53
அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமைதான் மிக மிக இழிவு. கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதையும், அதற்குக் காரணமாக இருந்தவர் இதே கல்லூரியில் வேலை பார்க்கும் ஓர் இளம் விரிவுரையாளர் என்பதையும் பாரதி கூறக் கேட்டதும் மோகினி தானாகவே மனதில் எதை எதையோ கற்பனை செய்து கொண்டு கலங்கினாள். 'ஐயோ! என் உயிரினும் மேலான தெய்வம் துன்பப்படுவதை நான் அருகில் இருந்தே காணும்படி விதி என்னையும் இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டதே' என்று 'அப்படி இருக்குமோ?' என்பதை அநுமானிக்கும் போதே மோகினி நடுங்கினாள். இந்த வேளையில் முன்புறம் போர்டிகோவில் மறுபடியும் கார் வந்து நிற்கும் ஓசையைக் கேட்டுப் பாரதி மோகினியோடு பேசிக் கொண்டிருந்த பேச்சை அப்படியே பாதியில் விட்டு விட்டு எழுந்து போய்ப் பார்த்தாள். காரில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும், புதிதாகப் பிரின்ஸிபலும் திரும்பி வந்திருந்தார்கள். கணக்குப்பிள்ளைக் கிழவரை மட்டும் காணவில்லை. அவர்கள் போன இடத்தில் அந்தக் கிழவரை மட்டும் எங்கேயோ விட்டு விட்டுப் பிரின்ஸிபலை அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. வந்தவர்கள் மூவரும் காரிலிருந்து கீழே இறங்கி உள்ளே முன் பக்கத்து அறைக்குள் நுழைந்தவுடன், தோட்டத்துப் பக்கமாகப் பின்புறம் வந்து தன்னைப் பார்க்குமாறு டிரைவர் முத்தையாவுக்கு ஜாடை காட்டினாள் பாரதி. வண்டியை ஷெட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உடனே வருவதாக அவனும் பதிலுக்கு ஜாடை காட்டிச் சென்றான். பின்புறம் தோட்டத்து வராந்தாவின் கிராதியைப் பிடித்தவாறே டிரைவர் முத்தையாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அப்படிக் காத்திருந்த ஒவ்வொரு விநாடியும் ஒரு தனி யுகமாய் நகருவதாகத் தோன்றியது பாரதிக்கு. அவள் எதை அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தாளோ அதை அறிந்து கொள்ள விரும்பியதற்கும் அறிந்து கொண்டு முடிப்பதற்கும் இடையிலுள்ள காலம் ஒவ்வொரு கணமும் கனமாகவும் மெதுவாகவும் தயங்கி நின்றது. அந்த வராந்தாவின் இரும்பு அளிக்கு அப்பால் அளவாகக் கத்தரித்து விடப்பட்ட தோட்டத்து மரங்களின் மறுகோடியில் டிரைவர் முத்தையாவின் தலை தெரிவதை எதிர்பார்த்து அவளுடைய கண்கள் அந்தத் திசையிலேயே இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன. கடைசியாக அவனும் ஒரு வழியாக வந்து சேர்ந்தான். கார்ச் சாவிக் கொத்தை வலது ஆள்காட்டி விரலில் கொடுத்துச் சுழற்றிக் கொண்டே டிரைவர் முத்தையா விரைவாக நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போதே அவள் இதயம் படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. அவன் அருகில் வந்து வராந்தா மேடையின் இரும்பு அளிக்குக் கீழே தனக்கு எதிரில் நின்றதும், 'சிறிது நேரத்துக்கு முன்பு காரில் அந்த மதுரைக் கணக்குப்பிள்ளைக் கிழவரை அழைத்துக் கொண்டு ஜமீந்தாரும், கண்ணாயிரமும் எங்கோ புறப்பட்டுப் போனார்களே? அவரை எங்கே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தார்கள் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்பதற்குத் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் பாரதி. ஆனால் டிரைவர் முத்தையாவோ அவள் கேள்வி கேட்பதற்கு இடமே வைக்காமல் என்ன என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் தானாகவே சொல்லத் தொடங்கி விட்டான். அடுத்தவர்கள் தங்களிடம் எப்போது எதை எதிர்பார்த்துத் தயங்கி நிற்பார்கள் என்று குறிப்பறிந்து நடந்து கொள்கிற சாமர்த்தியம் படித்துப் பட்டம் பெற்ற பலரிடம் கூட இல்லாமல் போகிற அதே வேளையில் படிப்பறிவில்லாத வெறும் அநுபவசாலிகள் சிலரிடம் அந்தச் சாமர்த்தியம் அளவற்றிருப்பதைச் சில சமயங்களில் நாம் கண்டு வியக்க நேரிடும். டிரைவர் முத்தையா நானும் அத்தகைய அநுபவசாலிகளில் ஒருவன் என்பதை அப்போது நிரூபித்தான். "பாரதி அம்மா! உங்களுக்குத் தெரியுமா சேதி! காரியங்களெல்லாம் ரொம்பத் தந்திரமாயில்லே நடக்குது? நேத்திக்கிப் பொழுது சாயறப்போ மதுரையிலேருந்து கார்லே டான்ஸ்கார அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்தாரே ஒரு கணக்குப்பிள்ளைக் கிழவரு - அவருதான் நம்ப சத்தியமூர்த்தி சாரோட தகப்பனாராம். தகப்பனாரு ஜமீந்தார் ஐயாவுக்கும், கண்ணாயிரத்துக்கும் ரொம்பப் பயந்து கட்டுப்படறாரு. அதுனாலே அவரை அனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை அடக்கிடலாம்னு ஜமீந்தார் ஐயாவும், கண்ணாயிரமும் கனாக் காண்றாங்க... பிரின்ஸிபல் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஏதோ டைப் அடிச்ச கடுதாசியை அந்தக் கிழவரு கையில் திணிச்சி லேக் அவின்யூவிலே சத்தியமூர்த்தி சாரோட ரூம் பக்கத்திலே கொண்டு போய் அவரை இறக்கி விட்டுப்பிட்டு வந்திருக்காங்க... மேலே என்ன நடக்கப் போவுதோ? ஒண்ணும் தெரியலை..."
இதைக் கேட்டுப் பாரதியின் திகைப்பு அடங்கவே சில விநாடிகள் பிடித்தன. ஏழ்மையில் நைந்த கோலமும், அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக் கட்டுப்பட்டுப் பயந்த சுபாவமும் உள்ளவராகத் தோன்றிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவருடைய முகத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வர முயன்றாள் அவள். எதிரே வந்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் போது, அப்படி நிற்கிற நிலையிலே 'நான் ஒரு தீரன்' என்று நிரூபித்துக் கொண்டு - வாய் திறந்து பேசினால் எதிரே நின்று கேட்கிறவர்களைப் பிணிக்கும் கணீரென்ற குரலுடன் பேசும் சத்தியமூர்த்தியையும் இந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் சேர்த்துத் தந்தை மகன் என்ற உறவு கற்பித்து நினைக்கவும் முடியாமல் தயங்கியது அவள் மனம். இந்தக் கிழவர்தான் என்னுடைய தந்தை என்பதைத் தானும் தன் தந்தையும் முன்பு மதுரை மஞ்சள்பட்டி அரண்மனையில் போய்த் தங்கியிருந்த போது அங்கு தன் தந்தையைச் சந்திக்க வந்த வேளையில் அவரிடம் கூடச் சத்தியமூர்த்தி தெரிவிக்கவில்லை என்பதையும் பாரதி இப்போது நினைவு கூர்ந்தாள். தாங்கள் மதுரையிலுள்ள மஞ்சள்பட்டி பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் இந்தக் கிழவரை அங்கே அடிக்கடி பார்க்க நேர்ந்தும் கூட இவர் தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதைத் தெரிந்து கொள்ள நேரிடாமல் போனதை நினைத்து இப்போது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. திகைப்பிலிருந்து விடுபட்டுத் தன் நிலையடைந்த பின்பே டிரைவர் முத்தையாவுக்கு விடை கொடுத்தாள் அவள்.
"அந்தக் கிழவரை அழைத்துக் கொண்டு அவர்கள் வெளியே புறப்படும் போது சந்தேகமாக இருந்தது. அரை குறையாகக் காதில் விழுந்ததிலிருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் உன்னைக் கேட்கலாமென்று கூப்பிட்டேன் முத்தையா! நான் கேட்காமல் நீயே எல்லாம் சொல்லி விட்டாய்." "அப்புறம் வந்து பார்க்கிறேனம்மா! ஒரு மணிக் கூறு கழிச்சு மறுபடியும் போய் விட்ட இடத்திலேருந்து அந்தக் கிழவரை இங்கே அழைச்சிட்டு வரணுமின்னு ஜமீந்தார் ஐயாவோட உத்தரவு..." என்று சொல்லிப் பாரதியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான் டிரைவர் முத்தையா. உள்ளே மோகினி தனியாயிருந்தும், உள்ளே போய் அவளோடு எதிரே உட்காரத் தோன்றாமல், 'சத்தியமூர்த்தியை அவருடைய தந்தை என்ன சொல்லி அடக்க முயல்வார்? அதற்கு அவர் எப்படி எப்படி மறுத்துக் கூறுவார்?' என்று அங்கேயே வராந்தாவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கி விட்டாள் பாரதி. நியாயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் தம்முடைய தகப்பனாரது வற்புறுத்தலுக்காக இணங்கிவிடுவார் என்று அவளால் கற்பனை செய்து பார்க்கவும் கூட முடியவில்லை. அவள் இப்படி இங்கே தன் வீட்டில் உட்கார்ந்து வெறும் கற்பனையில் தந்தையும் மகனுமாகச் சந்திக்கும் அவர்களுடைய சந்திப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அங்கே லேக் அவென்யூவில் உள்ளே சத்தியமூர்த்தி அறையில் அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் கடுமையான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குமரப்பன் அவனுடைய கடையைக் கவனிப்பதற்காகக் கீழே இறங்கிப் போனப்பின் சத்தியமூர்த்தி பலவிதமான சிந்தனைகளுடன் மாடியறையின் வெளி வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தான். உலாவிக் கொண்டிருந்தவனுடைய பார்வை தற்செயலாகக் கீழ்ப்பக்கம் திரும்பிய போது சாலையில் ஏதோ ஒரு பெரிய கார் வந்து நின்றதையும் அதிலிருந்து தன் தந்தை இறங்கிப் படியேறுவதற்காக மாடியை நோக்கி வருவதையும் பார்த்து வியப்படைந்து, 'இவர் எப்போது மல்லிகைப் பந்தலுக்கு வந்தார்? எதற்காக வந்தார்? மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியோ, எனக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் நடுவேயுள்ள வேறுபாடு பற்றியோ தகவல் தெரிந்து அல்லது பத்திரிகைகளில் நான் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வெளியானதைப் பார்த்துப் பதறிப் போய் உடனே புறப்பட்டு வந்து விட்டாரோ?' என்று தான் அவரைப் பார்த்ததும் நினைக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. உடனே கீழே படியிறங்கிப் போய், "வாருங்கள்!" என்று தந்தையை வரவேற்றவனுக்கு பதில் கூடச் சொல்லாமல் உள்ளடங்கிய ஆத்திரத்தோடு மேலே படியேறி வந்தார் அவர். மிகவும் கோபமும் கொதிப்பும் அடைந்து வெறுப்போடு வந்திருக்கிறார் என்பது அவர் பதில் சொல்லாமல் படியேறி வந்ததிலிருந்தே தெரிந்தது. "பிழைக்க வந்த இடத்தில் அதிகாரமுள்ளவங்க யாரோ அவங்க தயவைச் சம்பாதிச்சுக்கிட்டு, வேலையை ஒழுங்காகப் பார்த்து மாதம் முடிஞ்சா சம்பளத்தை எண்ணி வாங்கறதை விட்டுப்பிட்டு இதெல்லாம் என்னடா அசிங்கம்? நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா?" என்று அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகச் சத்தியமூர்த்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ மேல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இரைந்தார் அவனுடைய தந்தை. "என்ன நடந்திருக்கிறது என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள் அப்பா! ஒருத்தருடைய தயவை சம்பாதிக்கணும் என்பதற்காக நியாயத்தை விட்டுவிட முடியாது. முறை தவறி நான் எதையும் செய்யவில்லை..." "மகா நியாயத்தைக் கண்டுபிட்டே நீ... என்னமோ... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்! பொடிப் பசங்க கைத்தட்டறாங்கன்னு இன்னிக்குச் சந்தோஷப்பட்டுக்கலாம். நாளைக்கு வேலை போனப்புறம் தெருவிலே நின்று வயிறு காய்ந்தால் அப்போ அதிகாரம் யாரிட்டே இருக்கோ அந்தப் பெரிய மனுசங்க தயவுதான் வேண்டியிருக்கும்." "எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் அப்பா?" "அதுதான் பேப்பர்ல எல்லாம் வந்திருக்குதாமே. எனக்கு ஒரு எழவும் தெரியாது. ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரை காரிலே மதுரைலேர்ந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு; வந்தேன். வந்தா இங்கே நீ பண்ணியிருக்கிற கூத்தையெல்லாம் சொன்னாங்க. ஏதுடா ஏழைக் குடும்பமே.. கலியாணத்துக்கு ரெண்டு தங்கச்சி நிற்கிறதே? ஒண்ணையும் நீ உணர்ந்ததாகத் தெரியலே... ஜமீந்தார் ரொம்பப் பொல்லாதவரு. மனசிலே வைரம் வைச்சார்னா அவ்வளவுதான்..." "ஆனால் நியாயம் அவரை விட பொல்லாதது அப்பா." "இதோ பாருடா... உன்னையெத்தானே? உன்னோட வாதாடறதுக்கு இங்கே நான் வரலே... நான் சொல்றதெக் கேளு... 'ஏதோ தெரியாத்தனமாகப் பையன்களை ஸ்டிரைக்குக்குத் தூண்டிப்பிட்டேன். நான் ஹாஸ்டல் ஷெட்டுக்குத் தீ வைக்கத் தூண்டினதும் தப்புத்தான். இந்த ஒரு தடவை மட்டும் என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னித்துத் தொடர்ந்து வேலை பார்க்க வழி செய்யணும்னு...' இதிலே நீயே வேண்டிக்கிறாப்பலே அவர்களே டைப் அடிச்சுக் கொடுத்திருக்காங்க... மூச்சு விடாமலே இதிலே ஒரு கையெழுத்துப் போடு. ஜமீந்தார் காலேஜ் நிர்வாகி என்கிற முறையிலே இதை வாங்கி இரகசியமாகப் பையிலே போட்டுப்பிட்டு உன்னை மன்னிச்சிடுவார். அதுக்குத்தான் நான் வந்திருக்கேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. கண்ணாயிரத்திடம் கடன் வேறே பட்டிருக்கோம். வீணா அவர்களை முகத்தை முறிச்சிக்கப்படாது. சொல்றதைக் கேளு?" என்று தந்தை நீட்டிய டைப் செய்த காகிதத்தை வாங்கி அவரே எதிர்பார்த்திராதபடி கோபத்தோடு சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் சத்தியமூர்த்தி. "மன்னிக்க வேண்டும் அப்பா! 'உங்கள் ஜமீந்தாரிடம் போய் என் மகன் அடங்காப்பிடாரி. அவன் நான் புத்திமதி கூறியும் கேட்கவில்லை' என்று சொல்லி விடுங்கள். என்னை வீழ்த்தி விட வேண்டுமென்று அவர்களே ஹாஸ்டல் ஷெட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை என்னை இழுத்தடிக்கிறார்கள். நான் நியாயம் கிடைக்கிற வரை சும்மா விடமாட்டேன்..." என்று அந்த டைப் செய்தத் தாளைக் கிழித்தெறிந்த கையோடு அவன் கைகட்டி நிமிர்ந்து நின்று கொண்டு பதில் சொல்லிய போது தந்தையின் முகம் கோபத்தினால் சிவந்து உதடுகள் துடித்தன. மீசை ஆடியது. அவனை நோக்கி ஆவேசமாகக் கூப்பாடு போட்டுக் கொண்டே அவர் திரும்பினார். "இனிமே உனக்கும் எனக்கும் என்னடா இருக்கு? மகனாவது ஒண்ணாவது? ஒரு வார்த்தைக்குக் கட்டுப் படலைன்னா நீ என்னடா மனுஷன்! உன் முகத்திலே முழிக்கிறதே பாவம்! மானம் மரியாதை இருந்தா இனிமே ஊர்ப்பக்கம் வீட்டுப் பக்கம் என்னைப் பார்க்க வராதே! உன்னைப் பெத்த தகப்பனின்னு நானும் வேலையத்துப் போயி இங்கே தேடி வந்தேனே?" என்று காறித் துப்பி விட்டு அதே வேகத்தோடு படியிறங்கினார் அவனுடைய தந்தை. சத்தியமூர்த்தி அப்போது அவரைத் தடுக்கவில்லை. அவர் நின்று நிதானித்துப் பேசுகிற சுய புத்தியோடு வரவில்லை என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. நியாயம் அவன் பக்கம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஜமீந்தாருக்கே அடிபணிய வேண்டுமென்ற தந்தையின் பயத்தை அவன் வெறுத்தான். தந்தை தன்னுடைய பக்கத்திலிருந்த நியாயத்தை அறியாமலோ அறிய விரும்பாமலோ அல்லது அறிய மனம் இல்லாமலோ - பிடிவாதம் பிடித்ததைக் கண்டு அவனால் பொறுமையோடு இருக்க முடியவில்லை. 'அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமை தான் மிகமிக இழிவு' என்று ஒரு தத்துவ ஞானி சொல்லியிருப்பதை இப்போது நினைத்தான் அவன். தந்தை தன் பக்கத்து நியாயத்தை அறிய மனமில்லாமலே புறக்கணித்துத் தனக்கே குழி பறிக்கத் துணையாகவும், சான்றாகவும் ஆகிற ஒரு தாளில் தன்னைக் கையொப்பமிடத் தூண்டிப் பிடிவாதம் பிடித்ததைக் கண்டு பொறுமை இழந்த அவன் அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்ததைக் கண்டு அவர் ஆத்திரப்பட்டு விட்டார். அந்த ஆத்திரத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிவிட்டுப் போய்விட்டார். அதற்காகவும் சத்தியமூர்த்தி கவலைப்படவில்லை. ஒரு நிலைமைக்கு மேல் போய்விட்டால் அப்புறம் கவலைகள் தான் மெய்யான நண்பர்களாகி விடுகின்றன. அவற்றைப் போல் சிந்தனைக்குச் சக்தியூட்டுவதற்கு வேறெவற்றாலும் முடிவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களை ஏமாற்றிவிட்டு அவன் தான் பிழைக்க ஆசைப்படவில்லை. மறுநாள் கலெக்டரும் மாவட்டப் போலீஸ் அதிகாரியும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்து விசாரிப்பதாக இருந்தது. அதற்குள் இப்படி ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்கித் தன்னை அடக்கி வீழ்த்தி விட முயலும் அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் ஓரளவு படிப்பும் பகுத்தறிவும் உள்ள தந்தையே ஏமாந்ததை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு. அவரைச் சொல்லி என்ன குற்றம்? 'பணமும் செல்வாக்கும் இருப்பதனால் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தான் இந்த உலகத்தின் அதிதேவதைகள் என்று நினைத்துச் சதாகாலமும் அவர்களைச் சுற்றிக் கொண்டு திரிகிறவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்' என்றெண்ணி வருந்தினான் அவன். தந்தை போனப் பின்பு சிறிது நேரத்துக்கெல்லாம் குமரப்பன் கீழே கடையிலிருந்து மேலே மாடிக்குப் படியேறி வந்து விசாரித்தான். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|