50

     ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாத வரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும்.

     டிரைவர் முத்தையா கூறிய செய்தியைக் கேட்டுப் பாரதி அப்படியே அதிர்ந்து போனாள். ஜமீந்தார் மாமாவை அவ்வளவு கெட்டவராக அவள் இதுவரை கற்பனை செய்தும் பார்த்ததில்லை. குளிக்காமல், சாப்பிடாமல் நாட்கணக்கில் சீட்டாட்டத்தில் உட்காருவார். குதிரைப் பந்தய சீஸனில் எந்தெந்த ஊரில் எல்லாம் பந்தயம் நடக்கிறதோ அங்கெல்லாம் போவார். கொஞ்சம் குடிப்பழக்கமும் உண்டு. ஆனால் நியாயத்தையும் நேர்மையையுமே உறிஞ்சிக் குடித்து விடுகிற அளவுக்கு அவர் மிகப் பெரிய குடிகாரர் என்பதை இன்று டிரைவர் முத்தையா தெரிவித்த இந்தப் புதிய செய்தியால் அவள் திட்டமாகப் புரிந்து உணர்ந்து கொண்டு விட்டாள்.

     முந்திய தினம் இரவில் இதே காரில் டிரைவர் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் காரில் போகும் போதே ஹாஸ்டல் கூரை ஷெட்டில் நெருப்பு வைத்துவிட ஏற்பாடு செய்துவிட்டு அந்தப் பழியைச் சத்தியமூர்த்தியின் தலையில் சுமத்திக் கல்லூரியிலிருந்து அவனை வெளியேற்றிவிடுவது என்று சதித்திட்டம் வகுத்துப் பேசிக் கொண்டு போனார்களாம். அந்தச் சதிப் பேச்சைத் தன் இரண்டு காதுகளாலும் கேட்டுக் கொண்டே காரைச் செலுத்திச் சென்றதாகப் பயந்து கொண்டே இப்போது அவளிடம் தெரிவித்து விட்டான் டிரைவர் முத்தையா.

     "சத்தியமூர்த்தியை டிஸ்மிஸ் செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸிபலும் நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டி விட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத் தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று சிறிது நேரத்துக்கு முன் மகேசுவரி தங்கரத்தினம் கூறியபோது 'அப்படியுமா செய்வார்கள்?' என்று அதை நம்பத் தயங்கிய பாரதி இப்போது நம்பியே ஆக வேண்டியிருந்தது. டிரைவர் முத்தையா பொய் சொல்ல மாட்டான். நீண்ட காலமாகப் பூபதியின் குடும்பத்தில் ஒருவனாகக் கலந்து பழகிவிட்ட நம்பிக்கை வாய்ந்த தொழிலாளி அவன். அவனுடைய வார்த்தைகளையும் மகேசுவரி தங்கரத்தினம் கூறியவற்றையும் இணைத்துச் சிந்தித்து அப்படியே நம்பினாள் அவள். சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகியிருந்த காலத்திலும் அவளுடைய இதயத்தின் அந்தரங்கம் அவனைத் தன்னிடமிருந்து விலக்கி விடவில்லை.

     'என்னுடைய கண் பார்வைக்கு எட்டிய மட்டும் ஆகாயத்தில் ஒரே ஒரு பிரகாசமான நட்சத்திரம் தான் தெரிகிறது. அந்த நட்சத்திரத்தையும் நீ மறைக்க முயலாதே மேகமே! அப்படியே நீ மறைத்தாலும் மறுபடி அந்த ஒளிமயமான என் இலட்சிய நட்சத்திரம் தெரிகிற வரை நான் அதைப் பார்க்கத் தவித்துக் கொண்டேயிருப்பேன் என்பதை நீ மறந்துவிடாதே' என்று பொருள்பட நவநீதக் கவியின் உருக்கமான பாடல் ஒன்று உண்டு. சத்தியமூர்த்தி தன்னை விட்டு விலகிச் செல்ல முயன்ற காலத்திலும் இந்தப் பாட்டை நினைவு கூர்ந்து பாரதி நெகிழ்ந்து உள்ளுருகித் தவித்திருக்கிறாள். வெளிப்படையாக எலலப் பெண்களையும் போல் ஆற்றாமை, கோபம், போலி விரோதம் எல்லாவற்றையும் அவன் மேல் கொண்டு விட்டாற் போல அவளும் அவனிடம் நடித்திருக்கலாம். ஆனால் அவளுடைய அந்தரங்கம் மௌனமாக அவனுக்காகத் தவித்திருக்கிறது. அவளுடைய அந்தரங்கத்தில் அவன் ஒரு தவப்பயனாக நிறைந்திருந்திருக்கிறான். யாருடைய அழகான பாதங்கள் அவள் இதயத்தில் நிறைந்திருந்தனவோ அவருடைய அதே பாதங்கள் இன்று மல்லிகைப் பந்தலின் தெருக்களில் வருந்த வருந்த நடந்து வந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த காட்சியை அவளும் தன் கண்களாலேயே காண நேர்ந்துவிட்டது. அவளுக்குத் தெரிய வந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து நினைத்த போது அவள் மனம் எரிமலையாகக் குமுறியது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.