54

     அதிகமாக அன்பு செய்கிறவன் அதிகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது.

     "என்னடா, உன் அப்பா திடீரென்று கோபமாக வந்தார். திரும்பிப் போகும் போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போகிறாரே? ஏன் இப்படி வந்ததும் வராததுமாக உடனே திரும்பிப் போய் விட்டார்?" என்று வந்து விசாரித்த நண்பன் குமரப்பனுக்குத் தன் தந்தை வந்துவிட்டுப் போனக் காரியத்தையும் நடந்தவற்றையும் விவரித்தான் சத்தியமூர்த்தி. அதைக் கேட்டுவிட்டு குமரப்பன், "நல்ல காரியம் செய்தாய்! எதிலாவது கையெழுத்து வாங்கிக் கொண்டு உன்னை நிரந்தரமாகக் கம்பி எண்ண வைக்க முயலுகிறார்கள். கவனமாக விழித்துக் கொண்டிரு. தூங்கிப் போய்விடாதே. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தானே உன் தந்தையைக் காரில் இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனார்கள்! நான் கடையிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பிப் போகிற போதும் அதே கார் தான் வந்து அவரை ஏற்றிக் கொண்டு போகிறது" என்று குமரப்பன் சத்தியமூர்த்திக்கு விவரத்தைக் கூறி எச்சரித்து விட்டுப் போனான்.

     முதன் முதலாகத் தான் வேலை பார்க்கிற ஊருக்குத் தந்தை தன்னைத் தேடி வர நேர்ந்து அதுவும் இப்படி அரைகுறைச் சந்திப்பாய் ஆகி முறிந்து போய்விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சக வலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமையையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்திருந்தான். சில நாட்களாக அவன் மனம் ஓய்வு ஒழிவில்லாமல் எண்ணப் போராட்டங்களில் மூழ்கியிருந்தது. 'நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரிதான்' என்ற மனப்பான்மையோடு தன்னை மட்டும் தப்பித்துக் கொள்ள விரும்பாமல், எல்லாருடைய நியாயத்துக்காகவும் பொறுமையோடு காத்திருந்தான் அவன். பொறுமையிழந்து மனம் கொதித்துக் குமுறும் படியான சோதனைகள் எல்லாம் வந்தன. அளவற்றுத் துன்பப்பட நேர்ந்த சமயங்களில் எல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு ஓடிவிட மட்டும் தவிக்கிற சமுதாயக் கோழையாக இருந்து விடாமல் அவன் மிக நிதானமாகச் சிந்தித்திருக்கிறான். இன்றும் அதே நிதானத்தோடுதான் இருந்தான் அவன். தன்னிடம் தந்தை கையெழுத்துப் போடச் சொல்லி நீட்டிய தாளைக் கிழித்தெறிந்த மறுகணமே தான் சற்றே நிதானம் தவறி ஆத்திரப்பட்டு விட்டோமோ என்று உணர்ந்து அவனால் வருந்தாமல் இருக்க முடியவில்லை. தந்தை வந்ததும், இரைந்ததும் முடிவில் கோபத்தோடு திரும்பிப் போனதும் - குமரப்பன் விசாரித்துவிட்டுச் சென்றதற்கு அப்புறம் கூட நெடுநேரம் அவன் நினைவைக் கலக்கிக் கொண்டிருந்தன. பொழுது சாய்கிற நேரத்துக்கு குமரப்பன் கடையை அடைத்துக் கொண்டு மேலே வந்த பின் நண்பர்கள் இருவரும் லேக் அவின்யூ கடைவீதி வழியாக உலாவப் புறப்பட்டார்கள். அப்போது தன் மனம் மேலும் அதிர்ந்து கலங்கும்படியான ஒரு நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தி அங்கு எதிர்கொள்ள நேர்ந்தது.

     கடைவீதியிலிருந்த பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் ஜமீந்தாரைப் பின் தொடர்ந்து மோகினி காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியின் தந்தையும் கண்ணாயிரமும் கூட அவர்களோடு உடன் வந்திருந்தார்கள். ஜமீந்தார் ஜவுளிக் கடையில் படியேறி உள்ளே நுழைந்து விட்ட பின்பும் கூட மோகினி கார் அருகிலிருந்து நகராமல் கண்கலங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அப்படிப் பின் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவளைத் தன் தந்தை அருகிலிருந்து பயபக்தியோடு கடைக்குள் வருமாறு அழைப்பதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரையிலேருந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு! வந்தேன்?' என்று தந்தை பகலில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் போது மதுரையிலிருந்து அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டது மோகினியைத்தான் என்பது இப்போது சத்தியமூர்த்திக்குப் புரிந்து விட்டது. 'அவங்க பரம்பரை பரம்பரையா ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். நீ அந்தப் பெண்ணைப் பார்க்கிறதோ பேசறதோ கொஞ்சம் கூட நல்லாயில்லே. வீணா ஜமீந்தாரோட கோபத்துக்கு ஆளாகாதே' என்று மதுரையிலே தன்னை கண்டித்திருந்த தந்தை அதே மோகினியை ஜமீந்தாருடைய கட்டளையின்படி இப்போது மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்திருப்பதைத் தெரிவிக்கத் தயங்கி, யாரையோ அழைத்து வந்திருப்பதாகக் கூறியதை நினைத்து அவன் சிறிதும் வியப்படையவில்லை. ஜமீந்தார் சொல்லித் தன் தந்தை மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்து வந்திருப்பதாக இப்போது அவனால் தெளிவாகவும், பிரத்தியட்சமாகவும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.