(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 12

     மாற்றுத் திறவுகோலைப் பயன்படுத்தி ஏற்கனவே அறைக்குள் புகுந்த அமுதவல்லி, மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடம் எதுவென்று பார்க்கும் போது, பாயும் நிலையில் அரை ஆள் உயரத்திலிருந்த புலிச்சிற்பமே கண்களுக்குப் புலப்பட்டது.

     ‘அதுதான் சரியான இடம்’ என்று அருகில் சென்றாள். சிற்பம் சுவரோடு சுவராய்ப் பொருத்தப்பட்டிருந்ததால், ஒளிவதற்கு ஏற்ற இடமாக இல்லாதிருப்பதை, அருகே சென்ற பின்பு உணர்ந்த அமுதவல்லி அறையை நோட்டம்விட்டாள். விலையுயர்ந்த கற்களும், ஆபரணங்களும் வைக்கப்பட்ட பேழையின் பின் பகுதி ஏற்றதாகப்படவே, அங்கே சென்று மறைந்து கொண்டாள். உடலைக் குறுக்கிக் கொண்டு குனிந்த நிலையில் உட்கார்ந்திருப்பது அமுதவல்லிக்குக் கடினமாய்த்தானிருந்தது.

     அரசியின் கட்டளையாயிற்றே! அதனால் பற்களைக் கடித்துக் கொண்டு இன்னும் எவ்வளவு நாழிகை இருக்க வேண்டி வருமோ என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக ஒளிந்து கொண்டாள்.

     பொக்கிஷ அறையின் பெருங்கதவு, ‘கிரீச்‘ என்ற சப்தத்துடன் திறக்கப்பட்டது.

     “அப்பா! என்ன புழுதி?” என்று தன் அழகிய கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் இராஜசுந்தரி.

     தூசி அடங்கியதும் முகத்திலிருந்து கைகளை அகற்றி, திரும்பவும் திறவுகோலை உபயோகித்து, உட்பக்கமாகப் பூட்டிக் கொண்டாள்.

     ‘ஆஹா! இந்த அறையிலிருக்கும் பொக்கிஷத்தைக் கொண்டு, சோழ நாட்டின் பாதிப்பகுதியை விலை கொடுத்து வாங்கிவிடலாம் போலிருக்கிறதே! வழி வழியாக சோழ அரசுப் பெண்மணிகள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்துள்ள சொத்தல்லவா? அதனால் தற்போது பெரியதாகி இருக்கிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு இதைத் தவிர வேறு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா?’ என்று விலையுயர்ந்த அணிகலன்களைச் சிறிது நேரம் வியப்புடன் நோக்கலானாள்.

     ‘இந்நேரம் கூடத்தில் அரச விவகாரங்கள் பற்றிய பேச்சு எழுந்திருக்கும்!’ என்று அவளை எச்சரித்த உள் மனம் மூலம் விழித்துக் கொண்ட மேலைச்சாளுக்கிய அரசி, “என்ன மூடத்தனம்? பெண்களுக்கு இருக்கும் நகை ஆசையில் வந்த வேலையை மறந்து, இவைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேனே” என்று நொந்து கொண்டு, பாயும் புலி அருகே சென்றாள்.

     ஆள் காட்டி விரலை வலக்காதில்விட்டுத் திருகினாள். அடுத்தகணம் புலியிருந்த இடத்தில் ஆள் நுழையும் அளவுக்கு வழி தென்பட்டது. சுற்றுமுற்றும் பார்த்த சாளுக்கிய அரசி அந்த வழிக்குள் புகுந்து மறைந்தாள்.

     பேழையின் பின்பக்கம் குனிந்த நிலையில் இதுவரை கஷ்டப்பட்டு, உட்கார்ந்து கொண்டிருந்த அமுதவல்லி, இராஜசுந்தரி அவ்வழிக்குள் புகுந்துவிட்டதையறிந்து எழுந்து கொண்டாள்.

     அதற்குள் புலிச் சிற்பமும் பழைய நிலைக்கு வந்து வழியும் மறைந்து போனது.

     அமுதவல்லியும், இராஜசுந்தரி செய்தது போல வலக் காதில் கைவிட்டுத் திருக, மீண்டும் வழி புலப்பட்டது.

     எங்கே போகும் வழி என்று உள்ளே இறங்காமல் வெளியிலிருந்தபடி எட்டிப் பார்த்தாள்.

     ஒரே இருட்டாக இருந்தது.

     அறையிலிருந்த குறைந்த வெளிச்சத்தில் இறங்குவதற்குப் படிக்கட்டுகள் இருப்பது தென்பட்டன.

     ‘எங்கே போயிருப்பாள் சாளுக்கிய அரசி?’ என்று படிகளில் இறங்கினாள் அமுதவல்லி.

     அடுத்தகணமே பாயும் புலி வழியை மூடிக் கொண்டது.

     காற்றும், வெளிச்சமும் இல்லாமல், அடுத்து எங்கே கால் வைப்பது என்பது புரியாமல் தடுமாறி நின்ற அமுதவல்லி, ‘கடவுளே! ஏன் வந்து தொலைக்க வேண்டும்? இரகசிய வழிக்குள் இராஜசுந்தரி நுழைந்தாள் என்பதை மட்டும் அரசிக்குத் தெரிவித்திருக்கலாமே... அதைவிட்டு ஏதோ மௌடீகத்தனமாய் புகுந்துவிட்டேனே! இப்போது வெளியில் போக என்ன செய்வது? சுவாசிக்கக் காற்று கூட இங்கே இல்லையே. பழக்கப்பட்டவர்கள் மட்டும் போகக் கூடிய இச்சுரங்க வழியில் முன்பின் தெரியாத நான் மாட்டிக் கொண்டுவிட்டேனே! இப்போது என்ன செய்வது? இராஜசுந்தரி மறுபடியும் இப்படித்தானே திரும்பிவர வேண்டும்? அவள் கண்களில் நான் தென்பட்டுவிட்டால்... விபரீதமாக அல்லவா ஆகிவிடும்? என்னால் பட்டத்தரசியும் அல்லவா சங்கடத்தில் மாட்டிக் கொண்டு, வீணாய்ப் பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாவார்கள்’ என்று பலவித எண்ணங்களுடன், மன எரிச்சல் கொண்ட அமுதவல்லி, ஆத்திரத்துடன் வழியை மூடிக் கொண்டிருந்த தடுப்பு மீது ஓங்கிக் குத்தினாள்.

     கை வலித்தது தவிர, வேறொன்றும் நிகழ்ந்துவிடவில்லை. ஆவது ஆகட்டும் என்று அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.

     இருளுக்கு ஏற்றபடி தற்போது அவள் விழிகள் சுருங்கிவிட்டதால், அவளிருந்த இடத்திலிருந்து படிப்படியாக கீழ் நோக்கிப் படிகள் சென்று கொண்டிருந்தது அமுதவல்லிக்குத் தெரிந்தது.

     இறங்கித்தான் பார்ப்போம்! தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற தைரியத்துடன் படிகளில் இறங்கலானாள்.

     அவை முடியும் இடத்தில், சுரங்கத்தைத் தாங்குவதற்காக பெரிய தூண் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அங்கிருந்து மேல்நோக்கி மீண்டும் படிகள் சென்று கொண்டிருந்தன.

     ‘ஒரு அறைக்கும், இன்னொரு அறைக்கும் இரகசியமாய்ச் செல்ல ஏற்பட்ட வழி இது’ என்று அப்போதுதான் அமுதவல்லிக்குத் தெரிந்தது.

     துணை நெருங்கி, மேலே செல்லும் படிகளைக் கவனித்தாள்.

     அவை முடியும் இடத்தில், ஆள் நிற்கும் அளவுக்கு இடம் ஒன்று காணப்பட்டது.

     அந்த இடத்தில்தான் இராஜசுந்தரி நின்ற வண்ணம் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இனிமேல் அவள் அருகில் செல்ல முடியாது. அப்படிச் சென்றால் இராஜசுந்தரி தன்னைப் பார்த்துவிடுவாள். அதனால் வந்த வழியே திரும்பி, தடுப்பைத் திறக்க முயற்சிக்கலாம். அவ்விதம் திறந்துவிட்டால் ‘விட்டது சனியன்’ என்று வெளியேறிவிடலாம். சாளுக்கிய அரசி எப்போதாவது வந்து தொலையட்டும்! என்று தடுப்பை அடைவதற்குத் திரும்பினாள். தற்சமயம் அவள் கண்கள் இருட்டைப் பார்த்துப் பழகிவிட்டதால், தடுப்பின் நடுவே பெரிய திருகாணி இருப்பது தெரிந்தது.

     ‘இதுதான் தடுப்பைத் திறக்கும் வழியாக இருக்க வேண்டும்’ என்று வேகமாய் நடந்து திருகினாள்.

     என்ன ஆச்சரியம்! ஒரு நபர் வெளியேறும் அளவுக்கு வழி தோன்றியது. அதன் மூலம் பொக்கிஷ அறையிலிருந்து லேசாய்க் காற்றும், வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ‘நல்லதாய்ப் போயிற்று!’ என்று, சுரங்க அறையிலிருந்து வெளியே வந்த அமுதவல்லி, பாயும் புலியை இயக்கி திரும்பவும் வழியை மூடினாள். விஷயத்தை அரசியிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவலில் மாற்றுத் திறவுகோலால் பொக்கிஷ அறையின் பெருங்கதவைத் திறக்கலானாள்...


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49