42
செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். செய்யாத புண்ணியங்களுக்காகவும் சில வேலைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். சிலர் எதற்காகவும் எப்பொழுதுமே நிச்சயமாக மன்னிக்கப்படுவதில்லை. சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். மோகினியின் ஸ்பெஷல் வார்டில் இருந்த அந்த நர்ஸ் எங்காவது தென்பட்டால் அவளையாவது விசாரிக்கலாமென்று பார்த்தால் அவளையும் அங்கே காணமுடியவில்லை. வேறு வார்டுக்காவது, வேறு அறைக்காவது அவள் மாறியிருக்கலாமோ என்ற சந்தேகமும் அப்போது அவனுக்கு ஏற்பட்டது. எதற்கும் பக்கத்தில் யாரையாவது விசாரிக்கலாம் என்று அங்கே விசாரித்ததில் மோகினியை 'டிஸ்சார்ஜ்' செய்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஏமாற்றத்தோடு அந்தப் பூவை - அவளுக்காக வாங்கிய மல்லிகைப் பூவை எப்படியும் அவளிடம் சேர்த்து விடவேண்டுமென்ற ஆவலோடு சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குத் திரும்பிப் போனான் அவன். அங்கேயும் அவளுடைய வீடு பூட்டியிருந்தது. பூட்டிக் கிடந்த வீட்டைப் பார்த்து அவன் அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டான். பக்கத்து விட்டுப் பையனை விசாரித்ததில் காலையில் ஜமீந்தாருடைய கார் வந்து அந்த வீட்டில் இருந்த தம்புரா, வீணை முதலிய வாத்தியங்களையெல்லாம் ஒழித்து எடுத்துக் கொண்டு போனது மட்டும் தனக்குத் தெரியும் என்று பையன் சொன்னான். சத்தியமூர்த்தி உடலும், மனமும் சோர்ந்து வீடு திரும்பினான். அப்போது அவன் இதயத்தைப் போலவே, கையில் அவளுக்காகக் கொண்டு போயிருந்த அந்த மல்லிகைப் பூவும் வாடியிருந்தது. 'அந்த வீட்டில் இருந்த மங்கலமான வாத்தியங்களையெல்லாம் அங்கிருந்து ஒழித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்! ஆம்! அவனுக்கு - அவன் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பரிசுத்தமான வாத்தியத்தையும் சேர்த்துத் தான்!' நினைக்கவும் வேதனை தருவதாக இருந்தது அந்த உண்மை! 'ஹெர் லைஃப் இஸ் எ ரிவால்விங் ட்ரீம்' - (அவளுடைய வாழ்க்கை மேலும் மேலும் சுழன்று வளரும் ஒரு கனவாகிறது) என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு பாடியிருக்கிற ஆங்கிலப் பாடல் வரி ஒன்றை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. 'ஸாரோ லுக்ஸ் இன்ட்டு ஹெர் ஃபேஸ்' (சொல்லிலடங்காத சோகங்கள் அவள் முகத்தில் தென்படுகின்றன) என்று அதே பாடலில் வருகிற இன்னொரு வாக்கியத்தையும் மோகினியைப் பற்றி நினைக்கும் போது அவனால் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய எல்லாவிதமான அவநம்பிக்கைகளுக்கும் நடுவே அவள் மட்டும் ஒரு நிச்சயமாகியிருந்தாள். ஆனால், அவன் வாழ்கிற சூழ்நிலையோ எந்த விதத்திலும் நிச்சயமில்லாமல் இருந்தது. மனம் ஒப்பி - மறுக்காமல் - தவிர்க்காமல் அவள் ஜமீந்தாருடைய வீட்டுக்குப் போய் விட்டாள் - என்பதை நினைக்கவும் - பொறுத்துக் கொள்ளவும், நம்பவும் முடியாமல் தவித்தான் அவன். அவள் மேல் கோபப்படுவதா - பரிதாபப் படுவதா - என்று நினைத்து நெடு நேரம் ஒரு முடிவும் கிடைக்காமல் அவன் மனம் குழம்பினான். அவள் மேல் எந்தக் காரணத்துக்காகக் கோபித்துக் கொள்ளத் தொடங்கினாலும் கூட அந்தக் கோபம் தானாகவே தளர்ந்து நெகிழ்ந்து வெறும் பரிதாபத்திலோ, அநுதாபத்திலோ போய் முடிந்தது. 'அவள் என்ன செய்வாள்? பாவம்! பேதைப் பெண். ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்னைப் போலவோ, குமரப்பனைப் போலவோ அவர்களை வெளிப்படையாக வெறுக்கவோ பகைத்துக் கொள்ளவோ அவளுக்கு வலிமை இல்லை. அது அவளுடைய குற்றமாகாது' என்று நினைத்து அவன் மன அமைதி பெற முயன்றாலும் முடியவில்லை. 'பூபதியைச் சந்திப்பதற்காக மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய மாளிகைக்குச் சென்ற போதே அங்கு கால்கள் பொருந்தாமல் நின்றேன் நான். பூபதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் 'வைகைக்கரை மாளிகை' - என்ற பொருளில் 'ரிவர் காசில்' - கோச்சடை, மதுரை என்று மட்டுமே மதுரையில் தாம் தங்கப் போகிற இடத்து முகவரி கொடுத்திருந்தார். அதுதான் ஜமீன் மாளிகை என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை அங்கு நான் போயே இருக்க மாட்டேன். இப்போது மோகினியைச் சந்திப்பதற்காக இன்னொரு முறையும் நான் அங்கே எப்படிப் போவேன்?' என்று தயங்கியது அவன் உள்ளம்.
முதல் நாள் பகல் தன்னைத் தேடி வந்திருந்த நண்பர்களில் ஒருவன் இன்று பகலில் உணவிற்குத் தன்னை அவன் வீட்டுக்கு அழைத்துவிட்டுப் போயிருந்தது இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. நண்பனுடைய வீட்டுக்குச் சாப்பிடப் போவதா - வேண்டாமா என்று நீண்ட நேரம் மனம் குழம்பி ஒரு முடிவுக்கும் வராமல் இருந்த பின் கடைசியாகப் போவது என்று முடிவு செய்தான். அந்த நண்பனுடைய வீடு நன்மை தருவார் கோயில் தெருவில் இருந்தது. அங்கே போய்ப் பகல் உணவை முடித்துக் கொண்டு நண்பனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே கோச்சடைக்குப் போய் ஜமீந்தார் மாளிகையில் மோகினியைச் சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டு புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி.
அந்த நண்பனுக்கு வானொலியில் திரைப்பட இசை கேட்கிறதென்றால் உயிர். பக்கத்தில் நான்கு வீடுகளுக்குக் கேட்கிற மாதிரி ஓசை வைத்து அவனும் அவனுடைய தங்கையுமாக வானொலி இசை வெள்ளத்தில் மெய்மறந்து மூழ்கியிருந்தபோது, சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்தான். எங்கே சத்தியமூர்த்தி சாப்பிட வராமல் ஏமாற்றி விடுவானோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு அவனைப் பார்த்ததும் தான் நிம்மதி பிறந்தது. "இன்றைக்கு மட்டும் உன்னுடைய கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடு. நீ நம் வீட்டில் கண்டிப்பாக இன்று பாயசம் சாப்பிட்டாக வேண்டும் சத்தியம்! மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் சும்மா விடமாட்டேன். என்னுடைய பிறந்தநாள்" என்று நண்பன் வற்புறுத்திய போது, "இலை போடுவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். நிச்சயமாக நான் பாயசம் சாப்பிட முடியாது" என்று மறுத்தான் சத்தியமூர்த்தி. ஒரு மணிக்கு மேல் இலை போட்டுப் பரிமாறிச் சத்தியமூர்த்தியும், நண்பனும், அவனுடைய தங்கையும் சாப்பிட உட்கார்ந்தார்கள். இலையில் உட்காருவதற்கு முன் வானொலியை இலங்கையிலிருந்து பகல் நேரத்துச் செய்தி கேட்பதற்காகத் திருச்சிக்கு மாற்றி விட்டு உட்கார்ந்தான் நண்பன். வானொலியில் பகல் நேரத்துச் செய்திகள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்கள் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். பாதிச் சாப்பாட்டின் போது அவர்கள் கவனத்தை இழுத்து எதிர்பாராத அதிர்ச்சியளிப்பதாக அந்தத் துயரச் செய்தி வானொலியிலிருந்து ஒலித்தது. "நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் வைகவுண்ட் விமானம் நாகபுரியிலிருந்து டில்லிக்குச் செல்லும் போது இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. பதினைந்து பிரயாணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இந்த விமான விபத்தில் மாண்டு போனார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் கேட்பது அகில இந்திய ரேடியோவின் செய்தி அறிக்கை." திடீரென்று இருந்தாற் போலிருந்து இடி விழுந்த மாதிரி ஒலித்தது இந்தச் செய்தி. நடுச்சாப்பாட்டில் வானொலிச் செய்தியைக் கேட்டுச் சத்தியமூர்த்தி அப்படியே அதிர்ந்து போய்ச் சிலையாய் அமர்ந்துவிட்டான். பூபதி மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட நேரம் சென்னையிலிருந்து டில்லிக்குப் புறப்படும் இரவு விமானத்தின் நேரம் எல்லாவற்றையும் கவனக்குறைவின்றி நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு சிந்தித்தும் அதே இரவு விமானத்தில் அவர் டில்லிக்குப் போகாமல் தவற விட்டிருக்க முடியும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. 'அந்த விமானத்தில் அவர் போகாமல் இருந்திருக்கக் கூடாதா' என்று அவன் இதயம் நினைத்து நினைத்துப் பரிதாபப்பட்டது. சிந்திக்கச் சிந்திக்க அந்த விமானத்திலேயே அவர் போய் இருக்கக்கூடும் என்பதற்குத்தான் அதிக நிரூபணங்கள் கிடைத்தனவே தவிர அவர் அதில் போகாமல் தவற விட்டிருக்கக் கூடும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. மேலே ஒன்றும் ஓடாமல் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து கைகழுவி விட்டான் அவன். என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு சில கேள்விகளின் மூலமே நண்பனால் அப்போது சத்தியமூர்த்தியிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்திக்கோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையோடு நெஞ்சம் பதறித் துடித்தது. 'மனித வாழ்க்கை எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாததாகவும் அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது?' என்று எண்ணி எண்ணி நெக்குருகினான் அவன். விபத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மேலமாசி வீதியிலிருந்த பெரிய ஓட்டல் ஒன்றில் நுழைந்து விமானத்துறை அலுவலகத்துக்கும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் டெலிபோன் செய்து விசாரித்தான் சத்தியமூர்த்தியின் நண்பன். சத்தியமூர்த்தியும் அப்போது உடன் இருந்தான். விபத்துக்கு ஆளானவர்களின் பெயர்ப் பட்டியலில் 'மல்லிகைப் பந்தல் இண்டஸ்ட்ரியலிஸ்ட் பூபதி' என்ற பெயரும் இருக்கிறது என்பதைத் தெளிவாகவும் வருத்தத்தோடும் விமானத்துறை அலுவலத்திலிருந்து அறிவித்தார்கள். மாலைப் பத்திரிகையில் எல்லா விவரங்களும் வெளிவந்துவிடும் என்று பத்திரிகை அலுவலகத்தில் தெரிவித்தார்கள். டெலிபோன் டைரக்டரியில் மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய பங்களாவின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிக்க எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அந்த முயற்சியும் பயன்படவில்லை. அந்த எண்ணில் யாருமே டெலிபோனை எடுக்கவே இல்லை. நீண்ட நேரமாக மணி அடித்துக் கொண்டேதான் இருந்தது. நேரில் அங்கேயே போய்விடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தவனாகச் சத்தியமூர்த்தி டெலிபோனை வைத்துவிட்டான். அவன் மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்பு அடைந்திருந்தது. "இந்த நூற்றாண்டின் கார் விபத்துக்களும், விமான விபத்துக்களும், இரயில் விபத்துக்களுமே முக்கால் பங்கு மனிதர்களைக் கொன்றுவிடும் போலிருக்கிறது சத்தியம்! ஏதோ விஜயதசமியன்று பத்மஸ்ரீ விருது வாங்குவதற்காக டில்லிக்குப் போகிறார் என்று உங்கள் கல்லூரி அதிபர் பூபதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் பிரமாதமாக வந்திருந்ததே? என்ன பரிதாபம்! இப்படி ஒரு பெருமையும் கிடைத்து, அதை அடைவதற்குள்ளேயே சாகிற மனிதன் எவ்வளவு பெரிய துர்பாக்கியமுள்ளவனாக இருக்க வேண்டும்" என்று நண்பன் வருத்தப்பட்டுக் கொண்டே உடன் வந்தான். நண்பனை அப்புறம் சந்திப்பதாகச் சொல்லி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் ஒரு சைக்கிள் ரிக்ஷா வாடகைக்குப் பேசிக் கொண்டு மஞ்சள்பட்டி பங்களாவுக்கு விரைந்தான் அவன். பூபதியின் மகள் பாரதியும் முதலில் இதே விமானத்தில் அவரோடு கூட டில்லிக்குச் செல்வதற்கு இருந்ததும், அப்புறம் கடைசி விநாடியில் தன் பயணத்தை நிறுத்தி விட்டதையும் ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தி நினைத்தான். அவரை மரணத்தின் பாதையில் இழுத்துக் கொண்டு போன அதே விதி அவருடைய மகளை மிகவும் நல்லெண்ணத்தோடு கடைசி விநாடியில் அந்தப் பாதையிலிருந்து திருப்பி அழைத்துக் கொண்டு வந்துவிட்ட விந்தையை அவன் மனம் வியந்தது. இரயில்வே மேம்பாலத்தின் ஏற்றத்தில் கீழே இறங்கி ரிக்ஷாவைக் கையினால் தள்ளிக் கொண்டு போகத் தொடங்கியிருந்தான் ரிக்ஷாக்காரன். ரிக்ஷா மிக மிக மெல்ல நகர்ந்தது. அப்போதிருந்த பரபரப்பான மன நிலையில் அந்த வேகக் குறைவைக் கூட சத்தியமூர்த்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூபதியைத் தான் மதுரை விமான நிலையத்தில் கடைசியாகப் பார்த்த கோலத்தை நினைவு கூர்ந்தான் அவன். "என்னம்மா?... நான் வரட்டுமா? கடைசி படி ஏறுவதற்குள் மறுபடி நானும் உங்களோடு 'டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிட மாட்டாயே? நிச்சயமாக நீ வரவில்லைதானே?" என்பதாக விமான படிக்கட்டை நோக்கி நடப்பதற்கு முன் தம் மகளிடம் சிரித்துக் கொண்டே கேட்டப் பூபதியின் தோற்றம் இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தது போல் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதற்காக அவர் அப்படிச் சொல்லிக் கொண்டு போனாரா? அல்லது இந்த உலகத்தை விட்டே போய்விடப் போகிறோமென்று தான் அத்தனை கனிவாகவும் அவ்வளவு பாசத்தோடும் சொல்லிக் கொண்டு போனாரா என்று எண்ணியபோது சத்தியமூர்த்திக்குக் கண் கலங்கியது. 'பூபதியின் அருமை மகள் பாரதி இந்தப் பேரிடி போன்ற துயரச் செய்தியை அறிந்து எவ்வாறு கதறித் துடித்து அழுதிருப்பாள்?' என்று அவனால் அவளுடைய துயரத்தைக் கற்பனை செய்யவும் முடியாமலிருந்தது. எல்லாப் பெரிய மனிதர்களிடமும், பிரமுகர்களிடமும் இருந்த சில பொதுவான குறைபாடுகள் பூபதியிடமும் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த சில தினங்களில் அவரை 'ஜெகில் அண்ட் ஹைடாக்' என்று எண்ணித் தான் மனம் கொதித்ததையும் இப்போது சத்தியமூர்த்தி நினைத்தான். பலரிடம் இருந்த அந்தச் சில குறைபாடுகளோடு பலரிடம் இல்லாத சில நிறைவான நல்ல குணங்களும் பூபதியிடம் இருந்ததை அவனால் மறந்து விட முடியவில்லை. 'தங்களுக்கு எதிரே பிறர் உடகார்ந்து பேசுவது கூட மரியாதைக் குறைவு' என்று அற்பத்தனமாக நினைக்கிற பல போலிப் பெரிய மனிதர்கள் நிறைந்திருக்கிற இந்த உலகில் தம்முடைய கல்லூரியில் விரிவுரையாளராக வந்திருக்கிற ஓர் இளைஞரை அன்போடு வரவேற்று எதிரே அமரச் செய்து விட்டு, விருந்தாளியை உபசரிப்பது போல் பெருந்தன்மையாகப் பழகிய பூபதியையும், வகுப்பில் அதே இளைஞரின் விரிவுரையைக் கேட்டுப் பாராட்டிய பூபதியையும், அந்த இளைஞரையே உதவி வார்டனாக நியமித்துப் பெருமைப்பட்ட பூபதியையும் போற்றாமலிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அதே பூபதியிடம் சொந்த பலவீனங்கள் காரணமாக இருந்த சில குற்றங் குறைகளை அவன் வெறுத்தாலும் பலருக்கு நிழல் தந்து கொண்டிருந்த பெரிய ஆலமரத்தில் இடி விழுந்து எரிந்ததைப் போல் அவருடைய இந்த மரணத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமலிருந்தது. குணக் குற்றங்களில் ஒன்றே முழுமையாக நிறைந்த மனிதர்கள் உலகில் எங்குமே இல்லைதான். பல நல்ல குணங்களுக்காகச் சில குற்றங்களையாவது மன்னிக்கிற சுபாவம் பொது வாழ்க்கைக்கு அவசியம் வேண்டும் போலும் என்ற பலவீனமான சிந்தனை ஒன்றும் அவனுடைய தளர்ந்த மனத்தில் இப்போது எழுந்தது. 'செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். செய்யாத புண்ணியங்களுக்காகவும் சில வேளைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். சிலர் எதற்காகவும் எப்பொழுதுமே மன்னிக்கப்படுவதில்லை' என்று எந்த நாட்டு பழமொழியோ ஒன்று உண்டு. இந்தப் பழமொழியின்படி ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் எதற்காகவும் எப்போதும் மன்னிக்க முடியாது. ஆனால் பூபதி அப்படிப்பட்டவரில்லை. அவரை எதற்காகவோ நிறையப் பாராட்டவும் வேண்டும்! எதற்காகவோ கொஞ்சம் மன்னிக்கவும் வேண்டும் என்று தான் தோன்றியது. கல்வி வளர்ச்சியில் ஆர்வமும், பெரிய இலட்சியங்களும் கொண்டு பூபதி நிறுவிய மல்லிகைப் பந்தல் கல்லூரி எதிர்காலத்தில் சரியாய்ப் பேணுவார் இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகவும், நிராதரவாகவும் போய்விடுமோ என்றெண்ணிய போதே ஒரு நல்ல கனவு கலைவது போல் துயரமிகுந்தது. கல்வித் துறையில் தாம் சாதித்த சாதனைகளுக்காகத் தகுந்த பாராட்டுப் பெறச் சென்று கொண்டிருந்த வேளை பார்த்துப் பூபதியைக் காலன் கவர்ந்து கொண்டு விட்டானே என்று அந்த விமான விபத்தை நினைப்பதற்கும் நம்புவதற்கும் கூட முடியாமல் சத்தியமூர்த்தி மனம் கலங்கினான். மஞ்சள்பட்டி ஜமீன் பங்களாவுக்குள் அவன் நுழையும் போது பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. முன்புறத்துத் தோட்டத்தைக் கடந்து அவன் அந்த மாளிகைக்குள் நுழையும் போது அது சாவு வீடு போல களையற்றிருந்தது. எடுப்பதற்கு ஆளில்லாமல் டெலிபோன் மணி கதறிக் கதறி ஓய்ந்த வண்ணமிருப்பதையும் சத்தியமூர்த்தி அங்கே கண்டான். சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் முன்புறத்துப் புல்வெளியில் எங்கோ இருந்த தோட்டக்காரன் ஓடி வந்து விவரம் சொன்னான்: "காலையில் அஞ்சு மணிக்கே ஏரோப்ளேன் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்திருச்சிங்க... ஜமீந்தார் ஐயா, கண்ணாயிரம் எசமான், மல்லிகைப் பந்தல் பெரிய ஐயாவோட மகள் எல்லாருமாகப் புறப்பட்டு உடனே போயிட்டாங்க... ப்ளேன்ல அவங்களும் அங்கே போவாங்க போலிருக்குதுங்க... ஏரோப்ளேன் விழுந்து போயிட்டாரே... அந்த ஐயாவோட மகள்... அதுதான் இன்னிக்குக் காலையிலே மணியடிச்சதும் ஓடி வந்து டெலிபோனை எடுத்திச்சு. சமாசாரத்தைக் காதிலே கேட்டுச்சோ இல்லையோ அப்படியே டெலிபோனடியிலேயே மூர்ச்சையாகி விழுந்துட்டுதுங்க. ரொம்பக் கண்றாவி... அந்தப் பொண்ணைப் பார்க்கச் சகிக்கலே. நான் பெரிய திட மனசுக்காரனின்னு பேரு... எனக்கே கண் கலங்கிப் போச்சுன்னாப் பார்த்துக்குங்களேன்..." "இங்கே யாருமே இப்போது இல்லையா?" என்று சத்தியமூர்த்தி தோட்டக்காரனைக் கேட்டான். "டைப் அடிக்கிற அம்மா - அதாங்க அந்த சட்டைக்காரப் பொண்ணு - உடம்பு சௌகரியமில்லேன்னு ரெண்டு நாளா வரவேயில்லை. புதிசா வந்திருக்கிற கணக்குப்பிள்ளைக் கிழவனாரும்... ஜமீந்தாரோட இன்கம்டாக்ஸ் ஆடிட்டர் ஏதோ அவசரமா வரச் சொன்னாருன்னு சிட்டை, பேரேடு, வரவு செலவுப் புத்தகம் எல்லாத்தையும் கட்டி எடுத்துக்கிட்டுப் போனாரு. அவரும் இன்னும் வரக் காணலை..." "அது யாரு கணக்கப்பிள்ளைக் கிழவர்?" என்று தெரிந்தும் தெரியாமலும் பாதி சந்தேகத்துடனே தோட்டக்காரனைக் கேட்டான் சத்தியமூர்த்தி. "அதுதாங்க... பழைய பள்ளிக்கூடத்து வாத்தியாரு. பேச்சியம்மன் படித்துறையிலேருந்து வருவாரே! அந்தக் கிழவருதாங்க..." என்று சத்தியமூர்த்திக்குப் பதில் கூறினான் தோட்டக்காரன். தன்னுடைய சந்தேகப்படியே அவன் குறிப்பிட்ட கிழவர் தன் தந்தைதான் என்பதைச் சத்தியமூர்த்தி விளங்கிக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி அங்கிருந்து திரும்பி விடும் எண்ணத்தோடு தயங்கி நின்ற போது அந்த மாளிகையில் முன் கூடத்து அறையில் அவனுக்குப் பழக்கமான குரல் மெல்ல விசும்பி அழுகிற ஒலி கேட்டது. 'மோகினி அங்கேதான் இருக்கிறாளா?' என்பதை அந்தத் தோட்டக்காரனிடம் எப்படி விசாரிப்பது என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, இந்த அழுகை ஒலியைக் காரணமாக வைத்தே தான் நினைத்த கேள்வியைத் தோட்டக்காரனிடம் சுலபமாகக் கேட்க முடிந்தது. "யாரோ உள்ளே ரொம்ப நேரமா அழுது கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே? யார் அது?" என்று கேட்டான் சத்தியமூர்த்தி. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|