62

     மனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படி அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் கூடப் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை.

     மனிதனை வலுப்படுத்துகிற சக்திகளில் பிறர் அவன் மேல் செலுத்துகிற மெய்யான அன்பும் ஒன்று. பிறர் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவராக இருக்கிறார்கள் என்பதை உணர்வது எத்தனை சுகமாக இருக்கிறதோ அத்தனை வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும் போது வாழ்வில் உண்டாகிறது. சத்தியமூர்த்தி இளமையிலிருந்தே எதற்கும் எங்கும் தயங்கி நிற்காத தீரன். கீழே விழும்போதெல்லாம் அதை விட வேகமாக மேலே எழுந்திருக்க வேண்டும் என்ற உணர்ச்சியைத் தன் வாழ்வில் பலமுறை அடைந்திருக்கிறான் அவன். அவனுடைய வலது கால் முன்னால் அடியெடுத்து வைப்பதற்கு எப்போதும் தயாராயிருந்திருக்கிறது. 'இது இப்படித்தான் முடியும்' என்று எதைப் பற்றியும் ஒரேவிதமாகச் சிந்தித்து அது அப்படி முடியாததனால் ஏமாறித் தவித்ததில்லை அவன். இப்போது மோகினியின் செய்கையால் அவன் மனம் புண்பட்டிருக்கிறது.

     ஒன்று மட்டுமே எல்லா உறுதியையும் மீறி அவனை ஆழமாய் வருத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையோடு வேதனையாக அவன் தன்னுள் நினைக்கலானான்: 'இனிமேல் என்னைப் போல் எந்த இலட்சியவாதியின் வாழ்க்கையிலும் காதல் என்ற மோகம் மூடாமல் இருக்கட்டும்! அவனுடைய தீவிரமான எண்ணங்களை எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணின் ஞாபகம் தவிக்கச் செய்யாமல் இருக்கட்டும்! எந்த ஒரு பெண்ணுக்காகவும் அவனுடைய கண்களோ, இதயமோ, இரகசியமாகவோ பகிரங்கமாகவோ கண்ணீர் சிந்தாமல் இருக்கட்டும்!' என்று எண்ணியபோது அவன் இதயம் குமுறிக் கொண்டிருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் வேகமாகவும் சாதகமாகவும் நடந்து கொண்டிருந்தன. டெல்லியிலிருந்து அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தி கிடைத்துவிட்டது. பாஸ்போர்ட், எக்ஸேஞ்ச் கண்ட்ரோல் அனுமதி எல்லாம் கிடைத்துவிட்டன. குத்துவிளக்கிலிருந்து வெளியேறிய போது குமரப்பனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. மல்லிகைப் பந்தலில் கடை வைத்தபின் இன்னும் கொஞ்சம் சேர்ந்திருந்தது. கண்ணாயிரத்தின் கடனை அடைப்பதற்கும், வெளிநாடு செல்ல உடை முதலியவற்றுக்கும், கையில் கொண்டு போவதற்கும் சத்தியமூர்த்திக்கு மனம் விரும்பி உதவினான் அவன். கல்லூரி முதல்வரிடம் உரிய காலத்தில் சத்தியமூர்த்தி தன்னுடைய இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்து விட்டான். அப்படிக் கொடுக்கும் போது 'நீங்கள் இந்தக் கல்லூரிக்கு ஆசிரியராக வந்து மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பது தவிர இந்தக் கல்லூரியின் எதிர்கால அநுபவங்கள் உங்களுடைய இளமை வேகத்துக்கு ஒரு பாடமாகவும் ஆகலாமல்லவா?' என்று எப்போதோ காலஞ்சென்ற பூபதி தன்னிடம் கூறியிருந்ததை இப்போது ஒரு கணம் நினைத்துச் சிரித்துக் கொண்டான் அவன்.

     'ஒரு மனிதனுடைய நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட அவன் நினைத்தபடி நிறைவேறாது. ஒவ்வொரு நல்ல மனிதனும் தன்னுடைய தேவைக்காக மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் பிறருடைய நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராடியாக வேண்டும்' என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது. அதனால் தான் மிகக் குறுகிய கால ஆசிரிய வாழ்க்கையிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இவ்வளவு சோதனைகளும் அவனுக்கு ஏற்பட்டு விட்டன. புனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் சில சமயங்களில் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை. தெரிந்தோ தெரியாமலோ மனித உணர்ச்சிகளின் சங்கமம் தான் வாழ்க்கையாயிருக்கிறது. ஆனால் உணர்ச்சிக்குப் பாஷை எப்போதுமே கருவியாக இருந்து ஒத்துழைப்பதில்லை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.