33
இந்தக் காதல் என்கிற உணர்ச்சி இருக்கிறதே, அதை ஓர் ஆச்சரியமாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது கதையில் வரும் போது உண்மையைப் போல் தோன்றி மயக்குகிறது. உண்மையில் நடக்கும் போதோ கதையைப் போல் தோன்றி மருட்டுகிறது. சத்தியமூர்த்தியின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த குமரப்பன் கூறலானான்: "நான் தான் இந்தத் தவற்றைச் செய்தேன் என்று சொல்லி விளக்குவதற்கு அவசியமில்லாமலே, இதை என்னால் மறைத்திருக்க முடியுமானால் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லையடா சத்தியம்! நீ கல்லூரிக்குச் சென்ற பிறகு இங்கு எனக்குப் பொழுது போகவில்லை. படிப்பதற்கு ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடினேன். வெளியில் நல்ல புத்தகமாக எதுவுமில்லை. நமக்கில்லாத உரிமையா என்ற தைரியத்தில் உன் பெட்டியைத் திறந்து புத்தகங்களைத் தேடிய போது ஒரு மூலையில் இந்தக் கடிதம் மடிக்கப்பட்டுக் கிடந்தது. ஏதோ ஒரு விதமான அசட்டுத் தைரியத்தில் அடக்கமுடியாத ஆவலோடு இதைப் பிரித்துப் படித்துவிட்டேன். இதைக் கையில் எடுத்த வரை என்னை நீ மன்னிக்கலாம். கையில் எடுத்த பின்பும் பிரித்துப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னளவில் தடுத்துக் கொண்டிருக்க முடியும். அப்படி நான் என்னைத் தடுத்துக் கொள்ள முடியாமற் போனதற்காகத்தான் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கிறது." மனத் தயக்கத்தோடு இப்படிக் கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியிடம் நீட்டிய கடிதம் அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்த பின் மோகினி அவனுக்கு எழுதியது. தன்னுடைய பெட்டியின் ஒரு மூலையில் அந்தக் கடிதத்தைப் போட்டு வைத்த போது, பின்னால் என்றாவது, குமரப்பனோ, இன்னொரு நண்பனோ, அதை எடுத்துப் படிக்க நேரிடுமென்று சத்தியமூர்த்தி கனவிலும் நினைத்ததில்லை. குமரப்பன் அதை எடுத்துப் படிக்க நேர்ந்துவிட்டதென்று இப்போது தெரிந்து போன பின்பும் அதற்காக அவன் மனம் உடைந்து போய்விடவில்லை. சிறிது நேரம் திகைப்பும் சிந்தனையுமாக ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாயிருந்த பின் சத்தியமூர்த்தி தன் நண்பனை நோக்கி வெகு நிதானமாகப் பேசினான்: "இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது குமரப்பன்? என் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான பகுதியைத் தெரிந்து கொள்வதற்கு நீ உரிமையற்றவன் என்று சொல்லிவிட முடியுமா?" "முடியுமோ, முடியாதோ? உன் அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு அல்லது இல்லை என்று தீர்மானம் செய்ய வேண்டியவன் நீதானே? நானாக அந்த உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள முடியுமடா சத்தியம்." "அப்படிச் சொல்லாதே குமரப்பன்? எந்த உரிமையையும், தாராளமாக உன்னிடம் விட்டுவிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உன்னைப் போல் உண்மை நண்பன் ஒருவனிடம் வாழ்வதா - சாவதா என்று சிந்தித்து முடிவு சொல்லும் பொறுப்பைக் கூட பரிபூரணமாக விட்டுவிட்டு நீ சிந்தித்து முடிவு சொல்கிறவரை நிம்மதியாகச் சிரித்துக் கொண்டிருக்கலாம்." "நீ வாழ்வதற்குச் சிந்தித்து முடிவு சொல்கிற நண்பனாக மட்டுமே கடைசிவரை இருப்பேன்" என்று கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். சத்தியமூர்த்தியின் மனத்திலும் மோகினியைப் பற்றிய அந்த இன்ப நினைவுகள் இந்த விநாடி வரை தானே சுமந்தாக வேண்டிய தனிச்சுமையாகவும் பாரமாகவும் இருந்தன. தன் மனத்தில் மோகினியைப் பற்றி அலைந்து கொண்டிருந்த சிந்தனையலைகளைக் குமரப்பனைப் போன்ற நெருங்கிய நண்பன் ஒருவனிடம் சொல்லியாக வேண்டிய சந்தர்ப்பம் தவிர்க்க முடியாமல் தானாகவே நேர்ந்ததை அவனும் வரவேற்றான். நளினமான இந்த இங்கித நினைவுகளை நண்பனிடம் விவரிப்பதற்கு முன்னால் தான் அங்கு இல்லாத போது தன்னுடைய பெட்டியிலிருந்து நண்பன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்த வேளையில் என்னென்ன உணர்வுகளை அவன் அடைந்திருக்க முடியும் என்று அனுமானம் செய்கிற ஆவலோடு இப்போது தானே அதை ஒரு முறை படிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.
'என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வத்தின் திருவடிகளில் அடியாள் மோகினி அநேக வணக்கங்கள்' என்று தொடங்கிய அந்தக் கடிதம் 'புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணம் ஆகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணமானவள்' என்ற வாக்கியத்தைப் படிக்கும் போதும், 'உங்களுடைய வாத்தியம் உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் - வாசிக்க நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில் கிடக்கிறது' என்ற இறுதி வாக்கியத்தைப் படிக்கும் போதும், அவனை மெய் சிலிரிக்கச் செய்தது. இதே வாக்கியங்களைப் படிக்கும் போது குமரப்பன் என்னென்ன உணர்ச்சிகளை அடைந்திருப்பான் என்றெண்ணிப் பார்க்க முயன்றான் சத்தியமூர்த்தி.
கடிதத்தைப் பிரித்துப் பிடித்துக் கொண்டிருந்த கைவிரலில் பழைய ஞாபகங்களின் சுகத்துக்கு ஒரு சாட்சியாக அந்த நீலக்கல் மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. பூக்களும், ஊதுவத்தியும் மணந்து கொண்டிருந்த ஒரு சிறிய வீட்டின் கூடத்தில் மனோரம்மியமான சாயங்கால வேளை ஒன்றில் அழகிய விரல்கள் தன்னைக் கைப்பற்றி அந்த மோதிரத்தை அணிவித்த நாள் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மோகினியின் ஞாபகத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது. அப்போது சத்தியமூர்த்தி இருந்த நிலையைப் பார்த்து அவன் தன்னிடம் நிறையப் பேச விரும்புகிறான் என்று குமரப்பன் குறிப்பாகப் புரிந்து கொண்டு அவனை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றான். கரையில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிய வண்ணமிருக்கவே, நண்பனோடு மனம் விட்டு உரையாடுவதற்கேற்ற தனிமைக்காக ஒரு படகுக்கு வாடகை பேசி முன் பணம் கொடுத்து நண்பனையும் அமரச் செய்த பின் தானே துடுப்புகளை வலித்து ஏரியின் நடுப்பகுதிக்குச் செலுத்திக் கொண்டு போனான் குமரப்பன். வெள்ளையும் சிவப்புமாக நீர்ப்பூக்கள் மலர்ந்த ஏரி நீர்ப் பரப்பினிடையே மோகினியைப் பற்றிய நினைவுகள் பூக்கும் மனநிலையோடு பிரமை பிடித்தாற் போல் படகில் அமர்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. நண்பன் குமரப்பனிடம் தான் எதைப் பேச வேண்டுமென்று நினைத்தானோ அதற்குப் பொருத்தமான ஆரம்பத்தைத் தேடிச் சிந்திப்பது போலிருந்தான் அவன். இரண்டு கைகளாலும் துடுப்புக்களை வலித்துக் கொண்டிருந்த குமரப்பனோ இருந்தாற் போலிருந்து தன் வலது கையைத் துடுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு சத்தியமூர்த்தியின் கரத்தைப் பிடித்திழுத்து அந்த நீலக்கல் மோதிரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் குறும்பு நகை புரிந்தான். பின்பு அதே குறும்புச் சிரிப்போடு சத்தியமூர்த்தியை நோக்கிச் சொன்னான்: "இதை உன் கரத்தில் அணிவித்தவள் இப்போது உன் கையையும் நினைவையும் ஒன்றாக அழகுபடுத்திக் கொண்டிருக்கிறாள். நான் எண்ணுவது சரிதானே?" சத்தியமூர்த்தி மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தான். "மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும் அழகிய இரகசியங்களெல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன என்று சொல்லுவார்களடா சத்தியம்! நெருங்கிய நண்பனுக்குக் கூடத் தெரியாமல் உன் வாழ்க்கையில் அத்தகைய இரகசியங்கள் நேர்ந்திருக்கின்றன. முன்பொரு நாள் சித்திரைப் பொருட்காட்சியில் மோகினியின் நடனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வையையாற்று மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நீ அவள் மேல் அதிக அநுதாபத்தோடு பேசியதையும் குத்துவிளக்கின் சார்பில் மோகினியைப் பேட்டி காணச் சென்று திரும்பிய பின் நான் அவள் புகைப்படங்களில் சிலவற்றை இணைத்து உனக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு நீ அதிக ஆர்வத்தோடு நன்றி தெரிவித்துப் பதில் எழுதியிருந்ததையும் இப்போது நினைத்தால் எனக்கு எல்லாமே புரிகிறதடா சத்தியம்!" "புரிகிறதல்லவா! புரிந்த பின் நீ என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறாய் என்பதைச் சொல்லேன்!" என்று அதுவரை பேசாமலிருந்த சத்தியமூர்த்தி நண்பனைக் கேட்டான். "அதெப்படி? நீதான் எனக்குச் சொல்வதற்கு நிறைய மீதம் வைத்திருக்கிறாய் சத்தியம்! இரயிலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது மோகினியைத் தடுத்துக் காப்பாற்றியதைப் பற்றி அன்று வையை ஆற்று மணலில் பேசிக் கொண்டிருந்த போது தெரிவித்தாய்! அன்று உரையாடிக் கொண்டிருந்த போது நாம் இருவருமே அவளுக்காக மிகவும் அனுதாபப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பின்னால் உங்களுக்குள் எவ்வளவோ நடந்திருக்கிறாற் போலிருக்கிறதே! அவற்றையெல்லாம் இப்போது எனக்குச் சொல்லப் போகிறாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால் என்னைச் சுலபமாக ஏமாற்றிவிடப் பார்க்கிறாய்" என்று குமரப்பன் கேட்கவே சத்தியமூர்த்தி தான் மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் முதல் முறையாக மோகினியின் வீட்டுக்குச் சென்றது தொடங்கி நண்பனிடம் எதையும் மறைக்காமல் ஒவ்வொன்றாக விவரித்தான். அந்த நினைவுகளை நண்பனோடு பேச வேண்டும் என்று அவனே ஆவலாயிருந்த நிலையில் நண்பனும் விரும்பிக் கேட்கவே உற்சாகமாகவும் நயமாகவும் அவனால் அதைச் சொல்ல முடிந்தது. மோகினியைப் பற்றி நண்பனிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்த அந்த ஒரு மணி நேரமும் அவன் தனி உலகத்தில் இருந்தான். கடைசியாக அவளிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட தினத்தன்று அவள் தன் கையில் அந்த மோதிரத்தை அணிவித்துவிட்டுத் தான் பதிலுக்கு அணிவித்த மோதிரத்தையும் பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்கும் விழிகளோடு குங்குமச் சிமிழை எடுத்து வந்து தனக்குத் திலகமிட்டு விடை கொடுத்த சம்பவத்தைக் குமரப்பனுக்குச் சொல்லிய போது, சத்தியமூர்த்தியின் குரல் தழுதழுத்தது! "அவள் எனக்கு விடை கொடுக்கும் போது சொல்லிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன, குமரப்பன்! 'என்னை மறந்து விடாதீர்கள். உங்களுடைய ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை' என்று கூறி விடைகொடுத்த போது அவள் கண்களில் தெரிந்த தவிப்பை இன்று நான் வார்த்தைகளால் உனக்குச் சொல்லிவிட முடியாது. நீ இன்று படித்தாயே இந்தக் கடிதம் நான் இங்கு வந்த பிறகு அவளிடமிருந்து எனக்கு வந்தது! மோகினியின் புகைப்படங்களை நீ எனக்கு அனுப்பியிருந்தாயே அப்போது உன் கடிதத்தில் அவளைப் பற்றிப் புகழ்ந்திருந்தாய். மோகினியின் சிரிப்பில் கலைமகளும் திருமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக நீ புகழ்ந்திருந்த வாக்கியத்தை நான் திரும்பப் படித்துக் கொண்டாடினேன்." சத்தியமூர்த்தி இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குமரப்பன் நகை மலரும் முகத்தோடு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சிறிது நாழிகை மௌனத்துக்குப் பின் நிதானமாக மறுமொழி கூறினான்: "இந்தக் காதல் இருக்கிறதே இதை ஓர் ஆச்சரியமாகக் கருதுவதை விட வேறுவிதமாகக் கருத முடியாது போலிருக்கிறது. ஏனென்றால் அது கதையில் வரும் போது உண்மையைப் போல் மயக்குகிறது. உண்மையில் நடக்கும் போதோ கதையைப் போல் மருட்டுகிறது. ஆனாலும் ஒரு விதத்தில் நீ பெரிய பாக்கியசாலிடா சத்தியம்! உடம்பும் மனமும் அழகாயிருக்கிற கலையரசி ஒருத்தி தன்னுடைய சகலத்தையும் உனக்காக ஆத்ம சமர்ப்பணம் செய்யக் காத்திருக்கிறாள். யாருடைய சலங்கை கட்டிய நளின பாதங்கள் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களுடைய இதயத்தில் சௌந்தரியக் கனவாக ஆடிக் கொண்டிருக்கின்றனவோ அவளுடைய இதயத்தில் உன் பாதங்கள் நிறுத்தி வைத்து வணங்கப்படுகின்றன. உன்னுடைய பெட்டியில் புத்தகங்களைத் தேடும் போது அந்தக் கடிதம் என் கையில் கிடைத்தது. அதை நான் படித்த சமயத்திலேயே நீ அடைந்திருக்கும் தூய்மையான காதலை நினைத்து நினைத்துப் பெருமைப்பட்டேன். உன்னிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாயோ என்று தயக்கமாக இருந்தது. எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுக்கு அந்தரங்கமாக அனுப்பப்பட்டிருக்கிற ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்கத் துணிவது குற்றம் தானே? நம்மளவுக்கு நாம் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலும் பிறருடைய இரகசியங்களை அறிந்து கொள்ள முயலும் போது நாணயம் தவறி விடுகிறதே?" என்று குமரப்பன் தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொள்வது போல் பேசினான். "நாணயக் குறைவான எந்தக் காரியத்தையும் நீ செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை குமரப்பன்! நீ செய்த காரியம் உன் நண்பனிடம் உனக்கு இருக்கும் உரிமையின் நெருக்கத்தை நிரூபிக்கிறது அவ்வளவுதான்!" என்று சத்தியமூர்த்தி மனம் விட்டுக் கூறிய பின்பும், "அதெல்லாம் இல்லை! நீ மிகவும் பெருந்தன்மையாக என்னை மன்னிக்கிறாய்! அதற்காக நன்றி. இதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது, ஒரு துயரமும் இருக்கிறது. உன் பெட்டியைத் திறந்து நானாகவே இதைத் தெரிந்து கொண்டு உன்னை இப்படித் திகைக்கச் செய்வதற்காகத் துயரப்படுகிறேன். நான் எதைத் தெரிந்து கொண்டேனோ அதனால் என் நண்பன் மகா பாக்கியசாலி என்றறிந்ததனால் மகிழ்கிறேன்" என்றான் குமரப்பன். இருட்டிய பின்பு சிறிது நேரம் ஏரிக்குள் படகிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு நண்பர்கள் கரையேறினர். அறைக்குப் போய்த் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குப் போகலாம் என்று அவர்கள் புறப்பட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாகச் சுந்தரேசனே அறையைப் பூட்டிக் கொண்டு எதிரே வந்து விட்டார். மூவரும் சேர்ந்தே போய் உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். மல்லிகைப் பந்தலுக்குக் குமரப்பன் வந்து சேர்ந்த பின்பு ஒவ்வொரு நாளும் கல்லூரிப் பாடவேளைக்கு அப்பாலும் சத்தியமூர்த்தியின் நேரம் உற்சாகமாகக் கழிந்து கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நண்பர்கள் மூவரும் மல்லிகைப் பந்தலுக்குப் பக்கத்தில் இருந்த மயிலாடும் பாறை தேயிலை எஸ்டேட்டையும் அருவியையும் பார்க்கப் போயிருந்தார்கள். இன்னொரு ஞாயிற்றுக் கிழமை ஆரஞ்சுப் பழம், வால்பேரிக்காய், திராட்சைக் கொடி போன்ற கனி வகைகள் விளையும் பெரிய பழத் தோட்டம் ஒன்றிற்கு உல்லாசப் பயணம் போய் வந்தார்கள். மல்லிகைப் பந்தல் மலைப் பகுதியில் அங்கும் இங்குமாக இருந்த அழகிய இடங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கும் வாய்ப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் அவர்களுக்குக் கிடைத்தது. அடுத்த மாதம் முதல் தேதி பிறந்ததும் ஒன்றுமே விளக்கமாகச் சொல்லாமல், "இந்தா, இதை வைத்துக் கொள்" என்று குமரப்பன் பதினாறு ரூபாய்க்கான நோட்டுகளையெண்ணிச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினான். சத்தியமூர்த்திக்கு நண்பனின் செய்கை ஒன்றும் புரியவில்லை. "எதற்காக இந்த ரூபாயை என்னிடம் கொடுக்கிறாய் குமரப்பன்? நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா?" என்று நண்பனைக் கோபித்துக் கொண்டான் அவன். நண்பனோ தன் செய்கையில் பிடிவாதமாக இருந்தான். "சொன்னால் கேள் சத்தியம்! 'மயில் ஊடாடா நட்பில் பொருள் ஊடாடக் கெடும்' என்று பழமொழியே இருக்கிறது! இந்தப் பதினாறு ரூபாயை அறை வாடகையின் மொத்தத்தில் என் பங்காக எடுத்துக் கொள். என் கையில் இருக்கிற வரை நான் செலவழித்துத்தான் ஆக வேண்டும். நட்பு வேறு, பொருட் செலவு வேறு..." "நீயும் நானும் அப்படி எதிலும் வேறு வேறாகப் பழகவில்லையே குமரப்பன்?" குமரப்பன் பதிலே சொல்லாமல் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களைச் சத்தியமூர்த்தியின் சட்டைப் பையில் திணித்து விட்டுச் சிரித்தான். அதற்கடுத்த வாரம் ஒரு விடுமுறை நாளில் பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சத்தியமூர்த்தி மதுரைக்குப் போய் விட்டுத் திரும்பினான். அவன் போயிருந்த ஒரே ஒரு நாளில் எப்படியோ சிறிது நேரம் மீதப்படுத்திக் கொண்டு மோகினியைச் சந்திக்கும் ஆவலோடு அவள் வீட்டுக்குச் சென்றிருந்தான். மோகினியும் அவள் தாயும் ஏதோ நாட்டியத்துக்காக வெளியூர் போயிருந்ததனால் அவன் ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாணவர் யூனியன்களின் காரியதரிசிகளுக்கான தேர்தலும் முடிந்து மாணவர்களின் மொழிவாரி மன்றங்களுக்கான இலக்கியத் தொடக்க விழாக்களும் ஒவ்வொன்றாக நிகழலாயின. தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு நவநீதக் கவியை அழைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர் மன்றத் தலைவி என்ற முறையில் பாரதியும் நவநீதக்கவியை அழைப்பதற்கு இணங்கினாள். "சென்னையிலிருந்து நவநீதக்கவி வந்து போவதற்கு நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் பயணச் செலவு ஆகுமே? பக்கத்து ஊர்களிலிருந்து யாரையாவது அழைத்துச் சிக்கனமாக நடத்தி விட்டால், என்ன? கல்லூரிகளில் இந்த விழாகிழா எல்லாம் சும்மா ஒரு 'ஃபார்மாலிடி' தான் மிஸ்டர் சத்தியமூர்த்தி; இதுக்காகவே நேரத்தை வீணாக்கக்கூடாது. எல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..." என்று முதல்வரும், காசிலிங்கனாரும் நவநீதக்கவியை அழைப்பது பற்றி அசிரத்தையாகப் பேசினார்கள். இந்த அசிரத்தையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நவநீதக் கவியையே அழைத்துத் தமிழ் மன்றத் தொடக்க விழாவை நிகழ்த்தி மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டான் சத்தியமூர்த்தி. 'தொடக்க விழாவன்று நவநீதக் கவி பேசிய சில கருத்துக்கள் அதிக முற்போக்காகவும் - ஏதோ ஓர் அரசியல் கட்சிச் சார்புடையன போலவும் தோன்றின' என்று முதல்வரும் காசிலிங்கனாரும் வீண் புரளியைக் கிளப்பி விட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தப் புரளிக்காகச் சத்தியமூர்த்தி ஒரு சிறிதும் அஞ்சவில்லை. நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. கல்லூரியில் காலாண்டுத் தேர்வுக்குத் தேதிகளும் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வந்து விட்டது. விடுதிகளில் பரீட்சைக்குப் படிப்பதற்காகக் கண்காணிப்பு அதிகமாயிற்று. சத்தியமூர்த்தியின் அறை இருந்த மாடிக்குக் கீழே ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கின் அருகே சிறுகடை இருந்த இடம் ஒன்று காலியாகி 'டு லெட்' என்ற போர்டு தொங்குவதை ஒரு நாள் காலையில் சத்தியமூர்த்தியும் குமரப்பனும் தற்செயலாகக் காண நேர்ந்தது. அப்போது குமரப்பன் ஒரு நோக்கமும் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு சும்மா விசாரிப்பவன் போல் சத்தியமூர்த்தியிடம் அந்த இடம் யாருக்குச் சொந்தமானது, அதற்கு என்ன வாடகை கேட்பார்கள் என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். நண்பன் எதற்காக அந்த இடத்தைப் பற்றி அவ்வளவு விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்பதை அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வந்த பின்பே சத்தியமூர்த்தியால் விளங்கிக் கொள்ள முடிந்தது. மாலையில் அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்து அறைக்குப் போவதற்காக மாடிப்படியேறிய போது ரொட்டிக் கடைக்காரர் அவனைக் கூப்பிட்டுச் சொன்னார்: "சார்! கீழே காலியான கடையை உங்க சினேகிதருக்கு வாடகை பேசி விட்டிருக்கிறேன்." "சினேகிதருக்கா? எந்தச் சினேகிதர்?" என்று சத்தியமூர்த்தி திகைத்த போது "அதோ பாருங்க! அவரே கடையில் போர்டு மாட்டிக்கிட்டிருக்காரு" என்று கடையைச் சுட்டிக் காண்பித்தார் ரொட்டிக் கடைக்காரர். அப்போது தான் புது வர்ணம் பூசப்பட்டு மின்னும், 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரப் பலகையை அந்தக் கடையின் முகப்பில் மாட்டி ஆணி அடித்துக் கொண்டிருந்தான் குமரப்பன். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|