பொன் விலங்கு ஆசிரியர் முன்னுரை கல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு' நாவல் நிறைவெய்திய போது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும். எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது நானே பெரியதொரு முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன். வாசகர் முன்னுரை சமுதாயத்தில் நடைபெறும் அன்றன்றைய நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையை அழகுற இணைத்து எழுதி நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார் ஆசிரியர். மு. அந்நாலன், கள்ளக்குறிச்சி, தெ.ஆ. பொன் விலங்குக் கதையை ஒரு கற்பனை என்றே என்னால் எண்ண முடியவில்லை. கதைகள் காலப்போக்கில் மறையும் தன்மையன. ஆனால் பொன் விலங்கு காவியங்களைப் போல் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் காலப் போராட்டத்தை எதிர் நீச்சலிட்டு நிற்கும். வெ. சீனிவாசன், கொச்சி-4. கதையில் அவர் சிருஷ்டித்துள்ள மோகினி, சத்தியமூர்த்தி கதாபாத்திரங்கள் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள். S. சீனிச்சாமி, சங்கனாச்சேரி. இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக் கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு. மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி. கிருஷ்ணமூர்த்தி, லீட்ஸ் - 6, இங்கிலாந்து. உண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் இறுதி வரை போராடிய சத்தியமூர்த்தியின் பாத்திரம் உள்ளத்தில் அழியா ஓவியம். சமுதாயத்திற்கு இத்தகைய மக்களே தேவை. எழுத்தாணியின் வன்மை உலகறிந்ததொன்று. எனவே சமுதாயத்தினைத் திருத்த இது போன்ற கதைகளே விரும்பப்படுகின்றன. சத்தியமூர்த்தியின் பாத்திரத்தைப் பற்றி நான் எண்ணும் பொழுதெல்லாம் Dr. A.J. Gronin படைத்த 'The Keys of The Kingdom' என்னும் நூலில் வரும் பிரான்ஸிஸ் சிஷோமைத்தான் நினைவு கூர்கிறேன். வே.பா. சந்திரன், பி.எஸ்ஸி. ஹைதராபாத். இந்த மறுமலர்ச்சி யுகத்தில் காவியங்கள் ஏற்படாவிடினும், பொன் விலங்கைப் போல, சமுதாய வழிகாட்டியான நாவல்களே அழகிய காவியங்களின் இடத்தைப் பெற்றன. 'பொன் விலங்கு' பல யுகங்கள் வாழும், வாழ்விக்கும். இரா. நரசிம்மன், பெங்களூர் - 17. இப்படிப்பட்ட சிறந்த ஒரு காவியத்தைப் படைப்பித்துத் தமிழ் மக்களின் எண்ணங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்ட மணிவண்ணன் அவர்களை நான் புகழப்போவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு பூரணியையும் ஒரு அரவிந்தனையும் படைப்பித்து வாசகர்களுக்கு மத்தியில் நடமாட விட்டதின் மூலம் புகழக்கூடிய நிலையிலிருந்து மேலே போய்விட்டார். இரா. சேஷன், சென்னை - 2. அருமையான இரு பெண் படைப்பு. அதில் ஒருத்தி "இன்பம்" என்னவென்று அறியும் முன்னே இறந்துவிட்டாள். மற்றொருத்தியை இன்பத்தை அனுபவிக்க முடியாமலே செய்துவிட்டார் மணிவண்ணன். ச. சுபாஸ் சந்திரன், நெல்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன். தூய்மையான காதலைத் தியாகம் செய்த பாரதி, அறிவுத்திறன் படைத்த பூபதி, உயர்ந்த கொள்கையுடைய உண்மை நண்பன் குமரப்பன் ஆகிய ஒவ்வொரு சிருஷ்டியும் ஆசிரியரின் கற்பனை வளத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன. பி.ஆர். கிருஷ்ணன், சென்னை - 12. தெளிந்த நீரோடை போன்ற சரளமான நடையில், தமிழ் மணம் கமழ நவயுகக் கருத்துக்களை முன் வைத்து நல்லதோர் இலக்கியத்தைப் (பொன் விலங்கை) படைத்துத் தந்த ஆசிரியர் மணிவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஏரல், எஸ்.ஏ. சலாம், தனுஷ்கோடி தென்னாட்டிலே மனித குலத்தில் இறுதி முடிவு வரை அரவிந்தன்களும் சத்தியமூர்த்திகளும் ஆசிரியர் மணிவண்ணனின் உருவிலே மூலைக்கு மூலை தமிழ் மொழியின் புகழை மேன்மேலும் பரப்ப உதவுவார்கள் என்பதிலே ஐயமில்லை. பெரிய பெரிய பண்டிதர்களால் கூடக் கூற முடியாத அரும் பெரும் தத்துவங்களையும், கலையுணர்ச்சிகளையும் மிக மிக எளிதாகப் பாமரரும் அறியும் வண்ணம் அழகுத் தமிழிலே இந்த நாவல் வடிவிலே அளித்து விட்டார் மணிவண்ணன். டி.டி. துரைராசன், மேற்கு மாம்பலம். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|