52

     ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத் தான் எத்தனை ஆயிரம் தடைகள்?

     இனிமேலாவது நல்ல காரியங்களைச் செய்து நல்லபடியாக வாழலாம் என்று நினைப்பதற்குப் பதில் இதுவரை செய்திருக்கிற தவறுகளையும், இனிமேல் செய்யப் போகிற தவறுகளையுமே நல்ல காரியங்களாக நிரூபித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிற வறட்டுக் கௌரவத்தைச் சிலரால் விட்டு விட முடியாது. மஞ்சள்பட்டியார் இந்த விதத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தியின் தந்தையைக் கூப்பிட்டு அவனை அடக்கி வழிக்குக் கொண்டு வருமாறு சொல்லியதோடு நிற்காமல் அதற்கு முன்பே ஜமீந்தார் வேறு சில ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தம்முடைய சொந்தப் பத்திரிகையாகிய குத்துவிளக்கில் அந்த வாரம் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்தும், மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டுமென்று கண்டித்தும் தலையங்கம் எழுதச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி விடுதியின் 'கூரை ஷெட்' நெருப்புப் பிடித்து எரிந்த காட்சியைப் புகைப்படமாகப் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுடைய அநுதாபத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜமீந்தாரும் கண்ணாயிரமும் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜமீந்தாருடைய சொந்தப் பத்திரிகையாகக் கைக்கு வந்து கண்ணாயிரத்தின் நிர்வாகத்தில் அடங்கிய பின் குத்துவிளக்கில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்களுடைய கவனத்தை மிக வேகமாகக் கவர வேண்டும் என்பதற்காக 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற அதி பயங்கரத் துப்பறியும் தொடர் கதையை 'இரத்தக் காட்டேரி' என்னும் புனைப்பெயர் பூண்ட பேயாண்டி என்ற மர்மக் கதை மன்னர் எழுதி வந்தார். திரைப்படச் சிங்காரிகளின் தலை அலங்காரங்களைப் பற்றிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மலையாள ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதுகிற தலையங்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. 'குத்துவிளக்கின்' ஊழல்களைப் பற்றியும், அதில் வருகிற தரக்குறைவான அம்சங்களைப் பற்றியும் அதே பத்திரிகையில் முன்பு வேலை பார்த்து வந்தவன் என்ற முறையில் குமரப்பனிடம் யாரோ நண்பர்கள் கேட்டபோது "நாமெல்லாம் இருந்து வேலை பார்த்து அதை இன்னும் அதிக காலம் நன்றாக வாழ வைத்துவிடக் கூடாது. இட் ஈஸ் மை விஷ் தட் இட் எண்ட்ஸ் இன் எ நேச்சுரல் டெத்' (அது இயற்கையாகவே சாகும்படி விட்டு விட வேண்டுமென்பதுதான் எனது ஆசை). துப்பறியும் கதைகளில் அதிகமாகச் செலவழிவது கொலை செய்யப்படுகிறவர்களின் இரத்தம். அதிகமாகச் செலவழியாதது அவற்றை எழுதுகிறவர்களின் மூளை. 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற தலைப்பை அதிபயங்கரமாகப் போட்டு விட்டுத் தூக்கம் வராமல் வேதனைப்பட்ட கதாநாயகன் கட்டிலுக்கடியில் இருந்த இருபது மூட்டைப் பூச்சிகளையும் நசுக்கிக் கொன்றதாக முடிப்பதிலும், 'எரிந்த பங்களா' என்று தலைப்பை எழுதிவிட்டுக் கடைசியில், 'நேற்றுவரை இருண்டு போயிருந்த அந்தப் பங்களாவில் இன்று விளக்கு எரிந்தது' என்பதாக முடிப்பதும் கூட உண்டு. அதெல்லாம் என்ன செய்வதென்று தெரியாதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே ஏதோ செய்து வருகிற காரியங்கள். நாம் ஏன் அவற்றையெல்லாம் பற்றிக் காலைப்பட வேண்டும்?" என்று குமரப்பன் அலட்சியமாக மறுமொழி கூறியிருந்தான். அதே குத்துவிளக்கில்தான் இப்போது மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்தும், ஜமீந்தாருடைய நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும், தலையங்கங்கள் வெளிவந்திருந்தது. குத்துவிளக்கின் இந்த அடாத செயலை எதிர்த்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டுவதற்காக மல்லிகைப் பந்தல் கல்லூரி மாணவர்கள் அந்த வாரம் கட்டுக்கட்டாக அந்தப் பத்திரிகைப் பிரதிகளை விலைக்கு வாங்கிப் பொது இடங்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள்.

     "நல்லாக் கொளுத்தட்டும்! நமக்கென்ன வந்திச்சு? உள்ளூர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு" என்று ஜமீந்தார் இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு 'ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீந்தார்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.