49
தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது. இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை 'அரெஸ்ட்' செய்து கொண்டு போக வந்திருப்பதாகக் கூறினார். "என்ன காரணத்துக்காக என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறீர்கள்?" என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி. இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறிய போது, 'நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே! உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வச்சுப்பிடுவேன் தெரியுமா?' என்று முன் தினம் ஜமீந்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததைச் சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீந்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும், அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன?' என்பதை நினைத்த போது அந்தக் கணத்தில் சத்தியமூர்த்திக்கு இந்த உலகத்தின் மேல் கோபம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது. 'திரைப்படங்களிலும், நாவல்களிலும் தான் கதாநாயகர்களுக்கு எதிராக அளவு மீறிக் கெடுதல் செய்கிற கொடியவர்கள் வருவார்கள்' என்று அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வான் குமரப்பன். வாழ்க்கையில் கண்ணெதிரிலேயே அப்படிப்பட்ட கொடியவர்கள் உண்டு என்பதை மஞ்சள்பட்டியார் இப்போது நிதரிசனமாகக் காண்பித்து விட்டார். குமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய் - ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் - பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்ற போது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகளில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற் போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் சென்றார்கள். மல்லிகைப் பந்தலைப் போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக் கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்குச் சத்தியமூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள்; மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, 'விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகத் தமிழ் விரிவுரையாளர் கைது' என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியைச் சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காகக் கீழ்நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச்சாலையும் 'வி' என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற் போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி - கீழ்ப்புறத்துச் சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழச் சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்துவிட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள்.
"இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டு ராத்திரியோடு ராத்திரியா... ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே ஜமீந்தார்... போலீசிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறாரு" என்று அவள் கேட்காமலே தானாகச் சொல்லத் தொடங்கினான் உடன் இருந்த டிரைவர். இதைக் கேட்டுப் பாரதியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கீழே வளைவாகச் சரிந்து இறங்கும் செம்மண் சாலையில் நோக நோக நடந்து செல்லும் சத்தியமூர்த்தியின் பொன்னிறப் பாதங்கள் மேற்புறத்துச் சாலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன. நெடு நாட்களுக்குப் பின்பு அந்தப் பளிங்கு நிறப் பாதங்கள் அவளுக்கு இன்று காட்சி கொடுத்தன. அவள் நின்ற இடத்திலிருந்து அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய நடையில் அதே பழைய கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும் அநீதியும் மலிந்து விட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் சற்றே தாழ்ந்து கீழ்நோக்கிக் குனிந்திருந்தது. அவனுடைய கைகளும், கால்களும் படிகிற இடமெல்லாம் ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதாகத்தான் முன்பு ஒரு சமயம் அவள் கற்பனை செய்திருக்கிறாள். கல்லூரி விடுதிக்கு நெருப்பு வைக்க அவனுடைய கைகள் தூண்டியிருக்க முடியுமென்று இன்று அவளால் நினைப்பினுள் கற்பனை செய்யவும் முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப் பின் பல நாட்களாக அவள் கல்லூரிக்கே போகவில்லை. அதனால் கல்லூரி நடைமுறைகள் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிய வழியில்லாமல் போய்விட்டது.
மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கல்லூரி முதல்வரும் அடிக்கடி கல்லூரி நிர்வாக சம்பந்தமாக வீட்டில் சந்தித்துப் பேசிக் கொள்வதைத் தானும் அதே வீட்டிலிருந்ததன் காரணமாகச் சில சமயங்களில் பாரதி கண்டிருக்கிறாள். சத்தியமூர்த்திக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் நல்ல உறவு இல்லாமல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும், விடுதி மாணவர்களும், பிறரும் சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதும் ஒருவாறு அவளுக்குத் தெரிந்திருந்த உண்மைகள் தான். ஆனால் அந்த உண்மைகளின் விளைவு இவ்வளவு பயங்கரமாக மாறிச் சத்தியமூர்த்தியைப் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. கல்லூரி முதல்வருக்கும் - சத்தியமூர்த்திக்கும் அடி நாளிலிருந்தே நல்ல உறவு இல்லை என்பது அவளுக்குத் தெரியும். தன் தந்தை இருந்தவரை முதல்வருடைய இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் அவரே சத்தியமூர்த்தியை நேரடியாகக் கவனித்து அன்பாக நடந்து கொண்டது போல் மஞ்சள்பட்டி ஜமீந்தார் நடந்து கொள்ள மாட்டார் என்பதையும் தனக்குத்தானே அநுமானித்து உணர்ந்து கொண்டிருந்தாள் பாரதி. மேற்பக்கத்துச் சாலையில் வேகமாகத் திரும்பிக் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் நின்றதையும் - காரிலிருந்து அவள் வெளியே இறங்கிப் பரபரப்பாகத் தன்னைக் கவனித்ததையும் சத்தியமூர்த்தி கண்டிருந்தான். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கி விட்டதன் காரணமாக நின்று நிதானித்து அவளை நிமிர்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இல்லாமல் போய்விட்டது அவனுக்கு. தன்னை அந்தக் கோலத்தில் அந்த நிலையில் போலீஸ்காரர்கள் புடைசூழப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் பார்த்ததும் அவள் என்ன நினைத்துக் கொண்டு செல்வாள் என்று மனத்துக்குள் சிந்தித்துப் பார்க்கக் கூட அப்போது அவனுக்கு நேரமில்லை. போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், அவனும், அவனோடு கூட வந்தவர்களும் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட்டார்கள். தெருவில் அங்கங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குச் சொல்லி மற்ற மாணவர்கள் இன்னும் வேறு சில மாணவர்களுக்குச் சொல்ல - அதன் பயனாகப் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. வெகுநேரம் மேற்கொண்டு என்ன செய்வதென்று கையும் காலும் ஓடாமல் மேலே உள்ள சாலையில் காரருகே நின்றபடி போலீஸ் ஸ்டேஷன் வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி. தன்னையறியாமலே அவளுக்குக் கண் கலங்கிவிட்டது. சத்தியமூர்த்தி தன்னிடம் பாராமுகமாக இருக்கிறான் என்றும் தன்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளாமல் விலகி விலகிப் போகிறான் என்றும் அவனைப் பற்றி அவள் மனத்தாங்கலும் ஏக்கமும் கொண்டிருந்தாலும் இன்று அவனுக்குத் துன்பம் வந்து விட்டதைப் பார்த்துக் கண்ணும் மனமும், கலங்காமல் அவளால் விலகிப் போய்விட முடியவில்லை. தந்தை இறந்த பின் பல நாட்களாக அவள் வீட்டிலிருந்து வெளியேறி எங்கும் போகவேயில்லை. இன்றோ உடல் நலனைப் பரிசோதித்துக் கொள்வதற்காக டாக்டர் வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டிருந்தவள் - டாக்டர் வீட்டுக்குப் போகும் எண்ணத்தையே விட்டுவிட்டு யாராவது அந்தரங்கமானவர்களிடம் அந்த விடிகாலை வேளையில் சத்தியமூர்த்திக்கு இழைக்கப்பட்டு விட்ட அநீதியையும் துன்பத்தையும் பற்றிக் குமுறிக் குமுறிப் பேச வேண்டுமென்று தோன்றியது. நல்லவேளையாக, மாணவர்களுடைய விடுதியில் மட்டும்தான் வேலை நிறுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் உள்ள மாணவிகளின் விடுதியில் வேலை நிறுத்தம் கிடையாது. மாணவிகள் விடுதிக்கு உடனே போய் மகேசுவரி தங்கரத்தினத்தையோ, அவள் இல்லாவிட்டால் வேறு யாராவது ஒரு தோழியையோ தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றியது பாரதிக்கு. கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி அதற்கு எந்த விதத்தில் காரணம் என்பதைப் பற்றியும் - கல்லூரி விடுதியிலேயே இருக்கிற ஒரு மாணவியிடம் விசாரித்து விட வேண்டுமென்று அப்போது அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் அன்பும் அநுதாபமும் கலந்து கனத்துக் கிடக்கும் உணர்வுச் சுமைகளை யாரிடமாவது பங்கிட்டுக் கொண்டாக வேண்டும் போலவும் தவிப்பாக இருந்தது அவளுக்கு. "காரை நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விடு" என்று ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டு டிரைவருக்குக் கட்டளையிட்டாள் பாரதி. கார் அங்கிருந்து நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விரைந்தது. கல்லூரிக் காம்பவுண்டைச் சுற்றிலும் சாலைகளிலும், விடுதி முகப்பிலும், முதல்வர் அறையருகேயும் ஏராளமாக 'ஸ்பெஷல் மலபார் ரிஸர்வ் போலீஸ்' காவல் காத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களும், விளையாட்டு மைதானமும், புல்வெளிகளும் வகுப்பறைகளும் களையிழந்து தெரிந்தன. 'அப்பா உயிருடன் இருந்திருந்தால் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு களங்கம் நேர விட்டிருக்க மாட்டார்!' என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராக தன்னுடைய வலிமையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! ஜமீந்தார் மாமாவிடமோ எல்லா முரட்டுக் குணங்களும் உண்டு. அதிகம் படிப்பில்லாதவர்களால் தங்களை இன்னொருவன் மதித்துப் பயப்பட வேண்டும் என்கிற ஆசையை ஒரு போதும் இழக்கவே முடியாது. தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகக் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்க முடியாது. ஜமீந்தார் மாமா சூதாட்டத்தில் ஆசை உள்ளவர். வாழ்க்கையையும் சூதாட்டத்தைப் போலவே ஆடப்பார்க்கிறார். வெற்றி கிடைக்கும் வரை சூதாட்டம் போன்ற அந்த ஆசையை இழக்கவே மாட்டார் அவர்' என்று எண்ணினாள் பாரதி. மாணவிகளின் விடுதியைச் சுற்றியும் கூடப் பலமான போலீஸ் காவல் இருந்தது. கலைக்கூடமாகிய அந்தக் கல்லூரியின் அழகிய கட்டிடங்கள் இப்படிப் போலீஸ்காரர்களின் காவலோடு போர்க்களமாகக் காட்சி தருவதைக் கண்டு அதை நிறுவியவரின் மகள் என்ற உணர்வோடு மனம் வருந்திக் கண்கலங்கினாள் அவள். மகேசுவரி தங்கரத்தினத்தையும் - உடன் அழைத்துக் கொண்டு கல்லூரி விடுதியிலிருந்து பாரதி வீட்டுக்குத் திரும்பிய போது காலை எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. காரிலேயே இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். "நான் கேள்விப்பட்டவரை மாணவ மாணவிகள் எல்லாரும் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பாரதீ! சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ்' செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய் பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது. பொய்யாக வாழத் தெரியாது. அவரைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய்! ஜமீந்தாரும் பிரின்ஸிபலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்? உனக்குத் தெரியாது? எனக்கென்னடி தெரியும்?" "வீட்டில் சந்தித்தால் எனக்கென்ன தெரிகிறது? நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீந்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கிய பின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமாக வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீந்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். "பெரிய ஐயா... இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவராயிருக்கேன் அம்மா! நீ குழந்தையாக இருந்த வயசிலேயிருந்து உன்னை எடுத்து வளர்த்திருக்கேன். உங்கிட்ட மெய் பேசாமற் போனாத் திங்கற சோறு என் வவுத்துல ஒட்டாது. ஆனாலும் இப்போ நான் சொல்லப் போறதை நான் சொன்னேனின்னு நீ யாரிட்டேயும் சொல்லப்படாது. நான் ஏழை. வல்லமை உள்ளவர்களை விரோதிச்சுக்கிட்டு வாழ முடியாதவன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வர்ற விஷயத்தைக் கேட்டதினாலே அதைப் பற்றி எனக்குத் தெரிந்த நெசத்தை நான் உங்ககிட்டச் சொல்லிடனுமுன்னு தோணுது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரா நெஜமும், நியாயமும் கூட நிற்கிற காலமில்லேம்மா இது..." "நீ என்ன சொல்லப் போகிறாய், முத்தையா?" என்று பாரதி வியப்போடு அந்த டிரைவரைக் கேட்டாள். "வேறொண்ணுமில்லையம்மா! நீங்க பேசிக்கிட்டிருக்கிற அதே விஷயம் தான்!" என்று மேலே பேச வேண்டியதைப் பேசத் தயங்கினாற் போல் சிறிது நேரம் மௌனம் சாதித்தான் அவன். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|