23

     யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் தான் அதிகமாகப் பெருந்தன்மையும் அக்கறையும் காண்பிக்க வேண்டுமென்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இரகசியம்.

     மல்லிகைப் பந்தல் கல்லூரியின் ஒவ்வொரு நாள் அநுபவமும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் விரைவாகவும் புதுமையாகவும் திருப்பங்களை உண்டாக்கின. அஞ்சாமையையும், நேர்மையையும் பக்க பலங்களாகக் கொண்டு வலது காலை முன் வைத்து எப்போதும் போல் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தான் அவன். மற்றவர்களுடைய சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும் பொய் புனைசுருட்டுகளையும் புரிந்து கொள்கிற போது அவனுக்கும் கூட மேலே நடக்கத் தோன்றாமல் மெலிந்து நலிந்து சில கணங்கள் தயங்கி நிற்கத் தோன்றும். அப்படி நலிந்து மனம் வருந்தும் வேளைகளில் நவநீத கவியின் அற்புதமான கவிதை ஒன்றை நினைவு கூர்வது அவன் வழக்கம். பக்குவமான நல்ல மனிதனுடைய சராசரி உள் மனத்தின் அந்தரங்கமான ஏக்கங்களும், தாபங்களும், தாகங்களும் சுயமாக ஒலிக்கிற நல்ல கவிதைகளை அந்தத் தலைமுறையில் நவநீத கவி ஏராளமாகப் பாடியிருந்தார். அவற்றில் சத்தியமூர்த்தி அடிக்கடி நினைவு கொள்கிற கவிதை இது:

     இதழ் மலர்ப்பொழிவில் எண்ணங்கள் மலர்ந்திருக்க
     எண்ண மலர்க் குவையில் ஏடெழுதும் கவியிருக்கக்
     கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்கக்
     எண்ணமெழுத்தும் சலித்திருக்க ஏதோ நலிந்திருந்தேன் என்னுள் மெலிந்திருந்தேன்...

     சொல்லிப் புரியவைக்க முடியாத நுணுக்கமான வேதனைகளின் போதெல்லாம் சத்தியமூர்த்திக்கு இந்தப் பாட்டு நினைவில் தோன்றியிருக்கிறது. 'கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்க' என்ற வரிகளை வாய்க்குள்ளேயே முனகிப் பார்த்துக் கொண்டாலும் - அப்படித் திரும்பத் திரும்ப முனகுவதில் கூட 'இதுதான் உண்மை' என்று உண்மையை ஞாபகப்படுத்திக் கொள்கிற ஒரு சுகம் இருந்தது. நல்ல கவிதையை இரசிக்கிற சுகத்திலிருந்தும் கூட ஒருவன் தைரியசாலியாகவும், இலட்சியவாதியாகவும் இருக்க முடியும். சில கவிகளுடைய பாடல்கள் தலைமுறை தலைமுறையாகப் பெருகி வாழ்கிற ஒரு வீரப் பரம்பரையையே படைத்துக் காத்திருக்கிறது. அதைப் போல் ஓர் இலட்சியவாதியின் மனத்துக்கு ஆறுதல் தருகிற உட்குரல் இந்தப் பாடலில் இருப்பதை உணர்ந்திருக்கிறான் அவன். இந்தச் சில நாட்களில் அவனுடைய வாழ்வில் எத்தனை எத்தனையோ புதிய சம்பவங்களும் புதிய அநுபவங்களும் நேர்ந்திருக்கின்றன. பொறாமையால் வருகிற புகழையும் புகழால் வருகிற பொறாமையையும் மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாறி மாறிச் சந்திக்கத் தொடங்கியிருந்தான் அவன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பூபதி அவனை உதவி வார்டனாக நியமித்திருந்தார். மாணவர்களிடையே அளவற்ற பெருமதிப்பை அடைகிற ஆசிரியன், நிர்வாகிகளுடைய பகையைச் சம்பாதித்துக் கொள்ளுவதுமேதான் பெரும்பாலான கல்லூரிகளிலே வழக்கமாக இருக்கும். இரு சாராருடைய மதிப்பையும் பெறுகிற ஆசிரியனைப் பார்த்தால் எல்லாருக்கும் வியப்படையத்தான் தோன்றும். அதோடு பொறாமைப்படவும் தோன்றும். இதற்கு யாரும் எப்போதும் விதிவிலக்கு இல்லை.

     கல்லூரி திறந்த இரண்டாவது வாரமோ, மூன்றாவது வாரமோ ஒரு நாள் பத்து மணிக்கு மேல் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிக்குள் நுழைந்திருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர் ஏதோ காரியமாக அல்லது ஒரு காரியமும் இல்லாமல் அறை வாயிலில் நின்று கொண்டிருந்தவர் அவன் உள்ளே தனியாக வருவதையும் பார்த்துக் கைக்கடிகாரத்தையும் பார்த்தார். இதையடுத்து அரை மணி நேரத்துக்கெல்லாம் கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்டச் சுற்றறிக்கை ஒன்று எல்லா ஆசிரியர்களுக்கும் வந்தது. 'சில ஆசிரியர்கள் கல்லூரிக்குத் தாமதமாக வருவதையே ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதைத் தவிர்ப்பதற்காக இனிமேல் ஆசிரியர்கள் கையொப்பமிடும் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்துடன் அதற்குக் கீழே வந்த நேரமும் குறிப்பிட வேண்டும்' என்று அந்தச் சுற்றறிக்கையில் கண்டிருந்தது.

     ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தன்னைப் பார்த்ததும் முகத்தில் கடுகடுப்போடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே அவர் அறைக்குள் நுழைந்ததையும் அதற்கடுத்த முப்பதாவது நிமிடத்தில் மேற்படி சுற்றறிக்கை வந்ததையும் பார்த்தபோது முதல்வர் தன் மேல் 'கரு' வைத்துக் கொண்டு பகைமை செலுத்தி வருகிறார் என்பதைச் சத்தியமூர்த்திக்கு நன்றாகப் புரிய வைத்தன. 'உதவி வார்டன்' ஒருவர் அவசியமில்லை என்பதாகவும், அப்படியே அவசியமாக இருந்தாலும் புதிதாக வந்திருக்கிற ஓர் இளம் விரிவுரையாளரை அதற்கு நியமிக்க வேண்டாம் என்றும் முதல்வர் நிர்வாகியிடம் கடுமையாக எதிர்த்ததாகவும், அந்த எதிர்ப்பையும் மீறிக் கொண்டு பூபதி தன்னை உதவி வார்டனாக நியமித்ததாகவும் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டு அறிந்திருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து முதல்வரின் மனத்தில் தன் மேல் எவ்வளவு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கைக்குப் பின்னர் எல்லா ஆசிரியர்களும் கையெழுத்துடன் வந்த நேரமும் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியும் இரண்டு மூன்று நாட்கள் கையெழுத்துடனே நேரமும் எழுதினான். நான்காவது நாள் ஏதோ ஒரு திட்டமான எண்ணத்துடன் அவன் நேரம் போடுவதை நிறுத்திவிட்டான். அன்று காலை பதினொரு மணி சுமாருக்கு ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு கல்லூரி முதல்வரின் ஊழியன் (பியூன்) வந்து சேர்ந்தான். அவ்வாறு அவன் வருவதை ஒவ்வொரு விநாடியும் சத்தியமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டுதான் காத்திருந்தான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.