41

     தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை விட பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான்.

     பூபதி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தும் விமான நிலையத்திலிருந்து திரும்பும் போது சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தோடு அவர் கொண்டு வந்திருந்த ஜமீந்தாரின் 'காடிலாக்' காரில் திரும்பவில்லை. சற்று முன் அதே விமான நிலையத்தின் கூட்டத்தில் வழியனுப்ப வந்திருந்தவர்களோடு நின்று கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் பலர் நடுவே அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போல், யாரிடமோ பேசுகிற பாவனையில் அவனைத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார் கண்ணாயிரம்.

     "அதுலே பாருங்க... எவ்வளவுதான் சலுகை கொடுத்துப் பெருந்தன்மையா நடத்தினாலும் இந்தத் தமிழ் வாத்தியார் பசங்க கெட்ட அயோக்கியனுகளாயிருக்காங்க... ஒருத்தனுக்காவது தெய்வ பக்தி இருக்கிறதில்லை... நல்லெண்ணமும் கிடையாது. படிக்கிற பயல்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள்" என்று சத்தியமூர்த்தியின் காதில் கேட்கிறாற் போலவே இரைந்து சொல்லியிருந்தார் கண்ணாயிரம். பூபதி அப்போது வேறு யாரோ தம்மை வழியனுப்ப வந்திருந்த நாலைந்து பேரோடு பேசிக் கொண்டிருந்தார். பூபதியை வழி அனுப்ப வந்திருந்த சத்தியமூர்த்திக்குக் கண்ணாயிரத்தின் இந்த உளறலைக் கேட்டு மனம் குமுறியது. குமரப்பன் அப்போது அங்கே இருந்திருந்தால் "ஷட் அப் மிஸ்டர் கண்ணாயிரம்! யூ டோண்ட் டிஸர்வ் டூ ஸ்பீக் எபௌட் ஸச் ஸேக்ரேட் திங்ஸ்..." என்று கண்ணாயிரத்தின் மேல் புலியாய்ப் பாய்ந்து அவரைக் குதறியிருப்பான். எதிர்த்து வாதாடுவதற்குக் கூடத் தகுதியில்லாதவரிடம் விவாதித்துப் பயனில்லை என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

     கண்ணாயிரமும் அவனிடம் நேருக்கு நேர் எதிர்த்துப் பேசத் தைரியமில்லாத கோழையாக யாரிடமோ பேசுகிறாற் போலத்தான் பேசித் தாக்கியிருந்தார். இந்த உலகத்தில் தெய்வ பக்தியையும் நல்லெண்ணத்தையும் கட்டிக் காப்பாற்றுவதற்குத் தாம் ஒருவரே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டிருப்பது போல் கண்ணாயிரம் பேசியது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களைவிடப் பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். மனிதப் பண்பையும் சகலவிதமான ஒழுக்க நேர்மைகளையும் நம்பாமல் தெய்வத்தை மட்டும் நம்புவதாகச் சொல்லித் தற்காப்புச் செய்து கொள்கிற போலிப் பக்தியால் உலகத்துக்கு நியாயமான பயன் ஒன்றுமில்லை. ஆனால் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்படிப்பட்ட போலிப் பக்தியினாலேயே இந்த உலகில் தங்களைப் பெரிய மனிதர்களாக நிரூபித்துக் கொள்ள முடிந்தது.

     கண்ணாயிரத்தின் கார் புறப்பட்டுச் சென்ற பின் விமான நிலைய எல்லையை விட்டு வெளியே நடந்தபோது இவ்வளவு சிந்தனைகளும் மனத்தில் அலைபாயச் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. விமான நிலையத்துக்கு வரும்போது பூபதியும் அவர் மகள் பாரதியும் உடன் வரக் கண்ணாயிரம் ஓட்டிக் கொண்டு வந்த அதே காரை விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்லும் போது கண்ணாயிரம் உடன் வரப் பாரதி ஓட்டிக் கொண்டு சென்றதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'பெரிய மனிதர்களில்' பெரும்பாலோர் தங்களோடு ஒத்த அளவு அல்லது அதிக அளவு 'ஸ்டேட்ஸ்' உள்ளவர்களிடம் என்னென்ன குணக்குறைவுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதது போல் மன்னித்துவிட்டுப் பழகுவதும், அதே சமயத்தில் தங்களோடு ஒத்த அளவு 'ஸ்டேட்ஸ்' இல்லாதவர்களிடம் மிக மிகச் சிறந்த குணநலன்கள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமலே அலட்சியமாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அவன் பலமுறை மனம் கொதித்துச் சிந்தித்திருக்கிறான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.