51

     படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது தான். எந்தப் பிரச்சினையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச்சுடர் புறப்படுகிறது.

     அகங்காரத்திலிருந்துதான் வெறுப்புப் பிறக்கிறது. இவன் நம்மை மதிக்க மாட்டேனென்கிறானே என்னும் காழ்ப்பினால் அந்த வெறுப்பு வளர்கிறது. ஜமீந்தார், கல்லூரி முதல்வர், கண்ணாயிரம், எல்லாரும் சத்தியமூர்த்தியின் மேல் அளவற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாரதியும் உணர்ந்திருந்தாள். அந்த வெறுப்புக்கும் அவர்களுடைய சொந்த அகங்காரமே காரணமென்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. உலகத்தின் சந்தோஷ மயமான விநாடிகள் சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று காலையில் சத்தியமூர்த்தியைப் போலீஸ் நிலையத்தின் அருகே சந்தித்த வேளையோடு முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் வரையில் அப்படித் தோன்றியிருப்பது தான் உண்மையாக நின்றது. அந்தத் துயரத்தை அவள் இப்போது மனப்பூர்வமாக அங்கீகரித்தேயாக வேண்டும்.

     அகங்காரத்திலிருந்து பிறக்கிற வெறுப்புக்கு அவளும் தான் முன்பு ஆளாகியிருக்கிறாள். சத்தியமூர்த்தி தன்னிடம் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருந்த போது செல்வத்திலும், சீராட்டிலும் வளர்கிற எல்லாப் பெண்களுக்கும் இயற்கைக் குணமாக வந்து படிந்துவிடும் ஆள விரும்புகிற அன்பால் அவளும் அவனை வெறுக்க முயன்று தோற்றிருக்கிறாள். ஆற்றாமையும், ஏமாற்றமும் அவள் இதயத்தில் கூட அகந்தையைப் புகையச் செய்திருக்கின்றன. அவன் தன்னை வெறுக்கிறானோ என்ற தாழ்வு மனப்பான்மையால் தான் அவனை வெறுக்க முயன்று, அந்த முயற்சியே காதலாகப் பெருகித் தவிக்கிறாள் அவள். பற்றிப் படரத் தவித்த கொடியாக அவள் அலைந்த போது அவன் கோபுரமாய் உயர்ந்து நின்றிருக்கிறான். துன்பமும், தோல்விகளும் பட்டுப்பட்டுத்தான் மனம் மென்மையடைந்து மலர வேண்டும். அந்த மலர்ச்சிக்குப் பின்போ பிறருக்கு விட்டுக் கொடுப்பதென்பது கடினமாகத் தோன்றுவதே இல்லை. துன்ப வயப்பட்டால்தான் இதயம் மெதுவாகும்; இளகும்; தான் என்ற அகந்தை ஒழியும்.

     தந்தையின் அகால மரணம் அவளைத் தனிமையோடும், துயரத்தோடும் நிறுத்திவிட்டது. அந்தப் பெரிய துயரத்தில் நடுவே வந்து மனத்தை மறைத்துக் கொண்டிருந்த சிறிய அகந்தை சென்றொழிந்து விட்டது. அவளுடைய மனத்தில் உண்மை அன்பின் பரிசுத்தமான தேவையே ஓர் ஏக்கமாக வந்து நிற்கிறது இப்போது. "அதெல்லாம் நிர்வாக விஷயம்; நீ ஒண்ணும் தலையிடாதே!" என்று ஜமீந்தார் சீறி விழிந்து அவளை மிரட்டியிருந்தாலும் அவளுடைய மனம் சத்தியமூர்த்தியின் வெற்றிக்காகத்தான் இன்னும் ஏங்கிக் கொண்டிருந்தது. சத்தியமூர்த்தியை யாரோ நண்பர்கள் ஜாமீன் கொடுத்துப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள் என்பதையும் அப்போது மாணவர்களின் பெருங்கூட்டம் அநுதாபத்தோடு அவரைச் சூழ்ந்தது என்பதையும் டிரைவர் முத்தையா தானாகவே வந்து தெரிவித்த போது, அவள் மனத்துக்கு ஆறுதலாயிருந்தது.

     வேலை நிறுத்தம் தீவிரம் அடையவும் கண்ணாயிரமும் முதல்வரும் பதறிச் சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தேடிக் கொண்டு போனதையும், ஜமீந்தாரும் நிர்வாகி என்ற முறையில் மாவட்டக் கலெக்டருக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்ததையும் அதே வீட்டில் உடனிருந்தே கவனித்துக் கொண்டிருந்தும் ஒன்றுமே அவற்றிற்கெதிராகச் செய்ய முடியாமல் தவித்தாள் பாரதி. கருத்தழகும் காட்சியழகும் மிக்க இந்தச் சத்தியமூர்த்தி என்னும் அபூர்வமான இலட்சிய ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று வருட ஆரம்பத்திலே இண்டர்வியூவின் போது தான் காண்பித்த ஆவல் எல்லாம் இப்போது நினைவு வந்து அவளை அழவைத்தன. 'சுக துக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓரடி முன்னால் எடுத்து வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்கார்ந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்று குறுந்தொகைக் கவிதையை அவர் தன் தந்தையிடம் நயமாக விளக்கிச் சொல்லியதெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தன. பழைய ஞாபகங்களாலும், தந்தையை இழந்த பரிதாப நினைவுகளாலும் தன்னுடைய ஆசையையெல்லாம் கொள்ளை கொண்ட இலட்சிய ஆசிரியருக்கு வந்துவிட்ட துன்பங்களை எண்ணி வருந்தும் வருத்தத்தாலும் நெடுநேரம் மௌனமாய் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு கண்ணீர் பெருக்கிய வண்ணம் இருந்தாள் அவள். மாணவர்கள் எந்த விஷயத்தையும் சுயமாகச் சிந்தித்து எதிர்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துவதற்காகச் சத்தியமூர்த்தி தன் வகுப்புக்களில் அடிக்கடி விளக்கமாகச் சொல்கிற உவமை ஒன்று உண்டு.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.