(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 49 பழையாறை மாநகரின் தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. அங்காடிகள் மூடப்பட்டு ஆள் அரவமின்றி இருந்தன. மேலை இராஜவீதியான அத்தெருவில், திருவிழாவிற்குக் கூடினது போன்று எப்போதும் மக்கட்கூட்டம் ‘ஜே! ஜே!’ என இருக்கும். ஆனால் இப்போதோ... சொல்வதற்கே வார்த்தைகள் கிடைக்கவில்லை. வீதியின் ஓரமாய் மனித உடல்கள் பல சிதைந்து கிடக்க அதற்குப் பக்கத்தில் நாயும், காகமும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. இருபது பேர் கையில் ஆயுதங்களுடன் ஒரு நடுத்தர வயது மனிதனைத் துரத்திக் கொண்டு வந்தனர். அவன் காதில் குண்டலமும் கையில் பொன்னாலான வளையமும் அணிந்திருந்தான். வெறியர்களின் “ஓ” என்ற பேரிரைச்சலின் நடுவில் அவன் கெஞ்சியது எடுபடவில்லை. இரத்தம் சொட்ட சொட்ட பாதிச் சதையோடு இரு குண்டலங்களையும் ஒருவன் அறுத்துக் கொண்டான். “ஐயோ!” என அறுந்த காதினைப் பிடித்தபடி தரையில் அவன் உட்கார்ந்து அலற, “ஆகா! இந்தப் பொன் வளையம்!” என்றான் ஒருவன். “இது வேண்டுமா?” என்று கேட்ட இன்னொருவன், தன் கையிலிருந்த கத்தியால் அந்த மனிதனின் கைகளை... மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியை முதலடுக்கிலிருந்த சாளரத்தின் மூலம் பார்த்துக் கொண்டிருந்த காரனை விழுப்பரையனின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. கைகளைப் பிசைந்தபடி பற்களைக் கடித்து, “நிறுத்துங்கடா வெறி நாய்களே!” என்றான் உரக்க. அந்த அறையிலேயிருந்த சிறிய தன்மபாலரும் இராசேந்திரனும், “என்ன விழுப்பரையா, என்ன நடந்துவிட்டது?” என்று வினவினர். நடந்ததை விவரித்தான். “அப்படியென்றால் கங்கைகொண்ட சோழபுரத்தில் தோன்றிய கலகம் இங்கேயும் பரவிவிட்டதா?” வீரன் ஒருவன் பரக்கப் பரக்க ஓடி வந்தான். “சோழப் பேரரசர் கொலை செய்யப்பட்டாராம்!” - துக்க மிகுதியால் வார்த்தைகள் அடங்கிப் போக, “ஓ” என அழலானான். “சக்கரவர்த்தியா?” - பட் பட் என்று தலையிலடித்துக் கொண்ட இராசேந்திரன், சுவரின் மீது சாய்ந்து கொண்டான். சிறிய தன்மபாலருக்குக் கண்கள் கலங்கின. குனிந்து துடைத்துக் கொண்டார். படபடவென்று கதவிடிக்கும் ஓசை- “என்ன சப்தம் கீழே?” - சிறிய தன்மபாலர் வீரனைக் கேட்டார். “ஏறக்குறைய இருபது பேர் கனமான பெரிய மரத் துண்டைத் தோளில் சுமந்தபடி, உடைக்க முயல்கின்றனர்.” “என்னது?” - ஆத்திரத்துடன் ஓடி வந்தான் இராசேந்திரன். அனைவரின் செவிப்பறையையும் கிழிப்பது போல் சப்தம் பெரியதாகக் கேட்டது. “இவர்கள் தலையெழுத்து இன்றோடு முடியப் போகிறது.” ஆத்திரத்துடன் கூறிய விழுப்பரையன் வாளினை உருவிக் கொண்டான். என்ன செய்வதென சிறிய தன்மபாலருடன் ஆலோசனை கலந்தான் இராசேந்திரன். “நாம் இங்கே தங்கியிருப்பது இவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. சோழச் சக்கரவர்த்தி கொலையுண்ட விஷயம் இக்கலகக்காரர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்குக் காரணம் நாம்தானென்று எண்ணி, நம்மைத் நீர்த்துக் கட்டவே கதவை இடிக்கின்றார்கள்! இந்த இருபது பேரைச் சமாளிப்பது பெரிய விஷயமில்லை. சில காரணங்களை முன்னிட்டுப் பின்பக்க வழியாக வெளியேறிவிடுவதே நல்லதென நினைக்கிறேன்!” என்றார் சிறிய தன்மபாலர். இராசேந்திரன் வாய்விட்டுச் சிரித்தான். “துணைத்தளபதியாயிருந்தவருக்குத் திடீரென என் கோழை எண்ணம் தோன்றிவிட்டது?” “பின்பக்கமாய்ச் செல்வது கோழைத்தனமல்ல; விவேகமான காரியமே. சக்கரவர்த்தியும், மதுராந்தகனும் இறந்துபட்ட நிலையில், மாபெரும் இச்சோழப் பேரரசுக்கு நீங்கள்தான் எல்லாம்! அதனால் உங்களுக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளுவது என்னுடைய கடமை!” சிறிய தன்மபாலரின் வார்த்தைகளைக் கேட்ட இராசேந்திரன், மேல்விட்டத்தைப் பார்த்தவாறு சிந்தனையில் மூழ்கினான். அதைக் கலைக்கும் விதத்தில் மாளிகைக் கதவு ‘பளக்’கென முறிந்தது. “இனி தாமதிப்பது ஆபத்தைத் தரும். விழுப்பரையா! உள்ளே நுழைபவர்களை எதிர்த்துப் போரிடு. நானும் வருகின்றேன்” - இடையிலிருந்து வாளை எடுத்த இராசேந்திரன், இன்னொரு கையில் வேலினையும் ஏந்திக் கொண்டான். “நீங்கள் இங்கேயே இருங்கள். நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்!” - சிறிய தன்மபாலர் இரு கைகளிலும் வாளைப் பற்றியபடி கூறினார். மாளிகைக் கதவு படாரென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. உள்ளே நுழைந்த அனைவரும், “அரசர் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அயோக்கியர்கள் எங்கே?” என்று கேட்டபடி முன்கூடமெங்கும் தேடத் துவங்கினர். விழுப்பரையன் அவர்களுக்குத் தெரியும்படிச் சற்று முன்னால் வந்து நின்றான். “அதோ!”-அவர்களிலொருவன் இவனைக் கவனித்துவிட அனைவரும் முதலடுக்கிலிருந்த விழுப்பரையனைக் கொல்வதற்கு மரப்படியேறினர். அது மிகவும் குறுகலாயிருந்ததால், ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் மேலே வர முடியவில்லை. இதைப் பயன்படுத்திய காரனை விழுப்பரையன் வேலை எடுத்து அவர்களின் மீது வீசினான். முன்னால் வந்தவனின் மார்பில் அது பாய, “ஹா!” என சாய்ந்தான். பின்னால் வந்தவன் ஆத்திரமுற்று வாளுடன் விழுப்பரையனை நோக்கி வர, சிறிது ஒதுங்கி அதே வேகத்தில் அவனது விலாவில் தன் வாளினைப் பாய்ச்சினான். சிறிய தன்மபாலர் வாளினைச் சுழற்றியபடி கலகக்காரர்கள் மத்தியில் பாய்ந்தார். ‘சட் சட்’ என்று ஐந்து பேர்கள் உயிரிழந்துவிடவே, பின்னாலிருந்தவர்கள் “இன்னும் அதிக பேருடன் வருவோம்! வாருங்கள்” என அங்கிருந்து திரும்பத் தொடங்கினர். அவர்களை வெளியில்விட்டால் ஆபத்து என்று உணர்ந்த இராசேந்திரன், தன் கையிலிருந்த வேலினால் வாயிலை நோக்கிச் சென்றவனைப் பார்த்து வீசினான். அது குறிதவறாது அவனது மார்பில் தைக்க, மரண ஓலமிட்டபடி கீழே சாய்ந்தான். தொடர்ந்து இன்னும் இரு வேல்களை இராசேந்திரன் அவர்களின் மீது வீசினான். அம்பெனப் பறந்த அவ்வேற்களும், அடுத்தடுத்து இருவரைக் கீழே வீழ்த்தியது. காரனை விழுப்பரையனும் சிறிய தன்மபாலரும் மரப்படியில் ஏறியவர்களைத் தள்ளிக் கொண்டு போய் முன்கூடத்தையடைந்து யாரும் வெளியேறாதவாறு வாயிலை அடைத்து நின்றனர். இராசேந்திரனும் மற்றவர்களும் புரவியிலேறி, பழையாறை நகரத் தெருக்களில் வலம் வந்து கொந்தளிப்பிற்குக் காரணமானவர்களைத் துரத்திவிட, ஆங்காங்கே பரவியிருந்த கலகம் மெல்ல அடங்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒரு நாட் பொழுது உள்ளேயே அடைபட்டுக் கிடந்த மக்கள் சிறிது சிறிதாக வெளியே வரத் தொடங்கினர். இராசேந்தினும் சிறிய தன்மபாலரும் புரவியில் வருவதைக் கவனித்த அவர்கள் கலகம் ஒழிந்துவிட்டதென்ற நம்பிக்கையில் “இராசேந்திரர் வாழ்க! சிறிய தன்மபாலர் வாழ்க!” என்று முழக்கம் செய்தனர். அரசுக்கு விசுவாசமிக்க வீரர்கள் நூற்றுக் கணக்கில் சேர, மக்களும் ஆயிரக்கணக்கில் கூட ஆரம்பித்தனர். காரனை விழுப்பரையனை நாடுகாவல் அதிகாரியாக நியமித்த இராசேந்திரன், அவனுக்குத் துணையாக இருபது வீரர்களை அமர்த்தி, பழையாறையின் அமைதியைக் காக்கும்படி உத்தரவிட்டான். அப்பொழுது மிகவேகமாய் ஒரு குதிரை பழையாறை மாநகரை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. அதன் மேல் அம்மையப்பனிருந்தான். தூரத்தில் தெரிந்த மாளிகைக் கிடையில் எழுந்த புகை மண்டலம் வானை நோக்கிப் பரவியிருந்தது. அதைப் பார்த்து இங்கேயும் கலகத்தின் தீவிரம் அதிகமாகத்தானிருக்கிறதென்று எண்ணியபடி புரவியை நிறுத்தினான் அவன். ஆனால் அவசியம் இராசேந்திரனைப் பார்த்துத்தான் தீர வேண்டும்! அதற்கு என்ன செய்வது? சிந்தித்தபடி வருவது வரட்டுமென்று புரவியை மீண்டும் வேகமாய் ஓட்டத் துவங்கினான். நகரின் நுழைவாயிலேயே குதிரை நிறுத்தப்பட்டது. கலக வீரர்கள்தான் இவர்களோ? என அவர்களைப் பார்த்தவாறு யோசனையிலாழ்ந்த அம்மையப்பன், தூரத்தில் காரனை விழுப்பரையன் புரவியில் வருவதைக் கண்டு சந்தோஷம் கொண்டான். பரவாயில்லையே! பழையாறை இன்னும் நம்மவர் கையில்தானிருக்கிறது - என்ற எண்ணத்துடனே, “விழுப்பரையா!” என்றான் உரக்க. அருகில் வந்த அவன், “யார் அம்மையப்பனா? என்ன விஷயம்?” என வினவி, உள்ளே விடும்படி வீரர்களுக்கு உத்தரவிட்டான். இருவரும் ஒருவரையருவர் நலம் விசாரித்தவாறு இராசேந்திரன் தங்கியிருக்கும் மாளிகை நோக்கிச் சென்றனர். கலகத்தின் விளைவாய் நகரம் பெரும் அழிவிற்குள்ளாயிருக்குமென்று கணக்குப் போட்டிருந்த அம்மையப்பனுக்கு மக்கள் பயமின்றி வீதியில் நடமாடுவதையும், பூரண அமைதி நிலவுவதையும் கண்டு, சோழப் பேரரசின் எதிர்காலம் இனி அவ்வளவுதான் என்று எண்ணியிருந்த அவன் உள்ளத்தில் இப்போது நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. அவ்வுணர்வோடு இராசேந்திரனைச் சந்தித்து வணங்கி நின்றான். “என்ன சிவபக்தரே! எப்படியிருக்கின்றீர்? கங்கைகொண்ட சோழபுரத்தின் நிலை எவ்விதமிருக்கிறது?” “நிலமை சீர்பட்டுவிட்டது என்று சொல்வதற்கில்லை. தங்களைப் பட்டத்தரசியாரும் முதன்மந்திரியும் உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள்!” “சோழச் சக்கரவர்த்தியைப் பற்றி செய்தி ஒன்று கேள்விப்பட்டேன். அது...?” என்று அவனைப் பார்க்க, “உண்மைதான்!” என்றான் வருத்தமான குரலில். “எப்படி நேர்ந்தது?”- துயரம் மிகுந்த குரலில் கேட்டான் இராசேந்திரன். “ஆற்றங்கரையில் என்னையும், பெரிய தன்மபாலரையும் துரத்தி வந்த வீரசோழ இளங்கோ வேளானின் ஆட்களிடம் சிக்காமலிருக்க புதரில் மறைந்து கொண்டோம். அச்சமயம் கடார இளவரசியைச் சிறைபிடித்து வந்த வீரர்கள் கோட்டையில் கலகம் தோன்றிவிட்டதையறிந்து, தற்கொலை செய்து கொண்ட இரத்தினாதேவியைக் கூட கவனிக்காமல், கங்காபுரியை நோக்கி ஓடிவிட்டனர். நாங்கள் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு அவளிடம் சென்றோம். அதற்குள் குழப்பம் பெரிதாகி, அதன் விளைவாய்ப் பெருங்கூச்சல் தோன்றிவிடவே, உயிர் போய்விட்ட அவளைப் பற்றிக் கவலைப்படாமல் ரகசிய வழி மூலம் அரண்மனையை அடைந்தோம். அங்கே சோழர் படை இரு பிரிவுகளாகப் பிரிந்து வீரசோழ இளங்கோ வேளானின் ஆட்கள் எதிர்ப்பட்டவர்களையெல்லாம் மூர்க்கக்தனமாகக் கொலை செய்து கொண்டிருந்தனர். பட்டத்தரசியாரையும் முதன்மந்திரியையும் காப்பாற்ற வேண்டுமென்று முடிவு செய்து நானும் தன்மபாலரும் ஒளிந்து ஒளிந்து அரசியின் மாளிகை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். ஆங்காங்கே மாளிகைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. பலமிகுந்தவன், பலமற்றவனைத் தாக்கிக் கொள்ளையடிக்கத் துவங்கிவிட்டான். கேட்பார் யாருமின்றி கத்தியை ஏந்தியவன் சக்கரவர்த்தி என்ற நிலையில் அங்கே வன்முறை பரவிக் கொண்டிருந்தது. மதுராந்தகன் கொலையை வைத்து வலங்கை வகுப்பார், இடங்கைப் பிரிவினர் மீது குற்றம் சாட்டியபடி அவர்களையழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீரசோழ இளங்கோ வேளானும், அவனது ஆட்களும் அதற்கு ஆதரவு தர, இதனால் வெறுப்புற்ற இடங்கைப் பிரிவினர் வலங்கை வகுப்பாருடன் வாள் ஏந்திப் போர் புரியலாயினர். அதனால் கோட்டையில் பெருங்குழப்பம் தோன்றியது. முதன்மந்திரியையும், பட்டத்தரசியையும் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பிலிருந்த நாங்கள் இருவரும், பரவிவிட்ட கலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அரண்மனையினுள் மறைந்து சென்று இருவரையும் காப்பாற்றி, அவர்களை இருட்டு அறையில் பாதுகாப்பாகத் தங்கச் செய்தோம். சிறைப்பட்ட திருவரங்கனை விடுவிக்கவும், மதுராந்தகியையும், தன்மபாலரின் மகளான மலர்விழியைக் காப்பாற்றவும் நாங்கள் மீண்டும் மாளிகைக்குள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் சோழச் சக்கரவர்த்தி கொலை செய்யப்படுவதைக் கண்களால் பார்க்க நேரிட்டது” என்று நிறுத்தினான் அம்மையப்பன். துயர மிகுதியால் சற்று நேரம் மௌனமாயிருந்த அவன் தொண்டையைக் கனைத்துவிட்டுப் பேசலானான்: “சோழச் சக்கரவர்த்தி பாதாளச் சிறைக்குப் போகும் வழியில் நின்று கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் இளங்கோ வேளானும், இருக்குவேளுமிருந்தனர். நான்கு புறமும் வீரர்களை ஏவியபடி கலகத்தை அடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ பறந்து வந்த குறுங்கத்தி அவரின் உயிரைக் குடித்துவிட்டது. எறிந்தவர் யார் என்று கவனிப்பதற்குள், தீப்பந்தங்களுடன் அங்கே கலகக்காரர்கள் கூடிவிட்டனர். இருக்குவேள் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டார். வீரசோழ இளங்கோ வேளான் பக்கத்திலிருந்த வீரர்களுடன் அவர்களை எதிர்க்க முயன்றான். ஆனால் கலகக்காரர்களின் கை ஓங்கும் போல் தெரியவே, மறைந்திருந்த நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கலகக்காரர்களை விரட்டியடித்தோம். இதற்குள் இளங்கோ வேளானை ஆதரிக்கும் வீரர்கள் நிறைய பேர் அங்கே வந்து சேரவே, “சக்கரவர்த்தியைக் கொன்றது அவர்கள்தான். கைது செய்யுங்கள்!” என்ற அவன் எங்களைச் சுட்டி வீரர்களுக்கு உத்தரவிட்டான். இது என்ன? பாம்பிற்குப் பால்வார்த்த கதையாய்விட்டதே! என எண்ணிய நாங்கள் இருவரும் கைது செய்ய வந்த வீரர்களைத் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு, இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்துவிட்டோம். எங்களைப் பின் தொடர்ந்த வீரர்கள் அரண்மனைச் செல்வத்தைக் கொள்ளையடிக்க நுழைந்த கும்பலை விரட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானதால், அவர்களிடமிருந்து தப்பிப்பது எங்களுக்குக் கடினமான காரியமாகப்படவில்லை. மதுராந்தகியையும், மலர்விழியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் நாங்கள் இருட்டு அறையை அடைந்தோம். முதன்மந்திரியிடம் அரசர் கொலையுண்டதைப் பற்றித் தெரிவித்தோம். துயரத்துடன் பட்டத்தரசியாரிடம் இதைக் கூறினார். அவரும் வேதனை தாளாமல் விம்மி அழலானார். இங்கேயிருப்பது நல்லதல்ல என்று உணர்ந்த பிரமாதிராசர், அங்கேயிருந்து கங்கைகொண்ட சோழேச்சுரத்திற்குச் செல்லும் சுரங்கவழி மூலம், கோயில் மூலஸ்தானத்தையடைந்து, அதற்குள் சில நாட்கள் மறைந்திருப்பதே சாலச் சிறந்ததென முடிவு செய்து, அவ்விதமே அனைவருடன் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு தினங்களில் கங்கைகொண்ட சோழபுரம் நாசமாகிவிடும் என்று உணர்ந்து முதன்மந்திரி இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களை அழைத்து வர என்னை அனுப்பினார்” என்று நிறுத்தினான். அதைக் கேட்ட இராசேந்திரன் யோசித்தபடியிருக்க, அம்மையப்பன் மிகவும் பணிவுடனே, “அங்கே சோழநாடு அரசரின்றி அல்லலில் ஆழ்ந்திருக்கிறது. தாங்கள் என்னுடன் கட்டாயமாய்ப் புறப்பட வேண்டும்!” என்றான். காரனை விழுப்பரையனிடம் நகரில் மீண்டும் கலகமூளாமல் விழிப்புடன் செயலாற்றும்படிப் பணித்து, சிறிய தன்மபாலருடன் கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட ஆயத்தமானான். அச்செய்தி பழையாறையெங்கும் பரவிவிட்டது. “நாங்களும் உங்களோடு துணைக்கு வருகின்றோம்!” என்று மக்கள் கடலென அவன் பின்னே திரண்டு நின்றனர். அத்துடன், “கங்கைகொண்ட சோழபுரத்தைக் காப்போம். பட்டத்தரசியார் வாழ்க! மன்னரைக் கொன்ற வஞ்சகர்களை ஒழிப்போம்!” என்று முழக்கமிடத் தொடங்கினர். இராசேந்திரனும், சிறிய தன்மபாலரும், அம்மையப்பனும் முன்னே புரவியில் செல்ல, பின்னால் விசுவாசமிக்க அரச வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதற்கு அப்பால் சமுத்திரம் போன்று திரண்டிருந்த மக்கள் நடக்கலாயினர். வழியெங்கும் போர் வீரர்களும், மக்களும் அந்த ஊர்வலத்துடன் சேர்ந்து கொண்டனர். பெரிய படைபோலிருந்த அது, கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. இச்செய்தி கோட்டைக்குள் கலகத்தை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த வீரசோழ இளங்கோ வேளாளின் செவியில் விழுந்தது. இனிமேல் அங்கேயிருப்பது வீண் என்று உணர்ந்த அவன் தன்னை ஆதரிக்கும் வீரர்களுடன் கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையைவிட்டு இரகசியமாய் வெளியேறினான். “எல்லாம் முடிந்துவிட்டது. இறந்துவிட்ட அரசர் உடலையும் அடக்கம் செய்துவிட்டேன் இனி எனக்கு...” என்று நிறுத்திய அவன் “குந்தள நாடுதான்!” என அழுத்திக் கூறினான் தன்னுடைய வீரர்களிடம். ஏறக்குறைய ஐம்பது புரவிகள் அந்த நாட்டை நோக்கி மிக வேகமாய்ச் செல்லத் தொடங்கின. பகற்பொழுதிருக்கும் போது இராசேந்திரன் தலைமையில் மக்கள் கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்துவிட்டனர். உள்ளிருந்த கலகக்காரர்கள் அதைக் கண்டு திகைத்து என்ன செய்வதென ஆலோசித்து, இறுதியில் இராசேந்திரனிடம் சரணடைய முடிவு செய்தனர். ஆங்காங்கே ஒளிந்து கொண்டு அழிவு வேலையிலீடுபட்டுக் கொண்டிருந்த கலகக்காரர்களைச் சுற்றி வளைத்துச் சிறை செய்யும்படி சிறிய தன்மபாலருக்கு உத்தரவிட்டான் இராசேந்திரன். அவர் தன்னுடன் ஐம்பது வீரர்களை அழைத்துக் கொண்டு, ஒளிந்து கொண்டிருந்த கலகக்காரர்களைத் தேடிப் பிடித்து சிறை செய்யலானார். இராசேந்திரன் கோட்டைக்குள் நுழைந்துவிட்டைதையறிந்த மக்கள், இனி தங்களுக்குப் பயமில்லை என்ற எண்ணத்துடன், இல்லங்களிலிருந்து வெளியே வந்து அவனை வாழ்த்தத் தொடங்கினர். இராசேந்திரனைக் கங்கைகொண்ட சோழேச்சுரத்திற்குள் அழைத்துச் சென்ற அம்மையப்பன், அவனைக் கர்ப்பக்கிரகத்தின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். இதற்குள் அவன் வந்துவிட்ட செய்தியும் கட்டுமீறிப் போயிருந்த கலகம் அடங்கும் நிலைக்கு வந்துவிட்டதையும் உணர்ந்த முதன்மந்திரி பட்டத்தரசியிடம் “இராசேந்திரர் வந்துவிட்டார்!” என்றார். முதன்மந்திரியின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. சோழச் சக்கரவர்த்தியாகப் போகும் அவரை வரவேற்க என்ன செய்வதென சுற்றும் முற்றும் பார்த்தார். இலிங்கத்தின் மேலிருந்த மாலை அவர் கண்ணில்பட்டது. அதை எடுத்துக் கொண்டார். “ஈசன் கூட அங்கீகரித்துவிட்டார்!” என்று புன்முறுவலுடன் கூறியபடி கர்ப்பக்கிருகத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த இராசேந்திரனை நோக்கி வர, அவர் பின்னால் பெரிய தன்மபாலரும், பட்டத்தரசியும், மதுராந்தகியும், மலர்விழியுமிருந்தனர். மதுராந்தகி இராசேந்திரனை பார்க்க, அவன் மென்மையாய் ஒரு புன்முறுவலை அவளைப் பார்த்து வெளிப்படுத்தினான். அதனால் நாணமுற்ற அவள் முகம் சிவக்கத் தலைகுனிந்தாள். பிரமாதிராசர் தன் கையிலிருந்த மாலையை அவன் கழுதிலிட்டார். பின்னாலிருந்த பெரிய தன்மபாலர் “சோழச் சக்கரவர்த்தி!” என்று குரலெழுப்ப, வெளியே கூடியிருந்த மக்களும், வீரர்களும், “வாழ்க!” என முழக்கம் செய்தனர். அது கங்கைகொண்ட சோழேச்சுரமெங்கும் பரவி கங்காபுரியெங்கும் நிறைந்து, சோழ நாடெங்கும் எதிரொலித்தது. முற்றும் அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|