58

     பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது.

     பாரதியின் ஜுரம், ஜன்னி கண்டு பிதற்றுகிற எல்லைவரை வளர்வதும், குறைவதுமாக பத்துப் பதினைந்து நாட்கள் அவளை வாட்டி எடுத்துவிட்டது. தாய் தன் அருமை மகளைக் கவனிப்பது போலவும், அன்புத் தமக்கை தன் பிரியமுள்ள தங்கையைப் பேணி உபசரிப்பது போலவும், பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த நாட்களில் இரவு பகலாகத் தூக்கம் விழித்து ஓடியாடி அவளுக்குப் பணிவிடை செய்தாள் மோகினி. சிறு வயதிலேயே தாயன்பை இழந்திருந்த பாரதி, மோகினியின் சில நாள் பணிவிடையிலேயே அதை உணர்ந்தாள். பார்க்கும் கண்களை அப்படியே இழுத்து நிறுத்தித் தன் மேல் நிலைக்க வைக்கும் மோகினியின் உடல் வனப்பும் அந்த வனப்பை உறுதிபடுத்திச் சாட்சி சொல்வது போல் அவளிடம் அமைந்திருந்த நாட்டியக்கலைத் திறனும் தான், இதுவரை பாரதிக்குத் தெரிந்திருந்தவை. இப்போதோ உடல் வனப்புக்கும், கலைத்திறனுக்கும் அப்பால் மோகினியின் மிக உயர்ந்த மனப்பண்பும் அவளுக்குத் தெரிந்து விட்டது. அந்த மனத்தில் கருணையும், பரிவும் நிறைந்துள்ளதை அவள் அநுபவப் பூர்வமாக புரிந்து கொண்டு விட்டாள். உடம்பின் வனப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மனத்தின் வனப்பை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்த போது பாரதியால் அவள் மேல் எந்தக் காரணத்துக்காகவும் பொறாமைப்பட முடியவில்லை. சத்தியமூர்த்தியின் மனத்தை வென்று அவருக்கு ஆட்பட்டு, மோகினியால் அவருடைய அன்பைப் பெற முடிந்ததற்காகப் பெருமைப்பட்டு அந்தப் பெருமையோடு தன் ஆற்றாமையையும் நினைத்து உள்ளுருக முடிந்ததே தவிரப் பாரதியால் அவள் மேல் குரோதமடைய இயலவில்லை.

     மோகினியிடம் அமைந்திருந்த இணையிலாப் பேரெழிலும் கலைத்திறனும் பாரதிக்கு அவள் மேல் குன்றாத பயபக்தியை உண்டாக்கியிருந்தாலும் அவளிடம் சூது வாதும், கள்ளங் கபடும் மிகுந்த உலகியல் அறிவும் சிறிதும் இல்லாததால் அவள் இன்னும் ஒரு பேதையாகவே இருக்கிறாள் என்பதைப் பாரதி புரிந்து கொண்டிருந்தாள். பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த பத்துப் பதினைந்து நாட்களில் தேவையான போது டாக்டருக்குப் ஃபோன் செய்து வரவழைப்பது தவிர மற்ற நேரங்களில் அன்பும், பரிவும், பாசமும் மிகுந்த ஒரு நர்ஸ் போலவே மோகினி உடனிருந்து கவனித்ததன் காரணமாக அவளும் பாரதியும் மனம் விட்டுப் பழக நேர்ந்தது. அப்படிப் பழக நேர்ந்த வேளைகளிலும் கூட மோகினி தன்னை ஒரு பேதையாகவே அவளிடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் பாரதியோ உலகியல் அறிவோடு ஒட்டிய சூதுவாதும், கள்ளங்கபடும் நிறைந்த புத்திசாலிப் பெண்ணாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் மறைத்துக் கொண்டு மோகினியிடம் பழகியிருக்கிறாள். மோகினிக்காகச் சத்தியமூர்த்தியிடம் கடிதம் கொண்டு போய்க் கொடுக்க நேர்ந்தது, அதனால் மனநலமும் உடல்நலமும் குன்றிப் போய்ப் பாரதி கல்லூரியிலிருந்து பகலிலேயே வீடு திரும்ப நேர்ந்த தினத்தன்று இரவில் அவளும் மோகினியும் தங்களுக்குள் சத்தியமூர்த்தியைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்த்தது. பாரதி உடல் நலங்குன்றிச் சோர்வோடு வீடு திரும்பியிருந்ததனால் திரும்பிய உடனேயே "அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாயா பாரதி? படித்துப் பார்த்த பின்பு அவருடைய முகத்தில் மலர்ச்சியிருந்ததா? அல்லது கோபம் தெரிந்ததா? என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அவர் ஏதாவது பதில் கூறி அனுப்பினாரா, இல்லையா?" என்றெல்லாம் அவளிடம் கேட்க நினைத்திருந்தும், மோகினியால் அப்போதிருந்த நிலைமையில் ஒன்றுமே கேட்க முடியவில்லை. தளர்ந்து போய்ப் பாதிக் கல்லூரியிலேயே வீடு திரும்பி விட்ட பெண்ணிடம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அதைப் படித்ததும் அவர் என்ன கூறினார் என்பதையுமே உடனடியாக ஆவலோடு விசாரித்துக் கொண்டு நிற்பது நன்றாயிராது என்று எண்ணியே மோகினி தன் ஆசையை அடக்கிக் கொண்டாள். 'அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா?' பாரதியே கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாகத் தானாகவே கூறத் தொடங்கிய போது கூட, 'கடிதத்தைப் பற்றி இப்போது என்ன வந்ததம்மா?' என்று மோகினி அதைத் தெரிந்து கொள்வதில் மட்டுமே அப்போது தனக்கு அக்கறையில்லை என்பது போல் நடித்து மறுக்க வேண்டியிருந்தது. அதே தினம் மாலையில் பாரதிக்குக் கடுமையான ஜுரம் வந்து விட்டதனால் மோகினி டாக்டரை உடனே அழைத்து வரச் சொல்லி டிரைவர் முத்தையாவை அனுப்பினாள். டாக்டர் வந்தார். பார்த்தார். ஓர் இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு மேலும் ஏதேதோ மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.