறுத்தித் தென்னனைப் பார்த்தான். “சிவபக்தனா?” என்று வியப்புடன் வினவிய அவன், “இங்கேயும் வந்துவிட்டானா?” என்றான். உடனே காளிங்கராயன், “அவனைத் தெரியுமா உனக்கு?” என்று பரபரப்புடன் வினவினான். “தெரியுமாவா? ஆள் கொஞ்சம் குள்ளமாய் இடையிலே நாலு முழத்துண்டோடு, கக்கத்திலே ஓலைச்சுவடி எல்லாம் வைச்சுட்டு...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அவனேதான்! அவனேதான்!” என்று உரத்தக் குரலில் இடைமறித்தான் காளிங்கராயன். “மெள்ளப் பேசுப்பா...! நாம் பேசப் போவதே ரகசியம். இதில் நீ ஊரையே கூட்டுவது போல் கத்துகிறாய்” என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “அவன் யார் தெரியுமா?” என்று ரகசியமாகக் காளிங்கராயன் காதில் எதையோ கூறினான் தென்னன். “அப்படியா?” என்று வியப்பில் ஆழ்ந்த காளிங்கராயன், “அப்போதே நினைத்தேன். அந்தப் பயல் அம்மாதிரி ஆளாகத்தான் இருப்பான் என்று! இப்போது மட்டும் என் கையில் கிடைக்கட்டும்! குத்துவாளால் குடலை உருவிவிடுகிறேன்” என்று உறுமினான். “அந்தப் பயல் விஷயம் இருக்கட்டும் அரண்மனையிலிருந்து என்ன புதிய செய்தி?” என்றான் தூமகேது. “இருக்கிறது. அரசன் சீக்கிரம் இறந்துவிடும் நிலையில் இருக்கின்றான்” என்றான் தென்னன். “என்னது?” வியப்புடன் காளிங்கராயன் அவனைப் பார்க்க, “உண்மைதானப்பா! வயதும் ஆகிவிட்டது. அத்துடன் மனக்கவலையும் சேர்ந்துவிட்டது. அதனால் நோய் முற்றி கடுமையாகிவிட்டது. இந்தச் சமயத்தில் மட்டும் நம் அரசர் முயன்றால் விரைவில் பாண்டியநாடு சோழனின் ஆட்சியிலிருந்து விடுபட்டுவிடும்” என்றான் தென்னன் மகிழ்ச்சியுடன். காளிங்கராயனுக்குச் சந்தோஷம் தாளவில்லை. “உண்மையாகவா?” என்று கேட்டு உரக்கச் சிரிக்கலானான். “மூடத்தனமாக ஏன் சத்தம் போட்டுச் சிரிக்கிறாய்? நாம் பேசுவது இரகசியமா? இல்லை தெருக்கூத்து ஆடுகிறோமா?” என்று முறைக்க, “இப்படித்தான் சில சமயங்களில் உணர்ச்சிவயப்பட்டுப் போகிறேன். என்ன செய்வது? பாண்டிய நாடு சோழர் ஆட்சியிலிருந்து விடுபடும் என்ற வார்த்தையைக் கேட்கும் போதே மகிழ்ச்சி தாளவில்லையப்பா!” என்றான் காளிங்கராயன். “இன்னொரு விஷயம்! பட்டத்தரசியார் உன்னுடைய எசமானனான மழவராய அடிகளிடம் இன்று ஜோதிடம் பார்க்கப் போகின்றார்!” என்றான் தென்னன். “என்ன விஷயமோ?” “சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை அரசருக்குப் பின் யார் அரசு பொறுப்பிற்கு வருவது என்பதாக இருக்கலாம்!” “அப்படியென்றால் இப்பொழுதே போகிறேன்! என்ன ஜோதிடம் பார்க்கப்படுகிறது என்ற விஷயத்தை உடனே நான் அறிய வேண்டும்” என்று வேகமாய் எழுந்து கொண்டான் காளிங்கராயன். “நானும் கங்கைகொண்ட சோழபுரம் போக வேண்டும். பத்து தினங்கள் கழிந்து நாம் இதே மண்டபத்திலேயே சந்திப்போம்” என்று தென்னனும், அவனைத் தொடர்ந்து எழுந்தான். இருவரும் அம்மண்டபத்தைவிட்டு வெளியேறியதும், கொஞ்ச நேரம் கழித்து, அம்மையப்பன் வெளியே வந்தான். அப்போது, ‘சிவாயநம!’ என்று அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டது. அப்போது, அவன் கண்டது- வெளி நாட்டவர் போன்று தென்பட்ட அழகிய இளம் பெண்ணும், அவளைத் தொடர்ந்து இருவரும், அந்த இருவரைப் பின்பற்றி, புளியோதரை முதியவரும் மண்டபத்தை நோக்கி வருவதைப் பார்த்து, இதில் ஏதோ விஷயம் இருக்கிறதென்று திரும்பவும் மண்டபத்திற்குள் ஒளிந்து கொண்டான் அம்மையப்பன். இளவரசி இரத்தினாதேவியின் முகம் களை இழந்திருந்தது. ***** தூரத்தில், இராசேந்திரனை வரவேற்பதற்காகக் கூடியிருந்த கூட்டம், பட்டத்தரசியையும், சோழ இளவரசன் அதிராசேந்திரனையும், கடாரம் கொண்ட இராசேந்திரனையும் பார்த்த மகிழ்ச்சியில், அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே, மெல்ல கலைந்து கொண்டிருந்தனர். கடார வெற்றி வீரனைக் கங்கை கொண்ட சோழபுரம் அனுப்பிவிட்டுத் துறைமுக அறையில் தங்கிவிட்ட பட்டத்தரசியும், அதிராசேந்திரன் மனைவியான, இளையராணியும், நாகை ஜோதிடர் இல்லம் போவதற்குத் தயாராயினர். அவர்களுக்குத் துணையாக, இளைஞன் திருவரங்கன், முதலமைச்சரால் அமர்த்தப்பட்டிருந்தான். பட்டத்தரசி, திருவரங்கனைக் கூப்பிட்டு, “தேர் தயாராகிவிட்டதா?” என்றாள். ‘ஆகிவிட்டது’ என்பதற்கு அடையாளமாகப் பணிவுடன் தலையாட்டினான். இருவரும் தேர் ஏற புறப்பட்டனர். சற்று முன்பு... திருவிழாக் கோலம் பூண்டிருந்த அந்த இடம், தற்போது மிகவும் அமைதியுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ***** சோபை இழந்த இளவரசி, இரத்தினாதேவி, தன் முயற்சி தோற்றுவிட்டதற்குக் காரணமான முதியவரை சுட்டெரிப்பது போல முறைத்தாள். பெரியவரோ...! அதைப் பற்றிக் கவலைப்படாது ஆலமரத்தின் கீழ் அவரால் மறைவாக வைக்கப்பட்ட புளியோதரையைத் தேடிக் கொண்டிருந்தார். அதை அங்கே காணவில்லை. சிறிது தள்ளி... அந்த மூட்டையை நாய்களும், காக்கைகளும் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. “அடடா! மோசம் போய்விட்டதே. எத்தனை பக்குவமாய் நெய்விட்டுச் சமைக்கப்பட்டது. பசியோடிருக்கும் உங்களுக்குக் கொடுக்கலாம் என்று வந்தால் வீணாகிவிட்டதே!” என்று வருத்தப்பட்டார் பெரியவர். “பரவாயில்லை. நாங்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்!” என்றாள் இரத்தினாதேவி. அவள் பேசிய தமிழ் உச்சரிப்பு, ஒரு மாதிரியிருந்ததால், “அம்மணி! தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ?” என்று கேட்டார் முதியவர். “எங்கள் நாடு கடாரம். வணிகம் செய்ய வேண்டி இங்கே வந்திருக்கின்றோம். எங்களுக்கு வணிக முறையில், இங்கே உதவி செய்ய வாணிப நண்பர் ஒருவர் இருக்கின்றார்!” என்றாள். “நல்லது! உன் வியாபாரம் தழைத்து நீ பெரிய செல்வந்தனியாய் ஆக வேண்டும். இந்தச் சின்ன வயதில், அதுவும் பெண்ணான நீ கடல் கடந்து இங்கே வந்திருக்கும் துணிவை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்” என்றார் பெரியவர். “உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி!” எனக் கூறிய கடாரத்து இளவரசி, தூமகேதுவின் பக்கம் திரும்பி, “தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்று ஏதாவது சாப்பிட வாங்கி வாருங்களேன்!” என்று கண்ணால் சாடை காட்டினாள். தூமகேது, அதைப் புரிந்து கொண்டு, ஒரு நொடியில் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். “அவர் வரும் வரை நாம் மண்டபத்தில் உட்காரலாம் வாருங்கள்!” என்று முதியவரை அழைத்தாள் இரத்தினாதேவி. மூவரும் அங்கே சென்று உட்கார்ந்தனர். கடார இளவரசி, இரத்தினாதேவியின் நெஞ்சம் கனலாக கொதித்துக் கொண்டிருந்தது. ‘அற்புதமான ஒரு சந்தர்ப்பத்தை இந்த அற்பக் கிழம் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டதே!’ என்று பெரியவரைக் கோபத்துடன் பார்த்தாள். “என்ன இளவரசி? அப்படிப் பார்க்கின்றீர்கள்?” என்று முதியவர் வினவ, “ஒன்றுமில்லை, பசியின் கொடுமை” என்று அதற்குப் பதிலளித்தாள். ‘புஷ்பங்களின் நடுவில் நச்சுக் கத்தியை மறைத்து வைத்து இராசேந்திரன் மேல் எறிய ஆயத்தமாய் நின்று கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்த இந்தக் கிழத்திற்குக் கத்தியின் முனை எப்படியோ, தென்பட்டுவிட்டது. உடனே “அம்மணி!” என்று தன்னைக் கூப்பிட்டுப் புன்முறுவலுடனே, “கத்தி” என்று தன் பொக்கை வாயைத் திறந்து இளிக்க, விதிர்விதித்த நான் ‘ஓ’ என சமாளித்து, “இடுப்பில் செருக வேண்டியதை மறந்து, கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்துவிட்டேன். நல்லவேளை... நீங்கள் பார்க்கவில்லையென்றால் என்ன ஆவது? தெய்வம் போல் வந்தீர்கள்!” என்று சமாளிக்க அதற்குள் இராசேந்திரன், அந்த இடத்தைப் புரவி மூலம் கடந்துவிட்டான்.’ மேற்கொண்டு இவ்விஷயத்தை நான்கு பேருக்குச் சொல்லித் தொலைக்கப் போகின்றார் என்று, தந்திரமாய்ப் பெரியவரை நட்பு செய்து கொண்டு ஆலமரத்துக்கு அழைத்து வருவதற்குள் இரத்தினாதேவிக்குப் போதும், போதும் என்றாகிவிட்டது. ஆனால், தன்னுடைய முயற்சிக்குப் பாதகமாகிவிட்ட, கிழவரை விட்டுவிட முடியுமா? ‘முடியாது’ என்று அழுத்தமாய், அவள் மனம் சொல்லியது. தேன்குழல், அப்பம், நீர் மோர் சகிதமாக வந்து சேர்ந்தான் தூமகேது. “நல்லது!” என மட்கலத்திலிருக்கும் மோரைப் பெரியவரிடம் கொடுக்குமுன் தூமகேதுவைப் பார்த்தாள் இளவரசி. ‘எல்லாம் கச்சிதமாய்க் கலக்கப்பட்டுவிட்டது’ என்று சாடை மூலம் தெரிவித்தான் அவன். புரிந்து கொண்ட கடார இளவரசி முகத்தில் மலர்வை வரவழைத்து, “சாப்பிடுங்கள் பெரியவரே!” என்று நீட்டினாள். “நான் உங்களுக்குச் செய்ய வேண்டும்! அதை விட்டுவிட்டு எனக்குச் செய்கின்றீர்கள். சின்ன வயதாக இருந்தாலும் இந்தக் கிழவன் மீது எவ்வளவு அன்பு” என்று வாங்கிக் கொண்டார். நன்றாய் ஒரு கலக்கு கலக்கி, மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக, எச்சிற்படாமலிருக்கத் தூக்கிப் பிடித்தவாறு, அதைப் பருகலானார் பெரியவர். கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். மட்கலத்துடன் பெரியவர், “நெஞ்சு எரிகிறது! நெஞ்சு எரிகிறது- ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று சுருண்டு தரையில் வீழ்ந்தார். கலம் ஒரு பக்கம் உருள, அதிலிருந்த மோர் மற்றொரு பக்கம் வீழ்ந்து ஓடியது. “பகைவனைக் கங்கை கொண்ட சோழபுரத்தில் சந்திக்கின்றேன். இந்தக் கிழத்தின் முடிவுதான் அனைவருக்கும்!” என்று கோபத்துடன் உரக்கக் கூறிய இளவரசி, “புறப்படு தூமகேது!” என்றாள். “நீங்கள் கங்கை கொண்ட சோழபுரம் போங்கள். அங்கே தென்னன் என்று அரண்மனையில் பணியாற்றும் ஒருவன் இருக்கின்றான். அவனிடம் ‘கடலரசன்!’ என்ற வார்த்தையைச் சொல்லுங்கள். பிறகு பாருங்கள். உங்களுக்கு நடக்கும் உபச்சாரத்தை. இன்று பௌர்ணமியாதலால் தென்னந் தோப்பில், நாகை ஜோதிடரின் சீடன், காளிங்கராயனைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிய தூமகேது, “அவனும் நம் ஆள்தான்!” என்றான். “உங்கள் உதவிக்கு நன்றி! இதற்குக் கைமாறாக நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றாள் இரத்தினாதேவி. “மிகவும் சாதாரணம்! இதை நிறைவேற்றிவிட்டு, உங்களைத் தீவில் சந்திக்கின்றேன்” என்றாள் இரத்தினாதேவி. “ஒவ்வொரு அமாவாசை அன்றும், எப்படியாவது நிச்சயம் தீவில் இருப்பேன்! நீங்கள் அங்கே வந்துவிடுங்கள்!” என்ற தூமகேது, “கங்கைகொண்ட சோழபுரம் போக வழி தெரியுமா?” என்றான். “தெரியாது” -தலையசைத்தாள் இரத்தினாதேவி. கடார இளவரசியும், சாமந்தனும் அவனைப் பின்பற்றி நடந்தனர். “சிவாயநம!” என்று கூறியபடி வெளிவந்த அம்மையப்பன் உயிரற்ற பெரியவர் உடலை ஒரு தரம் புரட்டினான். இனி பயன் இல்லை! பாவிகள் அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள் என்று அவர்கள் போன திசைப்பக்கம் திரும்பினான். ‘பகைவனைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திக்க வேண்டும் என்று சொல்கிறாள். அப்படியென்றால், இவளின் பகைவன் யார்? அவனை ஒழிக்க வஞ்சினம் கூறும் இந்தக் கன்னி எந்த நாட்டைச் சார்ந்தவள்? எதற்காக அவனை ஒழிக்க வேண்டும்? கறுப்பாக ஒருவன்... அவனை... அவனை... நினைவுக்கு வருகிறது...’ என்று மனதிற்குள் புரிந்து கொண்ட அம்மையப்பன், மேற்கொண்டு அவர்களைப் பின்தொடர்வதற்காக வேகமாய் நடக்கலானான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|