15
இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டு பிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்கள். 'இந்த வீட்டில் நீங்கள் மட்டுமே எடுத்து வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று உங்களுக்காகவே காத்துக் கிடக்கிறது' என்ற மோகினியின் வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. அவளுடைய நீர் பெருகும் விழிகளைக் காணும் போதெல்லாம் 'ஒரு தூரத்து நண்பருக்கு' என்ற தலைப்பில் தொகுக்கப் பெற்றிருக்கும் கவி பைரனின் ஆங்கிலக் கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தான் அவன். 'நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்தபோது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்று ஆரம்பமாகிற அந்தப் பாடல் 'கண்ணீராலும் அமைதியாலுமின்றி இதை நான் எப்படி வரவேற்க முடியும்?' என்ற கேள்வியோடு முடியும். 'வென் வி டூ பார்ட்டெட் - இன் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற ஆரம்ப வரிகளும் 'ஹௌ ஷுட் ஐ கிரீட் - த்தீ வித் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற இறுதி வரிகளும் அதே கவி வடிவத்தோடு அவன் இதயத்தில் மீண்டும் மீண்டும் பதிந்து உறைகிற ஞாபகமாகச் சுழன்றன. பொன்னுக்கும் பொருளுக்கும் கடன்படுவதை விடத் தூய்மையான அன்புக்கு அதிகமாகக் கடன்பட வேண்டியதன் அவசியம் இப்போது அவனுக்குப் புரிந்தது. ஊருக்குப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்த இடத்தில் அன்புக்குக் கட்டுப்பட்டு அதிக நேரம் உட்கார்ந்து விட்டதை உணர்ந்தான் அவன். எந்த இடத்தில் பிறரை வெற்றி கொள்ள முடிந்த தூய்மையான அன்பு பிறந்து பொலிந்து நிற்கிறதோ அந்த இடத்தில் மனிதனுடைய பிடிவாதம் தோற்றுப் போய்விடுகிறது என்பது உண்மைதான். மோகினியின் அன்பு சங்கீத விநாயகர் கோவில் தெருவிலிருந்த அந்தச் சிறிய வீட்டில் பிடிவாதமாக அவனைப் பிடித்து உட்காரவைத்து விட்டது. முதலில் அந்தத் தெருவிற்குள் நுழைவதற்கே அவன் கால்கள் கூசின. அப்புறம் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு அவன் கால்கள் தயங்கின. இறுதியில் அத்தனை தயக்கத்தையும் அவள் வென்றாள். இருள் தூங்கும் கூந்தல் அவிழ்ந்து பெருக - அப்படிப் பெருகும் எல்லையிலாப் பேரழகுக்கு ஒரு தடையிட்டுக் கட்டினாற் போல் பட்டு ரிப்பனால் கட்டி, அந்தக் கருமை வெள்ளத்தின் அலைகளுக்குள்ளிருந்து தானே பூத்துச் சரிந்தது போன்ற ஒரு கொத்துப் பூவோடும் புன்னகை பூத்த முகத்தோடும் அவள் வந்து நின்ற போது அவனும் தன்னை மறந்து நின்று விட்டான். மோகினி என்று அவளுக்கு இசைவாகப் பெயர் வைத்தவர்களை மறுமுறையும் இதயபூர்வமாக வாழ்த்தினான் அவன். வாசலில் நின்றது, இருந்தது, தயங்கியது, உள்ளே போய் உட்கார்ந்தது, சிற்றுண்டி காப்பி அருந்தியது, பேசியது எல்லாம் 'நானா இப்படிச் செய்தேன்?' 'நானா இப்படிச் செய்தேன்?' என்று அவன் தன்னைத்தானே நம்பி ஒப்புக் கொள்ள முடியாத காரியங்களாக இருந்தன. 'நான் எப்படி இவ்வாறு நெகிழ்ந்தேன்?' என்று அவன் தன் இதயத்தைத் தானே கேட்டுச் சோதித்துக் கொள்ளவும் முடியாதபடி மனமே அந்த நெகிழ்ச்சியை விரும்பி அதன் பக்கமாகச் சாய்ந்திருந்தது. அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே கண்ணீரும் மௌனமுமே நிரம்பியிருந்தன. 'கண்ணீராலும் மௌனத்தாலும் அல்லாமல் இதை நான் வேறு எந்தவிதமாக ஏற்றுக் கொள்வேன்?' என்ற கவி பைரனின் கவிதை வரிகளைத் தான் அவனால் மீண்டும் சிந்திக்க முடிந்தது. அவளோ அவனுடைய இதயத்தின் நெகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்படியான வேறொரு வேண்டுகோளுடன் நின்றாள். "நீங்கள் ஊருக்குப் போவதற்கு முன் நான் உங்களை இன்னொருமுறை சந்தித்து மனம்விட்டுப் பேச வேண்டும்." சொற்களால் பேசுவதைவிட நீர் பெருகும் கண்களாலும், மௌனத்தாலுமே அதிகமாகத் தன் அந்தரங்கத்தைப் பேசினாள் அவள். மௌனத்தினாலும் வெறும் பார்வையினாலுமே சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்தவர்களுக்குச் சொற்களால் பேசுவதா பெரிய காரியம்? ஆனால் சொற்களால் பேசுவதற்கு ஒன்றுமே மீதமில்லாததைப் போல் அப்போது அவர்கள் இருவருமே மௌனத்தால் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல பூவுக்கு அதன் நிறமும் மணமும் சேர்ந்தே அழகாயிருப்பதைப் போல் துயரமும் மகிழ்ச்சியும் பாதி பாதியாகக் கலந்த மௌனமாயிருந்தது அது. ஒருவருக்கொருவர் முகத்துக்கு முகம் இமையாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையில் தனியான மகிழ்சியும் இல்லை; தனியான துயரமும் இல்லை. இரண்டுமே கலந்திருந்தது. எந்த விதமாகக் கலந்தால் அழகோ அப்படியே கலந்திருந்தது.
அந்த அழகிய மௌனத்தைச் சத்தியமூர்த்திதான் முதலில் கலைத்தான்.
"நீங்கள் அன்று சித்திரைப் பொருட்காட்சியில் ஆண்டாள் நடனத்துக்குப் பின்னால் சில சில்லறை நடனங்கள் ஆடினீர்களே; அவற்றை எனக்குப் பிடிக்கவில்லை. பரநாட்டியத்துக்கு தொடர்ச்சியாக இவற்றை ஆடும்போது பரத நாட்டியத்தின் கௌரவத்தையே இவை கெடுத்து விடுகின்றன. நல்ல மரம் வளர்ந்த பின் அதைச் சில புல்லுருவிகளும் பற்றிப் படர்வது போல் ஒவ்வொரு கலையும், தான் வளரும் போது தன்னைச் சுற்றித் தன் கீழே இப்படிச் சில கலைகளையும் வளரவிட்டு விடுகிறது. கலைகளின் தரத்தைக் காக்க விரும்புகிறவர்கள் இந்தக் கலைகளைக் களைய வேண்டும்." "உண்மைதான்! எனக்கும் அப்படிப்பட்ட சில்லறை நடனங்களைப் பிடிக்கவில்லை. எனக்கு இதைக் கற்றுக் கொடுத்த வாத்தியார் அடிக்கடி, 'இந்தக் கலை வெறும் தெருக்கூத்து இல்லையம்மா! இது சரசுவதியோட இலட்சணம்' என்று சொல்வார். 'நீ கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையேறி ஆடும்போது உன்னால் ஆளப்படுகிற கலை எதுவோ அந்தக் கலையின் அழகு தான் மக்களைக் கவர வேண்டுமேயொழிய உன் உடலின் அழகு மட்டுமே மக்களைக் கவர்ந்து நீ ஆள்கிற கலையின் அழகு மக்களைக் கவர்வதற்குத் தவறிவிடக் கூடாது. அப்படித் தவறினால் அது பூப்பொட்டலத்தைச் சுற்றி வைத்திருந்த இலையைக் கூந்தலில் வைத்துக் கொண்டு பூவைத் தூர எறிவது போல் நோக்கம் பிறழ்ந்த கலையாகி விடும்' என்றும் வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். உயர்ந்த தரத்துக் கலையைத் தெருக்கூத்தாக மாற்றிக் கேவலப்படுத்தக் கூடாது என்பதுதான் என் அபிப்பிராயம். ஆனால் நான் எந்தக் கலையை ஆள்கிறேனோ அந்தக் கலையை என் விருப்பப்படி ஆளமுடியாமல் அம்மாவும் கண்ணாயிரமும் ஏதேதோ வியாபாரத் திட்டம் போடுகிறார்கள். அதுதான் சொன்னேனே, பல வகையான காரணங்களால் நான் நினைக்கிற உயரத்துக்கு மேலே ஏறிப் போய் என்னால் வாழ முடியாமலிருக்கிறது. மனத்தினால் மட்டும்தான் நான் வாழ்கிறேன்." அவள் முகத்தையே பார்த்திருந்த சத்தியமூர்த்திக்கு அப்போது அவள் கூறியவற்றையெல்லாம் நம்பாமல் இருக்க முடியவில்லை. இரயிலில் முதன் முதலாக அவளைச் சந்தித்த தினத்தன்று, அந்த இரவில் அவளுக்கும் அவள் தாய்க்கும் நிகழ்ந்த உரையாடலைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். அவளுடைய மனநிலையும், அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும் அவனுக்கு விளங்கின. "அக்கா! படங்களுக்குப் போடறதுக்கு மல்லிகைப் பூமாலை வந்திருக்கு..." என்று பூக்காரன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போன கூடையோடு சிறுவன் உள்ளே வந்தான். மோகினி அந்தக் கூடையை வாங்கி மாலைகளைப் பிரித்தாள். திடீரென்று அந்த வீட்டுக் கூடமே மிகப் பெரிய மல்லிகைத் தோட்டமாகிப் பூத்துக் குலுங்குவது போல் நறுமணம் கமழ்ந்தது. அங்கிருந்த சிறிய ஸ்டூல் ஒன்றைச் சுவர் ஓரமாக நகர்த்திப் போட்டுக் கொண்டு அவளுடைய கைகளால் அந்தச் சிறுவனிடமிருந்து மாலையை வாங்கிச் சூட்டும் நளினத்தைச் சத்தியமூர்த்தி கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மேலே பின்புறத்துச் சுவரில் ஒரு முருகன் படம் மாட்டியிருந்தது. அந்தப் படத்துக்கு அவள் மாலையைச் சூட்ட வந்த போது மட்டும் வசதியாக நின்று கொண்டு அவள் மாலையைச் சூட்டுவதற்குத் தான் இடையூறாக இருக்கலாகாது என்ற எண்ணத்தினால் சத்தியமூர்த்தி எழுந்து விலகி நின்றான். படத்துக்கு மாலையைச் சூட்டிவிட்டுத் தான் கீழே இறங்கிய பின்பும் அவன் விலகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "நீங்கள் உட்காரலாம். ஏன் நிற்கிறீர்கள்?" என்று அவள் நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள். பழையபடி உட்கார்ந்தான் அவன். அப்படி உட்கார்ந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. மேலேயிருந்த படத்தின் ஆணிகளில் சரியாகப் பதியாததனாலோ என்னவோ, முருகன் படத்திலிருந்த மாலை அப்படியே கழன்று 'இந்த இடத்தில் இப்படித்தான் விழவேண்டும்' என்று சொல்லி வைத்து விழுந்தாற் போல சத்தியமூர்த்தியின் கழுத்தில் வந்து விழுந்தது. ஒரு சிறிதும் எதிர்பாராதபடி நேர்ந்த இந்த நிகழ்ச்சியால் ஏன் அடையவேண்டும் என்று புரியாத ஒருவிதமான அதிர்ச்சியும் அதே ரீதியில் அடைந்த ஒருவிதமான மகிழ்ச்சியுமாகப் பதறிக் கொண்டே அந்த மாலையை அவன் கழற்ற முற்பட்டபோது இரண்டு பூக்கரங்கள் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு அந்த மாலையை அவன் கழற்ற விடாமல் தடுத்தன. "கழற்றாதீர்கள். இப்படியே இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது" என்று உணர்வு நெகிழ்ந்த குரலில் அவள் அவனை வேண்டிக் கொண்டாள். ஆயினும் அவள் கைகளைத் திமிறிக் கொண்டு அந்த மாலையை அவசர அவசரமாகக் கழற்றி வைத்துவிட்டான் அவன். அப்படிக் கழற்றி வைத்துவிட்டாலும், அந்த இடத்தில் இன்னும் அந்த மாலையோடு சேர்ந்து அவன் எப்படித் தோன்றுவானோ அப்படியே தோன்றுவதாகப் பாவித்துக் கொண்டு பார்ப்பதைப் போல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மோகினி. "நான் புறப்படுகிறேன். நேரம் அதிகமாகிவிட்டது" என்று மெல்ல எழுந்தான் சத்தியமூர்த்தி. "நீங்கள் புறப்படுவது இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோள் என்ன ஆயிற்று? ஊருக்குப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றேனே...?" "அவசியம் பார்த்தாக வேண்டுமோ?" "அதில் சந்தேகமென்ன? நீங்கள் இங்கிருந்து புறப்படுமுன் கண்டிப்பாக உங்களை இன்னொரு முறை சந்தித்தாக வேண்டும்." எதற்காக அந்தச் சந்திப்பை அவள் வேண்டுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறவனைப் போலச் சத்தியமூர்த்தி அவளுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவள் அந்தப் பார்வைக்கு நாணி ஒசிந்து போய்ப் புன்னகை புரிந்தாள். "நீங்கள் இவ்வளவு வற்புறுத்திச் சொல்கிற போது நான் எவ்வாறு மறுக்க முடியும்? ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால் மறுபடியும் உங்களைப் பார்த்துவிட்டுப் போக முயல்கிறேன்" என்று கூறி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் அவன். மோகினியும் அந்தச் சிறுவனும் வாசற்படி வரை வந்து அவனை வழியனுப்பினார்கள். மிகுந்த நேரம் அதிக சிரத்தையோடு உட்கார்ந்து பேசிப் பழகி ஆறுதலும் அநுதாபமும் கூற வேண்டிய ஓர் உறவை வேகமாக முறித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாற் போன்ற உணர்ச்சி தான் அப்போது அவனுக்கு இருந்தது. படத்திலிருந்து தவறி விழுந்த மாலையைக் கழுத்திலிருந்து கழற்றவிடாமல் தடுத்த அவளுடைய பட்டுக் கைகள் இன்னும் தன் தோள்களிலேயே பதிந்து இருப்பது போல் உணர்ந்தான் அவன். குமரப்பனுடைய அறை இருக்கிற இடத்துக்குப் போகிற வரை அவன் மதுரையின் வீதிகளில் நடந்து போனான் என்பதை விட, நிகழ்ந்தவை என்ற இனிய ஞாபகங்களின் மேல் மிதந்து, நிகழ இருப்பனவற்றுக்கு ஓர் அவசரத்தைப் படைத்துக் கொண்டு போனான் என்பதுதான் பொருந்தும். மனத்தில் குழப்பமோ சிக்கலோ இல்லாமல் தெளிவான எண்ணங்கள் ஓடும்போது நடையும் ஓட்டமாக இருப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். எண்ணங்களில் சூடேறிச் சிந்தனையோடு நடந்து போகிற பல சமயங்களில் நடப்பதே ஞாபகமில்லாமல் பறந்திருக்கிறான் அவன். இன்றும் அப்படிப் பறந்து போய்த்தான் அவன் குமரப்பனுடைய அறையை அடைந்திருந்தான். அவன் போகும் போது குமரப்பன் ஏதோ ஒரு கார்ட்டூன் படத்துக்காகப் பென்சில் வரைபடம் (ஸ்கெட்ச்) போட்டுக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் அப்படியும் இப்படியுமாகக் கோடுகள் இழுத்து அழித்த பின், "இந்தப் பாழாய்ப் போன பிரமுகர்... வாழ்க்கையில் தான் சரியான வழிக்கு வராமல் திமிறித் திமிறிப் போய்க் கொண்டிருந்தார் என்றால் படத்திலுமா அப்படி இருந்து தொலைக்க வேண்டும்? நானும் தான் அரை நாழிகையாகக் கோடிழுத்துப் பார்க்கிறேனடா சத்யம்; ஒரு கோட்டிலுமே பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கிறார் இவர்" என்று கூறிச் சரியாக வராத அந்தக் கார்ட்டூனைத் தூக்கி எறிந்தான் குமரப்பன். "சரி! நாம் புறப்படலாம் வா... இந்தப் பிரமுகரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். திரும்ப வந்த பிறகாவது இவர் வழிக்கு வருகிறாரா என்று பார்க்கிறேன்" என்று கையில் இருந்த பென்ஸிலையும் அந்தக் காகிதத்தின் மேல் வெறுப்போடு வீசிவிட்டுச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் குமரப்பன். நண்பர்கள் இருவரும் கீழவாசலுக்குப் போய் அம்மன் சந்நிதி முன்புறம் உள்ள சில துணிக்கடைகளில் படியேறி இறங்கினார்கள். துணிமணிகளை வாங்கிக் கொண்டு அவர்கள் சந்நிதி முகப்பில் நடந்த போது கோயிலுக்குள் போவதற்காகக் கண்ணாயிரம் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். நெற்றி நிறையத் திருநீறு துலங்க மார்பில் சட்டையோ, பனியனோ இல்லாமல் பளபளவென்று மின்னும் ஒரு பட்டு அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு பரம பக்தராகக் கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் கண்ணாயிரம். "பார்த்தாய் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே குமரப்பனைக் கேட்டான் சத்தியமூர்த்தி. "ஆகா! பார்க்காமல் விடுவேனா? தாராளமாகப் பார்த்தேன். நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திக்குக் கவசமாயிருந்து அந்த நல்லுணர்வைக் காத்தார்கள். இந்தக் காலத்திலோ ஒழுக்கமும் நேர்மையுமின்றி வாழும் சிலருக்குக் கூடத் தங்களைக் காத்துக் கொள்ளும் ஒரு கவசமாகப் பக்தி பயன்படுகிறது. அவர்கள் பக்திக்குக் கவசமாக இருந்து அதைக் காத்தார்கள் என்றால் இவர்கள் பக்தியை ஒரு கவசமாக அணிந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்." "சரியாகச் சொல்லிவிட்டாய், குமரப்பன்! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லோரிடமும் கடுமையாகவும் முறையின்றியும் நடந்து கொண்டே தெய்வத்தினிடம் மட்டும் எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொள்வதாகப் பாவிக்கிறவர்களைத் தெய்வம் எப்படி மன்னிக்க முடியும்?" "மன்னிப்பதால் பெருமைப்படலாம். ஆனால் மாற்றியமைப்பதால் மட்டுமே திருப்திப்பட முடியும். கண்ணாயிரத்தைப் போல் பொய்யாக வாழ்கிறவர்களும் பக்திக்கோலம் பூண்டு பரமபக்தராகக் கோவிலுக்கு வருகிறார்கள். இதயபூர்வமான பக்தியைத் தவிர வேறு எந்தக் காணிக்கையையும் சுமந்து கொண்டு வரமுடியாத பல்லாயிரம் ஏழைகளும் கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலுக்கு வருவதைக் காரணமாக வைத்தும் சமூகத்தில் நல்லவர் - கெட்டவர்களைப் பிரித்துக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது பார்த்தாயா? இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்களடா சத்தியம்!" "இந்த நூற்றாண்டில் சமுதாயத்தின் பொதுவான சொத்து எதுவாயிருக்கிறது என்று பார்த்தால் பெரிய ஊர்களில் பரவலான கோழைத்தனமும் சிறிய ஊர்களில் பரவலான முரட்டுத்தனமும் தான் நிரம்பிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும் போது நல்லது கெட்டது தெரிந்தவர்கள் குறைவாயிருப்பதில் ஆச்சரியம் என்ன?" என்று குமரப்பனை எதிர்த்து விவாதம் செய்தான் சத்தியமூர்த்தி. இருவரும் பேசிக் கொண்டே அந்திக் கடைப் பொட்டலுக்கருகே மீனாட்சி பூங்காவுக்குள் போய் உட்கார்ந்தார்கள். சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் மனம் உருகிக் கூறலானான்: "இனிமேல் இப்படி நாம் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாமற் போய்விடுமே? எப்போதாவது கல்லூரி விடுமுறைகளின் போது நான் மதுரைக்கு வந்தால் தான் உண்டு. ஊரைப் பிரிந்து போவதை விட உன்னைப் பிரிந்து போவதுதான் எனக்குப் பெரிய வேதனை குமரப்பன்! முயன்றால் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் எல்லா இடத்திலும் கிடைத்துவிடும். ஆனால் மனம் விட்டுப் பழகுவதற்குச் சாத்தியமான நண்பர்கள் எல்லா இடத்திலும் கிடைக்க மாட்டார்கள்." "கவலைப்படாதே, சத்யம்! கடிதங்களால் சந்தித்துப் பேச முடியும் நாம். நான் அன்று ஒரு நாள் சித்திரைப் பொருட்காட்சி முடிந்து திரும்பிய போது கூறியது உனக்கு நினைவு இருக்குமென்று எண்ணுகிறேன். வழி உண்டாக்கிக் கொண்டு நடக்கிறவனுக்கு எங்கே போனாலும் நல்ல நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான் குமரப்பன். "ஆயிரம் சொல், குமரப்பன்! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னைப் போல் இன்னொரு நண்பன் எனக்குக் கிடைப்பான் என்று இனி நான் எதிர்பார்க்க முடியுமா? நீ மிகவும் அதிசயமானவன்..." "அதெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழாதே. இப்படி இன்னும் எத்தனை அதிசயமானவர்களைச் சந்திக்கப் போகிறாயோ? வாழ்க்கையில் ஒவ்வொரு பெரிய அநுபவமும் அதற்கு முந்திய அநுபவங்களை ஞாபகத்தில் மங்கச் செய்து விடுவது வழக்கம். என்னுடைய நினைவையும் மங்கச் செய்து விடும்படியான பெரிய அநுபவங்கள் உன் வாழ்க்கையில் போகப்போக வரும். அநுபவங்கள் முடிச்சுப் போடுவது போலத்தான், இருக்கும் போதே முந்திய முடிச்சைத் தளர்த்திவிட்டு இறுகும். என் அநுபவத்தில் பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய பெரிய அநுபவங்களை நீ அடைய அடையக் 'குமரப்பன்' என்ற கார்ட்டூனிஸ்ட்டை மறந்தாலும் மறந்து விடுவாய்... யார் கண்டார்கள்?" "அப்படிச் சொல்லாதே, குமரப்பன்! உன்னை மறக்கக் கூடாதென்பது என் தவம். அது ஒரு போதும் வீணாகாது" என்று சத்தியமூர்த்தி உறுதிதொனிக்கும் குரலில் நண்பனிடம் கூறினான். மறுநாளும் மாலையில் நண்பர்கள் இருவரும் சந்தித்து நெடுநேரம் பேசினார்கள். அதற்கு அடுத்த நாளும் பேசினார்கள். சத்தியமூர்த்தி, ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க அவர்கள் சந்தித்துப் பேசும் நேரமும் வளர்ந்தது. ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முதல் நாள் மாலை குமரப்பனைத் தேடிச் செல்லும் போதே மோகினியிடம் சந்திக்க வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்ள மோகினியிடம் சென்றதையும் அப்படிச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றையும் குமரப்பனிடம் சொல்வதற்கு வாய்க்கவில்லை. ஆனால் குமரப்பனாகவே நடுவே ஒரு நாள் அவளைப் பற்றி சத்தியமூர்த்தியிடம் சில வார்த்தைகள் பேசியிருந்தான். "அந்தப் பெண்ணுக்கு அவள் மேற்கொண்டிருக்கும் கலைத்துறையில் நல்ல எதிர்காலமும் புகழும் இருக்கின்றன. அந்தக் கலையை உயர்ந்த தரமாகவும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கண்ணாயிரம் குறுக்கே புகுந்து பாழாக்கிவிடாமல் இருக்க வேண்டும். இவன் ஏதோ மஞ்சள்பட்டியார் தலையைத் தடவி இரண்டு மூன்று லட்ச ரூபாய் முதல் போடச் சொல்லி 'மூன்லைட் பிக்சர்ஸ்' என்றோ 'அமாவாசை பிக்சர்ஸ்' என்றோ படத் தயாரிப்புக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறானாம். மோகினியும் பார்க்க இலட்சணமாக இருக்கிறாள். அவளுடைய அம்மாக்காரி கண்ணாயிரம் சொல்கிறபடி தலையாட்டுகிறாளாம். தங்க விக்கிரகம் போலப் பார்க்கிற எவனுக்கும் விரசமாக எந்த எண்ணமும் தோன்ற இடம் இல்லாதபடி ஏதோ நல்ல நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது அந்தப் பெண். சினிமாவில் நடிக்கப் பண்ணுகிறேன் என்று கண்ணாயிரம் பாழாக்கி விடப்போகிறான். கண்ணாயிரம் எமகாதகன். யார் பணத்தையோ முதலாகப் போட்டு, யார் அழகையோ விளம்பரமாகக் காண்பித்துத் தான் பெரிய மனிதனாகிக் கடைசியில் மற்ற இருவரையும் நடுத்தெருவில் நிற்கும்படி செய்து விடுவான். இந்த விவரத்தையெல்லாம் அந்தப் பெண்ணுக்கோ, அவள் தாய்க்கோ யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்? பாவம்! வழிகாட்டுகிறவர்கள் இல்லாத அநாதைத் திறமைகள் எல்லாம் இந்த நாட்டில் யார் யாருக்கோ பயன்பட்டு வீணாகி அழிய வேண்டும் என்பதுதான் நியதி போல் இருக்கிறது. கண்ணாயிரம் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக என் காதில் செய்திகள் விழுகின்றன. இப்படிச் செயல்கள் கண்ணாயிரத்துக்குப் புதுமையில்லை. இப்படிச் செயல்களாலேயே வளர்ந்து வாழ்கிறவர் அவர். இந்தக் கொடுமையைப் புரிந்து கொள்ளாமல் மாட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் பாடுதான் பரிதாபம். மஞ்சள்பட்டியாரைப் பற்றி நான் கவலையோ, அநுதாபமோ படமாட்டேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கும் இதெல்லாம் வேண்டியதுதான். தேவைக்கதிகமான வெள்ளைப் பணத்தையும், கறுப்புப் பணத்தையும் வைத்துக் கொண்டு 'என்ன செய்யலாம், என்ன செய்யலாம்' என்று துறுதுறுத்துத் திரிகிறவர்கள் கண்ணாயிரத்தினிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் மோகினியைப் போன்ற அபலைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்று குமரப்பன் கூறியிருந்தான். சத்தியமூர்த்தியாவது ஒரு நாகரிகத்துக்குக் கட்டுப்பட்டுக் கண்ணாயிரத்தை அவர் இவர் என்று மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசுவான். குமரப்பன் அந்த மரியாதையும் கொடுக்கமாட்டான். கண்ணாயிரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஏக வசனத்தில்தான் வாக்கியங்கள் வரும் அவனுக்கு. சத்தியமூர்த்தி மறுநாள் மாலை இரயிலில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இருந்ததால் மோகினியிடம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்தபடி ஊருக்குச் செல்வதற்கு முந்திய தினமாகிய அன்று அவளைக் காணச் சென்றான். குமரப்பன் கண்ணாயிரத்தைப் பற்றிச் சொல்லி எச்சரித்த செய்திகளையெல்லாம் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டே போனான் அவன். கண்ணாயிரத்தைப் பற்றி அவளுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் அவளிடம் சொல்வதற்கும் அவளை எச்சரிப்பதற்கும் தான் யார்? தனக்கென்ன உரிமை? என்று நடுநடுவே மனம் தயங்கியது; கருணையும் பரந்த நோக்கமும் உள்ளவனுக்கு உரிமையும், உறவும் பார்த்துத்தான் மனிதர்கள் மேல் இரக்கப்படத் தெரிய வேண்டும் என்பதில்லை. யாருக்குத் துன்பம் வந்தாலும் இரக்கப்படத்தான் வேண்டும். இந்த விதமான எண்ணங்களோடு அவன் மோகினியின் வீட்டுக்குள் படியேறிச் சென்ற போது அவள் அவனை எதிர்பார்த்துத் தனியாகக் காத்திருந்தாள். தன்னைப் பார்த்ததும் அவள் அடைந்த உற்சாகத்தைக் கண்டு சத்தியமூர்த்தியே அயர்ந்து போனான். வழக்கம் போல் காப்பி சிற்றுண்டி உபசாரத்துக்குப் பின் கேட்கலாமா, கேட்கக் கூடாதா என்று தயங்கிக் கொண்டே அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் சத்தியமூர்த்தி. "கண்ணாயிரத்துக்கும் உங்கள் வீட்டுக்கும் என்ன தொடர்பு என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? தயவு செய்து இந்தக் கேள்வியை எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள அநுதாபத்தின் மிகுதியால் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்." "தொடர்பாவது ஒன்றாவது? ஏதோ வருகிறார் போகிறார். அவரால் தான் இந்த உலகமே நின்றுவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அம்மாவுக்கு ஒரு பிரமை. சபைகளிலும், பொருட்காட்சிகளிலும் நாட்டியத்துக்கு கூப்பிடுகிறவர்கள் கண்ணாயிரம் சொல்லித் தூண்டுவதால் தான் கூப்பிட வருவதாக அம்மாவை அவரே நம்ப வைக்கிறார். என்னை அப்படியே சினிமா வானில் இலட்ச இலட்சமாகப் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாற்றிவிடப் போவதாக அம்மாவிடம் அவர் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டு திரிகிறார். "கூந்தல் தைல விளம்பரம், வாசனைச் சோப்பு விளம்பரம், பட்டுப்புடவை விளம்பரம் என்று எதன் பெயரைச் சொல்லியாவது கண்ணாயிரம் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கிறார். இவை எல்லாம் பிடிக்காமல் இருந்தும் பிடித்திருப்பது போல் அங்கீகரித்துக் கொண்டு சாகமாட்டாமல் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று மோகினி அவனுக்கு மறுமொழி கூறியபோது கண்ணாயிரத்தின் மேலிருந்த வயிற்றெரிச்சல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டது. பொறுமையிழந்து தான் பேசிக் கொண்டிருந்தாள் அவள். "உங்களுடைய இதயத்தில் மண்டிக் கிடக்கும் வேதனைகளைக் கிளறி விடுவதாக என்னுடைய கேள்வி அமைந்திருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். கண்ணாயிரத்தை நீங்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதிகமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது" என்று அவளுக்கு எச்சரிக்கை செய்தபோது, சத்தியமூர்த்தியின் மனம் தன்னைத்தானே குத்திக் காட்டியது. 'கண்ணாயிரத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று மோகினிக்கு அறிவுரை கூறிக் கொண்டு நிற்கிற நானே என் தந்தையிடம் இதை வற்புறுத்திக் கூற முடியாமல் போய் விட்டதே' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளே அவனிடம் பேச ஆரம்பித்தாள். "உங்களை நான் இன்று சந்திக்க விரும்பிய காரியம்..." என்று சொல்லிக் கொண்டு தயங்கித் தயங்கி நடந்து போய்க் கூடத்தில் இருந்த அந்த முருகன் படத்துக்குக் கீழே நின்றாள் அவள். நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவனும் அவளோடு எழுந்து போய் நின்றான். அப்போது அவள் அவனே எதிர்பார்த்திருக்க முடியாத புதுமையான காரியம் ஒன்றைச் செய்தாள். "இந்தக் கையால் தான் என்னைக் காப்பாற்றி எனக்கு அபயமளித்தீர்கள் நீங்கள்! என்னுடைய ஞாபகமாக இது இந்தக் கையில் இருக்கட்டும்" என்று தன் வலது உள்ளங்கையில் அதுவரை மூடி வைத்திருந்த நீலக்கல் மோதிரம் ஒன்றை அவனுடைய வலக்கரத்து விரலில் தானே கைப்பற்றி அணிவித்தாள் மோகினி. இன்பகரமான அந்த அதிர்ச்சியில் ஓரிரு கணங்கள் தயங்கியபின், "ஞாபகம் ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து பயனில்லை! இரண்டு பக்கத்திலும் அந்த ஞாபகம் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கூறியவாறே தன் வலக்கரத்தில் மற்றொரு விரலில் ஏற்கெனவே இருந்த வேறோர் மோதிரத்தைக் கழற்றி நிலாக் கொழுந்து போல் வனப்பு மிக்கதாயிருந்த அவளுடைய மோதிர விரலில் பூட்டினான் சத்தியமூர்த்தி. வெட்கமும் முறுவலுமாக அவள் முகம் அவனை நோக்கி நிமிர்ந்த வேளையில் அவன் முகமும் அவளை நோக்கி ஏறிட்டுப் பார்த்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் பார்க்க முயன்று இருவருமே பார்த்துக் கொண்ட அந்த நிலையில் கள்ளத்தனமானதொரு மகிழ்ச்சி பிறந்தது. "அதோ அந்தக் கண்ணாடியில் நாம் நிற்பதைப் பாருங்கள்" என்று எதிரேயிருந்த மிகப்பெரிய நிலைக் கண்ணாடியைச் சுட்டிக் காண்பித்தாள் அவள். சத்தியமூர்த்தி நிமிர்ந்து எதிரே பார்த்தான். "இப்போது நாம் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்லட்டுமா?..." அவள் குரல் அவனைக் கெஞ்சியது. "சொல்லேன்" என்று அவன் பதில் கூறியதும் அவள் எதைச் சொன்னாளோ, அதைக் கேட்ட அவன் பேரின்பச் சிலிர்ப்படைந்தான். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|