உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 44 கங்காபுரிக் கோட்டையையடைந்த அம்மையப்பன், கதவுகள் மூடப்பட்டிருப்பதையறிந்து கோட்டைக் காவலனிடம் உள்ளே போக வேண்டியதைப் பற்றிக் கூறினான். “சிவபக்தரான தங்களுக்குக் கோட்டைக்குள் என்ன வேலை?” என்று கேட்டான் அவன். “முதன்மந்திரியைப் பார்க்க வேண்டும்?” “எந்த மந்திரி... பழையவரா? புதியவரா?” இந்தக் கேள்விக்குச் சிவபக்த சிரோன்மணிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இருந்தாலும், “பிரமாதிராசர்!” என்றான் அழுத்தமாக. கோட்டைக் காவலனிடமிருந்து சிரிப்பு வெளிப்பட்டது. “என்னிடம் சொன்னது போல் வேறு யாரிடமும் இம்மாதிரி சொல்லாதீர்கள். கோட்டைக்குள் நிலைமை தலைகீழாக ஆகிவிட்டது. நான் சைவப் பற்றுள்ளவன் என்பதால் கூறுகின்றேன். முதலில் இங்கிருந்து போய்விடுங்கள்!” அம்மையப்பன் தயங்கி நின்றான். “ஐயா! தங்கள் சிவ வேடம்தான் உங்களை என்னிடமிருந்து காப்பாற்றியிருக்கிறது. வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் விலங்கிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பேன். அதனால் முதலில் இங்கிருந்து போய்விடுங்கள்.” ‘இனிமேல் அங்கிருப்பதும் கோட்டைக்குள் புக முயற்சிப்பதும் வீண்’ என்று பட்டது அம்மையப்பனுக்கு. வேறு முறையைப் பின் பற்றி வேறு வழியாகத்தான் கோட்டைக்குள் போக வேண்டும் என்று எண்ணியபடி, மதுராந்தக வடவாற்றின் பக்கம் புரவியைச் செலுத்தினான். ஆற்றின் ஓரமாயுள்ள அரசமர நிழலில் அதைக் கட்டிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. அரசமரத்தின் கீழ் இருந்த மேடையும், அந்த மேடையின் ஒரு பக்கமாயிருந்த கருங்கல் மண்டபமும், ஏற்கனவே அவனுக்குப் பழக்கப்பட்ட இடம்தான். என்றாலும் சற்று நேரம் யோசித்தபடி நின்றான். பிறகு, “சிவாய நம!” என்று அவனது வாய் முணுமுணுக்க மண்டபத்திற்குள் புகுந்து மறைந்துவிட்டான். கொஞ்ச நேரம் கழித்து வெள்ளை முக்காடு போட்ட உருவத்தை முதன் முதலில் சந்தித்த அந்த இருட்டு அறையின் வாயிலின் முன்பாக நின்றான் அம்மையப்பன். இப்போது அங்கே காவல் பலத்திருந்தது. எப்பொழுதும் ஒரு ஆள் இருக்கக் கூடிய அவ்விடத்தில் தற்போது நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். தயங்கியபடியே அருகில் சென்று “பெரியவரைப் பார்க்க வேண்டும்” என்றான். இந்த இரகசிய வழி பழக்கப்பட்டவர்களுக்கே தெரியும் என்பதாலும் அந்நால்வரில் ஒருவன் ஏற்கனவே இவனுக்கு பழக்கமானவன் என்பதாலும் “உள்ளே முக்கிய ஆலோசனையிலிருப்பதால் சற்றுப் பொறும்!” என்று கூறினான். அம்மையப்பன் அதற்குச் சம்மதித்து அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான். ஆனால் நேரம் கடந்து கொண்டே போனதால் மதுராந்தக வடவாற்றின் பக்கம் சிறிது நேரம் உட்கார்ந்து வரலாம் என்று வீரனிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேர்ந்த திருவரங்கன் கோட்டைக்குள் புக முடியாத நிலையில் பலத்த காவல் இருப்தைப் பார்த்துத் திகைப்புற்று, கோட்டையின் மேற்புறம் வீரர்களின் நடமாட்டம் குறைந்தும், சாளுக்கிய வீரர் நடமாட்டம் அதிகரிப்பதையும் உணர்ந்து, ‘இது என்ன சாளுக்கிய நாட்டின் தலைநகரமா? அல்லது கங்கைகொண்ட சோழபுரம்தானா?’ என்று அவனுக்குச் சந்தேகம் எழவே செய்தது. ‘உடனே புறப்பட்டு வருக!’ என்ற அரச உத்தரவைக் காண்பித்துத் தான் உள்ளே செல்ல வேண்டிய அவசியத்தைக் கோட்டைத் தலைவனிடம் கூறினான். சற்று யோசனை செய்துவிட்டுத் திருவரங்கனை மட்டும் கோட்டைக்குள் விடும்படிக் காவல் வீரர்களுக்கு உத்தரவிட்டான் தலைவன். திருவரங்கனுடன் இரு சாளுக்கிய வீரர்கள் துணையாக வந்தனர். இவ்விதம் வீரர்கள் வருவது அவனுக்குப் பிடிக்காததால் “எனக்கு அரண்மனை போக வழி தெரியும்” என்று எரிச்சலுடன் கூற, “உங்களுடன் கூடச் செல்லும்படி எங்களுக்கு உத்தரவு. இது தவிர ஒன்றும் தெரியாது” என்றனர் இருவரும். ‘சோழப்படையில் முக்கிய பொறுப்பு வகிக்கும், எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகன் நிலைமை எப்படியிருக்கும்?’ - இந்தக் கேள்வியுடன் மனத்தில் தோன்றிய எரிச்சல் அதிகமாக, சோழச் சக்கரவர்த்தியிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். சக்கரவர்த்தியிருக்கும் சோழ கேரளன் மாளிகை வந்தது. வழக்கம் போல் அங்கேயும் அவனுக்கு உள்ளே புக அனுமதி கிடைக்காததால் திரும்பவும் அரச உத்திரவைக் காண்பித்து விளக்கம் கூற, வீரர்கள் திருவரங்கனைச் சோழப் படையின் தளபதியான வீரசோழ இளங்கோ வேளானிடம் அழைத்துச் சென்றனர். இதுவரை துணையாக வந்த இரு வீரர்களும், தங்கள் பணி முடிந்துவிட்டதென்று கோட்டைக்குத் திரும்பிவிட்டனர். தளபதி பதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், முகம் என்றுமில்லாத மலர்ச்சியுடனிருக்க, தனது மெல்லிய மீசையை நன்கு முறுக்கிவிட்டுக் கொண்டு, “என்ன விஷயம்!” என்றான் திருவரங்கனிடம். குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டது போல் வீரசோழ இளங்கோ வேளானுக்குத் தளபதி பதவி கிடைத்துவிட்டது. அதனால்தான் என்னையே, ‘என்ன விஷயம்?’ என்று கேட்கின்றான் என புரிந்து கொண்ட திருவரங்கன் “சக்கரவர்த்தி அவர்கள் மகளிர் கையிலுள்ள பந்து என நினைத்துவிட்டார் போலும்! மதுரையில் எனக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் போது, எதற்கு இங்கே அவசரமாக வரவழைக்க வேண்டும்? வந்த இடத்தில் இங்கேயும், அங்கேயும்...” என்ற திருவரங்கனை மேற்கொண்டு பேசவிடாமல் இடைமறித்து, “யாரிடம் பேசுகின்றாய் என்பது நினைவிருக்கிறதா?” என்றான் இளங்கோ வேளான் முனிவுடனே. “ஓ! நன்றாகவே நினைவிருக்கிறது. தாங்கள் சோழத்தளபதி என்பதும், தங்கள் முன் நிற்கும் நான் சோழர் படையில் முக்கிய பொறுப்பு வகிப்பவன் என்பதும் தெரிகிறது” என்றான் சற்றுக் காட்டமாகவே. வீரசோழ இளங்கோ வேளானுக்கு கோபம் அதிகரித்தது. இருக்கையிலிருந்து சடாரென்று எழுந்து திருவரங்கன் அருகில் வந்தான். சுற்றியிருந்த வீரர்கள் என்ன நேருமோ! என்று அச்சத்துடன் இருவரையும் பார்க்க, ‘இந்த நேரத்தில் இவனிடம் எதற்குத் தகராறு?’ என்று சினத்தையடக்கியபடி “நீ அதிகமாகவே பேசுகின்றாய்!” என்றான் சோழத்தளபதி. “சற்று முன்பு கோட்டையில் எனக்குக் கிடைத்த மரியாதை, வேறு யாருக்காகவாவது கிடைத்திருந்தால் பெரிய ரகளையே பண்ணியிருப்பார்கள்!” “அப்படி என்ன உனக்கு நேர்ந்துவிட்டது?” “என்னைக் காவற் கைதி போல் நடத்தியிருக்கிறார் கோட்டைக்காவலர். இரு வீரர்களை என்னோடு துணைக்கு அனுப்பியிருக்கின்றார். அது...!” என்று மேற்கொண்டு பேசமுற்பட்டவனைச் சிரித்தபடி குறுக்கிட்டு “உன்னைப் பற்றி அவருக்குத் தெரியாது. அவர் சாளுக்கிய படைப் பிரிவைச் சேர்ந்தவர்” என்றான் சோழத்தளபதி. “அப்படிப்பட்ட தெரியாத நபரை முக்கிய பொறுப்பில் எப்படி அமர்த்தினீர்?” “இது சக்கரவர்த்தியைக் கேட்க வேண்டிய கேள்வி!” “கேட்கத்தான் போகின்றேன். கேட்காமல் நான் விடப்போவதில்லை” என்று சொன்ன திருவரங்கன் “சக்கரவர்த்தியை உடனே பார்க்க வேண்டும்” என்றான். ‘இவன் இடங்கைப் பிரிவைச் சேர்ந்தவன்! அதனால்தான் துடுக்குத்தனமாய்ப் பேசுகின்றான்! சமயம் வரும் போது இவனைப் பழிதீர்க்க வேண்டியதுதான்’ என்று மனதிற்குள்ளே கூறிக் கொண்ட சோழத்தளபதி, “சக்கரவர்த்தியை இப்போது பார்க்க முடியாது. முக்கிய வேலையாயிருக்கிறார். அவரைப் பார்க்கும் வரை நீ விருந்தினர் மாளிகையில் தங்கியிரு” என்றான். மேற்கொண்டு இடம் கொடுத்தால் இன்னும் அதிகப்பிரசங்கித் தனமாகவே பேசுவான் என பக்கத்திலிருந்த வீரர்கள் பக்கம் திரும்பி “சக்கரவர்த்தியைப் பார்க்கும்வரை இவர் விருந்தினர் மாளிகையிலேயே தங்க சகல வசதியும் செய்து கொடு” என்று உத்தரவிட்டான். ‘இனிமேல் இவனிடம் ஏன் பேசிக்கொள்ள வேண்டும்!’ என்று தன்னை அழைத்துப் போகத் தயாராக இருந்த வீரனுடன் விருந்தினர் மாளிகை நோக்கிப் புறப்பட்டான். அப்படிப் போகும் போது... இரத்தினாதேவியைப் பற்றிய நினைவு வந்தது. எல்லாம் நல்லதிற்காகத்தான். கடார இளவரசியைச் சந்திக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடனே வீரன் பக்கம் திரும்பி, “இரத்தினாதேவி எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தெரியுமா?” என்றான் மெல்லிய குரலில். கங்கைகொண்ட சோழபுரத்திலிருக்கும் அரசகுல இளைஞர்களெல்லாம் ஏன் இவள் மேல் இப்படியரு சபலம்? -கேள்வியை எழுப்பிய அந்த வீரன், அதற்காக மனதிற்குள் சிரித்துக் கொண்டு, “அவர்களும் விருந்தினர் மாளிகையில்தான் தங்கியிருக்கின்றார்கள்!” என்றான். நல்லதாகப் போய்விட்டது! - சந்தோஷமுற்று மிக வேகமாய் வீரனுடன் அம்மாளிகை நோக்கி நடக்கலானான் திருவரங்கன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|