36

     சுற்றமும் சூழலும் படைத்து வைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் தானே புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன.

     நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற அந்தப் பார்வையில் அவளுக்குக் கட்டுப்பட்டான் சத்தியமூர்த்தி. சில விநாடிகளுக்குப் பின் அவளுக்கு மறுமொழி கூறிய போது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது.

     "சத்தியமாக மட்டுமின்றி நித்தியமாகவும் நீ என் மனத்தில் தங்கியிருப்பாய் மோகினி! உன் அம்மா உயிருடன் வாழ்ந்திருக்கும் போதே நீ அநாதைதான். அம்மா போன பின் இப்போதோ நீ இன்னும் நிராதரவாகவும், நிச்சயமாகவும் அநாதையாகிவிட்டாய்! ஆனால் இனி நீ அநாதையுமில்லை, உன்னை நீயே அநாதையென்று வருணித்துக் கொள்ளுவதற்கும் இனிமேல் நான் விடமாட்டேன். உடம்பும் முகமும் அழகாயிருக்கிற பெண்ணொருத்திக்குக் கணவனாயிருக்கிற ஆண் மகனே நிமிர்ந்து நடக்கிற இந்த உலகத்தில் இதயமும் அழகாயிருக்கிற உன்னைக் கைப்பிடித்த நான் அதற்காக எவ்வளவோ பெருமைப்படலாம், எவ்வளவோ நிமிர்ந்து நடக்கலாம்."

     "மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடந்துவிட்ட இந்தக் கலியாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா அன்பரே?" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி கூறிய பதிலில் ஒரு பெரிய காவியமே உள்ளடங்கியிருந்தது.

     "மனத்தின் சந்தோஷமே மங்கல வாத்தியங்களாகவும் பரஸ்பர நம்பிக்கையே அங்கீகாரமாகவும் நடைபெறும் காந்தர்வ விவாகங்களைப் பற்றி இதிகாசங்களிலும் காவியங்களிலும் தான் இதுவரை படித்திருக்கிறோம் மோகினி. கொட்டும் அடைமழையில் காரிருளில் வஸந்தசேனையையும் சாருதத்தனையும் போல் மணந்து கொண்டவர்களும் இந்த நாட்டுக் காவியங்களில் தெய்வீகக் காதலர்களாகத் தானே வாழ்கிறார்கள்."

     "யார் இந்தக் காதலர்கள்? அவர்களைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்! உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளர நான் உற்சாகத்தை அடைவதாக உணர்கிறேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மாமிசக் கழுகுகளாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் மனமில்லாமல் போலியாக ஏதாவது சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது! இன்னும் சிறிது நேரத்துக்கு அந்தப் பாவிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாகப் போகிறது?"

     சத்தியமூர்த்தி மோகினியின் இந்த வேண்டுகோளைக் கேட்டுச் சிரித்தான்.

     "ஏன் சிரிக்கிறீர்கள்?"

     "தன் கணவனிடம் வேண்டுகோள் விடுக்கிற மனைவியை நினைத்தால் சிரிப்பு வராமல் வேறென்ன செய்யும்?"

     அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது நர்ஸ் மோகினிக்காக ஒரு கிளாஸ் நிறையச் சாத்துக்குடிப் பழரஸத்தைப் பிழிந்து கொண்டு வந்து வைத்தாள். சத்தியமூர்த்தி நர்ஸ் வைத்த இடத்திலிருந்து அந்தக் கிளாஸைத் தன் கையால் எடுத்துச் சிரித்துக் கொண்டே மோகினியிடம் நீட்டினான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.