47

     பிறரை ஏவுவதிலும் பிறருக்கு ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது ஏவாமலும் யாருக்காவது ஆணையிடாமலும் சும்மா இருக்கவே முடியாது.

     மாணவர்களையும் வகுப்பையும் அப்படி அப்படியே விட்டு விட்டுத் தன்னை உடனே வரச் சொல்லிக் கல்லூரி முதல்வர் திரும்பத் திரும்பக் கூப்பிட்டனுப்புவதைக் கண்டு சத்தியமூர்த்தியின் மனம் வெறுப்படைந்தது. அந்த வெறுப்பின் எல்லையிலே அவன் பிடிவாதக்காரனாக மாறினான். வகுப்பை அப்படியே பாதியில் விட்டுவிட்டு ஆசிரியர் வெளியேறினால் அந்த வகுப்பில் அமைதி குறையும் என்பதும், அப்படி அமைதி குறைவது - பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மற்ற வகுப்புகளுக்கு இடையூறாகும் என்பதும் கல்லூரி முதல்வருக்குத் தெரியாத செய்திகள் அல்லவே? தெரிந்திருந்தும் அவர் ஏதோ முரண்டு பிடிப்பது போல் விரட்டியதைக் கண்டு சத்தியமூர்த்தியால் மனம் குமுறாமல் இருக்க முடியவில்லை.

     "வகுப்பை அரைகுறையாக விட்டு விட்டு வருவதற்கில்லை என்று போய்ச் சொல்! இல்லையானால் அவர் கைப்படவே வகுப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்தாலும் பரவாயில்லை - உடனே நான் அவரைப் பார்க்க வந்தாக வேண்டுமென்று எழுதிக் கையெழுத்தும் போடச் சொல்லி வாங்கிக் கொண்டு வா" என்று கண்டிப்பாகக் கூறி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பினான் அவன். அதற்குப் பின் வகுப்பு முடிகிற வரை யாருமே அவனைத் தேடி வரவில்லை. வகுப்பை முடித்துக் கொண்டு வெளியே வராந்தாவுக்கு வந்ததும் அதே பழைய ஊழியன் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். உறையின் மேலே சத்தியமூர்த்தியின் பெயர், பதவிப்பெயர் எல்லாம் தெளிவாக எழுதப்பெற்ற ஒரு கடிதம் அந்த ஊழியன் கையிலிருந்தது. உறையைச் சத்தியமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, அதை அவன் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாகக் கையோடு கொண்டு வந்திருந்த கல்லூரி அலுவலக நோட்டுப் புத்தகத்தில் ஒரு கையெழுத்துப் போடும்படியும் வேண்டினான் அந்த ஊழியன். சத்தியமூர்த்தி சிறிதும் பதறாமல் கடித உறை ஒன்றைக் கல்லூரி அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொண்டதாக அதில் கையெழுத்திட்டான்.

     இவ்வளவும் நிகழ்ந்த போது வகுப்பு முடிந்து வெளியேறிய மாணவர்கள் சத்தியமூர்த்தியைச் சூழ்ந்து கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். வாங்கிய கடித உறையைப் பிரித்துப் படிக்கவும் நேரமில்லாமல் அடுத்த பாடவேளையிலும் அவன் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. எனவே கல்லூரி முத்திரையோடு பிரின்ஸிபல் தனக்கு அனுப்பியிருந்த அந்தக் கடித உறையை அப்படியே வாங்கிக் கையிலிருந்த புத்தகத்தில் சொருகிக் கொண்டு அவசர அவசரமாக அவன் அடுத்த வகுப்பிற்குள் நுழைய வேண்டியதாயிற்று. அந்த வகுப்பையும் முடித்துக் கொண்டு வெளியேறிய பின்புதான் அவனுக்கு ஓய்வு இருந்தது. ஆசிரியர்கள் தங்கும் அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டு அந்த உறையைப் பிரித்துப் படிக்கலானான் சத்தியமூர்த்தி. முதல் நாள் மாலையில் கல்லூரியின் புதிய நிர்வாகியைப் பாராட்டி நடைபெற்ற கூட்டத்தில் நடுவே எழுந்து போனதற்குக் காரணம் கேட்டும், வேறு சில பழைய, புதிய குற்றங்களைச் சுமத்தியும் 'எக்ஸ்பிளநேஷன்' கோரியிருந்தார் கல்லூரி முதல்வர். காலையில் நேரில் கூப்பிட்டனுப்பிய போது வர மறுத்ததை - 'இன்ஸ்பார்டிநேசன்' (கீழ்ப் பணியாமை) - என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் கீழே அது முடிகிற இடத்தின் ஒரு கோடியில் 'காப்பி - டு - தி கரஸ்பாண்டெண்ட்' (நிர்வாகிக்கும் நகல் அனுப்பப்பட்டிருக்கிறது) என்று குறித்திருந்ததையும் அவன் நிதானமாகக் கவனித்துப் படித்துக் கொண்டான். இப்படி ஒரு முறைக்கு இருமுறையாக அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த பின் மறுநாள் எழுத்து மூலம் அதற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய மறுமொழியைப் பற்றிக் கூட இப்போதே அவன் மனம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அப்படிச் சிந்திக்கத் தொடங்கிய போது, ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் அவன் திரும்பத் திரும்ப ஆச்சரியப்பட்டான். சிந்தனைச் சுதந்திரம், சொற் சுதந்திரம், செயல் சுதந்திரம் என்று மேடைகளில் முழங்குவதும், இதழ்களில் எழுதும் போதும் எவ்வளவுதான் கூறினாலும் இன்னொருவன் தமக்கு பணிந்து அடங்குகிறானா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் ஒரு சிறிதும் இல்லாத கௌரவமான மனிதனே உலகில் கிடையாதோ என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு. பிறரை ஏவுவதிலும் பிறருக்கு ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது எதற்காகவாவது ஏவாமலும் ஆணையிடாமலும் சும்மா இருக்கவே முடியாது. பிறரை அடிமைப்படுத்தி மகிழ வேண்டுமென்ற ஆசை மகா மன்னர்களுக்கும், நவாபுகளுக்கும், சுல்தான்களுக்கும் இருந்ததைப் பழைய வரலாறு சொல்கிறது. ஆனால் நம் தலைமுறையில் நம்முடன் வாழும் ஒவ்வொரு மனிதனிடமுமே அவனவனுடைய புத்திக்கும் அகங்காரத்துக்கும் தகுந்தாற் போல் இன்னொருவனை அடக்கி ஆள வேண்டுமென்ற அடிமை வேட்கை (வேட்டை) அந்தரங்கமாக இருக்கிறது. தான் சொல்கிறபடியே இன்னொருவன் சொல்ல வேண்டுமென்றும், தான் செய்கிறபடியே இன்னொருவன் செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறதற்கும் அதிகமாகத் தான் சிந்திக்கிறபடியே தான் இன்னொருவனும் சிந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாய் எதிர்பார்க்கிற சிந்தனை அடிமைத்தனம் - மிகப் பயங்கரமான தொத்து வியாதியாய் இந்தத் தேசம் முழுவதும் பரவிக் கொண்டு வருகிறதே என்றெண்ணி அஞ்சினான் சத்தியமூர்த்தி. மனிதர்களை மதிப்பதிலும் அவர்களுடைய தராதரங்களைக் கணிப்பதிலும் சொந்தமாகவோ அல்லது பிறர் நினைக்கிற நினைப்பிலிருந்து மாறுபட்டோ - சிந்திப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்று கல்லூரி முதல்வர் எண்ணுகிறாற் போலிருக்கிறது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.