29

     தீரர்கள் ஒரு போதும் தங்களுக்குப் பக்கத்தில் நிற்கிற ஆயிரம் நண்பர்களால் மட்டும் திருப்திப்பட்டு விடுவதில்லை. எங்கோ இருக்கிற யாரோ ஓர் எதிரியை அழிக்கவே அவர்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

     ஒரு மென்மையான மலரை வாடி விடாமல் பத்திரமாகப் பொதிந்து வைக்க வேண்டுமென்ற முயற்சியிலேயே கைதவறிக் கசக்கி எறிந்து விட்டாற் போன்றிருந்தது அந்தச் சூழ்நிலை. தரையிலிருந்து பொறுக்கிய கடிதத் துணுக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு அவள் கண் கலங்கி நிற்பதை உணர்ந்த போது அவன் அடைந்த வேதனை சொற்களால் அளவிட்டு உரைக்க முடியாததாக இருந்தது. ஒருவரை வெறுத்தாலும் அந்த வெறுப்பை அதற்கு ஆளானவளே நேருக்கு நேர் இவ்வளவு குரூரமாகக் கண்டுகொள்ளும்படி நடந்துவிட்ட அநாகரிகத்தை எண்ணி மனம் புழுங்கினான் அவன். கிழிந்த கடிதத் துணுக்குகளையும் தன்னையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுக் கண்ணீர் பெருகும் விழிகளோடு சொல்லிக் கொள்ளாமலே அவள் படியிறங்கித் திரும்பிச் செல்லும் போது நடைப் பிணமாகச் செல்வதை அவனும் உணர்ந்தான். 'இன்றைக்கென்று இந்த நேரம் பார்த்து அந்தக் கடிதங்களைக் கிழிக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தான் தோன்றியதோ' என்று எண்ணித் தன்னைத் தானே நொந்து கொண்டான் அவன்.

     அன்று காலையில் கல்லூரிக்குப் போனால் 'அந்தப் பெண்ணின் கலங்கிய விழிகளைத் தைரியமாக எப்படி எதிர் கொள்வது?' என்று தயங்கியது அவன் மனம். நீண்ட நேரமாக மேற்கொண்டு ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்து விட்டுக் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததும் உற்சாகமில்லாமல் உடை மாற்றிக் கொண்டு ஏதோ கொலைக் களத்துக்குப் புறப்படுவது போல் புறப்பட்டிருந்தான் அவன். கல்லூரிப் பாடவேளைகள் தொடங்கி அவன் வகுப்புக்குச் சென்ற போது, அன்று அவள் கல்லூரிக்கே வரவில்லை என்று தெரிந்தது. பாரதி தனக்கு எழுதியிருந்த கடிதங்களை அவளே காணும்படி தான் துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்திருந்ததை எண்ணி எவ்வளவுக்கு மனம் உடைந்திருப்பாள் என்று நினைத்த போது சத்தியமூர்த்தி நிம்மதியிழந்து தவித்தான். பாரதி அன்று கல்லூரிக்கே வரவில்லை என்பது வேறு அவனுடைய கவலையை அதிகமாக்கியிருந்தது. கல்லூரியிலோ அந்த மனநிலையோடு அவன் உற்சாகமாகச் செய்ய முடியாத சுறுசுறுப்பான வேலை ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது.

     நடப்பு ஆண்டில் கல்லூரி யூனியனுக்கு மாணவர்களிலிருந்து ஒரு தலைவனோ, தலைவியோ தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் நடத்தும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிப் பூபதி 'ஆர்டர்' அனுப்பியிருந்தார். கல்லூரி மாணவர் யூனியன் தலைவரையும், இலக்கியச் சங்கம், விஞ்ஞானக் கழகம், விளையாட்டுக் குழு முதலியவற்றுக்கான செயலாளர்களையும் தேர்ந்தெடுப்பதற்குரிய தேர்தலை நடத்துவதற்குச் சத்தியமூர்த்தி எலெக்ஷன் ஸ்பெஷல் ஆபிஸராக நியமிக்கப்பட்டிருப்பதாகக் காலேஜ் நோட்டீஸ் போர்டில் வேறு அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. மனத்தில் களிப்பில்லாமல் கடமையைக் காப்பாற்றுவதற்காக அந்தக் காரியங்களை அவன் செய்ய வேண்டியிருந்தது. உதவியாகவோ, ஆதரவாகவோ, அநுதாபத்துடனோ, யாரும் ஒத்துழைக்காத ஒரு சூழ்நிலையில் பொறுப்புக்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு போவதை எண்ணி அவனுக்குத் தயக்கமாக இருந்தது. முதல்வரும், துணை முதல்வருமாகிய வார்டனும், ஹெட்கிளார்க்கும் - தனக்கு ஆதரவாக இல்லை என்பதோடு மறைமுகமான எதிர்களாக இருக்கிறார்கள் என்பது நன்றாக அவனுக்குத் தெரிந்திருந்தது. மற்றவர்கள் எதிரிகளாக இல்லாதது போலவே நண்பர்களாகவும் இல்லை. மாணவர்கள் தான் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். ஓர் ஆசிரியன் பெருமைப்பட்டுக் கொண்டு நிமிர்ந்து நடப்பதற்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்? ஆனாலும் இந்த ஒரு பெருமையால் மட்டுமே சத்தியமூர்த்தியின் மனம் நிம்மதியடைந்து விடவில்லை. இப்படிக் கவலைப்படுவது தான் தீரர்களின் சுபாவம்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.