6
மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அவளோ பிச்சைக்காரியைப் போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும் படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத் தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்ல முடியாது.
சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்த அதே பதவிக்காக விண்ணப்பம் போட்டிருந்த மற்றொருவரையும் 'இண்டர்வ்யூ' செய்து கொண்டிருந்த பூபதி அவர்களோ அப்போது தாம் செய்யும் காரியம் தமக்கு மிக அருகேயுள்ள மென்மையான மனம் ஒன்றைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நியாயமில்லை. முறையாகவும், ஆர்வம் குன்றாமலும் வழக்கம் போல அந்தப் பதவிக்காக வந்திருந்த இரண்டாவது விண்ணப்பத்தாரரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் அவர். நிர்வாகத்துறையில் அது ஒரு முக்கியமான அம்சம். ஒரு பதவிக்கு மனுச் செய்திருக்கிறவர்கள் பலராக இருந்தால் அப்படிப் பலர் மனுச் செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நேரங்களில் வரச்சொல்லி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு பேசி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு விசாரித்து, வந்து செல்கிற ஒவ்வொருவரும் அந்தப் பதவி தங்களுக்கே கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு போகும்படி செய்துவிட்டு இறுதியில் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக உண்மைத் தகுதியைக் கண்டு பிடித்து நியமனம் செய்வார்கள். தொழிலதிபர் பூபதியே நிர்வாகத் துறையில் நிபுணர். சில வேளைகளில் அவருடைய சாமர்த்தியங்கள் சிலர் அநுமானம் செய்ய முடிந்த எல்லைக்கு அப்பாலும் உயர்ந்திருக்கும். தங்கம் நிறுப்பது போல் எதிராளியை மாற்றுக் குறையாமல் கூடாமல் கச்சிதமாக எடை போட்டு அளந்து நிறுத்துத் தெரிந்து கொண்டு விட்டதை நிறுத்தப்பட்ட எதிராளியைப் புரிந்து கொள்ள விடாமல் பாமரர் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார் அவர். மல்லிகைப் பந்தல் ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து பின்பு கவர்னராக அவர் கௌரவப் பதவி பெற்ற போது அவருடைய ரோட்டரி கவர்னர் பதவிக் காலத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் கன்வென்ஷன் ஒன்று மல்லிகைப் பந்தலில் நடைபெற்றது. அதற்காக மல்லிகைப் பந்தலுக்கு விருந்தினராய் வந்திருந்த கனடா நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் பூபதியோடு நாலைந்து நாட்கள் பழகிவிட்டுப் பிரிந்து செல்லும்போது நிகழ்ந்த விருந்து ஒன்றில் அவரை இந்தியாவின் 'கமர்ஷியல் மாக்னேட்' (தொழில் மன்னர்கள் அல்லது வாணிக வித்தகர்கள்)களில் தலைசிறந்த ஒருவராக வருணித்தார். இந்தப் பெருமையெல்லாம் தந்தைக்கு குறைவின்றி இருப்பது பாரதிக்கும் நன்றாகத் தெரியும்.
சத்தியமூர்த்திக்கு எதிராக எல்லாருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்வது போல் அவர்கள் மேல் ஒரே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. காலையில் தன் பட்டுப் பாதங்கள் பதிய அந்தக் காம்பவுண்டுக்குள் நடந்து வந்து தந்தைக்கு முன் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் கணீரென்று மறுமொழி சொல்லிவிட்டுப் போன அந்தத் தைரியசாலியின் முகத்தை மீண்டும் நினைவு கூர முயன்றாள் அவள். நினைத்து தவிக்கிறவர்களுக்கு அதிகம் சோதனை செய்யாமல் அருள் செய்து விடுகிற சில நல்ல தெய்வங்களைப் போல் அவள் நினைத்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது அந்த எழில் முகம். அளவாகவும் அழகாகவும் பேசும் அந்தக் குரல், சத்திய வேட்கை நிறைந்த அந்த முகம் 'சுகதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடி முன்னால் எடுத்த வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்காரும் அவனுடைய வனப்பு எல்லாம் நினைவு வந்தன அவளுக்கு. அவள் நெட்டுயிர்த்தாள். தன் நினைவு இதுவரை அடைந்திருந்த இனிய ஞாபகங்களையும் இனி அடைவதற்கிருந்த இனிய ஞாபகங்களையும் அந்த வீட்டின் முன் அறையில் அப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் தந்தையும், கல்லூரி முதல்வரும் சேர்ந்து பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எண்ணி மனம் நலிந்தாள் அவள். போதாத குறைக்கு இப்போது ஹெட்கிளார்க் வேறு கூட வந்திருக்கிறார். 'எல்லோருமாகச் சேர்ந்து என்ன முடிவுக்கு வரப்போகிறார்களோ? ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்...?' இப்படி நினைத்தபோது அவள் சிந்தனை மேலே ஒன்றும் எண்ணத் தோன்றாதபடி இருண்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் என்னப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கவும், விருப்பம் கொண்ட அவள் ஒரு காரியமும் இல்லாமலே தந்தையின் அறைக்கு அடிக்கடி போய்விட்டு வந்தாள். கடுவன்பூனை மாதிரி முகம், கொலைக்களத்து வெட்டரிவாளைப் போன்ற பெரிய மீசையும் முரட்டுப் பார்வையுமாக வீற்றிருந்த மனிதர் தான் சத்தியமூர்த்தியின் பதவிக்குப் போட்டியாக வந்தவராக இருக்க வேண்டும் என்று அவளால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. அந்த மனிதருக்கு ஐம்பது வயதுக்கு இரண்டொன்று குறைவாகவோ, கூடவோ இருக்கலாம் என்று தோன்றியது. 'பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளே இருக்கும்போது ஏற்கனவே வேலை பார்க்கிற இடத்திலேயே தொடராமல் இந்த மனிதர் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக இங்கு ஏன் வரவேண்டும்?' என்று நினைத்து ஒரு பாவமும் அறியாத அந்த மூன்றாம் மனிதர் மேல் கோபப்பட்டாள் அவள். வயதானவராகவும், முன் அநுபவம் உள்ளவராகவும், இருக்கிறார் என்ற காரணங்களால் தன் தந்தையே இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து விடுவாரோ என்ற பயமும் அவள் மனத்தில் பற்றியிருந்தது. எது நடக்கும், எது நடக்காது என்று முடிவாகத் தெரிந்து கொள்ள இயலாத அந்த நிலையில் பொறுமையிழந்து போய்த் தவித்தாள் பாரதி. ஞாபகத்தின் எல்லாப் பக்கங்களும் ஒரே நினைவில் ஆரம்பமாகி ஒரே நினைவில் முடிந்தாற் போல் அந்த ஒரே ஒரு நாளில் தான் அவ்வளவு பெரிய பைத்தியமாக ஆனது எப்படி என்று எண்ணித் தன்னைத்தானே வியந்து கொண்டாள் அவள். சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்தபோது தன் தந்தையும் கல்லூரி முதல்வருமே இருந்தது போல் அல்லாமல் இப்போது 'ஹெட்கிளார்க்' வேறு புதிதாக வந்திருப்பது அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது. 'ஒரு வேளை ஹெட்கிளார்க்கிடம் சொல்லி இந்த மனிதருக்கு நேரிலேயே கொடுத்து விடுவதற்காக ஆர்டர் டைப் செய்ய ஏற்பாடாகிறதோ?' என்று பயப்படுவதற்குரிய சந்தேகம் ஒன்றைத் தானாகவே நினைவிற் கற்பித்துக் கொண்டது அவள் மனம். எதை எதையோ எண்ணி மனம் குழம்பினாள் அவள். காலையில் தன் தந்தையும் சத்தியமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் முடிவில் 'இந்தக் கல்லூரிக்கு இதுவரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும், நீங்கள் ஒருவர்தான் மிக இளமை பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது' என்ற வார்த்தைகளைச் சத்தியமூர்த்தியிடம் தன் தந்தை சொல்லிவிட்டுத் தயங்கியதையும் இந்தத் தயக்கத்தை அடுத்து இதன் காரணமாகவே வளர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் இப்போது தன் மனத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு பயந்தாள் பாரதி. அவரும் தான் அப்படித் துடுக்குத்தனமாகப் பேசி அதுவரை தன்னைப் பற்றி அப்பாவின் மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை அந்த ஒரு விநாடிப் பேச்சில் கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவர் தான் ஏதோ பேசிவிட்டார் என்றால் அப்பாவாவது அந்தச் சிறிய காரியத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளக் கூடாதா? வயதில் இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காகச் சத்தியமூர்த்தியைப் புறக்கணித்துவிட்டு இப்போது வந்திருக்கும் இந்த முதியவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்கள் என்று எண்ண முயலும் போதே அந்த எண்ணத்திலுள்ள ஏமாற்றத்தின் மிகுதியைத் தாங்கமுடியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது பாரதிக்கு. அன்று காலையில் இண்டர்வியூ முடிந்த பின் தன் தந்தையும் அவரும் வேறு எதையோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில், 'நான் தான் இனிமேல் இந்த ஊருக்கே வந்துவிடப் போகிறேனே' - என்று அவர் புன்முறுவலோடு கூறிய போது "நீங்கள் இங்கே வரவேண்டுமென்றே இன்னும் அதிகார பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று தந்தை சிரித்தபடியே மறுத்த சம்பவம் நினைவில் வந்தது அவளுக்கு. இரண்டு பேருமே வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் என்று அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முயன்றாலும் அதுவே திரும்பத் திரும்ப அவள் நினைவில் வந்து அதற்கு அப்பால் வரக் காத்திருந்த மற்ற நம்பிக்கைகளின் பாதையை மறிக்கலாயிற்று. மனத்தின் பலவீனமான வேளைகளில் இதுவும் ஒன்று. ஓர் அவ நம்பிக்கை பத்து நம்பிக்கைகளை மறைத்து விட முடிகிறது; அல்லது மறக்கச் செய்ய முடிகிறது. பத்து நம்பிக்கைகள் சேர்ந்து ஓர் அவநம்பிக்கையை மறைத்து விட அல்லது மறக்கச் செய்துவிட முடிவதில்லை. அந்த நேரத்து இதயத்தின் தவிப்பில் அவள் இதை நன்றாக உணர முடிந்தது. சத்தியமூர்த்தியே அந்தப் பதவிக்கு உரியவனாக நியமிக்கப் பெற்று மறுபடி மல்லிகைப் பந்தலின் மண்ணில் அவனைக் கண்டாலொழிய அந்த ஊரே பொலிவில்லாமல் போய் விடும்போல் அவள் உருகித் தவித்தாள். இப்படி எதற்காகவும் அவளுடைய வாழ்க்கையில் அவள் இதுவரை தவிக்க நேர்ந்ததில்லை. இந்த அநுபவம் அவளுக்கு ஏற்படுவது இதுவே முதல் தடவை. "இவர்களுக்கு எல்லாம் தேநீர் கொண்டுவா அம்மா!" என்று தந்தை குரல் கொடுத்த போது, 'நான் எதற்காக என் கைகளால் இவர்களுக்குத் தேநீர் கொடுக்க வேண்டும்' - என்ற வெறுப்போடு வேலைக்காரர்களைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்பினாள் பாரதி. "முன் அறையில் கொண்டு போய்க் கொடு. காலேஜ் ஆட்கள் யாரோ வந்திருக்காங்களாம்..." என்று வார்த்தைகளையும், ட்ரேயையும் வேண்டா வெறுப்பாக வேலைக்காரனிடம் கொடுத்தவளுக்கு அந்தத் தேநீரைக் குடிக்க இருப்பவர்கள் மேலெல்லாம் எதற்காகவோ கோபப்பட வேண்டும் போல் இருந்தது. வேலைக்காரனை முன் அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு வேலையும் ஓடாத போது எந்த வேலையை எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகமே இன்றிச் செய்யப்படும் பரவசமான காரியமாய்த் தோட்டத்தின் பக்கமாக இறங்கிச் சென்றாள் அவள். நல்ல சிவப்புமில்லாமல் நல்ல வெளுப்பு மில்லாமல் எப்படியிருந்தால் கண்களில் உறுத்தாமல் மென்மையாகத் தோன்ற முடியுமோ அப்படி நளினமாகச் சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூக்கள் ஆடிச் சிரித்துக் கொண்டிருந்தன. ரோஸ் என்ற நிறத்துக்கே இந்தப் பூவைப் பார்த்த பிறகு தான் இலட்சணமும் பெயரும் கிடைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதுவரை பெய்து கொண்டிருந்த மழை அப்போதுதான் நின்று போயிருந்ததனால் இலைகளிலும் பூக்களிலும் நீர் சிலிர்த்து நின்றது. பன்னீரில் குளித்துவிட்டு நிற்கும் கந்தர்வலோகத்துக் குழந்தைகளின் முகங்களைப் போல் தோட்டத்துப் பூக்கள் அப்போது பொலிந்து கொண்டிருந்தன. பளீரென்ற வெளுப்புமில்லாமல் கண்ணைக் குத்தும் கருஞ்சிவப்புமில்லாமல் சாயங்கால வானத்தில் ரோஜாக் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் சில நிறங்களைப் போல ஒரு நிறத்தையே தனக்குப் பெயராகப் படைத்துக் கொண்டு தன் நிறத்தால் ஒரு பூவுக்கு அழகாகி நிற்கும் அவற்றைப் புதிய கண்களுடன் அன்று தான் அப்படி முதன் முதலாகப் பார்க்கிறவள் போல் பார்த்தாள் பாரதி. அந்தப் பூக்களின் இளஞ்சிவப்பு நிறமும் சாயங்கால வானத்தில் தவழும் ரோஸ் மேகங்களும் நினைவு வந்தபோது அவற்றின் தொடர்ச்சியாகச் சத்தியமூர்த்தியின் அழகிற் சிறந்த பாதங்களையும் நினைத்தாள் அவள். நினைத்தாள் என்று சொல்வதை விடப் பொருத்தமாக வேறு விதத்தில் அதைச் சொல்வதனால் அந்த நிலையில் அவளால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 'பாதங்கள் மட்டுமென்ன? முகம், உதடுகள், உள்ளங்கைகள், எல்லாமே ரோஜாப் பூக்களாகத்தான் அவருக்கு வாய்த்திருக்கின்றன. அவருக்கென்றே வாய்த்த நிறமா அது?' என்று எண்ணி அந்த எண்ணத்தின் விளைவாகத் தனக்குத்தானே கூச்சமுற்று நாணினாள் அவள். காரில் தன்னுடன் வரும்போது, 'உங்கள் ஊரில் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை' என்று சத்தியமூர்த்தி கூறியிருந்த சொற்கள் இப்போது ஞாபகம் வந்தன. அதைக் கருத்தில் கொண்டு அப்போது தான் நின்றுக் கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடை மல்லிகைச் செடியிலிருந்து இரண்டு பூக்களைப் பறித்துக் கூந்தலில் சொருகிக் கொண்டாள் பாரதி. அந்தப் பூக்கள் இரண்டும் அவற்றைச் சார்ந்த நினைவுமாக இணைந்து அதிகமாய் மணப்பது போல் இருந்தது. இலைகளே இல்லாமல் செடி முழுவதுமே பூக்களே நிறைந்த ஒரு ரோஜாச் செடியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சத்தியமூர்த்தியின் பொன்மேனியையும் கற்பனை செய்யத் தோன்றியது அவளுக்கு. மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் செம்மண் நிலம் மழை பெய்ததன் காரணமாக அன்று எப்படி நெகிழ்ந்து போயிருந்ததோ அப்படியே சத்தியமூர்த்தியைப் பற்றிய நினைவுகளால் அவள் மனமும் நெகிழ்ந்து போயிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவள் பைத்தியமாகியிருந்தாள். தோட்டத்திலிருந்து வீட்டுக்குள்ளே போய் மறுபடியும் அவள் தன் தந்தையின் அறையருகே சென்றபோது இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த மீசைக்காரர் விடைபெற்றுக் கொண்டிருந்தார். அவரை அனுப்பிவிட்டுத் தந்தையும், முதல்வரும், ஹெட்கிளார்க்குமாக ஏதோ பேசி விவாதிக்கத் தொடங்கவே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதற்காகப் பாரதி திரை ஓரமாக நாற்கலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிச்சயமாக அவர்கள் அப்போது ஆலோசனை செய்து விவாதிக்கிற விஷயம் 'தமிழ் விரிவுரையாளராக யாரை நியமிப்பது?' என்பதைப் பற்றியதாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முதலில் கல்லூரி முதல்வர் தான் பேச்சை ஆரம்பித்தார். "ஐந்தாறு ஆண்டுகளாவது, 'செர்வீஸ்' உள்ளவராக இருந்தால் தான் ஒருவர் நமக்குப் பயன்படுகிற நல்ல விரிவுரையாளராக அமைய முடியும். இப்போது வந்துவிட்டுப் போகிற இந்த முதியவர் நிறைய ஆண்டுகள் முன் அநுபவம் உள்ளவராக இருக்கிறார். இன்னொரு தகுதி - வயதானவராகவும் இருக்கிறார்..." "அப்படியெல்லாம் தகுதிகளிலிருந்தும் இப்போது தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டுவிட்டு அவர் இங்கே எதற்காக வரவேண்டும்!" - சிரித்தபடியே இப்படி வினாவிய குரல் தன் தந்தையினுடையதாக இருக்கவே பாரதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் தந்தை இப்படி வினாவியதைப் பாராட்டி இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து 'அப்ளாஸ்' கொடுப்பது போல் தட்டிவிட இருந்தவள் தான் உட்கார்ந்திருந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் எச்சரிக்கை பெற்று இரண்டு கைகளையும் சேர்த்து ஓசைப்படாமல் பிரித்தாள். பிரின்ஸிபலும் தந்தையுமே விவாதித்தார்கள். ஹெட்கிளார்க் பயபக்தியோடு அடக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பிரின்ஸிபலின் வலுவற்ற மறுமொழிகளையும் தந்தையின் வலுவான வினாக்களையும் பாரதி மிக அருகிலிருந்து மறைவாகக் கேட்க முடிந்தது. "இப்போது அவர் இருக்கிற இடத்தை விட்டு இங்கே சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வருகிறவராயிருந்தால் நாளைக்கு இதைவிட அதிகமாகச் சம்பளம் கிடைக்கிற ஓர் இடம் தெரிந்தால் இங்கே விட்டுவிட்டு அங்கே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?" - கல்லூரி முதல்வரால் இந்தக் கேள்விக்கு ஒரு மறுமொழியும் கூற முடியவில்லை. மௌனம் நிலவியது. பின்பு அவள் தந்தை தான் முதலில் பேசினார். "பிர்ன்ஸிபல் சார்! காலையில் வந்திருந்த பையனை எனக்கு எல்லா விதங்களிலும் பிடித்திருக்கிறது. எதையெடுத்தாலும் விவாதம் செய்து எதிர்த்துப் பேசுகிறான் என்ற துடுக்குத்தனம் ஒன்றைத் தவிர அவனுடைய தோற்றம் படிப்பு எல்லாம் திருப்திகரமாயிருந்தன... வயது கொஞ்சம் குறைவு... மற்றபடி..." "எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. எடுத்தெறிந்து பேசுகிறான். அவனுடைய மொழி வெறியைப் பார்த்தால் ஏதாவது அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருப்பானோ என்று கூடச் சந்தேகப்படுகிறேன். அவன் படித்த கல்லூரியும் அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட குறும்புத்தனமான திறமைசாலி ஒருவன் நம் கல்லூரியில் புகுந்து கொண்டு மாணவர்களை யெல்லாம் தனக்குத் தலையாட்டுகிறவர்களாக மாற்றிக் கவர்ந்து விட்டால் பிறகு கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையாயிருக்கும். இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இத்தகைய இளைஞனால் மாணவர்கள் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்." "மொத்தத்தில் நீங்கள் பயப்படுகிறீர்கள்! இல்லையா?" என்று பிரின்ஸிபலைப் பார்த்துக் கேட்டு விட்டு நகைத்தார் பூபதி. எந்த அர்த்தத்தில் நகைத்தார் என்று புரிந்து கொள்ள முடியாத நகைப்பாயிருந்தது அது. சாமர்த்தியசாலிகளை எதிரே சந்திக்கப் பயப்படுகிற அந்த 'அப்பாவி பிரின்ஸிபலை' எண்ணி நகைக்கிறாரா, சத்தியமூர்த்தியின் துடுக்குத்தனத்தை இகழ்கிற பாவனையில் நகைக்கிறாரா... என்று எதிராளி விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது அந்தச் சாதுரியமான சிரிப்பு. அவர்களுடைய உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு நெஞ்சு 'திக் திக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. பிரின்ஸிபல் பேசிய அநியாயத்தை நினைத்து ஆத்திரத்தோடு கைகளைச் சொடுக்கினாள் அவள். நல்ல வேளையாக அவளுடைய நம்பிக்கை முற்றிலும் வாடிக் கருகிவிடாமல் அவள் தந்தையின் பேச்சு சிறிது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. சத்தியமூர்த்தி துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசியது தன் தந்தையின் மனத்தைப் பாதித்திருந்தாலும் அவருடைய திறமைகளைத் தந்தை ஓரளவு புரிந்து கொண்டு மதிப்பதை அவள் இப்போது தெரிந்து கொண்டு விட்டாள். 'பிரின்ஸிபல் பிடிவாதமாக இருந்து காரியத்தைக் கெடுத்து விட்டால்?' என்ற கேள்வி எழுந்த போது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால்வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 'அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ?' என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த வினாடி வரை அவர்கள் ஒரு முடிவும் செய்யவில்லை என்பதே ஒரு திருப்தியாயிருந்தது அவளுக்கு. அந்தக் கல்லூரியிலும் அதன் இலட்சியங்களிலும் பரிபூரணமான ஆர்வமுள்ளவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமே அங்கு வேலைக்கு வரவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகக் கல்லூரி விழாக்களில் தலைமையுரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலமுறை தன் தந்தை பேசியிருப்பதை அவளே கேட்டிருக்கிறாள். தனக்கு அங்கு வரவேண்டுமென்ற ஆர்வம் மெய்யாகவே இருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடைபெறும்போது சத்தியமூர்த்தி தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டாள் பாரதி. தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதி 'நீங்கள் மெய்யான ஆர்வமும் இலட்சியமும் கொண்டுதான் இந்தக் கல்லூரிக்குப் பணியாற்ற வர விரும்புவதாகவும், என் தந்தையின் கல்விப்பணியில் உள்ள புனித இலட்சியங்களைப் பாராட்டுவதாகவும் அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள்! நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம். நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவது போல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரே ஒரு நாள் பழகிய ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடித்தத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார் மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்தியமானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிற போதே 'தான் எவ்வாறு இப்படித் துணிந்தோம்? இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது?' என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொண்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்த பின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்பு தான் தனது கூந்தலின் உள் முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத்தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது' என்ற முக்கியமான பிரச்சினை - எல்லா முக்கியமான பிரச்சினைகளும் - வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜை மேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், 'அதை எப்படி எடுப்பது?' என்ற தயக்கத்தோடு அவள் திரையை விலக்கி முன்பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்க்கவும் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக்கொண்டே அப்பா வெளிப்புற வராந்தாவுக்குச் செல்லவும் சரியாயிருந்தது. பதறும் கால்களால் பூனை போல் அடியெடுத்து வைத்து அப்பாவின் மேஜையருகே சென்று டைப் செய்த காகிதங்களை மெதுவாகப் புரட்டினாள் அவள். அந்த முகவரிகள் மேலாகவே இருந்தன. மூன்றே மூன்று வரிகளில் பெயர் ஊர் என்ற வரிசைப்படி இருந்த சத்தியமூர்த்தியின் முகவரியை நன்றாக ஞாபகத்தில் பதித்துக் கொண்டு உள்ளே ஓடிப்போய் உறையில் அதை அவசர அவசரமாக எழுதினாள். அப்படி எழுதும்போதே அந்த முகவரி அவள் மனத்தில் நிரந்தர ஞாபகமாகப் பதிந்து கொண்டது. பங்களா வாசலில் எதிர்ப்புறம் மரத்தடியில் தபால்பெட்டி உண்டு. வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என்பதால் அப்பாவுக்குத் தெரியாதபடி தானே நேரில் போய்த் தபாலில் சேர்த்துவிட்டு வர எண்ணி அப்பா எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள் பாரதி. வராந்தாவின் மேலக்கோடியில் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வெளியேறித் தெருவுக்கு வந்தாள் அவள். அப்போதுதான் தபால் பெட்டியைத் திறந்து மஞ்சள் பையில் கடிதங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான் தபால் இலாகா ஊழியன். விரைந்து ஓடிப்போய் அவள் அந்த உறையைப் பெட்டியில் போட்டாள். தபால் ஊழியன் அதையும் சேர்த்துத் தபால் பையில் போடுவதைத் தன் கண்களாலேயே அவள் பார்த்துத் திருப்தியும் கொண்டுவிட்டாள். அப்போது தற்செயலாகத் தனக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பது போலவும் தன்னையே கவனிப்பது போலவும் தோன்றவே அவள் திரும்பினாள், திகைத்தாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|