31

     ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

     அன்று பகல் மூன்று மணி சுமாருக்குத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்திருந்தான். அப்போதிருந்த பரபரப்பில் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அதைப் பிரித்துப் படிப்பதற்கு நேரம் இல்லை. மாணவர் யூனியன் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்களை எண்ணி முடிவையும் அறிவித்து விட்டுச் சத்தியமூர்த்தி அறைக்குத் திரும்பும் போது சிறிது தொலைவு வரை கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜும் பேசிக் கொண்டே கூட நடந்து வந்தார். ஜார்ஜ் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் அறைக்குப் போய்ச் சட்டையைக் கழற்றிய போது தந்தையின் கடிதம் நினைவு வந்தது சத்தியமூர்த்திக்கு. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படிக்கலானான். அப்பாவின் வழக்கப்படி பிள்ளையார் சுழி 'முருகன் துணை'க்குக் கீழே கடிதம் ஆரம்பமாயிற்று. சங்கிலி பின்னியது போல் எழுத்துக்களைச் சேர்த்து நீட்டி இழுத்து எழுதப்பட்ட கூட்டெழுத்துக்களால் நான்கு பக்கத்துக்கு ஏதேதோ வளர்த்து எழுதியிருந்தார் அப்பா.

     'சிரஞ்சீவி சத்தியத்துக்கு அநேக ஆசிகளுடன்' கடிதம் தொடங்கியிருந்தது. 'கண்ணாயிரம் பரம உபகாரியாயிருக்கிறார். வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்கு நகரசபை அனுமதி விரைவில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணாயிரம் யாரோ அவருக்குத் தெரிந்த மனிதர் மூலம் நகரசபையில் உள்ள ஒருவருக்குக் கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தினால் காரியம் சுலபமாக முடிந்துவிட்டது. கொத்தனார்கள் இரண்டு நாட்களாக மாடியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலைகளுக்காக நிறைய 'சிமிண்ட்' தேவையாயிருக்கிறது. 'சிமிண்ட்' கண்ட்ரோல் விலைக்குக் கிடைப்பதற்குச் சிரமப்படும் போல் இருக்கிறது. அதற்கும் கண்ணாயிரத்தைத்தான் நம்பியிருக்கிறேன். இவரிடம் சொல்லித்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். நீ சென்ற மாதம் நூற்று இருபது ரூபாய் மணியார்டர் இங்கே அனுப்பியிருந்தாய். வருகிற மாதத்திலிருந்தாவது கட்டாயம் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கனுப்புவதற்கு முயற்சி செய். கண்ணாயிரத்தினிடம் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் கட்டிட வேலைகளுக்குப் போதாதென்று தோன்றுகிறது. மூத்தவள் ஆண்டாளுக்குக் கலியாணம் முடித்துவிட வேண்டும் என்று வேறு உன் அம்மா அவசரப்படுகிறாள். எதைச் செய்வதற்குத்தான் அவசரப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கை நிறையப் பணத்தை வைத்துக் கொண்டு அலைந்தாலொழிய ஒரு காரியமும் ஆகாது. வீட்டை இப்போது இடித்துக் கட்டுகிற வேலையை நான் தொடங்கியது நல்லதாயிற்று. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மாடி இடிந்து தலையில் விழுந்து விடும். மாடிச் சுவரை இடித்த மேஸ்திரியே இதைச் சொன்னான். 'நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் விழுந்துவிடும்' என்று அவன் சொன்னதை நீ நேரில் பார்த்தாலும் அப்படியே ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கும்.

     நாற்பது வருடங்கள் பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்நாளைக் கழித்தவனின் குடும்பமும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் எவ்வளவுக்குச் செழிப்பின்றி வறண்டு போயிருக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணமாகி விட்டேனடா சத்தியம்! என் கண் காண நீயும் அதே வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய்; காலேஜில் வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய் என்று வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்படலாம். மாதம் முதல் தேதி பிறந்ததும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டால் மீதமிருக்கிற சம்பளப் பணத்தில் நீ வாயைக் கட்டிக் காலம் தள்ள வேண்டியிருக்கும். அதை நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. கண்ணாயிரத்திடம் இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் மேலேயே அடமானமாகப் புதிய கடனையும் தர முயல்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் அவ்வப்போது இங்கே வந்து மதுரையில் தங்குகிற காலங்களில் சந்திப்பதற்குச் சென்றால் என்னிடம் பிரியமாகவே நடந்து கொள்கிறார்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.