57

     பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும்.

     தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும் ஏமாற்றத்தையும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல் மிகவும் சாமர்த்தியமாக நடித்துவிட்டாள் பாரதி. இன்னொருவருக்கு முன்னால் எதையும் நடித்து ஏமாற்றி விட முடிகிறது. ஆனால் அதே காரியத்தைத் தன்னுடைய மனச்சாட்சிக்கு முன்னால் தானே நடிக்கவும் முடிவதில்லை; ஏமாற்றவும் முடிவதில்லை. சில வேதனை நிறைந்த வேளைகளில் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் முடிந்தால் கூட நன்றாயிருக்கும் போல் தோன்றியது பாரதிக்கு. தன்னுடைய மகிழ்ச்சியின் மறுபுறமே பாரதியின் மௌனத்துக்கும் கலக்கத்துக்கும் காரணம் என்பதை மோகினியாலும் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

     பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். கல்லூரி நிர்வாகியும் முதல்வரும் சத்தியமூர்த்திக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிகளும், கெடுதல்களும் தோற்று, நியாயமும் வெற்றியும் அவர் பக்கமே கிடைத்துவிட்ட முதல் தினத்தைக் கொண்டாடி மகிழும் எண்ணத்துடன் தான் பாரதி அன்றிலிருந்து கல்லூரி வகுப்புகளுக்குப் போகத் தொடங்குவதென்று தீர்மானித்திருந்தாள். அந்தத் தீர்மானத்தில் என்னவோ இப்போது கூட மாறுதல் இல்லை. ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் காரணமாயிருந்த உற்சாகம் மட்டும் தளர்ந்து நலிந்து குன்றிப் போயிருந்தது. தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவள் கொண்டு போகிறாள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு மோகினி வந்து முன்புறம் வழியனுப்புகிற பாவனையில் உடன் நிற்க, மனத்தின் துயரத்தை மறைத்துக் காட்டும் பொய்ச் சிரிப்போடு காரில் ஏறி அமர்ந்தாள் பாரதி. 'தந்தையைப் பறிகொடுத்துத் துயரம் ஆறி ஒரு வழியாகச் சின்னம்மா இன்றிலிருந்து காலேஜுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க' என்ற உற்சாகத்தோடு காரை ஸ்டார்ட் செய்த முத்தையா, கார் காம்பவுண்டைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் பின் ஸீட்டிலிருந்து மெல்ல விசும்பி அழுகிற ஒலியைக் கேட்டுத் திகைத்தான்.

     "என்னம்மா இது? அசட்டுப் பொண்ணு போல... எதுக்காவ இப்படி அழுவுரே? அப்பா நெனப்பு வந்திரிச்சுப் போலேருக்கு... நீ ஒண்ணும் சின்னஞ் சிறிசோ பச்சைப் பசலையோ இல்ல. எத்தினி அழுதாலும் அந்தப் புண்ணியப் பெறவி - மகராசன் இனிமே வரப்போறாரா? விவரந் தெரிஞ்ச பொண்ணு நீயாத்தான் உன் மனசைத் தேற்றிக்கணும். இன்னிக்கு மனசு சரியா இல்லேன்னா காலேஜுக்குப் போகாட்டிப் போவுது... நாளைக்குப் போயிக்கலாம்மா! என்ன சொல்றே? வண்டியை வீட்டுக்குத் திருப்பட்டுமா?" என்று 'அவளுடைய துயரத்துக்குத் தந்தையின் ஞாபகம் தான் காரணமோ?' எனத் தானாகவே தனக்குள் கற்பித்துக் கொண்டு ஆறுதல் கூறத் தொடங்கியிருந்தார் டிரைவர் முத்தையா. "இல்லே முத்தையா! காலேஜுக்கு அப்புறம் போகலாம். முதலில் லேக் அவின்யூவுக்கு போ" என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் பாரதி. அப்போது அவள் கையிலிருந்த கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கிடையே மோகினி சத்தியமூர்த்தியிடம் அளிப்பதற்காகக் கொடுத்தனுப்பியிருந்த கடித உறை இருந்தது. அவள் மேல் தனக்கிருக்கும் அதிக நம்பிக்கையை நினைவூட்டுவதற்காகவோ அல்லது உறைக்குள் இருக்கிற கடிதத்தில் எந்த இரகசியமும் இல்லை என்று கருதியதாலோ உறையை ஒட்டாமலே திறந்து வைத்திருந்தாள் மோகினி. செய்த சத்தியத்தையும் ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்து விட்டதையும் காப்பாற்றுவதற்காகப் பாரதி அந்தக் கடிதத்தைச் சத்தியமூர்த்தியிடம் கொண்டு போய்ச் சேர்த்தேயாக வேண்டும். தான் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமானால் அதைச் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு முன் தானும் ஒருமுறை படித்துவிட வேண்டுமென்று இந்த விநாடியில் தன் மனத்தின் அடி மூலையில் எழுகிற திருட்டு ஆசையைத் தான் விட்டு விடுவதே நல்லதென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் மிகப் பல சமயங்களில் மனிதர்களால் நினைப்பளவிலும் சொல்லளவிலும் தான் நியாயத்துக்கும் சத்தியத்துக்கும் அதிக பட்சமாக மரியாதை செய்ய முடிகிறது. 'நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைக்க முடிந்த வரை பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்கள் தான். இந்த நினைப்பின் எல்லைவரை எல்லாருக்கும் வெற்றிதான். ஆனால் இந்த நினைப்பளவைக் கடந்து 'செயலளவு' என்ற இடம் வரும்போதுதான் சத்தியசோதனை மெய்யாகவே ஆரம்பமாகிறது. கல்வித் திறனும், நெஞ்சுரமும் உள்ள மனமுதிர்ச்சியாளர்கள் பலரே இந்தச் சோதனையில் தோற்றுவிடும்போது பாரதியைப் போல் ஓர் அபலைப் பெண் மட்டும் எப்படி வென்றுவிட முடியும்? நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் அந்தக் கடிதத்தைத் தானும் படித்து விட வேண்டுமென்ற ஆவல்தான் அவள் மனத்தில் வென்றது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.