27

     நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள போலிப் பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள்.

     இரவோடு இரவாகக் காரில் நாட்டரசன் கோட்டையிலிருந்து மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கலியாண வீட்டில் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து ஆத்திரமாக வெளியேறியிருந்த காரணத்தினால் காரில் திரும்பி வரும்போது கண்ணாயிரமும் அம்மாவும் மோகினியிடம் மிகவும் கடுகடுப்போடு இருந்தார்கள். "மரியாதைக் குறைவாக நாலு பேருக்கு முன்னாலே எடுத்தெறிஞ்சி பேசிப்பிட்டு விறுவிறுவென்று நடந்து போய்க் காரிலே உட்கார்ந்திட்டா மட்டும் போதுமாடீ? கொஞ்சம் புத்தியும் வேணும். நீ இப்படிச் செய்திட்டதாலே அவங்களுக்கு ஒண்ணும் பெருமை கொறைஞ்சிடப் போறதில்லை. உன்னையெத்தான் அடங்காப்பிடாரி, முரண்டு பிடிச்சவ, அப்படி இப்படியின்னு வாயிலே வந்தபடி பேசுவாங்க" என்று காரில் ஏறியதும் ஒரு பாட்டம் வைது தீர்ந்திருந்தாள் முத்தழகம்மாள். அம்மாவும் கண்ணாயிரமும் பின் தங்கியிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்திருப்பார்கள் என்பது மோகினிக்குத் தெரியும். ஆனாலும் தாங்கள் சொல்லியபடி கேட்கவில்லை என்பதே அவர்கள் கோபத்துக்குக் காரணம் என்பது அவளுக்குப் புரிந்தது. அவர்களுடைய கோபத்தை அவள் சிறிதும் பொருட்படுத்தவில்லையாயினும், வேறு பல நினைவுகளால் உள்ளூர மனம் வெந்து கொண்டிருந்தாள் அவள். நாளுக்கு நாள் வாழ்க்கையே சாரமற்றுப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. அமைதியான இந்த இரவு நேரத்தில் நிலா ஒளியின் கீழ்க் காரில் எல்லோரோடும் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த போதே மனத்தின் நினைவுகளால் அந்த எல்லாருடைய வழியிலிருந்தும் பிரிந்து வேறு ஒரு வழியில் போய்க் கொண்டிருந்தாள் அவள். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ கண்ணாயிரமும் அம்மாவும் தன்னைச் சிறிது சிறிதாக வியாபாரப் பொருளாக்கிக் கொண்டு வருவதை அவள் உணர்ந்து மனம் கொதித்தாள். இப்போது காரில் முகத்தையும் மனத்தையும் கடுமையாக வைத்துக் கொண்டு அம்மா மௌனமாக வருகிறாளே இந்த மௌனத்திற்கு விளைவு என்னவாக இருக்கும் என்பதும் மோகினிக்குப் புரிந்தது. வீட்டுக்குத் திரும்பியதும் தன்னை வாயில் வந்தபடி பேசிக் கடுமையாக நடந்து கொள்ளப் போவதற்கு அம்மாவின் இந்த மௌனம் ஒரு முன் குறிப்பு என்பது அவளுக்குப் பழகிய உண்மைதான். அம்மாவின் ஈவு இரக்கமற்ற சிந்தனையில் அவள் முதலில் அடிமை, அப்புறம் தான் மகள். இப்போதுதான் சிறிது காலமாக அம்மா அவளைத் தொட்டு அடிப்பதில்லை. முன்பெல்லாம் கோபம் அளவுக்கு மீறிப் போயிருக்கிற சில சமயங்களில் தலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி அறைகிற அளவுக்கு அம்மாவின் கொடுமை எல்லை மீறிப் போயிருக்கிறது. இந்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒரே வழி சாவு தான் என்று தீர்மானம் செய்து கொண்டு சாக முயன்றும் முடியாமல் பிழைத்திருக்கிறாள் அவள். பட்ட துயரங்களையும் இனிமேல் படவேண்டிய துயரங்களையும் நினைத்த போது அழுகை குமுறிக் கொண்டு வந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.