13
பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரதநாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்த பின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர். அவ்வளவு பெரிய அவையில் சிறிதும் இடைவெளியின்றிக் கூடியிருந்த கூட்டத்தினர் மோகினியின் நாட்டியத்தில் முழுமையாக ஈடுபட்டு இலயித்திருந்த வேளையில் இடையே புகுந்து வழி உண்டாக்கிக் கொண்டு வருவதால் எத்தனை கோபதாபங்களைச் சந்திக்க நேருமோ அத்தனை கோபதாபங்களுக்கும் ஆளாகிய பின்பே அந்தச் சிறுவன் சத்தியமூர்த்திக்கு அருகே வந்திருந்தான். "முடிந்ததும் பேசாமல் எழுந்து போயிடாதீங்க. அக்கா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க" என்று அந்தச் சிறுவன் தன் காதருகே முணுமுணுத்த போது, முதலில் அவன் மேல் அடக்க முடியாத கோபமும் பின்பு அவன் வந்திருக்கிற சூழ்நிலையை உணர்ந்து அவன் மேல் அநுதாபமும் உண்டாயின சத்தியமூர்த்திக்கு. அமைதியான அவையில் மிகவும் அமைதியாயிருந்த முன் வரிசையில் தன்னிடம் அந்தச் சிறுவன் வந்து பேசிய பேச்சுக் குரலே சுற்றிலுமிருந்த சிலர் தன் பக்கம் பார்த்து முகத்தைச் சுளிக்கக் காரணமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். "நாட்டியம் முடிந்ததும் உன் அக்காவை அவசியம் பார்த்துவிட்டுப் போகிறேன். கூட்டத்தில் இப்படி அடிக்கடி நடுவே வந்து பேசாதே தம்பி..." என்று சொல்லி அந்தச் சிறுவனை அனுப்பி வைத்தான் அவன். அந்தச் சிறுவனோடு பேசிக் கொண்டிருந்த போது கூட அரங்கிலிருந்து ஒலிக்கும் இனிய குரலும் மாறி மாறி ஒலிக்கும் சலங்கை ஒலியும் வந்து செவிகளை நிறைத்துக் கொண்டு தான் இருந்தன. வளைகளும், சலங்கைகளும் ஓசையிட அவள் கொடிபோல் துவண்டு நயமாக ஆடிய நாட்டியம் அவன் இதயத்தைக் கவர்ந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சியின் முதற்பகுதியாகவும் முக்கியமான பகுதியாகவும் இருந்தது ஆண்டாள் நடனம் தான். அதன் பின் பாம்பாட்டி நடனம், மார்வாரி நடனம் என்று வேறு சில நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அவையெல்லாம் அவளுடைய ஆண்டாள் நடனத்தைப் போல் சத்தியமூர்த்தியின் மனத்தைத் தொட்டு உருகச் செய்யவில்லையாயினும், கலைத்திறனையும் அவள் அழகின் பல நிலைகளையும் அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தான். இயற்கையாகவே அவளுடைய கலைத்திறன் அவ்வளவு சிறப்புடையதா அல்லது தன்னைப் போல் அவளுடைய அந்தரங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஓர் இரசிகன் எதிரே வந்து உட்கார்ந்திருந்ததனால் தனக்காகவே அவ்வளவு சிறப்பாக அது அமைந்ததா என்று நுணுக்கமாகவே எண்ணிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவளைப் பற்றிய கவர்ச்சியையும் மயக்கத்தையும் அவன் மனத்தில் அதிகமாக்கின. அவளுடைய கைகள் சேர்ந்தும், பிரிந்தும் முத்திரை பயின்றபோதெல்லாம் நிலவின் கதிர்களிலிருந்து கொய்த தளிர்களைப் போல் இலங்கிய விரல்களின் எழிலை நினைப்பதா? எதை நடித்துக் கொண்டிருந்தாளோ அதனுடைய பாவனைகளை அப்படியே மாற்றமின்றிப் பேசும் அவள் கண்களை நினைப்பதா? பாதரசங்களின் காட்சியழகும் சலங்கைகளின் ஓசை அழகுமாக அவளுடைய கால்கள் மான் துள்ளியது போல் துள்ளிய வேளைகளில் கூடியிருந்தவர்களின் மனங்களையெல்லாம் அவள் துள்ள வைத்த விந்தையை நினைப்பதா? எதை நினைப்பது? எதை நினைக்காமல் விடுவது? பரத நாட்டியம் பார்ப்பதற்காக ஓரிடத்தில் இரண்டு மணி நேரம் சேர்ந்து உட்கார்ந்தது என்பது சத்தியமூர்த்தியின் வாழ்க்கையிலும் இதுவே முதல் தடவை. இன்று இந்தக் கலை அவனை வசியம் செய்து கட்டுப்படுத்தி விட்டது. குமரப்பனுக்கு நாட்டியத்தைப் பற்றி நிறையத் தெரியும். வர்ணம், தில்லானா, ஜவானி, ஜதிஸ்வரம், சப்தம், அலாரிப்பு என்று அவன் ஏதாவது நாட்டியம் பார்க்கப் போய்விட்டு வந்த மறுநாள் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருப்பான். அப்போதெல்லாம் அந்த அரற்றலைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர சத்தியமூர்த்தி அதற்கு தன் மனத்தில் எந்த விதமான முக்கியத்துவத்தையும் அளித்ததில்லை. இன்றோ 'வார்த்தைகளால் இவ்வளவு நேரத்தில் இப்படி பேசி முடித்து விடலாம்' என்று பேசி முடிக்க இயலாத அத்தனை அழகுகளும் இரகசியங்களும், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அந்தக் கலையில் நிரம்பியிருப்பதை மோகினி அவனுக்குப் புரிய வைத்து விட்டாள். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து முடித்து விட்டு எழுந்திருந்த போது மோகினியின் மேல் இனம் புரியாததொரு மதிப்பு உருவாகிய மனத்துடன் எழுந்திருந்தான் சத்தியமூர்த்தி. இவ்வளவு அருமையான கலைத்திறனும், தொழில் நுணுக்கமும் தெரிந்த பெண் தான் அன்று இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் என்பதையும், அப்படி முயன்றபோது 'என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகலிடம்' என்று தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளும் விரக்தியோடு கூறினாள் என்பதையும் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. நாட்டியம் முடிந்து எழுந்த போது குமரப்பன் ஏதோ சொல்லத் தொடங்கினான்.
"பரதசாஸ்திரத்தை எழுதிய பரத முனிவர் மேலும், அபிநயதர்ப்பணத்தை எழுதிய நந்திகேசுவரர் மேலும் எனக்கு இப்போது சொல்ல முடியாத கோபம் வருகிறதடா சத்தியம்! பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரத நாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்தபின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர். இந்தப் பரத முனிவர் இருக்கிறாரே, இவர் கண்டுபிடித்த கலை ஒரு பெண் தன்னிடம் நிரம்பியிருக்கும் அழகுகளை எவ்வளவு நாகரிகமாகப் புரிய வைக்கும் கருவியாயிருக்கிறது பார்த்தாயா?" என்று அவன் கூறிய சொற்களிலிருந்து மோகினியின் நாட்டியம் அவனையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. மறுபடியும் அரங்கின் உட்புறத்திலிருந்து பக்கத்துப் படிகளின் வழியே அந்தச் சிறுவன் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.
"இந்தப் பையன் யார்? நாட்டியம் நிகழ்ந்து கொண்டிருந்த போதும் இவன் உன்னைத் தேடிக் கொண்டு வந்தானே? இப்போதும் உன்னைத்தான் தேடி வருகிறான் போலிருக்கிறது" என்று குமரப்பன் கேட்ட போது சத்தியமூர்த்தி "எனக்குத் தெரிந்த பையன்! நான் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். நான் திரும்பி வந்ததும் நாம் புறப்படலாம். அதுவரை இங்கேயே இரு!" என்று குமரப்பனிடம் கூறிவிட்டுத் தானே எதிர்கொண்டு புறப்பட்டு விட்டான். மேடையிலிருந்து பின் பக்கத்தில் கிரீன் ரூமிலிருந்தவாறே வெளியே புறப்பட்டுப் போய்விடுவதற்கு வசதியாக வேறோரு சாலையும் வாயிலும் இருந்தன. மேடையின் பின் பகுதிக்கும் அங்கிருந்தே மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கான வாயிலுக்கும் நடுவேயுள்ள பிரதேசத்தில் ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவுக்குள் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போனான் சிறுவன். கிரீன் ரூமில் மோகினியின் தாய் நாட்டிய உடைகளையும் அலங்கார நாட்டிய உடைகளையும் அலங்காரப் பொருள்களையும் சரிபார்த்து மடித்து அடுக்கிக் கொண்டிருந்ததைப் போகும் போது சத்தியமூர்த்தி கவனித்தான். கிரீன் ரூமுக்கும் மேடை அரங்கத்துக்கும் நடுவில் இருந்த சிறிய கூடத்தில் நட்டுவனார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பின்புறத்துப் படிகளில் இறங்கியவுடனே எதிரே ஆகாயம் முழுவதையும் நிறைத்துக் கொண்டாற் போல் முழு நிலா எழுந்து வந்திருப்பது தெரிந்தது. படிகளின் அருகே பூமியில் விளைந்த பச்சை விசிறியாக இருபுறமும் பக்கவாட்டில் இலைகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒரு விசிறி வாழை இருந்தது. அந்த விசிறி வாழையின் அருகே மோகினியும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். மிக அருகே எங்கோ மாம்பூப் பூத்து அந்த வாசனையைக் காற்று அள்ளிக் கொணர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலா அதைத் தொங்கவிட்டுத் தாங்கிக் கவிந்து கொண்டிருப்பது போன்ற நீலவானம் - அதன் கீழே விசிறி வாழையருகே தனியாய் நின்று தன்னை வரவேற்றுப் புன்னகை பூக்கும் மோகினி, மாம்பூ மணக்கும் சித்திரை மாதத்து இளங்காற்று. எல்லாமாகச் சேர்ந்து அப்போது சத்தியமூர்த்தியைப் பரவசப்படுத்தியிருந்தன. அவன் மனம் மிக மிக உற்சாகம் உற்றிருந்தது. "வாருங்கள்! உங்களை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கைகூப்பினாள் மோகினி. அவளை எப்படியெப்படி யெல்லாமோ புகழ்ந்து தன் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, "உங்களுக்கு என் பாராட்டுதல்கள். மிகவும் நன்றாக ஆடினீர்கள். 'கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருளு கண்டாய்' என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கதறுகிறார் போல் பாடிக் கொண்டே நீங்கள் ஆடியபோது எனக்குக் கண் கலங்கிவிட்டது" என்று சுருக்கமாக ஏதோ சொன்னான். அவனுடைய பாராட்டுதலைக் கேட்டு அவள் முறுவல் செய்தாள். நாட்டியக் கோலத்தில் இருந்த ஆடையலங்காரங்களைக் களைந்து விட்டு ரோஸ் பவுடர் பற்றியிருந்த நிறம் போயும் போகாமலும் சோப்பினால் அவசரம் அவசரமாக முகம் கழுவிய பின்பு அதிகக் கவர்ச்சியில்லாத ஏதோ ஒரு துணிப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற தோற்றத்திலும் அவள் அழகாகத்தான் இருந்தாள். "நான் நன்றாக ஆடியதற்குக் காரணமே நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற பலத்தினால் தான். எதிரே அவையில் உட்கார்ந்து கொண்டிருந்த அத்தனை ஆயிரம் பேருக்காகவும் நான் ஆடவில்லை. உங்களுக்காகத்தான் ஆடினேன். நீங்கள் என்னைக் காப்பாற்றிய தெய்வம். இன்றைக்கு நீங்கள் வராமல் என்னை ஏமாற்றி விடுவீர்களோ என்ற பயம் மேடைக்கு வந்து நிற்கிற வரை எனக்கு இருந்தது. நீங்கள் வந்திருக்கிறீர்களா என்று அறிவதற்காக அந்தப் பையனை இரண்டு மூன்று முறை கீழே போய்ப் பார்த்து வரச் சொல்லித் துரத்தினேன். நீங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அறிந்த பின்பு தான் எனக்கு நம்பிக்கையே வந்தது." "நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கலா இரசிகன் இல்லை. நான் பார்க்கிற முதல் நாட்டியமே இதுதான்." "நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை நினைத்து உங்களைப் பார்த்துப் பெற்ற உற்சாகத்தினால் தான் அப்படி ஆட முடிந்தது. நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதை விட வேறு எந்த பாக்கியத்தை நான் எதிர்பார்க்க முடியும்?" இப்படிப் பேசும்போதே அவள் கண்களில் நீர் மல்கிற்று. சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பார்வையால் பேசும் அந்தக் கண்களையும் பதங்களால் பேசும் அந்த மயக்கும் இதழ்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். கிரீன் ரூமிலிருந்த அவளுடைய தாய் அவளைக் கூப்பிடும் குரல் கேட்டது. கண்ணாயிரம் வேறு நட்டுவனாரோடு பேசிக் கொண்டே பின்பக்கமாகப் படியிறங்கிப் பூங்காவுக்குள் வந்து கொண்டிருந்தார். தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதென்பது அவனுக்குப் புரிந்தது. "நான் வருகிறேன். வெளியே நண்பன் ஒருவன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் ஆடிக் களைத்திருக்கிறீர்கள். வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கிறது. உங்கள் அம்மாவின் குரல் வேறு உள்ளேயிருந்து மிரட்டுகிறது. கண்ணாயிரம் வேறு வந்து கொண்டிருக்கிறார். நாம் மறுபடி சந்திக்கலாம்..." என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் கிளம்ப முயன்ற போது பதில் சொல்ல நா எழாமல் கலங்கிய கண்களுடனேயே கைகூப்பி விடை கொடுத்தாள் அவள். அந்தச் சந்திப்பை அப்படி அரை குறையாக முடித்துக் கொண்டு விடை பெறுவது அவனுக்கும் என்னவோ போல் இருந்தது. ஆயினும் குமரப்பன் வெளியே காத்திருப்பான் என்ற ஞாபகம், கண்ணாயிரத்தின் திடீர் வரவும் அவனை அங்கிருந்து புறப்படச் செய்தன. படியேறும் போது கண்ணாயிரமும் அவனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேர்ந்தது. "என்னப்பா இது? உனக்கு ஒரு வேலை பார்த்துத் தரச் சொல்லி உன் தந்தை என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். நீயானால் நாட்டியக் கச்சேரி மேடையைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாய்?" என்று கண்ணாயிரம் தம்முடைய கீழ்த்தரமான வம்பை ஆரம்பித்தார். "எனக்காக நீங்கள் வேலை எதுவும் தேடித் தர வேண்டாம் சார்! நாம் அப்புறம் பார்க்கலாம்..." என்று கூறிவிட்டு அவரைச் சந்திக்க நேர்ந்ததை வெறுப்பவன் போல் விறுவிறுவென்று மேலே நடந்து வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. வருகிற வழியில் கிரீன் ரூமுக்கு அருகே நின்று கொண்டிருந்த மோகினியின் தாய் வேறு அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள். "என்னப்பா இது? ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று போனவன் அரை மணி நேரத்துக்கு மேல் ஆக்கி விட்டாய்?" என்று கேட்டுவிட்டுச் சிறிது மௌனத்திற்குப் பின் தணிந்த குரலில், "மோகினியைத் தெரியுமா உனக்கு?" என்று மேலும் சத்தியமூர்த்தியை வினவினான் குமரப்பன். "தெரியும்! அவளை நான் சந்தித்தது ஒரு விநோதமான சம்பவம்!" "எனக்குத் தெரியக்கூடாத சம்பவமானால் சொல்ல வேண்டாம். நான் உன்னைக் கேட்டதற்காக மன்னித்து விடு சத்யம்...?" "அப்படி ஒன்றும் இல்லை. நானே சொல்கிறேன்." நேரம் அதிகமாகி விட்டதனால் அவர்கள் இருவரும் பொருட்காட்சி மைதானத்திலிருந்த ஓர் உணவு விடுதியில் நுழைந்து இரவுச் சாப்பாட்டை முடித்தார்கள். மைதானத்திலிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தால் சாலையின் கிழக்குக் கோடியில் சித்திரை மாதத்து முழு நிலாவின் கீழ் காந்தி மண்டபம் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நெட்டுலிங்க மரங்களிடையே தாஜ்மகாலைப் போல் அற்புதமாகத் தோன்றிக் கோண்டிருந்தது. தெற்கே மரக் கூட்டங்களுக்குள்ளே அமெரிக்கன் கல்லூரிக் கட்டிடங்கள் உறங்கின. சாலைகளில் எல்லாம் சித்திரைத் திருவிழாக் கூட்டம் நிறைந்திருந்தது. திரும்பிப் போகும் போது கல் பாலத்தில் போகாமல் இன்னும் மேற்கே தள்ளிப் போய் வையையில் குறுக்கே இறங்கி நடந்தார்கள் குமரப்பனும் சத்தியமூர்த்தியும். சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும், கலகலப்பும் பாலத்துக்குக் கிழக்கேதான் அதிகமாயிருந்தன. பாலத்தின் மேற்குப் பக்கம் வையை மணற் பரப்பு அமைதியாயிருந்தது. ஓர் ஓடுகாலின் கரையில் குவிந்திருந்த மணல் மேட்டில் நண்பர்கள் இருவரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசத் தொடங்கினர். ஓடுகால் நீர்ப்பரப்பில் நிலவு பிரதிபலித்து மிதந்து கொண்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இண்டர்வ்யூக்குப் போய்விட்டுத் திரும்பும் போது இரயிலில் மோகினியைச் சந்திக்க நேர்ந்ததையும் அதன் பின் நிகழ்ந்தவற்றையும் நண்பனிடம் மனம்விட்டுக் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் பெருமூச்சு விட்டான். பிறகு கூறலானான்: "இந்த உலகத்தில் கருவேலத்து முள்ளைப் போல் ரோஜா முள் பெரியதாகத் தெரிவதில்லை சத்யம்! அதனால் ரோஜாவில் முள்ளே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ரோஜா முள்ளுக்குத்தான் வளைவும் கூர்மையும் அதிகம். ரோஜாப்பூவின் அழகு பார்க்கிறவர்களுக்கு அதனடியில் இருக்கும் முள்ளை மறந்து போகச் செய்து விடுகிறது. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத் திறமையும் அழகும் பூத்துப் பொலியும் போது அவர்களுடைய அடிமனத்தில் உள்ள வேதனைகளும் ஏமாற்றங்களும் உலகத்துக்குத் தெரியாமல் போய் விடுகின்றன. வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனாலும், துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்று தான் எனக்குத் தோன்றுகிறது." "நீயும் நானும் ஆச்சரியப்பட்டு என்ன ஆகப் போகிறது? அநுதாபப்பட்டுத்தான் என்ன ஆகப் போகிறது? தனி மனிதனுடைய அநுதாபங்கள் வெறும் எண்ணமாக எழுந்து நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் குமரப்பன்? ஒரு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட வேண்டுமானால் சமூகத்தின் சக்தி வாய்ந்ததும் ஒன்றுபட்டதுமாகிய முழு அநுதாபமும் அந்தப் பிரச்சினையின் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஆனால் நீயும் நானும் இங்கே நம்மைச் சுற்றிப் பார்க்கிற சமூகமே பரிசுத்தமில்லாததாக இருக்கிறதே? நூறு சாதிகள், நூறாயிரம் வேற்றுமைகள், போதா குறைக்கு நவீன சாதிகளாக வளரும் அரசியல் கட்சிகள், இவ்வளவும் நிறைந்த சமூகத்தில் அல்லவா நீயும் நானும் வாழ்கிறோம்? பேசுவதைத் தவிர வேறு என்ன செய்கிறோம் நாம்?" "ஒன்றும் செய்யாமலே இருக்கலாம்? ஆனால், அதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு சத்யம்! அறியாமையும், வறுமையும் தான் இன்று இந்த நாட்டில் மனிதர்களைப் பிரிக்கவும், தரப்படுத்தவும் காரணமாக இருக்கின்றன. பழைய காலத்தில் பெண்களின் பரிசுத்தம் சோதிக்கப்படுவதற்கு அக்கினிப் பிரவேசம் இருந்ததைப் போல் வறுமை வேதனைகளாலும் அறியாமை இருளினாலும் துன்பப்படுகிற நாடு தன் பரிசுத்தத்தை நிரூபித்துக் கொள்ள உழைப்பையும் நம்பிக்கையையும் வேள்வித் தீயாய்ப் பெருக்கி அவற்றின் ஒளி வெள்ளத்தே மூழ்கி எழ வேண்டும்! நேர்மையான இலட்சியத்தை முன் நிறுத்திச் செயல்படுகிற ஒவ்வோர் இயக்கமும் சமூகத்துக்கு ஓர் அக்கினிப் பிரவேசம் தான்." "ஒப்புக் கொள்கிறேன், குமரப்பன்! ஆனால் மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்த மாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியது தான்; சமூகத்தில் எல்லாருமே நாசூக்காகப் புறக்கணித்து விடுகிற பகுதி அது." "நிச்சயமாக இல்லை! நீ சொல்லிய விவரங்களிலிருந்து அவளைப் போல் பிடிவாதக்காரப் பெண் தன்னைக் காத்துக் கொள்வதில் தனக்குத்தானே ஓர் இயக்கமாக இருப்பாள். 'சாது முரண்பட்டால் காடு கொள்ளாது' என்று ஒரு பழமொழி உண்டு. மோகினி எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு உறுதியாகவும் இருப்பாள். கண்ணாயிரங்களும், மஞ்சள்பட்டி ஜமீன்தார்களும் அவளுக்கு முன்னால் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு தான் போகப் போகிறார்கள். நீ கவலைப் படுவதை விட்டுவிடு! நிம்மதியாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் போய் வேலையை ஒப்புக் கொள். கல்லூரி நேரம் போக எஞ்சிய நேரத்தில் நிறையப்படி. நிறையச் சிந்தனை செய். டாக்டர் ஆப் லிட்ரேசர், மாஸ்டர் ஆப் லிட்ரேசர், என்று எத்தனை பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் உண்டோ அத்தனையையும் வாங்கித் தீர்ப்பதற்கு இப்போதிருந்தே திட்டம் போடு. மல்லிகைப் பந்தலைப் போல் அழகிய ஊரிலிருந்து கொண்டே நாட்களை வீணாகக் கழித்து விடாதே. வாழ்க்கைத்தரம் உயர்ந்த ஊர் அது. விலைவாசிகள் அதிகமாயிருக்கும். சிக்கனமாயிருக்கப் பழகிக் கொள்!... இன்னொரு செய்தி. வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை நானும் கல்லூரி நாளில் பழகிய நெருக்கமான நண்பர்களும் ஓட்டலில் உனக்கொரு விருந்து வைத்திருக்கிறோம். அதையும் இப்போதே நினைவு வைத்துக் கொள்..." என்று சொல்லிக் கொண்டே புறப்படுவதற்காக மணலைத் தட்டி விட்டு எழுந்தான் குமரப்பன். "எனக்கு வேலை கிடைத்தால் நீங்கள் எல்லோரும் விருந்து விடை கொடுக்க வேண்டும் என்பது என்ன முறையோ?" "முறைதானடா சத்யம்! நம் நண்பர்களில் இன்னும் வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்களே...? அவர்களுக்கெல்லாம் உனக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை ஞாபகப்படுத்துவதற்கும் உனக்கு விடை கொடுப்பதற்கும் சேர்த்துதான் இந்த விருந்து." "நான் மதுரையை விட்டுப் புறப்பட்டுப் போகிறேன் என்பதை நம் நண்பர்களே நம்ப மாட்டார்கள் குமரப்பன்! என்னைப் போல் இந்த ஊரின் மேல் மோகம் கொண்டவன் இருக்க முடியாது!" "இருந்தும் இப்போது நீ மல்லிகைப் பந்தலின் மேல் கொண்டிருக்கிற மோகம் அதிகமாகி விட்டது... இல்லையா?" "மோகம் என்று சொல்லாதே. அது மதுரையின் மேல் மட்டும் தான் உண்டு. மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரத்தின் சரியான நிர்வாகத்தோடு நடைபெறுகிற ஒரு கல்லூரியில் வேலை பார்க்க நினைக்கிறேன் தான். அதை மோகம் என்று நீ சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்." "சரி சரி! எப்படிச் சொன்னால் ஒப்புக் கொள்வாயோ அப்படியே வைத்துக் கொள். இப்போது புறப்படு. மணி பதினொன்றாகப் போகிறது..." - குமரப்பன் துரிதப்படுத்தவே மணல் மேட்டிலிருந்த சத்தியமூர்த்தியும் எழுந்திருந்து புறப்பட்டான். போகும் போதும் பேசிக் கொண்டே போனார்கள் நண்பர்கள். "மல்லிகைப் பந்தல் முதல்வரைப் பற்றி நினைத்தால் தான் தயக்கமாக இருக்கிறதடா குமரப்பன். பார்த்த சில மணி நேரத்திலேயே என் மேல் பொறாமை ஏற்பட்டு விட்டது அந்த மனிதருக்கு. நான் மாணவர்களைக் கவர்ந்து என் வசப்படுத்திக் கொண்டு விடுவேனோ என்று அவருக்குப் பயமாயிருக்கிறது. பிறருடைய தகுதிக் குறைவைக் குறித்து வருந்துகிறவர்களோடு சேர்ந்து நாமும் வருந்தலாம். பிறருடைய தகுதியைக் கண்டே வருந்தினால் அவர்களைப் பார்த்து நாம் என்ன செய்ய முடியும்?" "என்ன செய்ய முடியுமாவது; நன்றாக வாய் விட்டுச் சிரிக்க முடியும்! அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நீ ஏன் கவலைப்படுகிறாய் சத்யம்? பிறருடைய பொறாமையை இப்படி மதிப்பிடத் தெரிந்து கொள்ளேன். உன்னிடம் ஏதோ ஒரு சாமர்த்தியம் - அவர்கள் பொறாமைப்படத் தக்கச் சாமர்த்தியம் இருப்பதால் தானே பொறாமைப்படுகிறார்கள்? உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறவர்கள் உன்னை ஒப்புக் கொண்டு விடுகிறார்கள். பாராட்ட முடியாதவர்கள் பொறாமைப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். 'பிறர் வழி உண்டாக்கிய பின் நடப்பதா அல்லது நாம் நடப்பதாலேயே ஒரு புது வழியை உண்டாக்குவதா?' என்பது தான் பிரச்சினை. உன்னையும் என்னையும் போலத் துணிந்த கட்டைகள் பிறர் உண்டாக்கிய வழியில் நடப்பதை விட நாமே நடந்து வழி உண்டாக்குவதைத்தான் விரும்புவோம். அப்படி வழி உண்டாக்க விரும்புகிறவர்களுக்கு மற்றவர்கள் தொல்லையளிப்பது இயல்புதான். மோகினியின் நிலைமையும் அதுதான்! அவளைப் போன்றவர்கள் எந்த வழியில் போக வேண்டும் என்று அவளுடைய தாயும், கண்ணாயிரம், மஞ்சள் பட்டியோ - மரகதப் பட்டியோ - அந்த ஜமீன்தாரும் எதிர்பார்க்கிறார்களோ அந்த வழியை வெறுத்து அவள் புதுவழியில் வர ஆசைப்படுவதால்தான் துன்பப்படுகிறாள். ஆனால் இத்தகைய துன்பங்கள் தான் மனிதனைப் புடம் போட்டு எடுக்கும் புனித அநுபவங்கள். இவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நேருக்கு நேர் நின்று சமாளிக்கத் தெரிய வேண்டும் நமக்கு." "எதிர்கொள்வதற்குப் பயந்தோ, தயங்கியோ, இவற்றை உன்னிடம் சொல்லவில்லை, குமரப்பன். நீ சொல்வாயே, மனிதர்களில் சிலரும் 'எல்' போர்டாவது 'ஆன் டெஸ்ட்' போர்டாவது மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதாக - அந்த 'போர்டு' மாட்டிக் கொள்ள வேண்டிய மனிதர் ஒருவர் நான் பணிபுரியப் போகிற மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இருக்கிறார் என்பதற்காகச் சொல்ல வந்தேன்." "அப்படி மனிதர்கள் இல்லாத இடம் உலகத்தில் எங்கே தான் இருக்கிறது? விட்டுத்தள்ளு... போய் நன்றாகத் தூங்கு" என்று சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலில் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுப் புறப்பட்டான் குமரப்பன். 'இவ்வளவு அருமையான நண்பனைப் பிரிந்து வெளியூர் செல்லப் போகிறோமே' என்று எண்ணிய போது சத்தியமூர்த்தியின் இதயம் அழுதது. கல்லூரி நாட்களின் இனிய அனுபவங்களையும், 'இலட்சியம்' என்ற பெயரில் நண்பர்களாகச் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதையும், அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் குமரப்பன் வழக்கமாக வரையும் கேலிச் சித்திரங்களையும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் 'ஏமாற்றம்' என்ற தலைப்பில் வழக்கமாகக் கேலிச் சித்திரங்களை வரைவான் குமரப்பன். ஏமாற்றம் - 1, ஏமாற்றம் - 2, என்று இப்படி வரிசையாக அதே தலைப்பில் அந்தக் கேலிச்சித்திரங்கள் வரும். ஒரு நாள் சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும், "இந்தா குமரப்பன்! ஏமாற்றம் என்ற தலைப்பில் தான் படம் போடுவாய் என்றால் இனிமேல் நீ நம் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு படமும் போட வேண்டாம் அப்பா..." என்று அவனைக் கண்டித்துப் பார்த்தார்கள். "என்னடா இது? இதற்கா இப்படிக் கோபித்துக் கொள்கிறீர்கள்? முதல் பக்கத்தில் இலட்சியம் என்று பத்திரிகையின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்? நான் கடைசிப் பக்கத்தில் ஏமாற்றம் என்று அது முடிகிற இடத்தை விளக்குகிறேன்..." என்று குத்தலாகப் பதில் சொல்லிக் கூடியிருந்தவர்களிடையே சிரிப்பலைகளைக் கிளப்பினான் அவன். பிறவியிலேயே அவன் கேலிச் சித்திரக்காரன் தான். கண்ணாயிரத்தைப் பற்றி ஒரு நாள் அவன் கூறிய கருத்தை இப்போது சிந்தித்தான் சத்தியமூர்த்தி. நினைக்க நினைக்கச் சிரிப்பு மூட்டுவதாக இருந்தன குமரப்பனின் அந்த வாக்கியங்கள். மறுபடியும் அவற்றை நினைத்தான் சத்தியமூர்த்தி. "இந்தக் கண்ணாயிரம் இருக்கிறாரே, அவர் விலாங்கு மீனைப் போன்றவர். பிடித்தால் நழுவி விடுவார். நழுவிய பின்னும் பலர் அவரைப் பிடிக்க முயன்று பின்னால் ஓடித் துரத்திக் கொண்டிருப்பார்கள். பிடித்தால் நழுவி ஓடிவிடுவதும், நழுவி ஓடிய பின்பும் பலரைக் காக்க வைத்தும் தம்மைப் பிடித்தால் காரியம் ஆகும் என்று வீண் பிரமை கொள்ளச் செய்வதும் தான் அவருடைய சாமர்த்தியங்கள். விலாங்கு மீனையாவது வலையைப் போட்டுப் பிடித்துத் தொலைக்கலாம். கண்ணாயிரம் யாருக்கும் பிடி கொடுக்க மாட்டார். ஆனால் அவரிடம் பலர் பிடி கொடுத்தும், பிடிபட்டும் தவித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் அந்த ஆளைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம்" என்று அளவெடுத்துச் சொன்னாற் போல் பலமுறை சொல்லியிருக்கிறான். மனிதர்களைப் படித்து முடிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். குமரப்பனும் தானும் சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கும் பல சந்தர்ப்பங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தன. அன்றிரவு அவன் கண்கள் சோர்ந்து உறங்கத் தொடங்கிய போது மூன்று மணிக்கு மேல் இருக்கும். மறுநாள் காலையில் சில வெளியூர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினான். மதுரையை விட்டு அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை நகரத்தின் பெரிய உணவு விடுதி ஒன்றில் குமரப்பனும் சத்தியமூர்த்தியின் நண்பர்களும் அவனுக்கு வழியனுப்பு உபசாரமாக ஒரு விருந்து கொடுத்தார்கள். நண்பர்கள் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அவர்களையெல்லாம் பிரிந்து புதிய ஊருக்குப் போகப் போவதை உணர்ந்து தவித்தது. தன்னுடைய இன்ப ஞாபகங்களும் துன்ப ஞாபகங்களும் வெற்றிகளும் தோல்விகளும் சகலமும் அத்தனை ஆண்டுகளாக அந்த நகரத்தோடு பிணைந்திருந்ததை நினைத்தான் அவன். இதைத் தான் தேசிய உணர்ச்சி என்று வேறு பெயரிட்டு அழைக்கிறார்களோ என்றும் அப்பொழுது அவன் எண்ணினான். நண்பர்கள் அதை ஒரு சிறு கூட்டமாகவே நடத்தி விட்டார்கள். "சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும் போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலே உட்காருகிறேன் நான்" என்று நீர் குழம்பும் கண்களோடு பேச்சை முடித்துவிட்டான் ஒரு நெருங்கிய நண்பன். குமரப்பன் சிரிக்கச் சிரிக்க நிறையப் பேசினான். வேறு சில நண்பர்களும் பேசினார்கள். மதுரையைப் பிரிந்து வெளியூர் போகவிருப்பதை நிச்சயமாக ஞாபகப் படுத்துவதைப் போல் அந்த விருந்தும் நடந்து முடிந்து விட்டது. அது மகிழ்ச்சியா வேதனையா என்று புரிய முடியாத நிலை. உணவு விடுதியில் விருந்து முடிந்து வீடு திரும்பும் போது அவன் தவிக்கும் மனத்தோடுதான் திரும்பினான். தந்தை வீட்டுத் திண்ணையில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். "வா, சத்தியம்! இதில் நீ கையெழுத்துப் போட வேண்டியதில்லை என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. கண்ணாயிரம் கேட்கிற வழியாயில்லை. 'எதற்கும் பையனிடமும் ஒரு கையெழுத்து வாங்கி விடுங்கள்' என்கிறார். நீயும் போட்டு விடேன்" என்று பத்திரக் காகிதத்தை நீட்டினார் தந்தை. வீட்டை அடமானமாக வைத்துக் கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்குவதற்காக எழுதப்பட்ட பத்திரக் காகிதம் அது. "கொஞ்சம் பொறுத்துக் கொண்டு செய்யலாமே அப்பா! கண்ணாயிரம் பின்னால் எப்படியெப்படி நடந்து கொள்வாரோ?" என்று அவன் கூறிய சொற்களைத் தந்தை கேட்கவில்லை. விரும்பவும் இல்லை. "கையெழுத்துப் போடு சொல்கிறேன்" என்று வற்புறுத்தினார். அந்த நிலையில் தந்தையைப் பகைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர் என்ன சொன்னாரோ அதைச் சொன்னபடியே செய்தான் சத்தியமூர்த்தி. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|