28

     பிழையாகவே நினைத்துப் பிழையாகவே அனுமானமும் செய்து பிழையாகவே பேசுகிறவர்கள் பத்துப்பேர் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் சொர்க்கத்தைக் கூட நரகமாக மாற்றிவிடலாம்.

     'காலநடையினிலே உந்தன் காதல் தெரியுதடீ' என்ற கவிதைத் தொடரிலே 'காலநடை' என்ற பதச் சேர்க்கையை இணைத்துப் புனைந்ததற்காக மகாகவி பாரதியாரைப் பலமுறை மனத்தில் நினைத்து நினைத்துக் கொண்டாடியிருக்கிறான் சத்தியமூர்த்தி. அன்று அதிகாலையில் மோகினியின் ஞாபகத்தை அடியொற்றினாற் போல் இந்தக் கவித் தொடரும் நினைவு வந்தது அவனுக்கு. காப்பி குடிப்பதற்காகச் சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்து, காப்பி குடித்து விட்டுத் திரும்பியது எல்லாமே தன் நினைவோ, ஞாபகமோ இல்லாமல் மிக மிக அவசரமாக நடந்து விட்டதைப் போல் தோன்றின. அப்போது அவனுடைய ஞாபகத்தின் பரப்பை எல்லாம் மோகினி ஒருத்தியே முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததனால், காரியமாகச் செய்து கொண்டிருந்த எதுவும் நினைவாக ஞாபகத்தில் நிற்கவில்லை. காப்பி குடித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தவன் வழியில் அங்கங்கே தனித்தனியாகவும், இருவர், மூவர் இணைந்து கூட்டமாகவும், சந்தித்த மாணவர்களின் வணக்கங்களையும், மலர்ந்த முகங்களையும் பார்த்துப் பதிலுக்கு இயந்திரம் போல் வணங்கிவிட்டு மேலே நடந்து கொண்டிருந்தான்.

     அன்று அதிகாலையில் மல்லிகைப் பந்தல் நகரம் அழகு மயமாக இருந்தது. பன்னீர் தெளிப்பது போல் சாரல் விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்த சூழ்நிலையில் 'கூலிங் கிளாஸ்' அணிந்து கொள்ளாமலிருந்த போதே 'கூலிங் கிளாஸி'ல் தெரிவதைப் போல் ஊர் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நான்கு பக்கமும் கருநீல மேகங்கள் கற்றை கற்றையாகச் சுருட்டிக் கொண்டு மலை முகடுகளில் வந்து சரிந்து விடப் போவதைப் போல் தொங்கிக் கொண்டிருந்தன. இயல்பாகவே எழில் வாய்ந்த நகரமான மல்லிகைப் பந்தலில் இப்படி மழைக்கோப்பான நாளாகவும் வேறு இருந்து விட்டால் கிராமாந்தரத்துக் கலியாண வீட்டைப் போல் பிடிபடாதனவும் புரிபடாதனவுமாகிய மகிழ்ச்சிகள் நிரம்பியிருக்கும். மலைச் சாரலில் 'கால்ஃப்' பந்தாட்டத்துக்கான புல்வெளிப் பரப்பெல்லாம் மரகதப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. புல்வெளிப் பசுமையில் மின்னும் பனித் துளிகளும் நடுநடுவே 'கால்ஃப்' பந்தாட்டத்துக்கான வெண்மணல் பரப்பிய சின்னஞ்சிறு வட்டங்களும் அங்கே தெரிகிற காட்சியைப் பார்த்துக் கொண்டே நடந்த சத்தியமூர்த்தி அறைக்குப் போவதற்காக மாடிப்படி ஏறுமுன் சாலையில் காரைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பாரதியைச் சந்திக்க நேர்ந்தது.

     தவிர்க்க முடியாமலும் பார்க்காதது போல் விலகிப் போய்விட முடியாமலும் மிக அருகில் நேர்ந்து விட்டது அந்தச் சந்திப்பு. அந்தக் கல்லூரியின் வம்பு பேசும் மனிதர்களையும், பொறாமை நிறைந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு பாரதி தன்னைத் தேடி வருவதை குறைத்துக் கொள்ளும்படி அவளிடமே இரண்டொரு முறை குறிப்பாகச் சொல்லியிருந்தான் சத்தியமூர்த்தி. இன்றும் அவள் தன்னைத் தேடி வந்திருப்பதிலிருந்து அவள் தான் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. கைநிறைய இனிப்பு மிட்டாயை வைத்துக் கொண்டே அதற்காக அழுகிற குழந்தையிடம் ஒன்றுமில்லையென்று சொல்லி ஏமாற்றுவது போல் அவள் தன்னைத் தான் தேடி வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டே யாரோ யாரையோ தேடி வந்திருப்பது போல் பாராமுகமாகப் போய்விட முடியவில்லை அவனால். 'நீ இன்னும் இப்படி என்னைத் தேடி வரலாமா?' என்று கண்டிப்பது போல் அவளைக் கடுமையாக நிமிர்ந்து பார்த்து விட்டுத் தயங்கி நின்றான் சத்தியமூர்த்தி. அவளோ அவன் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கினாள். நாவும் அழகிய உதடுகளும், எவ்வளவு வேகமாகப் பேசத் துடித்துக் கொண்டிருந்தனவோ, அவ்வளவு வேகமாக ஒத்துழைக்காத சொற்களுடன் அவனிடம் தயங்கித் தயங்கிப் பேசினாள் அவள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.