35
ஒரு பெண் எதற்காகவும் வாய்விட்டு அழலாம். ஆனால் ஆண் பிள்ளை பல சமயங்களில் அப்படி அழ முடியாது. இதயத்தினால் மட்டுமே அழுவதற்கு முடியும். சத்தியமூர்த்தி அங்கே சந்தன மரத்தின் சிறு செடி ஒன்றை நட்டான். அருகில் நின்று கொண்டிருந்த பாரதி உற்சாகமாகப் பூவாளியைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள். “மிஸ் பாரதியே தன் கையால் நீர் வார்த்த பிறகு இந்த மரத்தின் யோகத்துக்குக் கேட்கவா வேண்டும்?” என்று சத்தியமூர்த்தி அப்போது இருந்த கலகலப்பான நிலையில் வேடிக்கையாகச் சொல்லியதைக் கூட அவள் இரசிக்கவில்லை போலிருந்தது. எல்லோரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். அவளோ தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பூவாளியையும் கீழே போட்டுவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டாள். அப்போது மறுபடியும் அவனுக்கு அவள் புதிரானாள். சமூகச் சேவை முகாம் முடிந்து அவன் மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய நாளன்று அங்கே குமரப்பன் அவனுக்குச் சொல்வதற்காக ஒரு துயரச் செய்தியை வைத்திருந்தான்.
நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்குத் துயரம் வந்து விட்டால் அப்படி ஒரு துயரம் நிகழ்ந்ததாகவே நம் மனம் நம்பி ஒப்புக் கொள்ள மறுக்கிறது. சந்தனச் சோலை கிராமத்தில் சமூகச் சேவை முகாம் முடிந்து மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சத்தியமூர்த்தியிடம் குமரப்பன் தெரிவித்த துயரச் செய்தியும் நம்பவும், ஒப்புக்கொள்ளவும் இயலாத அளவுக்கு வேதனை நிறைந்ததாகத்தான் இருந்தது. ஏற்கனவே சமூகச் சேவை முகாம் முடிந்து திரும்பியதும் மதுரைக்குப் புறப்படுவதாக இருந்த அவன், இந்தச் செய்தி தெரிந்ததும் உடனே புறப்பட்டாக வேண்டியிருந்தது. உடம்பும் மனமும் தளர்ந்து போய்க் கேள்விப்பட்ட துயர நிகழ்ச்சியால் தாங்க முடியாத வருத்தத்தோடிருந்தான் அவன். ‘இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நவராத்திரி விழாவுக்காக மஞ்சள்பட்டி சமஸ்தானத்துக்குப் போய்விட்டுத் திரும்பும் போது மோகினியும் அவள் தாயும் வந்து கொண்டிருந்த கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகி விட்டதென்றும் விபத்து நடந்த இடத்திலேயே மோகினியின் தாய் முத்தழகம்மாள், கார் டிரைவர் இறந்து போய் விட்டனர் என்றும், விபத்தில் உயிர் தப்பிய மோகினி சில்லரைக் காயங்களோடு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றும் தினப்பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாகக் கூறிவிட்டுக் குமரப்பன் அந்தப் பத்திரிகைகளையும் கொண்டு வந்து காண்பித்தான். ‘கார் விபத்தில் பிரபல நாட்டியக்காரி மயிரிழையில் உயிர் தப்பினார்’ என்று தலைப்பிட்டு முதற் பக்கத்தில் பரபரப்பான செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது அது. அந்தச் செய்தியைப் படித்ததும் சத்தியமூர்த்தியின் உடம்பும் மனமும் நடுங்கின. கண்கலங்கிற்று. பிறருடைய துயரங்களுக்காக மனம் வருந்தி அனுதாபப்பட நேரும் சம்பவங்கள் அவன் வாழ்க்கையில் நிறைய நிகழ்ந்திருக்கின்றன. இன்று மோகினிக்கு நேர்ந்த துன்பத்தைக் கேள்விப்பட்ட போதோ சாதாரணமான வருத்தத்திற்கும் துயரத்திற்கும் அப்பாற்பட்டதொரு தவிப்பையே அவன் உணர்ந்தான். சொற்களால் சொல்ல முடியாததோர் அழகிய சோகம் மிதக்கும் மோகினியின் கண்களை நினைவு கூர்ந்தான். அந்தக் கண்களில் நீர் பொங்க அவள் அழுவது போலக் கற்பனை செய்தபோது அந்தக் கற்பனையைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அத்தனை துயரத்தை அடைந்தது அவன் மனம். தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அவன் அழத் தொடங்கிய போது குமரப்பன் அருகில் வந்து ஆறுதல் கூறினான்.
”உன் துயரம் எனக்குப் புரிகிறது சத்தியம்! ஆனால் உன்னையும் என்னையும் போல் ஆண் பிள்ளைகளின் துயரம் உணர்ச்சியளவில் நிற்க வேண்டுமே ஒழிய அழுகையாக வெளிப்படக் கூடாது. பெண்கள் எதற்காகவும் வாய்விட்டு அழலாம். ஆண்கள் இதயத்தினால் மட்டுமே அழ முடியும். பெருமைக்கும், வலிமைக்கும் உரியவனான ஆண்மகன் துயரப்படும் போது கூட ஆண்மை அழியாமல் துயரப்பட வேண்டும். என்ன நேர்ந்துவிட்டதென்று இப்படிக் கண் கலங்குகிறாய்? மோகினிக்கு இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கக் கூடாதுதான். நேர்ந்து விட்ட பிறகு நாமும் என்ன செய்ய முடியும்? நாளைக் காலையில் முதல் பஸ்ஸில் மதுரை சென்று ஆஸ்பத்திரியில் அவளைப் பார்த்துவிட்டு வரலாம். என்னுடைய கடையில் இப்போது தான் தொழில் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நான் தொழிலை விட்டுவிட்டுக் கடையை இழுத்துப் பூட்டிக் கொண்டு உன்னோடு மதுரைக்கு வர முடியாது. ஆனாலும் உன்னைத் தனியாக அனுப்புவதைக் காட்டிலும் நானும் உடன் வருவது நல்லதென்று எண்ணி நான் வருகிறேன். பொறுமையாக இரு. காலையில் புறப்பட்டுப் போய் பார்க்கலாம்...” என்றான் குமரப்பன். மலைக்காட்டு ஊரில் ஒரு வார காலமாக ஓடியாடி உழைத்துக் களைத்துப் போய் வந்திருந்தும் அன்றிரவு சத்தியமூர்த்தி உறங்கவேயில்லை. மோகினியைப் பற்றிய ஞாபகங்களிலேயே அந்த இரவு கழிந்தது. அவளுடைய நிகழ்காலத் துயரத்தை நினைத்த போது கடந்த துயரங்களாகத் தன்னால் அநுமானிக்க முடிந்தவற்றையும் சேர்த்து எண்ணினான் சத்தியமூர்த்தி. மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விடிகிற நேரத்துக் கருக்கிருட்டில் நண்பன் குமரப்பனோடு பஸ் நிலையத்துக்குப் போய் மதுரைக்குப் பஸ் ஏறிய போது இன்னும் மூன்று - மூன்றரை மணி நேரம் பயணம் செய்து போக வேண்டும் என்று நினைப்பதற்கே பொறுமையின்றி இருந்தான் அவன். மோகினியின் மென்மையான இதயத்தைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். கார் விபத்தினாலும் தாயின் மரணத்தினாலும் அவள் எவ்வளவிற்கு அதிர்ச்சியடைந்து வாடியிருப்பாள் - என்று கற்பனை செய்து பார்த்துத் தன் மனத்திற்குள் அவன் வருந்தினான். சத்தியமூர்த்தியும் குமரப்பனும் சேர்ந்து செய்கிற பயணத்தில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் அவசரத்துடனும், மௌனமாகவும் செய்த முதற் பயணமாக இருந்தது இன்றைய பயணம். இருவரும் மதுரையை அடைந்து ஆஸ்பத்திரிக்குச் சென்று கொண்டிருந்த போது, “கார் விபத்தில் மோகினிக்கு அதிகக் காயங்கள் ஏற்பட்டிருக்குமோ குமரப்பன்?” என்று பரபரப்பாக ஒரு கேள்வியை இருந்தாற் போலிருந்து கேட்டான் சத்தியமூர்த்தி. “அப்படியெல்லாம் நினைத்து வீணாகக் கலவரமடையாதே சத்தியம்! ‘சில்லறைக் காயங்களோடு உயிர் தப்பினார்’ என்று தான் பத்திரிகைகளில் போட்டிருக்கிறது. இன்னும் கால் மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய் நேரிலேயே பார்த்துவிடப் போகிறோம். மனத்தை அலட்டிக் கொள்ளாமல் வா” என்று நண்பனைத் தேற்றி அழைத்துக் கொண்டு சென்றான் குமரப்பன். எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் இருவரும் டவுன் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது வையைப் பாலம் நெருங்கும் வேளையில் சத்தியமூர்த்தியின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ஓடுகால் பள்ளங்களும், மணல் மேடுகளும் மறைந்து, வையையில் செந்நிறப் புதுநீர் அபூர்வமாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பாலத்தின் மேற்குப் புறம், கட்டை வண்டிகளும், மற்றப் போக்குவரவு வாகனங்களும் செல்கிற கல் பாலத்துக்கும் அப்பால் தளர்ந்த கல் தூண்களோடு எதற்கோ கட்டுப்பட்டு நிற்கும் பழைய உண்மையாய் மைய மண்டபம் நின்று கொண்டிருந்தது. அதற்கும் மேற்கே இரயில் பாலத்தில் - பாலத்தின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் சரியாயிருக்கிறாற் போல் ஒரு கூட்ஸ் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்தப் பாலத்தில் இரயில் வந்து கொண்டிருந்த அதிகாலை நேரமொன்றின் போதுதான் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த மோகினியை அவன் காப்பாற்றினான். அவன் அப்படிக் காப்பாற்றியதைப் பற்றிப் பின்னால் ஒரு சமயம் அவளே கூறியிருந்த அழகிய வாக்கியமும் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. எத்தனை அழகிய வாக்கியம் அது...? ஆஸ்பத்திரியின் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளே சென்ற போது முன்பக்கம் வரிசையாக நின்றிருந்த கார்களைப் பார்த்துக் கொண்டே நடந்த குமரப்பன், “கண்ணாயிரமும் மஞ்சள்பட்டியாரும் கூட வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இதோ அவர்களுடைய கார்கள் அடுத்தடுத்து நிற்கின்றன பார்!” என்றான். மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய மிகப் பெரிய 'காடிலாக்' காரும் அதனருகே கண்ணாயிரத்தின் சின்னஞ்சிறிய காரும் அங்கு அப்போது நின்று கொண்டிருந்தன. மோகினி அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் வார்டு அறையின் முன்புறம் கூட்டம் அதிகமாயிருந்தது. அறையின் முகப்பில் இருந்த நாற்காலிகளில் பழக் கூடைகள், ஹார்லிக்ஸ் பாட்டில் சகிதம் ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் சிறிது தள்ளி மேஜைக்கு அருகே ஒரு சிறிய ஸ்டூலில் நர்ஸ் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அறைக்குள் நுழையத் தயங்கினான் சத்தியமூர்த்தி. உள்ளே போய் மோகினியைப் பார்ப்பதற்கு அவன் கால்களும் மனமும் துடித்தாலும் முன்புறம் காவல் நாய்களைப் போல் உட்கார்ந்து கொண்டு முறைத்துப் பார்த்த ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் கண்டு தயங்கினான். நர்ஸ் வந்து ஏதோ விசாரித்தாள். அதற்கும் குமரப்பன் தான் பதில் கூறினான். "தயங்காமல் உள்ளே வாடா சத்தியம்! இந்தப் பாவிகள் இங்கே இருக்கிறார்கள் என்பதற்காக நீயும் நானும் எதற்காகத் தயங்க வேண்டும்? பேசாமல் என் பின்னால் வா... சொல்கிறேன்" என்று ஸ்கிரீன் வைத்து மறைத்திருந்த மறுபுறத்துக்கு அவனை அழைத்துச் சென்றான் குமரப்பன். கட்டிலில் படுத்திருந்த மோகினி நல்ல வேளையாக அப்போது விழித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளுடைய நெற்றியிலும், மோவாயிலுமாக இரண்டு மூன்று பிளாஸ்திரி ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவளுடைய அழகிய கண்கள் இரண்டும் அழுது அழுது இரத்தம் கன்றிச் சிவந்திருந்தன. முகம் கறுத்து வாடியிருந்தது. திடீரென்று தன் கட்டிலருகே சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. சத்தியமூர்த்தியைக் கட்டிலருகே இருந்த ஸ்டூலில் உட்காரச் சொல்லிக் கையைக் காண்பித்து விட்டுப் படுக்கையில் நிமிர்ந்து தலையணைகளில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்தாள் அவள். தேனிற் செய்தது போன்ற அவள் குரல் இன்று துயரத்தினால் உடைந்து நலிந்து போயிருந்தது. "நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் தெரியுமோ, தெரியாதோ என்று எண்ணி என் ஆசையை நானே அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. என் தவிப்பு வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்தபடி தெய்வமே உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது..." மேலே பேச முடியாமல் அழுகை பொங்கியெழுந்து அவள் குரலை அடக்கியது. "தெரியாமல் போகுமா? செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தேன். உடனே நானும் இவனும் புறப்பட்டு வந்தோம். தெய்வமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருப்பதாகச் சற்று முன் நீ கூறினாயே, அந்தத் தெய்வம் இவன் தான்!" என்று சொல்லிக் குமரப்பன் பக்கமாகக் கையைக் காண்பித்தான் சத்தியமூர்த்தி. "ஒருவருக்கொருவர் புகழ்ந்து கொள்வதற்கும் நன்றி சொல்லிக் கொள்வதற்கும் இதுவா நேரம்? ஆறுதலாக நாலு வார்த்தை பேசிக் கொண்டிரு. நான் வெளியில் போய் இருக்கிறேன். ஜமீந்தாரும், கண்ணாயிரமும் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்று சொல்லிவிட்டுக் குமரப்பன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் வெளியேறிய சிறிது நேரத்தில் நர்ஸ் கட்டிலருகே வந்து, "படுத்துக் கொண்டு பேசுங்கள். வீணாக, 'ஸ்டிரெயின்' பண்ணிக் கொள்ளக் கூடாது..." என்று மோகினியை எச்சரித்து விட்டுப் போனாள். "இந்த நர்ஸ் ரொம்ப நல்லவள்! இன்று அல்லது நாளைக்கு இவளை விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லலாம் என்றிருந்தேன். நானே எழுத முடியாதபடி கையிலும், தோள் பட்டையிலும் கட்டுப் போட்டுத் தொலைத்திருக்கிறார்கள். இவளிடம் சொல்லி எழுதச் செய்யலாமென்றால், ஒரு நிமிடம் கூடத் தனியாக இருக்க முடியாதபடி பாழாய்ப்போன ஜமீந்தாரும், கண்ணாயிரமும் எனக்கு உபசாரம் செய்கிறேன் பேர்வழியே என்று மாற்றி மாற்றிக் காவல் இருக்கிறார்கள். நல்ல வேளையாக என் வேதனையும் தவிப்பும் பொறுக்க முடியாமல் தெய்வமே கண் திறந்தது போல் நீங்களே தேடி வந்து விட்டீர்கள். இனிமேல் தான் என் வாழ்க்கையில் வேதனைகளும் சோதனைகளும் அதிகம். இந்தக் கார் விபத்தில் அம்மாவும் டிரைவரும் செத்துப் போனதற்குப் பதில் நான் செத்தொழிந்திருந்தால் எவ்வளவோ நிம்மதியாயிருக்கும். இந்த உலகத்தில் யாருமே புரிந்து கொள்ளாத அநாதைப் பெண்ணாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ மேல். நான் தீர்மானமாகச் செத்துப் போய் விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சாக முயன்ற ஒரே ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் குறுக்கிட்டுக் காப்பாற்றி விட்டீர்கள்." "அப்படி நீங்கள் என்னைக் கைப்பிடித்துக் காப்பாற்றிய முதல் விநாடியிலிருந்து, அல்லது இதை அந்தரங்கமாக நான் எப்படி நினைக்கிறேனோ அப்படியே சொல்வதாக இருந்தால், நீங்கள் என்னைக் காப்பாற்றிக் கைப்பிடித்த முதல் விநாடியிலிருந்து நான் உங்களுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டு விட்டேன். உங்களை நினைப்பதற்காக, உங்களை நினைத்துத் தவிப்பதற்காக, உங்களுக்காகத் தவித்து உருகுவதற்காக, நான் இன்னும் வாழ வேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. நீங்கள் நினைப்பதற்கு ஒரே ஒரு பவித்திரமான ஞாபகமாகச் சாகவேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும். அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும். 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று ஆண்டாளாக அரிதாரம் பூசிக்கொண்டு நாட்டிய மேடையில் கதறிக் கண்ணீர் மல்கி நான் ஆடும் ஒவ்வொரு முறையும் எந்தத் தெய்வத்தை நினைத்துக் கொண்டு ஆடுகிறேனோ, அந்தத் தெய்வம் நீங்கள் தான்!" "என்னைச் சுற்றிலுமோ, என் வாழ்க்கையைச் சுற்றிலுமோ, உங்களைச் சந்திப்பதற்கு முன் இவ்வளவு சத்தியமான எந்த மனிதரையும் நான் சந்தித்ததில்லை. ஆண்டாள் அரங்க நாதருக்குச் சூடிக் கொடுத்தது போல நான் உங்களுக்குச் சூடிக் கொடுத்து வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். அன்று ஒரு நாள் எங்கள் வீட்டு முருகன் படத்துக்கு நான் மாலை சூட்டிய போது உங்களை நினைத்துக் கொண்டு சூட்டினேன். நான் நினைத்ததும் பாவித்ததும் வீண் போகாமல் அந்த மாலை உங்கள் கழுத்திலேயே நழுவி விழுந்தது. வெள்ளைக்காரச் சாதியில் - மோதிரம் மாற்றிக் கொண்டாலே திருமணம் முடிந்து விடுமாமே! நாம் வெள்ளைக்காரர்களில்லையானாலும் எங்கள் வீட்டில் அந்த முருகன் படத்தைத் தெய்வ சாட்சியாகக் கொண்டு நம்முடைய திருமணம் நிகழ்ந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்..." மோகினி தன் பேச்சை முடிக்காமல் விசும்பி விசும்பி அழலானாள். கண் கலங்கி வீற்றிருந்த சத்தியமூர்த்தி அவளுடைய தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கனிவுடன் கூறினான்: "நானும் அதை மறுக்கவில்லை மோகினி! இந்து தர்மப்படி ஒரு பெண் தனக்கு நினைவு தெரிந்த பின் எந்த ஆண்மகனைச் சுயமாகவும் இதயப் பூர்வமாகவும் வரித்துக் கொண்டு அவனுடைய க்ஷேமலாபங்களுக்காக இடைவிடாமல் நோன்பும் தவமும் செய்கிறாளோ, அந்த ஆண்மகனுக்கு அவள் மனைவியாகிறாள். பெண் மெய்யாக உறையும் மனை கணவனுடைய வீடு மட்டுமன்று. இந்தத் தேசத்துப் பெண்ணின் வாழ்க்கை இலட்சியம் கணவனுடைய இதயத்தில் நித்திய சுமங்கலியாகத் தங்கி வசிப்பதுதான்." "நான் அப்படி உங்கள் இதயமாகிய மனையில் என்றும் நித்திய சுமங்கலியாகத் தங்கி வசிக்க முடியுமோ அன்பரே?" இந்தக் கேள்வியை அவனிடம் கேட்கும் போது அவளுக்கு மெய் சிலிர்த்தது. விழிகளில் நீர் பெருக எதிரே மிக அருகில் வீற்றிருக்கும் அவனுடைய கம்பீரமான முகத்திலும் கண்களிலும் தன் வாழ்வின் நம்பிக்கைகளைத் தேடுகிறவளைப் போல் ஏறிட்டுப் பார்த்தாள் மோகினி. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|