48

     சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக உண்ணி என்ற பூச்சி அவற்றின் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல் சமூகத்தில் நல்லவர்களின் பொதுநலனை உறிஞ்சிக் கெடுக்கும் சில கெட்டவர்களும் மிக அருகிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

     பூபதி உயிரோடிருந்த வரையில் தன் மேல் வெறும் பொறாமையோடிருந்தவர்கள் எல்லாரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக் கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. முதல்வர், துணை முதல்வர், ஹெட்கிளார்க் எல்லோரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு காரணத்தால் அவனுக்குக் கெடுதல் செய்யக் காத்திருப்பவர்கள்தான். புதிய நிர்வாகியாகிய மஞ்சள்பட்டியாரோ அவனை அறவே வெறுத்து மனம் கொதித்துக் கொண்டிருப்பவர்.

     கெடுதல் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருப்பவர்களுக்குப் பயந்தும், நயந்தும் அமைவதனால் சமூகத்துக்குப் பொதுவான நன்மை எதுவும் கிடையாது. சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக 'உண்ணி' என்ற பூச்சிகள் அந்த மாடுகளின் உடலிலேயே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். அதைப் போல் சமூகத்தில் உள்ள நல்லவர்களின் பொதுவான நலத்தை உறிஞ்சிக் கொழுப்பதற்குச் சுயநல உண்ணிகளாகிய சில கெட்டவர்களும் மிக அருகில் இருப்பார்கள். அப்படிக் கெட்டவர்கள் மல்லிகைப் பந்தலிலும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி வியப்படைந்து விடவில்லை. அவன் கல்லூரி முதல்வரை அவருடைய அறையில் போய்ச் சந்தித்துவிட்டு வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் மறுபடி ஊழியன் தேடி வந்து அவனிடம் கொடுத்து விட்டுப் போன உறையில் இரண்டு பெரிய கடிதங்கள் இருந்தன. ஒரு கடிதத்தில் கல்லூரி நிர்வாகக் குழுவும் அதன் தலைவரும் முதல்வரும், சத்தியமூர்த்தி 'உதவி வார்டனாக' இருந்து இதுவரை தன் கடமைகளைச் சரிவரப் புரியவில்லை என்று கருதுவதாகவும், அவனை அந்தப் பதவியிலிருந்து உடனே நீக்குவதாகவும், அவனிடம் உள்ள விடுதி சம்பந்தமான காரியங்களை வார்டனிடம் 'சார்ஜ்' ஒப்படைத்து விட்டு விலகிவிட வேண்டும் என்பதாகவும் கண்டிருந்தது. இன்னொரு கடிதத்தில் ஏற்கெனவே முதல்வர் அவனிடம் கேட்டிருந்த 'எக்ஸ்பிளநேஷனுக்கு'ச் சரியான மறுமொழி கொடுக்கப்படவில்லை என்றும் அடுத்த நாள் காலைக்குள் இன்ன இன்ன குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்திய மறுமொழி கொடுத்தாக வேண்டுமென்றும் கண்டிருந்தது. சூழ்நிலை மிகவும் மனம் வெறுக்கத் தகுந்த முறையில் உருவாகிவிட்டதைப் பார்த்து அவன் கவலைப்படவில்லை. மறுநாள் அவன் கல்லூரி முதல்வருக்கு எழுதிய மறுமொழிக் கடிதம் இப்படி ஆரம்பமாகியிருந்தது.

     "என்னுடைய நினைவு, சொல், செயல் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உற்று ஆராய்ந்து கடுமையாகத் தாக்குவதற்கும், பாராட்டுவதற்கும், குத்திக் காட்டுவதற்கும் எனக்குள்ளேயே பாரபட்சமற்ற விமரிசகன் ஒருவன் இருக்கிறான். அந்த விமரிசகனுக்குத்தான் மனச்சாட்சி என்று பெயர். மற்றவர்களுடைய பொறாமையும் காழ்ப்பும் நிறைந்த விமரிசனத்தை விட என்னுள்ளேயே இருக்கும் இந்த உண்மையான விமரிசகனுடைய கருத்துக்குத்தான் நான் அதிகமான மதிப்பளிக்க முடியும். அப்படி மனச்சாட்சிக்கு மதிப்பளிக்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததில்லை; செய்ய நினைத்ததுமில்லை. விரிவுரையாளனாகவும், விடுதி உதவி வார்டனாகவும் இருந்து, நான் இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு விநாடியும் என்னுடைய காரியங்களை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நன்றாகத்தான் ஆற்றியிருக்கிறேன். என்னை உதவி வார்டன் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக நிர்வாகக் குழுவின் சார்பில் எழுதியிருக்கிறீர்கள். விலக்கவும், நீக்கவும் உங்களுக்குத் தாராளமாக அதிகாரம் உண்டு. எல்லாவற்றையும் செய்து முடிக்கும் அதிகாரமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இதைச் செய்திருக்கிறீர்கள்..." என்று தொடங்கி அவன் எழுதியிருந்த பன்னிரண்டு பக்கக் கடிதம் மறுநாள் காலை முதல்வருடைய மேஜைக்குப் போய்ச் சேர்ந்தது. தற்செயலாக அன்று காலை அவன் கல்லூரிக்குள் நுழைந்த போது - காலையில் சர்க்கரை போடாத கசப்புக் காப்பியை விடுதியில் வழங்கியதாகவும் - சர்க்கரையைக் குறைத்துச் செலவழிக்க வேண்டுமென்று வார்டன் கூறியிருப்பதால் விடுதியின் ஊழியர்களை வற்புறுத்தி வினாவிய போதும் அவர்கள் சர்க்கரை தர மறுத்ததாகவும் சில மாணவர்கள் குறை தெரிவித்தார்கள். மாணவர்கள் கல்லூரி உணவு விடுதி சம்பந்தமான எந்தக் குறையை வந்து தெரிவித்தாலும் அதை சத்தியமூர்த்தி பொறுப்பாக உடனே நிவர்த்திச் செய்து மாணவர்களின் மனக்கசப்பைப் போக்கி விடுவான். அதனால் மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு வந்து எதை வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறிவிடும் என்கிற முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஆனால் இன்றோ தேடி வந்திருந்த மாணவர்களே கேட்டுத் திகைக்கும்படியான ஓர் உண்மையை அவர்களிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.