40
ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்குச் சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மௌனத்துக்கு மட்டும் எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு. மஞ்சள்பட்டியாரின் மாளிகை எல்லையில் மறுபடியும் தன் தந்தையை அந்த அவலமான நிலையில் தான் சந்திக்க நேரிடும் முன்பே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறி விட வேண்டுமென்றுதான் சத்தியமூர்த்தி அவ்வளவு அவசரமாக புறப்பட்டிருந்தான். அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுப் பூபதியும், அவர் மகள் பாரதியும் கூடத் தோட்டத்தில் ஜமீந்தார், கண்ணாயிரம் ஆகியவர்களோடு அமர்ந்து கொண்டார்கள். ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பூபதியும், பாரதியும் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த பகுதியிலிருந்து அரட்டைப் பேச்சுக்களும், பெரிதாக எழுந்து ஒலிக்கும் வெடிச் சிரிப்புக்களுமாக அந்தக் காம்பவுண்டிலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் செவிகளில் கேட்டு அவனை அருவருப்படையச் செய்தன. அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து சேரும் வரை அவன் மனத்தில் பலவிதமான சிந்தனைகள் அலைமோதிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வந்து இரவுச் சாப்பாட்டை முடித்த பின்பும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. அம்மா அவனிடம் எதையெதைப் பற்றியோ பேச முயன்றும் கேட்க முயன்றும் அவன் சரியாக மறுமொழி கூறாததனால் தானாகவே ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டுச் சிறிது நேரத்தில் தூங்கப் போய்விட்டாள். இரவு பதினோரு மணிக்கு மேல் தந்தை வீட்டுக்குத் திரும்பி வந்த போதும் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டுதான் இருந்தான். திருத்தம் செய்து மதிப்பிடுவதற்காக மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்கள் சிலவற்றை மல்லிகைப் பந்தலிலிருந்து கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்தான் அவன். அன்றிரவு தன்னால் முடிந்த நேரம் வரை கண்விழித்து அந்த விடைத்தாள்களில் பெரும் பகுதியைத் திருத்தி விட வேண்டும் என்று அவற்றை எடுத்து வைத்துக் கொண்டான் அவன் வேலையைத் தொடங்கியிருந்த போதுதான், தந்தை வந்து கதவைத் தட்டினார். வீட்டில் அம்மா உள்பட எல்லாரும் தூங்கிப் போய்விட்டதனால் சத்தியமூர்த்தி தான் திருத்தத் தொடங்கியிருந்த விடைத்தாள்களைக் கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறக்க வேண்டியதாயிற்று. அப்போது அவரும் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அவனும் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. தந்தையின் மேல் கோபமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன அவனுக்கு. திருமணமாக வேண்டிய தங்கைகளையும், இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு ஆகும் செலவுகளையும், தந்தையின் கவலைகளையும் நினைத்த போது அவனுக்குப் பரிதாபமாகவும் இருந்தது; அதே சமயத்தில் ஊர் உலகம் மெச்ச வேண்டும் என்ற போலி கௌரவத்துக்காக ஜமீந்தாருக்கு ஏதோ டியூஷன் நடத்துவதாகப் பொய் சொல்லிவிட்டுத் தன் தந்தை அங்கே எடுபிடி வேலையாளாகச் சுற்றிக் கொண்டிருப்பதை நினைத்து அடக்க முடியாத சீற்றமும் எழுந்தது. அன்றிரவு அந்த வீட்டின் எல்லையில் தந்தையும் நிம்மதியாக உறங்கவில்லை; மகனும் நிம்மதியாக உறங்கவில்லை. ஏறக்குறைய இரவு இரண்டு மணிவரை கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்களைக் (மார்க்) கூட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அதற்கு அப்புறமும் உறக்கம் வராமல் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ஆழ்ந்த உறக்கம் அன்றிரவு அவனுக்குக் கிடைக்கவேயில்லை. மறுநாள் காலையில் அவன் எவ்வளவு விரைவாக எழுந்திருந்தானோ அவ்வளவு விரைவாக எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டு விட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்குள் அவன் நுழையும் போது ஆறு அல்லது ஆறே கால் மணி இருக்கும். அப்போதுதான் ஆஸ்பத்திரி மெல்ல மெல்ல விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. நர்ஸுகள் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்கும் கையுமாக நோயாளிகளுக்குக் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறவர்களும், பழங்களும் கையுமாக நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்களுமாக ஆஸ்பத்திரி வாசலில் கலகலப்பு ஆரம்பமாகியிருந்தது. மோகினி இருந்த ஸ்பெஷல் வார்டில் அவன் நுழைந்த போது ஓர் அற்புதமான கண்ணுக்கினிய காட்சியைக் கண்டான். அப்போதுதான் பல்விளக்கி முகம் கழுவிக் கொண்டு வந்திருந்த மோகினி தன் அடர்ந்த கருங்கூந்தலை அவிழ்த்துக் கோதிக் கொண்டிருந்தாள். தலையை ஒரு புறமாகச் சாய்த்து வளை விளையாடும் பொன்னிறக் கையினால் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டிருந்த கோலத்தில் தோகை விரித்தாடும் அழகிய மயிலைப் போல் காட்சியளித்தாள் அவள். முகத்தில் சரிபாதி வந்து விழுந்து மேகக்காடு கவிழ்ந்தாற் போல் தொங்கி மறைத்துக் கொண்டிருந்த நிலையில் கருமை மின்னிச் சிற்றலையோடு நெளியும் அந்தக் கூந்தலின் நறுமணம் சத்தியமூர்த்தியைக் கிறங்கச் செய்தது. தனிமையில் தன்னிச்சையாகக் கூந்தலை அவிழ்த்து விட்டுக் கோதிக் கொண்டிருந்தவள் திடீரென்று அங்கு அவனைப் பார்த்ததும் நாணத்தோடு சிரித்துக் கொண்டே அவசரம் அவசரமாகக் கூந்தலை அள்ளி முடியத் தொடங்கினாள். அந்த அவசரத்திலும் பரபரப்பிலும் நாணத்திலும் கூட அவள் மிக அழகாக இருந்தாள். கைகளுக்கு அடங்காத அந்தப் பெருங் கூந்தலைக் கோணல் மாணலாகச் சுற்றிக் கொண்டை போட்டுக் கொண்ட போது அவன் கண்களுக்கு அவள் இன்னும் அழகாகத் தெரிந்தாள்.
"வாருங்கள்!... நேற்று வருகிறேனென்று சொல்லி ஒரேயடியாக ஆசைப்பட வைத்துக் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டீர்களே...? பையன் வந்து அர்ச்சனைப் பிரசாதத்தைக் கொடுத்து விவரம் சொல்கிறவரை நான் தவியாய்த் தவித்துப் போனேன்."
"நேற்றே வந்திருந்தால் உன்னை இன்று காலையில் இப்போது பார்த்தேனே இந்த அழகிய கோலத்தில் பார்த்திருக்க முடியாது மோகினி! பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையா என்பதைப் பற்றி நக்கீரர் சிவபெருமானோடு கருத்து மாறுபட்டு வாதிட்டதாக ஒரு பழைய கதை உண்டு. உன்னுடைய கூந்தல் நறுமணமோ இந்த ஆஸ்பத்திரி வார்டையே கமகமக்கச் செய்து கொண்டிருக்கிறது. கரிய மேகங்களிடையே பாதி மறைந்தும் பாதி மறையாமலும் தெரியும் சந்திர பிம்பத்தைப் போல் கூந்தலில் மறைந்தும் மறையாமலும் தெரிந்த உன் முகத்தைப் பார்த்ததும் நான் கவிஞனாக இல்லையே என்ற வருத்தம் தான் எனக்கு ஏற்பட்டது." "கேலி செய்யாதீர்கள்..." "உன்னை தாராளமாகக் கேலி செய்யும் உரிமை எனக்கு உண்டோ இல்லையோ?" "எல்லா உரிமைகளும் உங்களுக்குத்தான் உண்டு. ஏதோ அம்மா என்று ஒருத்தி இருந்தாள். அவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கண்களில் நீர் பெருகிவிட்டது. மிகவும் பாசத்தோடு அருகில் சென்று மேல்துண்டால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான் சத்தியமூர்த்தி. அவன் கண்ணீரைத் துடைத்த பின்னும் விலகிச் செல்லாமல் ஒட்டினாற் போலவே அவனருகில் தயங்கி நின்று கொண்டிருந்தாள் அவள். சிரித்தபடியே அவள் அவன் முகத்தை ஏறிட்டு நோக்கிக் கூறினாள். "நீங்கள் இப்படிச் செய்வதற்காகவே நான் இன்னும் கண்ணீர் விட்டு அழவேண்டும் போல் ஆசையாயிருக்கிறது!" "கவலைப்படாதே! உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு இந்தக் கைகள் எப்போதும் தயாராக இருக்கும்" என்று அவளுக்குப் பதில் சொல்லிய போது தான் சொல்லிய வார்த்தைகளின் பொருளாழத்தை நினைத்து மெய்சிலிர்த்தான் அவன். "நேற்று மாலையில் அந்தப் பையன் கொண்டு வந்து கொடுத்த கோயில் பிரசாதத்தை இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன். உங்கள் கையால் இந்தக் குங்குமத்தை என் நெற்றியில் இட்டு விடுங்கள்" என்று சொல்லி இடுப்பிலிருந்து அந்தப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள் மோகினி. தன் நெஞ்சருகே வந்து மேல் நோக்கி நிமிர்ந்த அவள் முகத்திலிருந்து கமகமக்கும் சந்தனச் சோப்பின் வாசனையை நுகர்ந்தவாறே அவளுடைய அழகிய நெற்றியில் கோவில் குங்குமத்தை இட்டான் சத்தியமூர்த்தி. "இந்தக் குங்குமம் உன்னுடைய அழகிய நெற்றியில் என்றும் இப்படியே இருக்க வேண்டும்" என்று விளையாட்டாக அவளை வாழ்த்துவது போல் அப்போது அவன் கூறினான். "நீங்கள் இருக்கிற வரை இந்தக் குங்குமமும் இப்படியே இருக்கும்!" என்று உறுதி தொனிக்கும் குரலில் மோகினியிடமிருந்து பதில் வந்தது. நர்ஸ் காப்பி கொண்டு வந்தாள். ஆஸ்பத்திரிக் காப்பியை மோகினியும் சத்தியமூர்த்தியும் ஆளுக்குப் பாதியாகப் பருகினார்கள். முதல் நாள் தன் தந்தை மோகினிக்கும் ஜமீந்தாருக்கும் ஏற்படவிருக்கும் உறவைப் பற்றியும் வேறு சில கசப்பான உண்மைகளைப் பற்றியும் தன்னிடம் கூறி எச்சரித்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே மோகினியிடம் சொல்லி எது உண்மை? எது பொய்? என்று இப்போது அவளையே விசாரித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அடுத்த கணமே மகிழ்ச்சிகரமான இந்த வேளையில் அந்தக் கசப்பான உண்மைகளை அவளிடம் சொல்லி விசாரிப்பதனாலேயே அவள் மனம் வேதனைப்படுமோ என்று நினைத்து, இப்போது அவற்றைப் பற்றி அவளிடம் விசாரிக்காமல் இருப்பதே நல்லதென்று அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளோ மிகவும் ஞாபகமாக 'வஸந்தசேனையையும் சாருதத்தனையும்' பற்றி மறுமுறை சந்திக்கும் போது அவன் தனக்குச் சொல்வதாக ஒப்புக் கொண்டிருந்த கதையை உடனே சொல்லியாக வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அந்தக் கதையை அவளுக்கு எந்தவிதமாகத் தொடங்கி எப்படிச் சொல்லலாமென்று முதலில் சிறிது தயங்கினான் சத்தியமூர்த்தி. 'வஸந்தசேனை' என்பவள் உச்சயினி நகரத்தில் பேரழகும் பெருஞ்செல்வமும் நிறைந்திருந்த 'ஓர் இளம் கணிகை' என்று ஆரம்பிக்கலாமா, அல்லது 'ஓர் இளம் தாசி' என்று ஆரம்பிக்கலாமா - எப்படி ஆரம்பித்தால் மோகினியின் மனம் புண்படாமல் இருக்கும்? என்று எண்ணி 'மிருச்சகடிகம்' காவியத்தை அவளுக்கு மிக மிக நாசூக்காகச் சொல்லி முடிப்பதற்குச் சீரான கதை உருவத்தைத் தன் மனத்தில் முதலில் அமைத்துக் கொள்ள முயன்றான் அவன். 'வஸந்தசேனை ஓர் இளம் கணிகை' என்று தொடங்கினால் நல்லதா? அல்லது 'ஓர் இளம் தாசி' என்று தொடங்கினால் நல்லதா? எப்படிச் சொன்னால் மோகினி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பாள் என்று நினைத்து நினைத்துத் தயங்கிய பின் முதல் வாக்கியத்தைச் சொல்லி முடித்த சுவடு நீங்குவதற்குள்ளாகவே 'ஆனால் அவள் செய்த காதல், புனிதமும் பரிசுத்தமும் நிறைந்தது' என அடுத்த வாக்கியத்தையும் உடனே சேர்த்துச் சொல்லி விடுவதென்று முடிவு செய்து கொண்டான் அவன். தன்னுடைய வாழ்க்கைக்கும் வஸந்தசேனை - சாருதத்தன் கதைக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதனால் தான் முன் தினம் பேசிக் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தி அதைப் பற்றித் தன்னிடம் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று மோகினி நினைத்ததனால் அந்தக் கதையைப் பற்றிய ஆவலைத் தன் மனத்தினுள் தானாகவே வளர்த்துக் கொண்டிருந்தாள் அவள். சத்தியமூர்த்தியும் அதனைப் பற்றிய அவளின் ஆவலைப் புரிந்து கொண்டிருந்தான். அவளுடைய மனத்தில் வேற்றுமையாக எதுவும் தோன்றாதபடி வஸந்தசேனை - சாருதத்தன் கதையை அவளுக்கு நாசூக்காகவும் மென்மையாகவும் வளர்த்துச் சொல்லத் தொடங்கி விட்டான் அவன். வஸந்தசேனையின் எழில் கொஞ்சும் இளமைப் பருவத்தைப் பற்றியும், உச்சயினி நகரத்தின் அரண்மனையையும் விடப் பெரிய அவளது செல்வ மாளிகையைப் பற்றியும் சாருதத்தனிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த பரிசுத்தமான காதல் பிடிவாதத்தைப் பற்றியும் ஒருவிதமாகச் சொல்லி முடித்தாகி விட்டது. சாருதத்தனுடைய குணநலன்களைப் பற்றியும், பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடையின் மிகுதியினாலேயே அவன் ஏழையாகி விட்டதைப் பற்றியும், இப்போது சத்தியமூர்த்தி அவளுக்குச் சொல்லத் தொடங்கியிருந்தான். "ஆண்மகனின் அழகும், அந்த அழகுக்குத் துணையான ஒரு சிறந்த குணமும் சேர்ந்துதான் பேரழகியான ஒரு பெண்ணை நிரந்தரமாகக் கவர முடியுமே தவிரத் தனி உடலழகு மட்டுமே ஒரு பெண்ணை நிரந்தரமாகக் கவர்ந்துவிட முடியாது. சாருதத்தன் இணையற்ற ஆணழகன். அழியக்கூடிய இந்த அழகைத் தவிர வந்தவர்கெல்லாம் தன்னிடமிருந்த செல்வத்தை வரையாது கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடைப் பெருமிதத்தினாலே அழியாத குண அழகையும் பெற்றிருந்தான் அவன். கொடுத்துக் கொடுத்துத் தான் ஏழையாகிவிட்டதற்காக வருத்தப்படாமல் தன்னைத் தேடி வருபவர்களுக்குக் கொடுக்கத் தன்னிடம் இனி ஒன்றும் மீதமில்லையே என வருந்திக் கொண்டிருந்தான் சாருதத்தன். அவனுக்குத் திருமணமாகி இல்லற வாழ்வில் ஓர் ஆண் மகவு இருந்தும் கூட இளம் கணிகையான வஸந்தசேனை அவனையே தன் நாயகனாகப் பாவித்து அவனுக்கு ஆட்பட்டு உருகிக் கொண்டிருந்தாள். சாருதத்தன் ஏழையாயிருக்கிற அதே உலகத்தில் தான் செல்வத்தோடிருப்பதற்கே வெட்கமாக இருந்தது அவளுக்கு. 'கொடியை வளைத்துப் பூப்பறிக்க நேர்ந்தால் கூடக் கொடிக்கு நோகுமாமே என்று தயங்கிப் பூக்களைக் கொடியிலிருந்து பறிக்கவும் விரும்பாத அளவு மென்மையான மனம் படைத்த சாருதத்தன் இப்போது வறுமையால் எப்படி எப்படி வாடியிருப்பானோ' என்று எண்ணும் போதெல்லாம் வஸந்தசேனை கண் கலங்கித் தவித்தாள். உச்சயினி நகரத்துக் காமன் கோவிலில் முதன் முதலாகச் சாருதத்தனைச் சந்தித்து அவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த முதல் விநாடியிலிருந்து அவள் அவனுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். சாருதத்தன் உலகத்துக்கு முன் பரம ஏழையாக இருந்தாலும் வஸந்தசேனையின் இதயத்தில் அவன் ஒருவனே உலகத்தின் மிகப் பெரிய செல்வனாகக் கொலு வீற்றிருந்தான். அவளுடைய வீதியிலேயே அவளுக்கு அருகே இருந்த வீடுகளிலுள்ள பல இளம் கணிகைகள் தங்கள் அழகை முதலாக வைத்து வாணிகம் செய்து பெரும் பொருள் குவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவள் சாருதத்தனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். உச்சயினி நகரத்தின் செல்வச் சிறப்பு மிக்க ஆடவர்கள் அவளுடைய தெருவைத் தேடி வருகிற மாலை வேளைகளில் அவள் தெய்வத்தைச் சந்திக்கப் போகும் பரம பக்தையாகச் சாருதத்தனுடைய தெருவைத் தேடி அலைந்து நடந்து கொண்டிருந்தாள். அப்படிச் சென்று கொண்டிருந்த மாலை வேளை ஒன்றில் அப்போது உச்சயினியை ஆண்டு கொண்டிருந்த பாலகன் என்ற கொடுங்கோலரசனுக்கு ஆசைக்கிழத்தி ஒருத்தியிடம் பிறந்த மகனாகிய சகாரன் என்ற காமுகன் வஸந்தசேனையைத் துரத்துகிறான். சகாரனுடைய கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிப் பிழைப்பதற்காகச் சாருதத்தன் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்து தன்னுடைய விலைமதிப்பற்ற அணிகலன்களையும் பாதுகாப்பாக அங்கேயே ஒப்படைத்துவிட்டு மீள்கிறாள் வஸந்தசேனை. 'இதயத்தையே ஒப்படைத்துவிட்ட இடத்தில் அணிகலன்களை ஒப்படைப்பதா பெரிய காரியம்?' என இந்த இடத்தில் மோகினி கதை கூறிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் நடுவே குறுக்கிட்டுப் பேசினாள். சத்தியமூர்த்தி அவளுடைய இந்த வாக்கியத்தில் எதையோ புரிந்து கொண்டவனைப் போல் ஒரு கணம் தான் சொல்லிக் கொண்டிருந்த கதையை நிறுத்திவிட்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்து புன்னகை பூத்தான். பின்பு கதையை மேலே வளர்த்துச் சொல்லிக் கொண்டே வருகையில், இருளிலும் மழையிலும் தவித்த வஸந்தசேனை சாருதத்தனைச் சந்திக்கப் போன இரவைப் பற்றியும், சாருதத்தனின் மகன் தெருவில் மண் வண்டி வைத்து விளையாடும் ஏழ்மையைப் பொறுக்க முடியாமல், வஸந்தசேனை தன்னுடைய பொன் நகைகளையும் கழற்றி அந்த மண் வண்டியில் வைத்த சம்பவத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி மிகவும் உருக்கமாகக் கூறிய போது, மோகினி கண்கலங்கி விட்டாள். கதையை முழுவதும் சொல்லியபின், "உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையேயிருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள்" என்று சத்தியமூர்த்தி கூறிக் கொண்டே முடித்த போது அந்தப் பட்டியலில் அவன் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டதற்காக மோகினி நாணித் தலை குனிந்தாள். கன்னம் சிவக்க அவள் இதழ்களில் நகை கனிந்தது. அந்த நகை மாறாத முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே எங்கோ பார்ப்பது போல் பராக்குப் பார்த்தபடி அவள் மெல்லச் சொன்னாள்: "மணிமேகலையை விட்டுவிடுங்கள். அவள் துறவி. அவளைத் தவிர மற்ற இருவருக்கும் கிடைத்த காதலர்களை விட என்னுடைய காதலர் எவ்வளவோ மேலானவர். சாருதத்தனும், கோவலனும் தங்கள் அன்புக்கு ஆட்பட்டவர்களைச் சாக முயல்வதிலிருந்து காப்பாற்றி வாழ வைக்கவில்லை. என்னுடைய காதலர் யாரோ அவரால்தான் நான் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டு இப்போது உயிர் வாழ்கிறேன் இல்லையா?" அவளுடைய அந்த அன்புப் புகழ்ச்சியில் அவன் மெய் மறந்திருந்த போது வார்டு அறையின் முன்புறம் ஏதோ கார் வந்து நிற்கிற ஓசை கேட்டது. அந்த ஓசையைக் கேட்டதுமே மோகினியின் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் மறைந்து பயம் வந்து நிறைந்தது. புலியின் வருகையால் நடுங்கும் மான் குட்டியைப் போல் பதறினாள் அவள். "ஜமீந்தாருடைய காராகத்தான் இருக்கும்" என்று அவள் பரபரப்பாகக் கூறவும், சத்தியமூர்த்தி எழுந்து ஸ்கிரீன் மறைவுக்கு மேல் தலைநிமிர்ந்து வெளியே எட்டிப் பார்க்கவும் சரியாக இருந்தது. ஜமீந்தார் மட்டுமல்லாமல், அவரோடு மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி, அவர் மகள் பாரதி, கண்ணாயிரம் எல்லாரும் ஒரு பெரிய காரில் வந்து இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். பிரமுகர் பூபதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்குப் பாராட்டுத் தெரிவிப்பதற்காக அவருடைய படத்தை அட்டையில் தாங்கி வெளிவந்திருக்கும் புதிய 'குத்துவிளக்கு' இதழை நடந்தவாறு புரட்டிக் கொண்டே கடைசியாக வந்து கொண்டிருந்தாள் பாரதி. கண்ணாயிரமும், பூபதியும், ஜமீந்தாரும் சிரித்தபடியே பேசிக் கொண்டே வார்டுக்குள் நுழைந்தனர். முதலில் 'இதென்ன வேண்டாத இடத்தில் வேண்டாத சந்திப்பாக வந்து வாய்க்கிறதே!' என்று மனம் குழம்பிய சத்தியமூர்த்தி பின்பு சிறிதும் தயங்காமல் மிகமிக அருகே வந்துவிட்ட பூபதியை நோக்கி, "ஹலோ சார், குட்மார்னிங்..." என்று வரவேற்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த பூபதி, "நீங்கள் எங்கே... இப்படி இங்கே...?" என்று எதிர்பாராமல் அவனைச் சந்தித்துவிட்ட திகைப்போடு வினவினார். அவனுடைய குரலை அடையாளம் கண்டு பத்திரிகை படித்தபடி நடந்து வந்த பாரதியும் அதே திகைப்போடு எதிரே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மோகினியைத் தனக்குத் தெரியும் என்றும் அவள் கார் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து பார்த்துவிட்டுப் போக வந்ததாகவும், பூபதியிடம் சிறிதும் தயங்காமல், தெளிவாகவும் பொதுவாகவும் அவன் மறுமொழி கூறினான். அவர் அதை எப்படி வரவேற்றார், எவ்வளவு நம்பினார் என்பதைப் பற்றி அவன் அதிகமாகக் கவலைப்படவில்லை. கண்ணாயிரமும், ஜமீந்தாரும், சத்தியமூர்த்தி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. அவனை இலட்சியம் செய்யவும் இல்லை. பூபதியும் கூட அவ்வளவாகச் சுமுகமான நிலையில் அந்தச் சந்திப்பை ஏற்றுக் கொண்டதாகச் சத்தியமூர்த்திக்குத் தெரியவில்லை. பாரதியோ அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, "இதில் அப்பாவைப் பற்றி வந்திருக்கிறது, பார்த்தீர்களா?" என்று தன் கையில் வைத்துக் கொண்டிருந்த புதிய 'குத்துவிளக்கு' இதழைச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினாள். அதை வாங்கிச் சிறிது நேரம் புரட்டிப் பார்த்துவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான் அவன். "நீங்கள் எப்படி... இப்படி... இங்கே?" என்று அவளுடைய தந்தை வினாவினாற் போலவே அவளும் அவனை வினாவ நினைத்திருக்கலாம். ஆனால், நினைத்ததைக் கேட்காமல் அவள் அழுத்தமாகவே இருந்துவிட்டாள். ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்குச் சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மௌனத்துக்கு எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு. இந்த விதத்தில் பார்த்தால் ஒரு பெண்ணின் பேச்சைவிடப் பேசாமை பயங்கரமானது! பாரதியின் மௌனமும் அப்போது அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. பூபதியிடம் ஒருவிதமாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து மெல்லக் கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சத்தியமூர்த்தி. பகலில் மீதமிருந்த பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த முடியாமல் முக்கியமான நாலைந்து நண்பர்கள் அவனைத் தேடி வந்து விட்டார்கள். அவர்கள் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்குள் மாலை நேரமாகி விட்டது. மாலையில் அவன் பூபதியை வழியனுப்ப விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. ஜமீந்தார் சார்பில் கண்ணாயிரம் மட்டும் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார். பூபதிக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையைப் போட்டு வழியனுப்பினார் கண்ணாயிரம். புறப்படுவதற்கு முன்னும் பூபதி, தாம் திரும்பியவுடன் நடைபெற வேண்டிய ஸ்தாபகர் தின விழாவைப் பற்றியும், அதற்கு வருகிற மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைப் பற்றியுமே அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி மனத்திலோ முகத்திலோ மலர்ச்சியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தைக்குப் போடப்பட்ட மாலைகளைக் கையில் சுமந்து எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள் பாரதி. நகரிலிருந்து வெகு தொலைவு தள்ளியிருந்தும் விமான நிலையத்துக்குப் பூபதியின் நண்பர்களும் பிரமுகர்களுமாகப் பலர் வழியனுப்ப வந்திருந்தார்கள். "நானும் அப்பா கூடப் போகலாம் என்றிருந்தேன். திடீரென்று காலையில் ஜமீந்தார் மாமா வேண்டாம் என்றார். 'டிக்கெட்'டை கான்சல் செய்து விட்டேன். அப்பா டில்லியிலிருந்து வருகிற வரை ஜமீந்தார் மாமாவுடன் மதுரையில் தான் இருக்கப் போகிறேன்" என்று பாரதி யாரிடமோ வந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் சத்தியமூர்த்திக்கு அவள் தந்தையோடு டில்லிக்குப் போகவில்லை என்று தெரியும். உரிய வேளையில் பிரயாணிகளை விமானத்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி வேண்டுகிற அறிவிப்பும் ஒலித்தது. பூபதி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு விமானப் படிக்கட்டை நோக்கி நடந்தார். "என்னம்மா? கடைசிப்படி ஏறுவதற்குள் மறுபடி 'நானும் டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிட மாட்டாயே; நிச்சயமாக நீ வரவில்லைதானே?" என்று இறுதியாக மகளிடம் வேடிக்கையாகக் கேட்டுவிட்டு நடந்தார் அவர். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|