உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 10 கங்கைகொண்ட சோழபுரம்! கிழக்கே வடவாறு ‘சலசல’வென்று சப்தித்து ஓட, வடக்கே முதலாம் இராசேந்திரசோழனின் கங்கை வெற்றி கூறும். ‘சோழகங்கம் ஏரி’ கடலெனப் பரந்து விளங்க, தெற்கிலும், மேற்கிலும் சோணாட்டுச் செழுமையைப் பறைசாற்றும் பசிய வயல்கள் விரிந்திருந்தன. கோட்டையின் நடுவில் சக்கரவர்த்தி வசிக்கும் மாளிகை இருந்தது. பலத்த கட்டுக்காவலுடனும், எளிதில் நுழைய முடியாத பாதுகாப்புடனும் ‘கீழை சோபனா’ என்ற பெயருடனுமிருந்த அதன் கிழக்கு வாயில் வழியாகத்தான் உள்ளே புக முடியும். முதல் தளத்துக்கு ‘ஆதி பூமி’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. அத்தளத்தின் நடுவே மன்னர் தங்கும் விசாலமான கூடம், அழகிய சித்திர வேலைப்பாடுடன் இருக்கிறது அது. கருங்கல் பீடத்தில் பளபளக்கும் பெரிய மரத்தூண்களை நிறுத்தி, அதன் மேல் பெரும் உத்திரங்களை வைத்து, அவற்றின் மேல் அகன்ற செங்கற்களால் பதப்படுத்திய சுண்ணாம்பைக் கொண்டு, தளத்தின் மேற்பகுதியை வலிவுடன் அமைத்திருந்தனர் சோழக் கட்டிட வல்லுநர்கள். மாமன்னர் அமரும், இராசேந்திர சோழ மாவலிவாணராயன் என்ற பெயருடைய ஆசனம், கூடத்தின் நடுவில் போடப்பட்டு இருந்தது. உச்சியில், முதலாம் இராசேந்திர சோழனின் கேரள வெற்றியைக் குறிக்கும் பல நிகழ்ச்சிகள் சித்திரமாய் தீட்டப்பட்டிருந்தன. ‘மாவலிவாணராயன்’ என்ற அவ்விருக்கையில் மெலிந்த தேகத்துடன் சோழச் சக்கரவர்த்தி வீரராசேந்திரர், சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தார். முதுமை அவரை முற்றிலும் ஆட்கொண்ட போதிலும், அரசருக்குரிய மிடுக்கு இன்னும் அவரிடம் இருக்கத்தான் செய்தது. ஏறக்குறைய இரு திங்களுக்கு மேல் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் களைப்பு முகத்தில் நிலவினாலும், அதைச் சமாளிக்கும் மன உறுதியுடன் அவர் காணப்பட்டார். அரசரின் பக்கவாட்டில், அவரின் முத்த மகனும், சோழ நாட்டின் இளவரசனுமான அதிராசேந்திரனும், அடுத்து முதலமைச்சர் பிரமாதிராசரும், கடார வெற்றி கண்ட இராசேந்திரனும், அதற்கு எதிர்ப்புறமாக தளபதி தன்மபாலனும், துணைத்தளபதி சிறிய தன்மபாலனும், சேதிநாட்டுக் குறுநில மன்னன் முத்தன்காமனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் சயங்கொண்ட சோழ இருக்குவேளும் நின்று கொண்டிருந்தனர். ஒரு தடவை அனைவர் மீதும் பார்வையைச் செலுத்திய சக்கரவர்த்தி பேசத் தொடங்கினார். நோயுற்ற நிலையிலும் அவர் குரலின் கம்பீரம் சற்றும் குறையவில்லை. “உங்களையெல்லாம் இங்கே வரச் சொன்னதற்கு என்ன காரணம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இரு திங்களாய், ராஜ வைத்தியர்களால் என்ன நோய் என்று கண்டு பிடிக்காத நிலையில், அதனுடன் போராடும் எனக்கு நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் சேர்ந்துவிட்டதால் இரவில் துயின்று பல நாட்கள் ஆகிவிட்டன. அத்தகைய துயர நிலையில், நான் உழன்று கொண்டிருக்கும் போது சமீபத்தில் மதுரையிலிருந்து வந்த செய்தி என் நெஞ்சத்தைப் பிளப்பது போல் இருந்து வருகிறது. இது வரை ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த பாண்டியன் சடையவர்ம சீவல்லபன் திரும்பவும் மதுரைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்திருக்கிறான். மதுரைக் கோட்டையின் கட்டுக்காவலை மீறி பகைவன் உள்ளே வந்தது எப்படி? வந்ததுமின்றி, காவலுக்கிருந்த வீரர்களில் பலரைக் கொன்று, சொக்கநாதர் ஆலயத்திற்குள் புகுந்து நான்தான் உண்மையான அரசன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது எப்படி? அம்மாதிரி அவன் செய்யும் வரை அங்கிருக்கும் சோழப் படைகள் என்ன செய்து கொண்டிருந்தன? பகைவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த நம் படைக்கு இப்போதெல்லாம் ஆற்றல் குறைந்துவிட்டதா? நம் ஒற்றர்படை ஏன் கண்காணிக்கத் தவறிவிட்டது? இதற்கெல்லாம் அமைச்சர் பிரமாதிராசர் என்ன பதில் சொல்லப் போகின்றார்? தளபதி தன்மபாலர், அவர்களை அடக்க, மிகப் பெரும்படையை எப்போது திரட்டப் போகின்றார்? திரும்பவும் தளபதி அவர்களுக்கு நான் நினைவுபடுத்தும் வார்த்தையாவது, ‘மிகப்பெரும் படை...! ஏனென்றால் பகைவர்கள் கடல்போல் மாபெரும் சைனியத்தை மதுரைக்குள் வைத்திருக்கிறார்கள் அல்லவா? அதனால்தான்! அம்மாதிரி சொல்கின்றேன்!” என்று பேச்சை நிறுத்தி, கோபம் கலந்த பார்வையால் தளபதியைப் பார்க்கலானார். பிரமாதிராசரும், தன்மபாலரும், மாமன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலை கவிழ்ந்தனர். சற்று நேரம் மௌனமாய்க் கழிந்தது. வேந்தர் மீண்டும் முனிவு கலந்த குரலில் பேசலானார். “மாபெரும் இச்சோழப் பேரரசை நிறுவ நாங்களும், எங்கள் முன்னோர்களும் செய்த தியாகங்கள்தான் எத்தனை? பரம்பரைப் பகைவர்களான சாளுக்கியர்களுக்கும், எங்களுக்கும் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, கவனம் முழுவதும் போரிலேயே இருந்தால், நாட்டைக் கவனிப்பது எப்படி? என்று என் பாட்டனார் ராஜராஜ சோழர், தன் மகள் குந்தவியை கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் செய்வித்து, அதன் மூலம் அவர்களுக்கும், எங்களுக்கும் இருந்த பகையை நீக்கினார். அவரைத் தொடர்ந்து நானும், அதே முறையைப் பின்பற்றி, மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தனுக்கு, என் மகள் இராஜசுந்தரியைத் திருமணம் செய்வித்து, மேலைச்சாளுக்கியரின் பகைமையை அழித்துக் கொண்டேன். இவ்விதம் மேலை, கீழைச் சாளுக்கியரின் ஜென்மப்பகை ஒழிந்ததென்று நிம்மதியோடிருக்கும் சமயத்தில், சோழக் குறுநில மன்னர்களும், பாண்டியனும், சேரனும் இவ்வரசுக்கு விரோதமாகத் திரும்பியிருக்கின்றார்கள். அவ்வாறு திரும்பியவர்களை நசுக்கி, இந்தச் சாம்ராஜ்யத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஏற்ற சரியான தலைமை இன்னும் சோழ அரசுக்குக் கிடைக்கவில்லையோ என்று எண்ணும் போதுதான், மனம் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றது!” என்று பேச்சை நிறுத்தினார் சோழச் சக்கரவர்த்தி. அச்சமயம் கொடும்பாளூர்க் குறுநில மன்னரான சயங்கொண்ட சோழ இருக்குவேள் குறுக்கிட்டு, “மன்னிக்க வேண்டும்! சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்!” என்றார் பணிவுடன். “என்ன சயங்கொண்டா? விண்ணப்பம் பண்ணக் கூடிய அளவுக்கு உன்னிடம் விஷயங்கள் நிறைய இருக்கின்றனவோ?” என்றார் பேரரசர். “ஆமாம்!” என்று புன்முறுவலுடனே தலையை ஆட்டினார் கொடும்பாளூர்க் குறுநில மன்னன். “சரி! உன் விண்ணப்பத்தைச் சொல். என்னவென்று கேட்போம்!” என்று மாமன்னர் தயாராக. “எல்லா நலங்களும் பொருந்தி, திருமாலுக்கு நிகராய் உள்ள தங்கள் மகன் சோழ இளவரசர் அதிராசேந்திரர் இருக்கும் போது, தாங்கள் ஏன் நாட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான விண்ணப்பம்” என்றார் சயங்கொண்ட சோழ இருக்குவேள். அதற்குச் சோழச் சக்கரவர்த்தி மறுமொழி எதுவும் சொல்லாது சற்று நேரம் அமைதியாயிருந்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். “கொடும்பாளூரார் சொல்வதை நான் மறுக்கவில்லை; ஆனால் பரந்த சோழ நிர்வாகத்தை அதிராசேந்திரன் ஒருவனால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது! காரணம்? என் பாட்டன் இராசராசன் காலத்திலிருந்தே ஆற்றல் மிக்க பல இளவரசர்கள் இதை நிர்வகித்து வந்தார்கள். அப்படி இருந்ததால்தான் இந்த அரசு, சோழப் பேரரசாக வளர முடிந்தது. ஆனால் இன்று...? சோழ அரசு கட்டில் வெற்றிடமாய் இருப்பது போல் எனக்குப் படுகிறது.” “...” “என் தந்தை கங்கைகொண்ட சோழர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வேள்வியில் பிறந்த தீயைப் போல நாங்கள் நால்வர் சோழ அரசுக்குத் தூண்களாக விளங்கினோம். இராசாதிராசனாகிய என் முதல் தமையன் கொப்பத்துப் போரில் உயிர் துறந்ததும், அப்போர்க் களத்திலேயே என் இரண்டாம் தமையன் இரண்டாம் இராசேந்திர சோழன், சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டு வெற்றி காணும் நிலையிலிருந்த சாளுக்கியனைப் புறங்கண்டார். இப்படி ஒரு மாற்றுத் தலைமை அச்சமயம் இல்லாதிருந்தால், அரசின் நிலைமை என்னவாயிருக்கும்? இந்த இடத்தில்தான் நீங்கள் அனைவரும் யோசிக்க வேண்டும்! அதற்குப் பிறகு சோழ இளவரசராயிருந்த இராச மகேந்திரரும் ஒரு போரில் இறந்துவிட, கடைசியாய் நான் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஆட்சிக்கு வரும் போது எனக்கு வயது நாற்பது. என் இளமைக் காலம் முழுமையும் போர்க்களத்திலேயே கழிக்கப்பட்டு, என் தமையன்மார்களுக்குப் பேருதவியாக இருந்தேன். அவ்விதம் இருந்ததால்தான் பகைவர்களால் இப்பேரரசை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தற்போது..? இருப்பது அதிராசேந்திரன் மட்டுமே. இன்னொரு புதல்வன் காஞ்சி நகரைவிட்டு இப்படியும், அப்படியும் கூட நகர்வதில்லை. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் பாண்டியர்களை நாம் அடக்க முடியாமல் தத்தளிக்கிறோம், என்ற செய்தி பகைவர்களின் காதுகளுக்கு எட்டினால் நிலைமை என்ன ஆகும்? சோழப் பேரரசு வலிமை குன்றிவிட்டது என்றல்லவா எண்ணி ஒவ்வொருவரும் இவ்வரசுக்கு விரோதமாய்க் கிளம்புவார்கள். அவ்விதம் கிளம்பினால் நாட்டின் கதி என்னாவது? இதையெல்லாம் நினைக்கும் போதுதான் என் இதயம் தீயில் வீழ்ந்த பறவையாய்த் துடிக்கின்றது! கடவுளே! என்னதென்று புரியாத நோயினாலும் தற்போது நிலவும் குழப்பத்தினாலும் என்னை நீ வருத்த வேண்டாம். அதற்குப் பதிலாய் உன்னிடமே அழைத்துக் கொள். எங்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட இப்பேரரசு எப்படியாவது போகட்டும். இனிமேல் நான்... நான்...” என்ற அவரால் அதற்கு மேல் வார்த்தைகளைத் தொடர முடியாமல் மௌனமானார். கண்கள் கலங்கின. நீண்ட நேரம் பேசிய களைப்பு மிக, மயக்கத்துடனே அரியணையில் சாய்ந்துவிட்டார். அனைவரும் பதறி. “அரசே.. அரசே..!” என அழைக்க, பதிலில்லாததால் அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மருத்துவர் நாடி பிடித்துப் பார்த்து, “நீண்ட நேரம் பேசியதின் விளைவு இது. வேறென்றும் பயப்படும்படியாக இல்லை” என்று ஒரு மருந்தைக் குழைத்து மாமன்னரின் நாவில் தடவி, “இன்னும் சில நொடிகளில் விழித்துவிடுவார்” என்றார். அப்போது அரண்மனையின் கீழே வாழ்த்து முழக்கம் கேட்டது. என்னவென்று பிரமாதிராசன் முதல் தளத்திலிருந்து கீழே பார்த்தார். பட்டத்தரசியும் இளையராணியும் வந்துவிட்டார்கள். அடடே! இதற்குள் இவ்வளவு மக்கள் கூட்டமா? திருவரங்கன் தோளில் என்ன பலத்த கட்டு? அவர்களை வரவேற்பதற்காகக் கீழ்வாயிலை நோக்கி வேகமாகச் சென்றார் பிரமாதிராசர். “பட்டத்தரசி வாழ்க! இளையராணி வாழ்க!” என்று முழக்கமிட்ட மக்கள் காவலுக்கு நின்றிருந்த வேற்படை வீரர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே வர முயன்றனர். காவல் தலைவன் வாயிலின் குறுக்கே இரும்புத் தடையைப் போடும்படி வீரர்களுக்கு உத்தரவிட்டான். ஆனால், அத்தடையை உடைத்துக் கொண்டு, உள்ளே நுழையும் நோக்கில் அல்லவா மக்கள் இருக்கின்றனர். பிரமாதிராசர் வாயிலின் நடுநாயகமாய் நின்று கொண்டு, கலைந்து செல்லும்படி மக்களைப் பணிவுடன் வேண்டினார். “அரசருக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாக கங்கைகொண்ட சோழபுரமே பேசிக் கொள்கிறது. உண்மையா, பொய்யா என்று அறிய அமைச்சர் அவர்கள் எங்களை அரண்மனைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்றான் கூட்டத்தில் ஒருவன். இதென்ன விபரீதம்! இதற்குள் யார் மக்களைக் குழப்பியிருப்பார்கள்? அரசர் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி கூட, வெளியில் தெரியக் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக அல்லவா இருந்தேன்! அதற்குள் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? என்று சற்றே நிலைகுலைந்த பிரமாதிராசர் காவலைப் பலப்படுத்தும் சூழ்நிலை வந்துவிட்டதையுணர்த்தும் முறையில் மாளிகைத் தலைவனைப் பார்த்தார். அவனும் அங்குமிங்குமாய்ச் சென்று, பரவலாகக் காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர்களை வாயிலுக்கு ஒட்டு மொத்தமாக வந்து நிற்கும்படிக் கட்டளையிட்டான். அதைச் செயலாக்கும் வகையில் வீரர்களும், இரண்டு இரண்டு பேராக, இரும்புத்தடை அருகில் வந்து நிற்கத் துவங்கினர். பட்டத்தரசியின் காதில் அரசர் நன்றாக இருப்பதாக மக்களிடம் சொல்லும்படி மெதுவாய்க் கூறினார் பிரமாதிராசர். மாமன்னரின் தேவியும், மக்களை நோக்கி, “அமைதி... அமைதி...!” என்று கூறினார். அச்சொல்லில் அப்படி என்ன மாயம் இருக்குமோ? உடனே ‘பொட்’டென்று அடங்கி, அரசியார் என்ன சொல்லப் போகின்றார் என்பதை அறிவதற்காக அமைதியுடன் நின்றனர். “அரசர் மேல் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக் கண்டு, நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நினைப்பது போல, அல்லது சில கொடியவர்கள் பொய்யாய் உங்களிடம் பரப்பிய தவறான செய்திகள் போல, மன்னருக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. நன்றாகவே இருக்கின்றார். அலைச்சல் காரணமாக அரச வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மாளிகையினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு நல்ல நாளில் இதே இடத்தில் உங்களை எல்லாம் அவர் நிச்சயம் பார்க்கத்தான் போகின்றார். அதனால் என் வார்த்தையில் நம்பிக்கை வைத்து நீங்கள் அமைதியாய்க் கலைந்து செல்லுங்கள்! இல்லையென்றால் ஓய்வு கொண்டிருக்கும் மன்னருக்கு இது தெரிந்தால், பெரிதும் கவலைப்படுவார். அதனால் அமைதியுடன் நீங்கள் கலைந்து செல்லும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையை முடித்தார் பட்டத்தரசி. “மாமன்னர் வீரராசேந்திரர் வாழ்க! பட்டத்தரசி உலகமுழுதுடையாள் வாழ்க!” என்று முழக்கியபடி மக்கள் அமைதியுடன் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் போகும்வரை புன்னகையுடன் அங்கேயே நின்று கொண்டிருந்த அரசி, கூட்டம் கலைந்ததும் பிரமாதிராசர் பக்கம் திரும்பி “அரசருக்கு...” என்று வினவ... “சீக்கிரம் உள்ளே வாருங்கள்!” என்று பதட்டத்துடன் அவரை அழைக்க, என்ன நடந்துவிட்டதோ? என்ற எண்ணத்துடன் அரண்மனையுள் வேகமாய் நடந்தாள் பட்டத்தரசி. மாவலிவாணராய இருக்கையில் சாய்ந்தபடியிருந்த அரசர், கண்ணை மூடிய நிலையில் இருப்பதைக் கவனித்து ‘மக்கள் சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டதா?’ என்று அச்சம் மிக அருகில் சென்றார். உலகமுழுதுடையாளக் கண்டு, அனைவரும் விலகி வழிவிட்டனர். பதட்டம் நிலவிய அரசியின் முகத்தைக் கவனித்த அரண்மனை மருத்துவர் “பயப்படும்படி ஒன்றும் இல்லை. களைப்பின் மிகுதியால் இலேசான மயக்கம்தான்!” என்றார். அதைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட உலகமுழுதுடையாள், “அரசே, அரசே!” என்று கூப்பிட, இதுவரை மயக்க நிலையிலிருந்த மாமன்னர் மெல்லக் கண் விழித்து, “அரசியா? எப்போது வந்தாய்?” என்றார் பலவீனமான குரலில். “சற்று முன்புதான் வந்தேன்! தங்களுக்கு ஒன்றுமில்லையே?” - பதட்டத்துடன் கேட்டார் அரசி. “ஒன்றுமில்லை... கொஞ்ச நேரத்திற்கு முன்பு சிறிது உணர்ச்சிவயப்பட்டேன்! அதன் விளைவுதான் இதெல்லாம்!” என்று புன்னகைத்து, “ஆமாம் இவர்களுடனேயே நீ வர வேண்டியதுதானே. எதற்குப் பின்தங்கி வந்தாய்?” என்றார். “சோதிடரைப் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டேன். அங்கிருந்து முக்கிய செய்தியும் கொண்டு வந்திருக்கின்றேன்” என்று அரசருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார். “அப்படியா விஷயம்?” என்ற வேந்தர், தோளில் கட்டுடன், அரசியின் அருகில் நின்று கொண்டிருந்த திருவரங்கனைக் கவனித்து, “யார் இந்தப் பிள்ளை... தோளில் எதற்குச் கட்டு?” என்று வினவினார். “அது ஒரு பெரிய கதை. இந்தப் பிள்ளை இல்லையென்றால் நாங்கள் முரடர் கையில் சிக்கி என்ன பாடுபட்டிருப்போமோ!” என்று உடலைச் சிலிர்த்த அரசி, குளக்கரையில் நடந்த எல்லா விஷயங்களையும் தெளிவாகச் சொன்னார் அரசரிடம். அமைச்சர் பக்கம் திரும்பிய சக்கரவர்த்தி, “பார்த்தீர்களா? நான் சொன்னது போல் நடந்துவிட்டது. நல்லவேளை! இந்தப் பிள்ளை இல்லையென்றால் பட்டத்தரசியின் கதி என்ன ஆவது?” என மீண்டும் திருவரங்கன் பக்கம் பார்வையை ஓட்டி, “இவனைப் பார்க்கப் பார்க்க என் மனதிற்கு சந்தோஷம்தான் வருகிறது. வீரப்பொலிவுடன் கம்பீரமாகவே இருக்கின்றான்” என்றார். திருவரங்கன், அதைக் கேட்டு வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டான். “பிரமாதிராசரே! இந்தப் பிள்ளையை எப்போது சோழர் படையில் சேர்த்தீர்? நம்பிக்கைக்கு உரியவன்தானே?” என்று கேள்விகளை அடுக்கினார் சோழச் சக்கரவர்த்தி. “இந்தப் பிள்ளை பல்லவர் குலத்தில் உதித்தவன். காஞ்சி மாநகர் இவனின் சொந்த ஊர். அண்மையில்தான் இவனைப் படையில் சேர்த்தேன். காஞ்சியிலிருக்கும் ஒற்றர் படைத்தலைவனுக்கு இவன் உறவு முறையாக வேண்டும்” என்றார். “அப்படியென்றால் நல்லது!” என்று ஆமோதித்த அரசர் “இம்மாதிரி இளைஞர்களை நிறைய இன்னும் சோழப்படையில் சேர்க்க வேண்டும்” என்று திருவரங்கனை அங்கிருந்து செல்லும்படி குறிப்பால் உணர்த்தினார். அதைப் புரிந்து கொண்டு திருவரங்கனும், அங்கிருந்து அகன்றான். “இந்தப் பிள்ளையைப் பார்க்கப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருக்கிறது! தனி ஒருவனே கையில் ஆயுதம் எதுவுமின்றி கத்தியுடன் முரடர்களைச் சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதனால் இவனுக்குப் பெரும் பொறுப்பைக் கொடுக்கும்படி தளபதிக்கு கட்டளையிடுகின்றேன்” என்றார் வீரராசேந்திரர். அவ்விதம் செய்வதாகத் தளபதி தன்மபாலர் ஆமோதித்தார். “கொஞ்ச நாள் வரை வருத்தத்துடனிருந்த நான் இப்போது தெம்பு பெற்றுவிட்டேன். இதோ நிற்கும் என் தமக்கை மகன் இராசேந்திரன், கடாரத்தை வென்று காம்போசத்தில் நம் ராஜ்ய உறவைப் பலப்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றான். இம்மாதிரி சோழ இளவரசர்கள் நிறையபேர் தோன்றிவிட்டால், ஆபத்து என்பதே இந்த நாட்டிற்கு ஏற்படாது” என்று அதிராசேந்திரர் முகத்தினைக் கவனித்தார் மாமன்னர். இளவரசன் முகம் சோழச் சக்கரவர்த்தியின் பேச்சினால் கருமேகமென இருண்டது. அரசர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பட்டத்து அரசியை அருகில் அழைத்து, “முதலமைச்சருடன் நீ இங்கே வந்துவிடு. தனிமையில் சில விஷயங்கள் பேச வேண்டும்” என்றார். அரச மருத்துவர் தவிர, மற்றனைவரும் தம் தம் அறை நோக்கிச் சென்றனர். அப்படிச் செல்லும் போது... ‘எதற்காக அரசர் என் அன்னையையும், பிரமாதிராசரையும் தனிமையில் பேச அழைக்கின்றார்? பேசுவதற்கு அப்படி என்ன செய்தி இருக்கிறது? ஒருவேளை...? இப்படி இருக்குமோ!’ என்று தன்னையே கேட்டுக் கொண்ட சோழ இளவரசன் பதட்டத்துடன் தன் அறை நோக்கி சிந்தனை வயப்பட்டு நடக்கலானான். ‘என்ன அப்படிப் பேசப் போகின்றார்கள்?’ கோபத்துடனே எழுந்த கேள்வி, அதிராசேந்திரன் அறையெங்கும் ஒலிக்கப் பெறலாயிற்று. ***** கதவைத் திறந்து, வெளியே வந்து, திரும்பவும் அதை மூடினாள் ஒருத்தி. அவள் இளையராணியின் பிரதான தோழியும் அவளின் நம்பிக்கைக்குரியவளுமான ‘அல்லிக்கொடி’ என்ற பெயர் கொண்ட மங்கை. அறையையொட்டியிருந்த வாயில் ஓரத்திலுள்ள மரத்தூணின் மீது, ஒய்யாரமாய்ச் சாய்ந்தபடி எதிரே தெரிந்த நந்தவனத்தைப் பார்க்கலானாள். மூடிய அறைக்கதவை யாரும் திறந்துவிடாமல் பார்த்துக் கொண்டு உள்ளே எவரையும் அனுமதிக்காமல் இருக்கவே, அங்கே நின்று கொண்டிருந்தாள் அல்லிக்கொடி. “யார் அங்கே நிற்பது?” -அதட்டலுடன் இவள் இருந்த திசை நோக்கி குரல் ஒன்று வர, நந்தவனத்திலிருந்து பார்வையை விலக்கினாள். சோழநாட்டுத் துணைத்தளபதி சிறிய தன்மபாலன் வந்து கொண்டிருந்தார். ‘இந்த அரைக் கிழவனுக்கு வேறு வேலையே கிடையாது’ என்று முகம் சுளித்தாள் அல்லிக்கொடி. அதற்குள் சிறிய தன்மபாலர் அருகே வந்துவிட்டதால், சுளிப்பைப் புன்னகையாக்கி, “ஒன்றுமில்லை!” என்றாள். “ஒன்றுமில்லை என்றால்?” என்று மிடுக்காய் இடுப்பில் கையூன்றியபடியே கேட்டார் சிறிய தன்மபாலன். அல்லிக்கொடிக்கு கோபம் கோபமாக வந்தது. ‘என்னை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர்?’ என்று அவரை முறைத்தாள். “அரண்மனையில் பகை ஒற்றர் நடமாடுவதாக எனக்கு செய்தி வந்துள்ளது. அதனால் பாதுகாப்பு முழுவதும் இப்போது என் மேற்பார்வையில் வந்திருக்கின்றது. நான் போகும் இடமெல்லாம் உன்னைப் பார்க்கின்றேன். அப்படி என்ன உனக்கு அங்கெல்லாம் வேலை?” என்று கேட்டார் துணைத்தளபதி. அவ்வளவுதான்! அல்லிக்கொடிக்குச் சினம் மிகுந்தது. “தளபதி அவர்கள் என்னை வீணாகச் சந்தேகிக்கின்றார். இப்போது கூட ‘அம்மா’ சொல்லிவிடட்டும் நான் இந்த சேடி வேலையை விட்டுவிட்டுப் போய்விடுகின்றேன்” என்று விம்மலானாள். “அல்லிக்கொடி! என்ன கேட்டுவிட்டேன்? எதற்கு வீணாய் அழுகிறாய்?” என்று அவர் வினவ, பதில் ஏதும் சொல்லாமல் விம்மலைப் பெரிதாக்கி, ‘ஓ’ என்று உள்ளே இருக்கும் இளையராணியின் காதில் விழும்படி அழலானாள் அல்லிக்கொடி. இளையராணி கதவைத் திறந்து “என்ன அல்லிக்கொடி?” என்றாள். துணைத்தளபதி நடந்ததைச் சொல்ல. “நான்தான் அவளை இங்கே நிறுத்தி வைத்திருந்தேன். ஏனென்றால் நானும் அவரும் உள்ளே முக்கிய விஷயம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் தங்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்று எனக்குப்படுகிறது” - கோபத்துடனே முகத்தில் அறைந்தாற் போல் ‘பட்’டென்று கதவை மூடித் தாழிட்டுக் கொண்டாள் இளையராணி. இடுப்பில் ஊன்றிய கையை எடுக்காமலே இளையராணியின் போக்கில் சிறிது சலனப்பட்ட துணைத்தளபதி, மூடிய கதவைக் கவனித்தபடி சற்று நேரம் நின்று கொண்டிருந்துவிட்டுப் போகும் சமயத்தில், இன்னும் விம்மியபடியிருந்த அல்லிக்கொடியின் மேல் அலட்சியப் பார்வையைச் செலுத்தினார். இப்போது தப்பிவிட்டாய். ஆனால் உன்னைக் கவனிக்கும் காலம் எனக்கு வரத்தான் போகிறது என்று அவ்விடத்திலிருந்து அகன்ற சிறிய தன்மபாலன், ‘விம்முவாள், அழுவாள் பொய்யே’ என்ற வரிகளைத் தனக்குள் கூறிக் கொண்டார். அல்லிக்கொடிக்கு விம்மல் நின்றது. தளபதி போன திசைப் பக்கம் ஒழுங்கு காட்டிவிட்டு, மெல்ல சிரித்தபடி தூணில் சாய்ந்தவாறு நந்தவனத்தைப் பார்க்கத் தொடங்கினாள். உள்ளே- சோழ நாட்டு இளவரசர் அதிராசேந்திரன் இருக்கையொன்றில் அமர்ந்திருக்க, எதிரேயிருந்த பஞ்சணையில் அவரின் மனைவி இளையராணியும், தங்கை இராஜசுந்தரியும் உட்கார்ந்திருந்தனர். “துணைத்தளபதியார் வீணாக என் விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டு வருகின்றார்” என்றாள் இளையராணி. “ஆமாம், நான் கூட பார்த்துக் கொண்டு வருகின்றேன்! அரண்மனையைக் காவலுக்காகச் சுற்றி வருகிறேன் என்று தாம் இருக்கும் பக்கமே அடிக்கடி வருகிறார். சிறிய தன்மபாலருக்கு பெண்கள் பகுதியில் என்ன வேலை?” என்று சினத்துடனே சொன்னாள் இராஜசுந்தரி. இரண்டு பெண்கள் சொல்வதையும் உன்னிப்புடன் கவனித்த அதிராசேந்திரன், “கொஞ்சம் பொறுங்கள்! ஆட்சி என் கைக்கு வரட்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்களுக்குச் சமாதானம் கூறினான். “ஆட்சி உங்களிடம் வருவதற்குள், மறைமுகமாக நாம் செய்யும் செயல்களை அவர் கண்டு பிடித்துவிடுவார்! பிறகு நம் நிலைமை என்னாவது?” என்றாள் இளையராணி. “அரசரிடம் இது பற்றிப் பேசுகின்றேன்!” என்று அரை மனதுடனே சொன்னான் அதிராசேந்திரன். “நீங்கள் என்ன சொல்வது? அவருக்கு மகள் என்ற முறையில் நானே சொல்கிறேன்!” என்றாள் மேலைச்சாளுகிய நாட்டுப் பட்டத்தரசியான இராஜசுந்தரி. “அரசர் உங்களிடம் பாசமாகவே இல்லை. கடார வெற்றி பெற்று வந்திருக்கும் இராசேந்திரன் பேரில்தான் அவருக்கு இப்போது அன்பெல்லாம். கண்ணை மூடுவதற்குள் சோழ அரசுப் பொறுப்பை அந்த வேங்கியானிடம் கொடுத்துவிட்டுப் போகவில்லையென்றால் என் பெயரை மாற்றி வையுங்கள்!” என்றாள் இளையராணி அழுத்தமுடன். அதிராசேந்திரன் இதைக் கேட்டுப் பெருத்த குழப்பத்தில் ஆழ்ந்தான். இருக்கையிலிருந்து எழுந்து, “அவனை எப்படியும் ஒழித்துக்கட்டியே ஆக வேண்டும்” என்றான் உரக்க. “அவனை ஒழிப்பது இருக்கட்டும்! பட்டத்தரசியையும், அமைச்சரையும் தனியாக வரச் சொல்லியிருக்கிறாரே அரசர், அது என்ன விஷயமாக இருக்கலாம்?” என்று தன்னிடம் அதிராசேந்திரனால் தெரிவிக்கப்பட்ட செய்தியைச் சொல்லி இருவரையும் பார்த்தவாறு இளையராணி கேட்க... “அதை அறிந்து கொள்ள நம்மால் முடியுமா? அதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?” என்று பரபரப்புடன் கேட்டான் சோழ இளவரசன். இராஜசுந்தரி சற்று யோசித்தாள். அதிராசேந்திரனும், அதற்கு வழி என்ன என்பது போல அறையைச் சுற்றி சுற்றி வர, கடைசியில் இராஜசுந்தரியே “வழி தென்பட்டுவிட்டது” என்றாள் மகிழ்ச்சியுடன். “என்ன வழி?” என்றான் ஆவலுடன் அதிராசேந்திரன். “பட்டத்தராசியாருக்கென்று தனி பொக்கிஷ அறை இருக்கிறது. அதற்கும், அரசர் இருக்கும் கூடத்திற்கும் ரகசிய வழி ஒன்று போகிறது. அது கூடத்தின் நடுநாயகமாய் அமைந்திருக்கும் பொய்த்தூணில் போய் முடிகிறது. ஆபத்துக் காலத்தில் பட்டத்தரசி அறையிலிருந்து, அந்தப் பொய்த் தூணில் போய் ஒளிந்து கொள்ளலாம். அவ்விதம் ஒளிந்து கொள்ளும் நபர் மூச்சுவிடுவதற்காக தூணின் நடுவிலுள்ள மான் தலையில் ஒரு சிறிய சந்து இருக்கிறது. அதன்மூலம் கூடத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்! இந்த வழி அரசருக்கும், அரசிக்கும் மட்டுமே தெரியும். ஒரு சமயம் மேலைச்சாளுக்கியரின் கை ஓங்கியிருக்கும் போது கங்கைகொண்ட சோழபுரமே என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளை, பொய்த்தூணை எப்படி இடம் பெயர்ப்பது? எப்படி அதில் ஒளிந்து கொள்வது என்பதெல்லாம் அரசர், அரசிக்குச் சொல்லித் தந்தார். அதை மறைந்திருந்து கவனித்த நான் அவர்கள் போனதும் வேந்தர் சொன்ன முறைகளை உபயோகித்துப் பார்த்திருக்கின்றேன். அந்த அனுபவத்தை வைத்து, இப்போது நான் பொய்த்தூணில் ஒளிந்து கொண்டு, என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கின்றேன்” என்றாள் இராஜசுந்தரி. “அருமையான யோசனை! ஆனால் பொக்கிஷ அறை இப்போது உபயோகப்படுத்தாமல் பூட்டியே இருக்கிறதே! சாவி கூட அரசியிடமே இருக்கிறது. எப்படி அதைத் திறப்பது?” என்று கேட்டாள் இளையராணி. “நான் முயற்சி செய்கிறேன்! கிடைத்தால் வெற்றி. இல்லையென்றால் ஆண்டவன் விட்ட வழி!” என்று எழுந்து கொண்டாள் இராஜசுந்தரி. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|