43

     பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது.

     சத்தியமூர்த்தியின் கேள்விக்குத் தோட்டக்காரனும் புண்பட்ட மனத்தோடு தான் பதில் சொன்னான். "இந்த அழுகைக்கு எங்கே விடிவு பொறக்கப் போகுது? இதை நீங்களும் நானும் கேட்டு ஒண்ணும் ஆகப் போகிறதில்லீங்க. தெய்வம் இருக்குதே தெய்வம் அதுக்குக் காதுன்னு ஒண்ணு இருந்தா அது செவி சாய்ச்சு கேட்க வேண்டிய அழுகை இது! இந்த வயித்தெரிச்சலைக் கேட்காதீங்க... இது இன்னொரு கண்றாவிக் கதை..." என்று தொடங்கிக் குரலைத் தணித்துக் கொண்டு ஏதோ ஆவேசம் வந்தவனைப் போல் மேலும் மேலும் மனக் கொதிப்போடு பேசலானான் அந்தத் தோட்டக்காரன்.

     "சாரோ! சாரு! உங்களைத்தானே? உங்களுக்கு ஏன் இல்லாத வம்பெல்லாம்? உலகத்திலே - இந்தப் பாழாப் போன உலகத்திலே இப்பிடி ரொம்ப நாளா ரொம்ப அநாதைங்க அழுதுகிட்டிருக்குதுங்க. சாமிக்குக் காதிருந்து கேட்டுக் கண் திறந்தால்தான் இவர்களுக்கு விடிவு உண்டு... 'மோகினி'ன்னு கிளியாட்டமா இந்த ஊர்லே ஒரு டான்ஸ்காரப் பொண்ணு இருக்குதே - அதான் சார் - அந்தப் பொண்ணோட அம்மாக்காரி கூடக் கொஞ்சம் நாளைக்கு முன்னே கார் விபத்துலே செத்து வச்சாளே... அந்தப் பொண்ண இங்கே கொண்டாந்து தங்க வச்சிருக்கார் எங்க ஜமீந்தார்... ரொம்ப நாசுக்காகச் சொல்லணுமானா ஜெயில் இருக்குதே ஜெயில், அதிலே கைதியை பிடிச்சு வச்ச மாதிரி வச்சிருக்காரு... அந்தப் பொண்ணுக்குத் துணையாயிருக்கணும்கிற பேரிலே ஒரு ஆயாக் கிழவியையும் காவலாப் போட்டிருக்காரு. உள்ளே எட்டிப் பாரு சார். எங்கியாவது இந்த அநியாயம் நடக்குமா? அந்தப் பொண்ணு தலைவிரி கோலமாகக் கீழே தரையிலே கிடக்கிற வீணையிலேயும் தம்புராவிலேயும் தலையை மோதிக்கிட்டுக் கதறிக் கதறி அழுவுது. ஆயாக் கிழவியோ ஜமீந்தாருக்குப் பயந்து கிளியைக் கூட்டிலே பிடிச்சி அடைச்ச மாதிரி அந்தப் பொண்ணை உள்ளார வச்சுக் கதவையே பூட்டிப்புட்டா. ரொம்ப தங்கமான பொண்ணு சார்... அசோக வனத்துலே சீதையைக் கொண்டாந்து வச்ச மாதிரி எங்க ஜமீந்தாரு இந்தப் பொண்ணை இங்கே கொண்டாந்து வச்சிருக்காரு..." என்று கூறிக் கொண்டே மாளிகையின் முன்புறம் பூட்டப்பட்ட அறையின் திறந்த ஜன்னலருகே சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தான் தோட்டக்காரன். உயிருள்ள மங்கல வாத்தியமொன்று உயிரில்லாத மர வாத்தியங்களைத் தழுவியபடியே தாங்க முடியாத சோகத்தால் தளர்ந்து துவண்டு கிடப்பதைச் சத்தியமூர்த்தி அப்போது அந்த அறைக்குள் பார்த்தான். மோகினி தலைவிரி கோலமாகக் கிடந்தாள். அவளுடைய மூடிய கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாத்தியம் - அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைபட்டு அழுது கொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான்.

     மனத்தை நெகிழச் செய்து தவிக்க வைக்கும் அந்தச் சோகக் காட்சியைப் பார்த்த பின் அவனுடைய கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. 'பூபதியாவது விமான விபத்தில் ஒரேயடியாக இறந்து போய்விட்டார். இவளுக்கோ வாழ்க்கையே பெரிய விபத்தாக இருந்து ஒவ்வொரு நாளும் இவளைச் சிறிது சிறிதாகக் கொன்று கொண்டிருக்கிறது. விரும்பியபடி வாழ முடியாமல் போவதும், வாழ்வதில் விருப்பமில்லாதபடி ஏனோதானோ என்று இயங்குவதும் கூட ஒருவகைச் சாவுதான். மனத்தைக் கொன்று விட்டு உடம்பால் மட்டும் வாழ முடியுமானால் அந்த வாழ்க்கையே அப்படி வாழ்கிறவர்களுக்கு ஒரு சாவாக இருக்கும்!' என்று நினைத்தான் சத்தியமூர்த்தி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.